சிறு சுற்றல்

370733640_0d9443c71d.jpg

என்னடா? இந்தப் பக்கம் திரும்பிட்ட, வீட்டுக்குப் போலியா?

இல்லடா, எங்கம்மா என்னய பள்ளீடம் விட்டதும், எங்க ஆச்சி வீட்டுக்கு வரச்சொல்லுச்சு.

நீ எங்கடா போற?

நான் எங்க அய்யம்மா வீட்டுக்குத் தான் போறேன்.

இது மாதிரி பேச்சுகள நீங்க எங்க ஊருக்கு வந்தீங்கன்னா கேட்கலாம்.

எங்கூர்லயோ, சுத்துப்பட்டு கிராமங்கள் எல்லாம் மானம் பார்த்த பூமி தான். அதுனால பருத்தியோ, இல்லன்னா ஏதாவது சிறு பயிர்கள் தான் போட்டிருப்பாங்க.

ஆனா, அம்புட்டு விவசாயப் பொருள்களுக்கும் வெல நிர்ணயம் ஆகுறதே எங்கூர்ல தான். ஏன்னா, யாவாரிகள் நெறஞ்ச ஊரு.. மெளகாய் வத்தல், பருப்பு வகையறா, மெளகு, மல்லி, எண்ணெய் வகையறாக்கெல்லாம் சந்தை வெலய நிர்ணயம் பண்றதே நம்மாளுக தான்.

இருவது, இருவத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி இருந்து மெளகாய் எண்ணை ஏற்றுமதி இங்கருந்து நடந்திட்டிருக்கு.

முன்னாடியெல்லாம் எல்லாப் பொருள்ளெயும் கலப்படம் பண்ணிட்டிருந்தாங்க. எப்டினா, துவரம் பருப்பு, கடலப்பருப்பு இதுக்குள்ள எல்லாம் ‘கல்’ல கலந்துடறது.

பருப்பு அளவுக்கு கல் தயார் பண்றதுக்கே மிஷினெல்லாம் இருந்ததா சொல்லுவாங்க. மல்லி, பருப்புக்கெல்லாம் கலர் ஏத்துறது, பாலிஷ் போடுறது, இந்த மாதிரி பல வேல பாத்து நல்ல விலைக்கு வித்துருவாங்க.

முன்னல்லாம் எங்க ஊருக்குள்ளேயெ தான் பொண்ணு எடுக்குறதும், குடுக்குறதும்.

அதுனால, மத்தியானம் வீட்டுக்காரர் வந்து சாப்ட்டுட்டு அவிய அம்மா வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு கடைக்கு யாவாரத்துக்கு போயிருவார்.

ஒரு ஏழு எட்டு மணி வாக்குல பள்ளீடம் விட்டு வாற புள்ளைகளையும் கூட்டீட்டு அவிய அம்மா வீட்டுல இருந்து வீட்டுக்காரரோட திரும்ப மாமியார் வீட்டுக்கு வந்துருவாக.

வீட்டுக்காரர் எங்கயாவது நாலஞ்சு நாளைக்கு வசூலுக்கு வெளியூர்களுக்கு போயிட்டாருன்னா, வர்ற வரைக்கும் பொண்ணுகளுக்கு அம்மா வீடு தான். ஒரு வேளை இதுக்காகத் தான் உள்ளூர்லேயே பொண்ணு கொடுக்குறாகளோன்னு கூட நெனச்சுக்குவேன்.

எங்க ஊரு பசங்களுக்கு அதிக பட்ச குறிக்கோளே, பி.காம் படிச்சு, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில வேல வாங்கிப் போயிரணுங்கிறது தான்.

எவ்ளொ வேணுன்னாலும் படிச்சுக்கலாம். பசங்க எவ்ளோ படிச்சாலும், படிச்சு முடிச்சிட்டு அவுக அய்யா, அண்ணாச்சி, பாத்துட்டிருக்கிற யாவாரத்துக்குள்ள நொழஞ்சிரணும்.

அது மெளகா வத்தல் கமிசன் மண்டியோ, அரிசிக் கடயோ, பருப்பு மில்லோ, எண்ணெக் கடயோ, இப்புடி ஏதோ ஒரு  கடையில கடைசிக்கு உக்காந்திர வேண்டியது தான்.

இப்போ எல்லாம் மாறீட்டாங்ங.

அப்பறம்,எங்கூர்லருந்து தான் இதயம், ஆனந்தம், வி.வி.எஸ் நல்லெண்ணைல்லாம் தயாராகி வருது.

veyiluganthakovil.jpg

வெயில் உகந்த அம்மன் கோவில்

ஊர் அப்புடி ஒண்ணும் பெருசில்லீங்க. பேருந்து நிலையத்துல எறங்கி சுத்திப் பாத்தீங்கன்னா, ஒரு பள்ளிக்கூட கட்டிடம், ரெண்டு திரையங்குகள் தெரியும், அப்புடியே வெளிய வந்து, எடது பக்கம் திரும்பி நடந்தீங்கன்னா,

மூளிப்பட்டி அரண்மனை,

வெயிலுந்தம்மன் கோவில்,

அடுத்தாப்புல ஒரு காலி எடம், இத பொட்டல்னு சொல்லுவாங்ங.

இங்க தான் அம்புட்டு கட்சிக்கூட்டமும் நடக்கும். எல்லா தலைவர்களும் இந்த எடத்துல பேசீருக்காக.

அந்தப் பொட்டல சுத்தி தான் போஸ்ட் ஆபீசு, தேர் முட்டி, அசோக சக்கர தூண், எல்லாம் இருக்குது.

அந்தா தெரியுது பாருங்க! அதான் மாரியம்மன் கோவில்,

வலது பக்கம் முருகன் கோவில்.

mt01.jpg

மாரியம்மன் கோவில்

கொஞ்சம், ஒரு நாலு எட்டு வச்சி நடந்து வலது பக்கம் திரும்புனா, மெயின் பஜாரு.

எடது பக்கம் மொதக் கடயில, உங்களுக்கு வேணுமுன்னா, பக்கோடா வாங்கிக்கோங்க. ரொம்ப நல்லாருக்கும்.

இந்த பஜாருக்குள்ள தான் லாலாக்கடை, பேனா, மை, பென்சில், எல்லாம் விக்குற பாய் கட,

தையல் மார்க்கெட், மருந்துக் கடை, பூக்கடை,

சந்துக்குள்ள சுண்ணாம்பு கல் விக்கிற பாட்டி,

எண்ணக் கம்பனியோட ஆபிசு,

கடசியில காய்கறி மார்க்கெட்டும், வாழ எலக்கட, நாட்டுமருந்து கட எல்லாம் வரும்.

பஜார் முடிஞ்ச கடசியில தெப்பக்குளம் வருங்க. எப்டி தண்ணி நெறஞ்சி கெடக்கு பாருங்க.

temple_tank_virudhunagar.jpg

தெப்பக்குளம்

அந்தக்காலத்துலேயே, மழத்தண்ணிய சேத்து வக்கிறதுக்காக கட்டுனதுங்க. ஊருக்குள்ள மழை பேஞ்சு, தண்ணி எங்கயும் தேங்கி நிக்காம, அம்புட்டுத் தண்ணியும், இந்த தெப்பத்துக்கு வர்ற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்காங்க.

தெப்பத்து முக்குல ஒரு புரோட்டா கடை இருக்குங்க. பசிச்சா சாப்டுக்கோங்க. ஆனா கட சாயந்தரம் ஆறு மணிக்கு மேல தான் தெறக்கும்.

இந்த பக்கோடாவும், புரோட்டாவுந்தேன் எங்க ஊரோட உணவு (தமிழ்நாட்டுக்காரங்களுக்கு எங்க போனாலும் இட்லி, தோசை வேணுன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி).

400597461_07f55ab5bd_m.jpg

விருதுநகர் புரோட்டா!

புரோட்டாக் கடயப் பத்தி சொன்னவுடனே தான் ஞாபகம் வருது.

எங்கூரு புரோட்டா ரொம்ப நல்லாருக்கும்.

தோசக்கல்லு நெறய எண்ணய ஊத்தி, அதுல போட்டு பெரட்டி, பொன்னிறமா, மொறு மொறுனு பொரிச்சு எடுத்துருவாங்க. அப்றம் அத நாலு பக்கமும் தட்டி பிச்சுப் போட்டு சால்னா ஊத்திக் குடுப்பாங்க.

இது மாதிரி மத்த ஊர்கள்ள கெடைக்காது.

kovil3.jpg

பங்குனி பொங்கல் திருவிழா!

நாம வர்றப்ப பாத்தோமுல்ல மாரியம்மன் கோயில், அந்த கோயில்ல பங்குனி மாசம் திருவிழா நடக்கும்.

எங்க ஊரு ஆளுக எங்க இருந்தாலும் இந்த திருவிழாக்கு டாண்னு வந்துருவாங்க.

திருவிழாவுல ‘ஆகோ’ ‘அய்யாகோ’ அப்டினு கோஷம் போட்டுட்டு லட்சக்கணக்கான பேரு அக்னி சட்டி எடுப்பாங்க.

வேல் குத்துவாங்க.

முதுகுல கொக்கி மாட்டி தேர் இழுப்பாங்க.

சனமான சனம் அம்புட்டு சனங்க திருவிழாவுக்கு வரும்.

இந்த திருவிழா நடக்கிறப்போ, தெப்பத்த சுத்தி மோர் பந்தல்லாம் போடுவாங்கள்ள, அது மாதிரி சின்ன சின்ன அறைகள் மாதிரி பந்தல் போட்டிருப்பாங்க.

அந்த பந்தல் அறைக்குள்ள வீட்டுல கல்யாணத்துக்கு தயாரா இருக்குற பொண்ணும் அவங்க குடும்பமும் திருவிழா பாக்குற மாதிரி உக்காந்திருப்பாங்க.

மாப்பிள வச்சிருக்கவுக திருவிழாவ வேடிக்கை பாக்குற மாதிரி பொண்ணுகள அங்கனயே பாத்துக்கலாம்.

எந்தப் பொண்ணு புடிச்சிருக்கோ, அப்புறம் வெசாரிச்சு வீட்டுக்குப் போய் பேசி முடிச்சிருவாங்க.

இதே மாதிரி பெண் பார்க்கும் படலம், பொருட்காட்சியிலயும் (Exhibition) நடக்கும்.

மேம்போக்கா பாத்தா, இப்புடி பொண்ணு பாக்குறது கொஞ்சம் பத்தாம் பசலித்தனமா தெரியும்.

ஆனா, இதுல பாருங்க யாரு மாப்பிள்ளை, யாரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னு தெரியாம அப்புடியே தெப்பத்து வழியா திருவிழாக் கூட்டத்தோட போய்க் கிட்டே பொண்ணு, மாப்ளை பாத்துக்குவாங்க.

பொண்ணு பாக்குற படலம் வீட்டுல நடந்தா, ஒவ்வொரு தடவயும் தர்மசங்கடமா வந்து எல்லார் முன்னாடியும் நிக்கணும். பேசணும், இதுல அந்த தொல்லை கிடயாது.

இது கால காலமா நடந்துட்டிருக்கு. இப்போ காலப்போக்குல கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சுருச்சு.

kamarajar-house.jpg

காமராசர் நினைவு இல்லம்

தெப்பத்து வலது எறக்கத்துல போனீங்கன்னா, சந்துக்குள்ள காமராசர் நினைவு இல்லம் இருக்குது.

எடது பக்கம் போனீங்கன்னா, காசுக்கடை பஜாருக்குள்ள போகலாம்.

காசுக்கடை பஜார் பூராவும் நகைக்கடை தான் இருக்கும். ரொம்ப ஆடம்பரமான கடைகளா இருக்காது.

எடது பக்க ரோட்டுல கொஞ்ச தூரம் நடந்து, ரயில்வே கேட்ட தாண்டி நேர போனீங்கன்னா, பாலிடெக்னிக்கும், கல்லூரியும் வரும்.

college.jpg

விருதுநகர் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட செந்தில் குமார நாடார் கல்லூரி (ஸ்…. யப்பா….எம்புட்டு பெரிய பேரு பாத்திங்களா?) – VHNSN College

ரொம்ப தூரம் நடந்திட்டோம். காலு வலிக்கும். போதும், அப்புறமெட்டு சுத்திப் பாக்கலாம்.

Advertisements

Comments on: "சிறு சுற்றல்" (25)

 1. வணக்கம் வெயிலான்,
  உண்மைய சொன்னா, உங்க பதிவை நட்சத்திர வாரத்தில் முகப்பில் தெரிய ஆரம்பித்த பின் தான் படிக்க தொடங்கியுள்ளேன்.

  //வெயில் உகந்த அம்மன் கோவில் //

  இந்த பெயரை பார்க்கும் போது ஈழத்திலும் ஒரு பிள்ளையார் கோயிலை வெயிலுகந்தை பிளையார் கோயில் என்று சொல்லுவது ஞாபகம் வருகிறது.
  வெயில்+உகந்த எனும் சொல் தான் சேர்ந்து வெயிலுகந்தை ஆனாதா என தெரியவில்லை.

  நல்ல பதிவுகள்.

 2. வணக்கம் வி.ஜெ.
  ///வெயில்+உகந்த எனும் சொல் தான் சேர்ந்து வெயிலுகந்தை ஆனாதா என தெரியவில்லை.///
  நாங்களும் சொல்லும் போது வெயிலுகந்தம்மன் கோவில் என்று தான் சொல்லுவோம். நன்றி!

 3. விருது பட்டி ஊர்வலம் ரொம்ப அருமை, வெயிலான். தெருத்தெருவாக எங்கள் கைபிடித்து ஊரைக்காட்டிவிட்டு,
  ‘ரொம்ப தூரம் நடந்திட்டோம். காலு வலிக்கும். அப்புறமெட்டு சுத்திப் பாக்கலாம்’ என்கிற வார்த்தைகள்,
  மனசைச் தடவிக்கொடுக்கிற மாதிரி ரொம்ப அன்பா இருந்தது.

  சிறு சிறு கிராமங்கள் தோறும் கல்விப் பள்ளிச்சாலை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான தமிழகக் குழந்தைகளின்
  கல்விக்கண் திறந்த காமராஜரின் ஊர்க்காரர் நீங்கள் என்பதற்கு மிகவும் பெருமைப்படலாம்.
  மாவட்ட ‘எல்லை’ தான் ‘எல்கை’யாக கண்களை உறுத்துகிறது.

 4. ஜிவி.
  சந்தடி சாக்குல ‘விருதுபட்டி’ன்னுட்டீங்க. எங்க ஊர்க்காரங்கள கேலி பண்றவிய தான் ‘விருதுபட்டிக்காரன்’ னு சொல்லுவாங்ங.
  சரி. சரி இருக்கட்டும்.
  வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி!

 5. ஊர்வலம் நல்லா இருந்துச்சுங்க.. VHNSN College போன மாதிரி அப்படியே 3V பக்கமும் எங்களைக் கூட்டீடுப் போயிருக்கலாமே? 🙂

 6. /// 3V பக்கமும் எங்களைக் கூட்டீடுப் போயிருக்கலாமே?///
  ஆஹா! அந்த பெண்கள் கல்லூரிப்பக்கமா?
  இப்ப நம்ம கல்லூரியும் இருபாலர் படிக்கிற மாதிரி மாத்தீட்டங்கப்பு 🙂
  நன்றி! ஜெகதீசன்.

 7. வெயிலான்,
  அருமையான பதிவு. நல்ல தமிழ். வாசிக்கவே சுவையாக இருக்கிறது. 🙂

 8. //அருமையான பதிவு//
  நன்றி! வெற்றி.

 9. அழகாய் எழுதிருக்கீங்க. அப்படியே ஊரை சுற்றிப் பார்த்த உணர்வு. உங்க ஊரைப் பற்றி நினைவில் வந்த பாடலின் வரிகள்
  “விருது நகர் வியாபாரிக்கு சின்ன கண்ணு, நீயும் வித்துப் போட்டு பணத்த எண்ணு செல்ல கண்ணு”- மணப்பாறை
  மாடு பூட்டு பாட்டுல வருமே! யாரூங்க எழுதியது? கண்ணதாசனா?

 10. அட டே இந்த ஊரிலே என் கால் பட்ட இடங்கள் எல்லாம் பார்த்து பார்த்து சேர்த்த மாதிரி சொல்லியிருக்கீங்க..

  விட்டுப் போனது…

  பர்மாக்கடை…
  தாஜ் ஹோட்டல்..
  கே.கே.எஸ்.எஸ்.ஆர் திரைஅரங்கம்..(ராஜ லட்சுமி..)
  உதயம் திரை அரங்கம்
  அய்யங்கார் பேக்கரி..
  வழியல் என்னும் அரைவேக்காட்டு முட்டை

  என் கல்லூரி நினைவுகளை மீள்பதிவு செய்ததற்கு நன்றி….

 11. அட்டகாசமா இருந்தது சிறு சுற்றல் கொஞ்சம் உக்காந்துட்டு திருப்பி நடக்கலாம்.. 🙂

 12. அடடா! தெரியாமல் போயிற்றே!.. சாரி!..
  இந்தப்பெயரை பத்திரிகைகளில் அடிக்கடி
  முன்பெல்லாம் உபயோகப்படுத்துவார்கள்.
  அந்த நினைப்பில் எழுதிவிட்டேன். நல்லவேளை குறிப்பிட்டீர்கள். அறிந்துகொண்டேன். அறியவைத்தமைக்கு நன்றி.

 13. காமராஜரின் நினைவு இல்லம் பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

  ஒவ்வொரு மனிதனையும் உருவாக்குவதில் அவன் பிறந்து வாழ்ந்த ஊர் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக நான் கருதுகிறேன். அந்த வகையில் கர்மவீரர் காமராஜரை உலகுக்கு அளித்த உங்கள் ஊரின் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இதுவரை உங்கள் ஊருக்கு வரும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. உங்கள் ஊரில் என்றாவது நான் கால் வைத்தால் கர்மவீரரின் நினைவால் என் மெய் சிலிர்க்கும்.

 14. பொள்ளாச்சி பொன்கா said:

  “சுற்றலில்” தெரிந்தது விருதுநகர் மக்கள் வாழ்வின் சிறப்பும் பெருமையும்…..தெரிய வைத்தமைக்கு நன்றி….

 15. /// விருதுநகர் வியாபாரிக்கு சின்ன கண்ணு ///

  மணப்பாறை மாடு கட்டி… மாயவரம் ஏறு பூட்டி… என்று ஆரம்பமாகும் பாடலில் வரும் இந்த வரிகள்.
  படம் : மக்களைப் பெற்ற மகராசி
  பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
  கீழே சுட்டி கொடுத்திருக்கிறேன்.
  நேரமிருக்கும் போது கேளுங்க. நன்றி!
  http://www.musicindiaonline.com/p/x/WJygFFvFRt.As1NMvHdW/

 16. /// விட்டுப் போனது…

  பர்மாக்கடை…
  தாஜ் ஹோட்டல்..
  கே.கே.எஸ்.எஸ்.ஆர் திரைஅரங்கம்..(ராஜ லட்சுமி..)
  உதயம் திரை அரங்கம்
  அய்யங்கார் பேக்கரி..
  வழியல் என்னும் அரைவேக்காட்டு முட்டை ///

  TBCD (இதென்ன பேருன்னு தெரிஞ்சிக்கலாமா?)
  நம்ம கல்லூரியில தான் படிச்சீங்களா?
  விட்டுப்போனது பட்டியலில் நிறைய மாற்றம்.
  உதயம் திரை அரங்கம் இப்போது கல்யாண மண்டபமாகி விட்டது.
  அய்யங்கார் பேக்கரி அல்ல ‘அன்டன் பேக்கரி’
  பர்மாக் கடை நான்கு கிளைகளாகி விட்டது.
  நன்றி!

 17. /// உக்காந்துட்டு திருப்பி நடக்கலாம்.. ///
  திரும்ப நடக்கலாம். நன்றி!

 18. /// உங்கள் ஊருக்கு வரும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை ///
  கண்டிப்பாக வரவேண்டும் ஓகை அய்யா! வரவேற்கிறேன். நன்றி!

 19. Naanum Virudhunagarkkarandhaan! I was thrilled to read the style with which you have written about our home town. Fantastic! But was tehre anything more after that ‘leg pain’ as promised?

 20. வாங்க கணேஷ்,

  ஏதோ திக்கு தெரியாத காட்டில் ஒரு மனிதரைப் பார்த்தது போல மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்படி கண்டெடுத்தீர்கள்?

  எல்லோரும் அவரவர் ஊரைப் பற்றி பெருமையாக பலதும் எழுதுவார்கள். பொறாமையாக இருக்கும். நம் ஊரைச் சேர்ந்தவர்கள் யாரும் தமிழ் வலைத்தளத்தில் இருப்பது மாதிரி எனக்கு தெரிஞ்சவரை இல்லை.

  ஓரிருவரும் சும்மா உங்களை மாதிரி தலையை காட்டி விட்டு, அட! நம்மூருனு ஒரு மெயிலைப் போட்டு விட்டு காணாமல் போய் விடுவார்கள்.

  எனவே நம்ம ஊரை உலகத்துக்கு காண்பிக்க வேண்டும் என ஒரு முடிவோடு எழுதினேன்.

  நன்றி!

 21. // Fantastic! But was there anything more after that ‘leg pain’ as promised? //

  இனிமேல் எழுத வேண்டும் கணேஷ்.

 22. கார்த்திகேயன் said:

  அய்யா வெயிலான் அவர்களுக்கு வணக்கம்.

  நீங்கள் நம் ஊரில் உள்ள குடும்பபெயர்களை குறிப்பிட விட்டுவிட்டீர்களே .. உதாரணத்திற்கு சில ..

  வாடியான் வீடு
  வகுத்தான் வீடு
  தோளாண்டி வீடு
  எடமாறி வீடு
  பூலான் வீடு
  சவுளி வீடு
  சவுளி சரவணை வீடு
  இடும்பன் வீடு
  வெட்டிநாடான் வீடு
  ஏழுஆம்பிள்ளைபெத்த வீடு

  இன்னும் பல .. ஒவ்வொன்றும் ஒரு வரலாறு சொல்லும். பேசிக்கொண்டிருக்கலாம் சலிக்காமல் ..

  நான் பிறந்து படித்து முடிக்கும் வரை இலவசக்கல்வி தான் பயின்றேன் (பி.காம் முடிக்கும் வரை)

  உங்கள் பெயரிலேயே நம் ஊர் மணம் இனிக்கிறது.

  இன்னும் பேச ஆசை ..

  நன்றி

 23. கார்த்திகேயன் said:

  விருதுநகர் என்றாலே எனக்கு மிகவும் பிடித்தது அங்குள்ள தெருக்கள் தான். எல்லாத்தெருக்களும் பளபளவென கருங்கற்களால் ஆன தெருக்கள். ஒவ்வொரு வீட்டு வாசலையும் அவ்வளவு அழகாக கூட்டி, தெளித்து கண்ணாடி மாதிரி பராமரித்து வைத்திருப்பார்கள். வீட்டு வாசலில், தெருவில் கூட் உக்காந்து பேசலாம், தாயம், பல்லாங்குழி விளையாடலாம். பெரும்பாலும் சாயங்காலம் கரண்ட் கட் ஆனால் எல்லார் வீட்டிலும் தெருவுக்கு வந்து உக்காந்துருவாங்க. அப்புறம் கரண்ட் வந்தால் எனக்கு ரொம்ப வருத்தம் ஆகிவிடும். எல்லாரும் வீட்டுக்குள்ள போயிருவாங்களே..

  நான் எல்லாத்தெருக்களுக்குள்ளும் போயிருக்கிறேன். ஆனால் இன்னும் ஒன்றிரண்டு தெருக்கள் நான் இதுவரை போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

  உதாரணத்திற்கு .. ..

  சங்கிலிக்கருப்பசாமி கோவில் அருகில் ராஜா பர்னிச்சர் கடைக்கு அருகில் வலதுபுறம் ஒரு சந்து இருக்கிறது. முகப்பில் ஒரு பெரிய வீடு இருக்கும். உள்ளே ஒரு பெரிய திடல் மாதிரி இடம், நடுவில் ஒரு பெரிய மரம் இருக்கும். வெளியில் இருந்து பார்த்தது தான்.

  காமராஜர் வீட்டுக்குள் போவதற்கு ஆர்ச் வழியே நுழைந்தால், ஒரு ”ஐந்து சந்திப்பு” வரும் ! அதில் இடப்பக்கம் திரும்பினால் காமராஜர் வீட்டுக்குப்போகலாம், வலப்பக்கம் திரும்பினால் ”தண்ணீர் தருமம்” அருகில் போகலாம். முன்னே சென்று வலது சந்தில் போனால் தெப்பம் தெற்குப்படித்துறை அருகில் சென்றடையும். அதில் முன்னே சென்று இடப்புறம் போகும் சந்துக்குள் நான் சென்றதில்லை.

  .. .. ம்ம் போகலாம் .. போகலாம் ..

  எங்கள் வீடு பண்டாரத்தெருவில் இருக்கிறது. இப்போது அதன் பெயர் “அவ்வையார் தெரு”

  விருதுநகரின் வனப்புமிகுந்த தெருக்கள் எல்லாம் இப்போது பாதாள சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்டு களை இழந்து காணப்படுகிறது. .. .. ம்ம் .. சீக்கிரம் அதனை முடித்தால் ஊருக்கு மிகவும் உபகாரமாக இருக்கும் தான்.

  நான் 1979 ல் ஊரை விட்டு வந்து இப்போது 12 ஊர்களுக்குப்பிறகு அறந்தாங்கியில் இருக்கிறேன்.

  1980-86 களில் பங்குனிப்பொங்கல் சமயத்தில் விருதுநகர் போவதற்கு பஸ் பிடிக்க மல்லுக்கட்டியதெல்லாம் மறக்க முடியாது.

  இன்னும் எழுதுகிறேன் .. ..

  • என்னிலும் அதிகமாய் ஊரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

   நானும் உங்களைப் போலொரு ஊரோடி தான். அவ்வப்போது தான் ஊருக்கு.

   இன்னும் எழுதுங்கள். நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: