ஒரு நாள் பயணமாக, நண்பர்கள் இருவருடன், மூணாறு பயணம், நான்கு சக்கர வண்டியில். வண்டியுணவுக்காக உடுமலைப்பேட்டை நிறுத்தம். உடுமலைக்கும், மூணாறுக்கும் இடையில் இருக்கும் ஒரே பெரிய ஊர் மறையூர் தான். இயற்கை மாற்றமில்லாத ஒரு சிறு நகரம்.

munaar-064.jpg

மறையூரில் காலையுணவுக்குப் பின் உணவகத்திலுள்ள இளைஞனுடன், காலநிலை, தங்குமிடக் கட்டணங்கள் போன்ற பொதுவான சில விசயங்களை, எங்களுக்கு தெரிந்த மலையாளத்தில் பேசி விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.பயணத்தின் போது தேயிலைத்தோட்டங்கள் கண்களையும், மழைத்தூறல்கள் உடலையும் குளிர்வித்தது.

மூணாறிலிருந்து, திரும்பும் போது பலத்த மழை ஆரம்பித்து விட்டது. ஆனால் உடனே கிளம்பினால் தான் இருள் சூழ்வதற்குள் யானைகள் நடமாடும் காட்டை (சின்னாறு) கடந்து உடுமலை போய் சேர முடியும். வரும்போதே சோதனைச்சாவடிகளில் தமிழிலும், மலையாளத்திலும் எச்சரித்து தான் அனுப்பினார்கள்.

மலைப்பாதையில், மழைக்காலத்தில் சாலையின் ஓரங்களை கணித்து வண்டி ஓட்டுவது கடினம். மழையினூடாக, எச்சரிக்கையுடன் பயணித்தோம். சிறிது தூரம் கடந்த பின் மழை இல்லை.

இரவு உணவுக்காக, திரும்பவும் மறையூரில் அதே இடத்தில்.

மதியம் சாப்பிடாததால், சப்பாத்தி, மீன், சிக்கன் என வெளுத்துக் கட்டி விட்டோம்.

பில் வந்தது – மொத்தம் ரூ.170/-. நண்பர் பில்லை எடுத்து பார்த்து விட்டு இன்னொரு நண்பரிடம் கொடுத்தார். அவர் பணம் ரூ.100 மட்டும் எடு்த்து பில்லுடன் வைத்து விட்டு் என்னிடம் தள்ளினார்.

வழிச்செலவுகள் போக என்னிடம் இருப்பது ரூ.20 தான், நீங்களே மொத்தமும் கொடுத்து விடுங்கள் என சொன்னதும், இருவரும் வேறு பணம் ஏதும் இல்லை என்றார்கள்.

கிண்டலுக்காகவோ, விளையாட்டுக்காகவோ தான் செய்கிறார்கள் என இருந்தேன். திரும்ப திரும்ப உறுதி செய்த பின் உண்மை உறைத்தது.

marayoor.jpg

எந்தவொரு ஏடிஎம் இயந்திரமும் அந்த ஊரில் கிடையாது. வங்கி அட்டையின் மூலம் பணம் செலுத்தும் வசதியும் இல்லை என உணவகத்தில் உறுதி செய்து விட்டனர்.

இந்த ஊரை விட்டால் கீழே ரெண்டு மணி நேரம் பயணித்து உடுமலை சென்றால் ஏடிஎம், இல்லையென்றால் மேலே மூணாறு செல்ல வேண்டும். மணி ஏழு ஆகிவிட்டது. பணம் எடுத்து விட்டு திரும்புவது என்பது நடக்காத விசயம்.

உணவு பரிமாறியவர் வேறு எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார். மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு என்ன செய்வது என தெரியவில்லை. மூவரிடமும், இருக்கும் பல வங்கி அட்டைகளின் மதிப்பைக் கூட்டினாலே பல ஆயிரங்கள் பெறும். ஆனால் இப்போது 50 ரூபாய் இல்லை.

பர்சிலிருந்து அவசரத்தேவைக்காக வைத்திருந்த பணம், சில்லறைக்காசுகள் அனைத்தையும் வெளியே எடுத்து வைத்து திரும்பவும் எண்ணிப் பார்த்தால் 149 ரூபாய் தேறியது. 31 ரூபாய் குறைந்தது. மலையாளிகளுக்கு ஏற்கனவே தமிழனைக் கண்டால் இளக்காரம். இப்போது பில்லுக்கு பணம் வேறு இல்லாமல் நின்றால் கிண்டல் பண்ணியே தொலைத்து விடுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் எண்ணவோட்டங்கள் பலவாறாக இருந்தது. காசு போடாமல் அனுப்பிய பிச்சைக்காரர், கடன் கேட்டு வந்த நண்பரை திருப்பி அனுப்பியது போன்ற பலவும்.

இப்ப நாமே ஒரு பிச்சைக்காரன்தான். முப்பத்தோரு ரூபாய் பிச்சை எடுக்க வேண்டி நிலையில் இருக்கிறோமே என்று பலவாறாக யோசனை.

சரி, காலையில் நம்மிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தான் நமக்கு தெரிந்த ஒரே ஆள். அவரிடம் போய் நிலைமையை சொல்லுவோம் என முடிவெடுத்து, அவன் பில் போடும் இயந்திரத்தருகே சென்றோம்.

அவன் மிகுந்த அன்புடன் என்னவென்று கேட்க, தயங்கியவாறு விசயத்தை சொன்னோம். அடுத்த கணம் அவன் கேட்ட கேள்வியால் மனதுக்குள் இறந்தேன் (நன்றி பாலகுமாரன்).

எப்படி ஊருக்கு போவீர்கள்?

கார் இருக்கிறது.

பெட்ரோல் இருக்கிறதா? அதற்கும் பணம் வேண்டுமா?

ஊருக்கு போகும் வரை பெட்ரோல் இருக்கிறது.

என் முன்னால் அதிக நேரம் நின்றால் உணவக உரிமையாளர் சந்தேகப் படுவார். நீங்கள் உடனே கிளம்புங்கள். முழுப்பணத்தையும் நான் கொடுத்துவிடுகிறேன்.

பின் வலுக்கட்டாயமாக எங்களிடமிருந்த 139 ரூபாயை கொடுத்து விட்டு, சொல்லாலும், மனதாலும் நன்றி கூறி விட்டு கிளம்பினோம்.

வெளியிடங்களுக்கு நீங்கள் செல்லும் போது உடன் வருபவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என சோதித்து செல்வது நல்லது.

எனக்கு இந்த சம்பவம் மனதுக்குள் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது. இந்த சூழ்நிலையில் நான் இது போல முன் பின் தெரியாத யாருக்காவது உதவியிருக்கிறேனா? என்ன ஏது என்று அடுத்த கேள்வி கேட்காமல் பெட் ரோலுக்கும் பணம் கொடுக்கிறேன் என்று கூறினானே? நானாக இருந்தால் அப்படி கேட்டிருப்பேனா? உடனே பணம் கொடுத்திருப்பேனா? என பல கேள்விகள்.அனைத்திற்கும் பதில் – ‘இல்லை‘ என்பது தான். என்னைப் பற்றி நினைக்க எனக்கே வெட்கமாக இருந்தது. அதிக பட்சமாக 2000 ரூபாய் சம்பளத்தில் இருப்பவன், இவ்வளவு மனமுவந்து உதவுகிறானே? பணம் என்பது முக்கியமில்லை, மனம் தான் வேண்டும்.

என்னுடன் வந்த நண்பர்கள் அடுத்தடுத்த நாட்களில் இந்த விசயத்தையே மறந்து வழக்கமான வேலைகளின் மூழ்கி விட்டனர். என்னால் முடிய வில்லை.

பெயர் கண்ணன், ஒரு மலையாளி என்று மட்டும் தெரியும். உணவகப் பெயரை வைத்து பி.எஸ்.என்.எல் வலைத்தளம் மூலம் தொலை பேசி எண்ணையும், முகவரியையும் கண்டு பிடித்து இரண்டு டி சர்ட்டுகளை (தமிழில் என்ன சொல்வது?) அனுப்பிய பின் தான் ஏதோ ஒரு பாரம் இறங்கியது போல் இருந்தது.

சாதி, மதம், மொழி, மாநிலம் அனைத்தும் தாண்டி அவனையும், எங்களையும் சேர்த்து வைத்து மனிதமே தவிர வேறு எதுவுமல்ல…..

Advertisements

Comments on: "மறக்க முடியாத மறையூர்" (20)

 1. //மலையாளிகளுக்கு ஏற்கனவே தமிழனைக் கண்டால் இளக்காரம்.//

  அப்படியா? எனக்கொண்ணும் அப்படி தோணலை..!

  //அவன் பெயர் கண்ணன், ஒரு மலையாளி என்று மட்டும் தெரியும். உணவகப் பெயரை வைத்து பி எஸ் என் எல் வலைத்தளம் மூலம் தொலை பேசி எண்ணையும், முகவரியையும் கண்டு பிடித்து இரண்டு டி சர்ட்டுகளை அனுப்பிய பின் தான் ஏதோ ஒரு பாரம் இறங்கியது போல் இருந்தது.

  சாதி, மதம், மொழி, மாநிலம் அனைத்தும் தாண்டி அவனையும், எங்களையும் சேர்த்து வைத்து மனிதமே தவிர வேறு எதுவுமல்ல…..
  ///

  அதானே பார்த்தேன் சிறப்பாக செய்துள்ளீர்கள்!

 2. //மலையாளிகளுக்கு ஏற்கனவே தமிழனைக் கண்டால் இளக்காரம்.//

  //அப்படியா? எனக்கொண்ணும் அப்படி தோணலை..!//

  நானா ஒண்ணும் சொல்லலைங்க ஆயில்யன், ஒரு மலையாளியே சொல்லியிருக்கிறார். இத படிச்சு பாருங்க – https://veyilaan.wordpress.com/2007/05/21

  வருகைக்கு நன்றி!!

 3. ஐயா, இதே போல அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. (வெளியே சொல்லாதீர்கள். வீட்டில் கோபித்துக்கொண்டு மும்பைக்கு ஓடி போன நாளில் இதே நிலை. படுபாவிகள் திருடிவிட்டார்கள். அங்கு எனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்க அவமானமாக இருந்தது. மூன்று நாள் தேடாதீர்கள் என்று சொல்லிவிட்டு அதே ஹோட்டலில் வேலை பார்த்திருக்கிறேன்). நல்லவேளை நீங்க தப்பிச்சீங்க.
  நல்ல அனுபவம். நன்றி
  ஆடுமாடு

 4. அண்ணாச்சி!

  மும்பையிலா? ரொம்பக் கஷ்டமாச்சே?
  உண்மையிலேயே கண்ணன் புண்ணியத்தில் நாங்க தப்பிச்சோம்.

  நீங்க தானா tamilecho?

  உங்க வலைத்தளத்தின் பேரி்லேயே(ஆடுமாடு) மின்னஞ்சல் கணக்கு (g mail) தொடங்கலாமே!

 5. நல்ல யோசனை. தொடங்கிருவோம்.
  ஆடுமாடு

 6. நீங்கள் மறையூர் முங்கில் காடுகளை அடுத்தமுறை பயணிக்கும் போது கண்டிப்பாக பாருங்கள், அதுவும் மூங்கில் பூக்கும் போது பார்த்தால் நன்று.

  ப‌.நித்தியானந்தம்

 7. நன்றி நித்தி,

  சாலையோரங்களில் வனத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மூங்கில் காடுகளைப் பார்த்திருக்கிறேன்.

  மூங்கில் பூக்கும் போது திரும்பவும் வாய்ப்பிருந்தால் பார்க்கிறேன்.

 8. படங்கள் அருமை. தங்கும் வசதி எப்படி அங்கே. எங்கே தங்கினீர்கள்?
  குடும்பத்தோடு போய்வர வசதியாக இருக்குமா?

 9. வாங்க கார்த்திக்!

  சந்தனா என்ற தங்கும் விடுதி இருக்கிறது. உயர்தரம் மற்றும் நடுத்தரம் என இரு வேறான விடுதிகளை நடத்துகிறார்கள்.

  Chandana Group of Hotels,
  Phone : 0486 252222, 252322, 252221
  http://www.chandanaresorts.com/chandana_residency.htm

  எனக்கென்னவோ மூணாறில் தங்குவதை விட மறையூரில் தங்குவது பிடித்திருந்தது. விடுதி வாடகையும் குறைவு.
  மிகவும் அமைதியாகவும் இருக்கும். குடும்பத்துடன் தாராளமாக சென்று வரலாம். பகலில் பயணம் செய்வது சிறந்தது.

 10. எனக்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் தூக்கி எறியும் விநோதப் பழக்கம் உண்டு. அது இதைப் படித்தபோது ஞாபகத்துக்கு வந்தது. நிற்க. இந்த நேரத்தில் உங்கள் புனைபெயரைப் பார்த்தாலே கோபம் வருகிறது.

 11. சிகரெட் பிடிக்க விழைந்தேன்.

  விரல்களும் உதடுகளும் சிகரெட்டும்தான் இருந்தன.

  தீப்பெட்டி இல்லை.

  சுற்றியிருந்தவர்களும் மனம் திரும்பிய மைந்தர்களாக இருந்தார்கள்.

  என் தவிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர், என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி ஜன்னல் வழியாக வெளியே நீட்டினார்.

  சிகரெட் பற்றிக்கொண்டது. சென்னை!

  உங்கள் புனைபெயரின் மேல் அன்பு வருமா..?

 12. எனக்கு இந்த சம்பவம் மனதுக்குள் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது. இந்த சூழ்நிலையில் நான் இது போல முன் பின் தெரியாத யாருக்காவது உதவியிருக்கிறேனா? என்ன ஏது என்று அடுத்த கேள்வி கேட்காமல் பெட் ரோலுக்கும் பணம் கொடுக்கிறேன் என்று கூறினானே? நானாக இருந்தால் அப்படி கேட்டிருப்பேனா? உடனே பணம் கொடுத்திருப்பேனா? என பல கேள்விகள்.அனைத்திற்கும் பதில் – ‘இல்லை‘ என்பது தான். என்னைப் பற்றி நினைக்க எனக்கே வெட்கமாக இருந்தது. அதிக பட்சமாக 2000 ரூபாய் சம்பளத்தில் இருப்பவன், இவ்வளவு மனமுவந்து உதவுகிறானே? பணம் என்பது முக்கியமில்லை, மனம் தான் வேண்டும்.//

  அனுபவித்து உண்மை உரைக்கிறீர்கள் – ஆம் மனம்தான் முக்கியம்.

  இதுபோன்ற சங்கடம் நிறைந்த அனுபவமும் நல்லதுக்குத்தான்.

 13. வாங்க அமித்து அம்மா!

  இப்பத்தான் மொத முறையா பின்னூட்டம் போடறீங்க.

  வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி!

 14. என். சொக்கன் said:

  மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. நானும் இப்படி ஒரு சம்பவத்தில் மாட்டியிருந்தாலும் (அங்கே நீங்கள் போட்ட பின்னூட்டத்தைப் பார்த்துதான் இங்கே வந்தேன்) இந்த இளைஞனைப்போல் யாருக்கும் உதவியது கிடையாது (அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்கிற வறட்டுச் சமாதானம் உண்டு)

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 15. // பணம் என்பது முக்கியமில்லை, மனம் தான் வேண்டும்.//
  உண்மையான வாசகம்.
  இப்போது தான் முதன் முதலாக உங்கள் பதிவு படித்தேன். நல்லா இருக்கு.
  வாணி

 16. //மலையாளிகளுக்கு ஏற்கனவே தமிழனைக் கண்டால் இளக்காரம்.//

  its true.

  I liked this post and read some of ur other posts as well.

  உங்களது எளிமையான எழுத்து நடை மிக அருமை.பாராட்டுக்கள் .

 17. // இரண்டு டி சர்ட்டுகளை (தமிழில் என்ன சொல்வது?) //

  இரண்டு பின்னலாடைச் சட்டைகளை அனுப்பி வைத்தேன்.

 18. ரொம்ப நன்றி மணியண்ணே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: