normal-road-traffic.jpg

காலச்சுழலில் எத்தனை, எத்தனை கதாபாத்திரங்கள் இல்லையில்லை, நம்மோடு ஒன்றியிருந்த உறவுகள் தொலைந்து போய் விட்டார்கள்.

milkman.jpg

காலை விடிந்தும், விடியாமலும், மணியடித்து நம்மை எழுப்பும் குழாயுடன் கூடிய தகரக்கேனில் பால் கொண்டு வரும் சொசைட்டி பால்காரர்,

அழகழகான பனையோலை அருந்திகள் உடனுக்குடன் செய்து, பதினியை அளந்து ஊற்றிக்கொடுக்கும் பதநீர்க்காரர்.

எம்மா…. கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரேய்ய்ய்……… என்று ராகமிசைத்து ஈரப்பழந்துணியில் கீரை கொண்டுவரும் கீரைப்பாட்டி,

ஓலைக்கூடைக்குள் ஈயச்சட்டியில் நெய் வைத்து, நீண்ட கைப்பிடியுடனான கூடிய அளவைக்கருவிகளை கூடையில் சொருகி வைத்து, நெய் சிந்திய கைகளுடன் வரும் நெய்க்காரக்கா.

முகம் சுழிக்காமல், அத்தனை பெண்களுக்கும், சேலைகளைக் காண்பித்து, பின் உட்கார்ந்தபடியே, அழகாக மடித்து, மேலும், கீழும் அட்டைகளை வைத்து, சைக்கிளில் வரும் துணிக்காரர்.

அம்மி கொத்துறது, உரல் கொத்துறது என குரல் கொடுத்து வரும் அம்மி கொத்துபவர்.

ஐஸ்…..ஐஸ்….. பால் ஐஸ்….. சேமியா ஐஸ்…..ஐஸ்….. என ரப்பர் அலாரத்துடன் வரும் குட்டை ஐஸ்காரர்.

மீன்காரர், தயிர்க்காரர், பொரிக்காரர், கடலைக்காரர்,

போலி…..போலி…..கடம்பூர் போலி…. என விற்று வரும் போலிக்கார அய்யர்,

இரண்டு அலுமினியத்தூக்குகள் நிறைய, கடலெண்ணை, நல்லெண்ணை விற்க வரும் எண்ணைக்காரம்மா,

flower-seller.jpg

அகலக்கூடையில் கதம்பம்,மல்லி,பிச்சி என பூவகையறாக்களைவைத்து, விற்று வரும் பூக்காரக்கா,

இரவு பெட்ரோமாக்ஸ் விளக்குடன், பெரிய கண்ணாடிக்குடுவையில் சோன்பப்டிக்காரர்,

சிறு அடுப்புடன் கூடிய பாத்திரத்தில் வைத்து விற்கும் சுக்கு காபிக்காரர்.

3227_img-pabal-road-fuzzy.jpg

காலையிலிருந்து இரவு வரை ஒவ்வொரு நேரத்துக்கு தகுந்த மாதிரி, ஒவ்வொருவராக நம் வீதிகளில் நிஜத்தில் உலவியவர்களை என் நினைவில் இருந்தவரைக்கும் வரிசைப்படுத்தியிருக்கிறேன். நிறைய பேர் நகர, நாகரீக வளர்ச்சிகளால் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் என் நினைவிலிருந்து கூட தொலைந்து போயிருக்கலாம்.

விட்டுப்போன சிலரை உங்களுக்கு நினைவிருந்தால் சொல்லுங்கள்.

பார்த்தால் நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்கள்…………

Advertisements

Comments on: "நிஜத்திலிருந்து.. நினைவில்" (18)

 1. ஆனால் இவர்கள் எல்லாம் இன்னும் இருக்கிறார்கள்.

  புகைப்படங்கள் அருமை.

 2. /// புகைப்படங்கள் அருமை ///
  எல்லாம் கூகிளாண்டவரிலிருந்து தான்.
  நன்றி! மஞ்சூரார்.

 3. அவர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். நம் நினைவிலிருந்துதான் அழித்துவிட்டோம்.

  கலர், கலர் மிட்டாய்களை தட்டில் ஏந்தி நாலணா கொடுத்தால் மிட்டாயை கோந்து போல் பிய்த்து இழுத்து கைகளில் வாட்ச் ஆக கட்டிவிடும் சேட்டு மாமா என் நினைவில் வந்துபோகிறார். எழுத்துக்களின் மூலம் உங்கள் எண்ணங்களை அறிய முடிகிறது வாழ்த்துக்கள்.

 4. சொன்ன மாதிரி இவங்க இருக்காங்க..நாம தான் தூரம் வந்துவிட்டோம்…எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் இது மாதிரி.. ஹ்ம்ம்ம்

 5. நல்ல பதிவு…. பொரிஉருண்டை பாட்டி
  பனங்கிழங்கு பாட்டி , கைக்குத்தல் அவல் விக்கற பாட்டின்னு எத்தனை பேரு எல்லாரும் சொல்ற மாதிரி அவங்க இருக்கத்தான் செய்யறாங்க…நாம் தூரத்துல தான் இருக்கோம்…
  இருந்தாலும் ஊரில் போனால் கூட முன்ன மாதிரி அவங்க வர்ரது இல்ல…பொரி யாரு சாப்பிடரா ? பனங்கிழங்கா அப்படின்னா … ங்கறாங்க அங்க இருக்கறவங்களே…

 6. பொறி உருண்டை பாட்டி தான், அவங்கலே சில சமயம் வெள்ளிப்பழத்துல சீனி போட்டு தருவாங்க, நாவப்பழத்துல உப்பு… ம்ம்ம்.
  அது போக ஸ்டார் தியேட்டர் பக்கத்தில் பணியாரம் விக்கும் பாட்டி.. எல்லாம் காணாமல் போச்சு..

 7. மஞ்சூர் ராஜா சொன்னது போல், இவர்களெல்லாம் சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இருக்கிறார்கள் என்பது ஆறுதலானது என்றாலும். அவர்கள் நிலை உயரவேண்டும். கடின உடல் உழைப்பால் அரைவயிற்றுக் கஞ்சிக்கு சம்பாதிப்பதைத்தான் அவர்கள் செய்து வருகிறார்கள். காணாமல் போனவர்கள் நல்ல நிலைக்கு வந்திருப்பார்கள் அல்லது வேறு புதிய தொழில்களைக் கற்றுக் கொண்டிருப்பார்கள். முன்னேறவேண்டும்.

  உங்கள் நினைவுகள், படங்கள் என்னையும் ஊருக்குள் அழைத்துச் சென்று வந்தது.

  நன்றி .

 8. குடுகுடுப்பைக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள்,காடை,கவுதாரி முயல் விற்போர்,அதென்ன மிட்டாய் கைல வாட்ச் கட்டுவாங்களே 🙂 அந்த மிட்டாய் விற்கும் முதியவர்,கூறு கட்டி காரப்பழம்,நாவப்பழம்,அவித்த கடலை,பனங்கிழங்கு,கொடுக்காப்புளி, விற்கும் புளிய மரத்தடி தாத்தா/பாட்டி
  இவிங்களயும் காணோம் 😦

 9. நன்றி சிவா,
  நீங்க வெள்ளிப் பழம்னு சொல்றது, வெள்ளரிப் பழம்னு நினைக்கிறேன்.

  ஸ்டார் தியேட்டர் நாகையிலேயா இருக்குது?

 10. ///முன்னேற வேண்டும்///
  கண்டிப்பாக ஜி.கே.
  நன்றி!!!

 11. முன்பு நாம் கண்ட, இப்போது காணாதோர் நிறைய இருக்கிறார்கள் அய்யனார்!
  உங்களிலிருந்தும் நிறைய மனிதர்களை பட்டியலிட்டிருப்பதற்கு நன்றி!

 12. எங்கள் ஈழத்தில் நாவற்பழ, பாலைப் பழக் காலங்களில் அவர்கள் கூட கடகப் பெட்டிகளைத் தலையில் சுமந்து கூவி விற்பார்கள். 5,10 சதத்துக்கு வாங்கி உள்ளேன்.

 13. /// கடகப் பெட்டிகளைத் தலையில் சுமந்து கூவி விற்பார்கள். ///
  கடகப்பெட்டிகளென்றால் கூடை என நினைக்கிறேன். நன்றி! ஜோகன்.

 14. /// மிட்டாயை கோந்து போல் பிய்த்து இழுத்து கைகளில் வாட்ச் ஆக கட்டிவிடும் சேட்டு மாமா ///
  எப்படியோ, வாட்ச் மிட்டாய் – சேட்டு மாமாவை உங்களுக்கு ஞாபகமூட்டி விட்டேன். நன்றி! ஆழியூரார்.

 15. மிக அருமையான இடுக்கை..

  மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்..புகைப் படங்கள் அருமை!

  நன்றி!

 16. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி! சிவபாலன்.

 17. கூடை என்பது வேறு, கடகப்பெட்டி என்பது வேறு. கூடை பொதுவாக மூங்கில், ஈச்சம் மட்டை,மரக்கொடிகள் கொண்டு பின்னுவார்கள், கடகம் பனை ஓலை,பனைநார்,பனைஈக்கில் கொண்டிளைப்பார்கள். உருவிலும் வேறு பாடு உண்டு.உடன் படம் தரும் சூழல் இல்லை.

 18. //கடகம் பனை ஓலை,பனைநார்,பனைஈக்கில் கொண்டிளைப்பார்கள்//
  கடகப் பெட்டியைப் பற்றி அறியச்செய்தமைக்கு நன்றி யோகன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: