தலையணை வாசம்

தலையணைக்கும் நமக்கும் எப்போதும் ஒரு நெருக்கமான உறவு இருந்துட்டே இருக்கும்.

எப்படின்னு கேக்கிறீங்களா?

அம்மா மடியில் படுத்திருப்பதைப் போல அமைதியை கொடுக்கும்.

மனைவியின் தலை துவட்டல் போல அன்பு காட்டும்.

நண்பனின் தோளில் சாய்ந்து அழுவது போல் ஆறுதல் அளிக்கும்.

சில சமயம் வெளியூரில் தங்கும் போது வேறு தலகாணி வைத்து படுத்தா, தூக்கம் வராது.

சின்ன வயசுல அடிக்கடி தலகாணிக்காக என் தம்பிகளோட பெரிய சண்டையே நடக்கும். புது உறைக்காக நல்ல தலாணி உறையை வேணுமின்னே கிழிச்சதும் உண்டு.

முன்னாடியெல்லாம், தலகாணி உறைன்னு தனியா வித்தாங்களானு தெரியலை. ஆனா, எங்க வீட்டில் தலையணை உறை விலைக்கு வாங்குறதுன்ற பேச்சுக்கே இடமில்லை. அப்பா, அம்மாவின் உடுப்புகள், உறைகளாக உருவெடுக்கும். இப்ப பெரும்பாலும் 25 கிலோ அரிசி பைகள் தலகாணி உறைகளா மாறிடுது. ஒரு சில வீடுகளில் மட்டும் தையல் தெரிஞ்ச பொண்ணுக பூவேலைப்பாடெல்லாம் போட்டு உறை தைப்பாங்க.

flower.jpg

பிரச்னை என்னன்னா, வீட்ல இருந்தது அஞ்சு பேரு, தலகாணி மூணு தான் இருக்கும். நானும், என் தம்பியும், இடிச்சு, புடிச்சு ஒரே தலகாணியில பாகம் பிரிச்சு தான் தூங்குவோம். சில சமயம் எனக்கு முன்னாடியே தூங்கிட்டான்னா, அத நான் உருவி முழுத்தலகாணியில படுத்துக்குவேன்.

யாராவது ஊருக்கு போயிட்டாங்கன்னா மட்டும், அன்னைக்கு ‘ஜம்’ன்னு காலுக்கு ஒரு தலகாணி கிடைக்கும். ஆனா, காலுக்கு போட்டிருந்த தலகாணி அழுக்காயிருச்சுன்னா, மறுநா காலைல நல்லா அடி விழும்.

கல்யாணமானதும் தங்கமணி, அவங்க அம்மா வீட்ல இருந்து மெது மெதுனு தலகாணி கொண்டு வந்தாங்க. சும்மா சொல்லக்கூடாது, தலைய வச்சவுடனே, தலகாணிக்குள்ள தலை ‘பொசுக்’னு உள்ளே போயிரும். நாளாக, நாளாக என்னாச்சு, நல்லா மெலிஞ்சு, தலைய வச்சோம்னா தரைக்கு போயிருச்சு. சரி, என்ன பண்ணலாம்னு யோசிச்சு, புதுசு வாங்கலாம்னு முடிவாயிருச்சு.

new-pillow.jpg

ரொம்ப நாளா, சாலையோரத்துல வச்சு வித்துட்டிருந்த ‘புசு’ ‘புசு’ தலகாணி மேல ஒரு கண்ணு. விக்கிறவர், இத வச்சு படுத்தா, தலை வலி வராது, அழுக்காயிருச்சுன்னா, தலகாணிய நல்லா தண்ணியில முக்கி, துவைச்சு காயப்போடலாம்னு வேற ஆசை காட்டிட்டிருந்தார். நாலஞ்சு தடவ கையில வாங்கி பாத்துட்டு திருப்பி கொடுத்ததோட சரி. அத மாதிரியே வாங்கணுமினு, 300 ரூவா கொடுத்து வாங்கியாச்சு.

பழய தலகாணிய என்ன பண்றதுனு யோசிச்சு தங்கமணி, தலகாணிக்கு பதவி இறக்கம் கொடுத்து, ‘கால் தலகாணி’ ஆக்கீட்டாங்க. உன்னால தான் என் காலுக்கு தலகாணி கிடைச்சிருக்கு, இது வரைக்கும் இல்லைனு தங்கமணிட்ட சொன்னப்ப ரொம்ப நெகிழ்ந்துட்டாங்க. இது சின்ன விசயம்தான், எனக்கென்னவோ ஒரு முக்கியமான விசயமா தெரியுது அப்படினு சொன்னேன்.

angel-pillow.jpg

தலகாணில முகம் புதைச்சு யாருக்கும் தெரியாம நெறய தடவ அழுதிருக்கேன். தலகாணியில படுத்து, என்னென்னத்தயோ நெனச்சு நெறய சிரிச்சிருக்கேன். எத்தனை கனாக் கண்டிருப்பேன். தலையணைக்கும் வாசமுண்டு.

கைத் தையல்காரர வச்சு தச்சு, கிடைச்ச கழிவு பஞ்ச அமுக்கி, பழய துணி உறை போட்ட தலகாணியில சின்ன வயசுல படுத்த சுகமோ, தூக்கமோ, இப்ப அதிக பணம் கொடுத்து வாங்கும் எந்த தலகாணியில படுத்தாலும், வர்றதில்ல.

என்ன உண்மை தானே?

Advertisements

Comments on: "தலையணை வாசம்" (16)

 1. தலையணைக் கதை வாசமுடன் நல்லாயிருக்கு!
  அன்புடன்
  கமலா

 2. எங்க வீட்டுலயெல்லாம் ஒரு பையில பழைய துணியை வச்சு ஒரு சுத்து. எத்தனை துணி வைக்கிறோங்கறதைப் பொறுத்து குண்டாவோ ஒல்லியாவோ இருக்கும். இப்பவும் எனக்கு அப்படித்தான். குழந்தைகளுக்கு மட்டும்தான் பஞ்சுவைத்த தலகாணி.(எங்க ஊர்ல தலவாணின்னு சொல்லுவோம்)

  ஓ.கே.நல்லாயிருக்கு சார்.

 3. வாங்க ஏக்நாத் அண்ணாச்சி! வணக்கம்.

  // ஒரு பையில பழைய துணியை வச்சு ஒரு சுத்து //

  என்ன இருந்தாலும் அந்த தலவாணி தந்த சுகமான தூக்கமே தனி!

 4. தலையணை வாசம் எனும் தலைப்பைப் பார்த்து மாமியார் மருமகள் சண்டை இருக்கும் என எதிர்பார்த்தேன், அதனினும் முக்கியமான, சுவாரசியமான விவரங்கள் கண்டேன்… நன்று. ரட்சகனில் வரும் “சந்திரனை… ” பாடலில் வரும் தலையணை பற்றிய குறிப்பு ஏனோ நினைவிற்கு வந்து சென்றது…

 5. நன்றி! கமலா, மதி லோகேஷ்.

 6. நித்தியானந்தம் said:

  //அம்மா மடியில் படுத்திருப்பதைப் போல அமைதியை கொடுக்கும்.

  மனைவியின் தலை துவட்டல் போல அன்பு காட்டும்.

  நண்பனின் தோளில் சாய்ந்து அழுவது போல் ஆறுதல் அளிக்கும்.

  சில சமயம் வெளியூரில் தங்கும் போது வேறு தலகாணி வைத்து படுத்தா, தூக்கம் வராது//

  தலையணை பற்றிய சுகமான கதை

 7. வெயிலான் – தலையணை நல்ல சுகமாய் இருந்தது படிப்பதற்கு.. நான் சின்னப்புள்ளையா இருந்தப்ப பழைய துணி அடைச்ச தலைகானிதான்.. இப்ப வெளிய வந்ததுக்கப்புறம்தான் பஞ்சு வச்ச தலைகானிஎல்லாம்…
  ஜெயக்குமார்

 8. தலையணை பற்றி மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் வெயிலான்.அதிலும் கடைசிவரிகள் நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே 🙂

 9. ரிஷான்,

  என் வலைத்தளத்திற்கு முதல் முறையாக வந்திருக்கிறீர்கள். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! மலையகம் எப்படி இருக்கிறது?

 10. என்னைய மாரியே பேச்சுத்தமிள்ள எளுதறீங்க! ரொம்ப சந்தோசம். தல்காணி அற்புதம்!

 11. லதானந்த் ஐயா,

  நான் மட்டும் தான் இப்படி எழுதிட்டிருக்கேன்னு பயந்திட்டிருந்தேன். இப்போ நீங்களும் வந்திட்டீங்க. சந்தோசம்.

 12. அன்பும் பண்பும் நிறைந்த வெயிலானுக்கு
  நேசமுடன் நான் எழுதும் மடல்.. இல்ல.. கடிதம் இல்ல கடுதாசின்னே வெச்சுக்கலாம்
  ஐயோ அடிக்க வரதுக்குள்ள சொல்லிடறேன்.. நம்ம வூட்டுப்பக்கம் வந்து பாராட்டினதுக்கு நொம்ப தேங்க்சுன்னே..

 13. Thompson says : I absolutely agree with this !

 14. //உன்னால தான் என் காலுக்கு தலகாணி கிடைச்சிருக்கு, இது வரைக்கும் இல்லைனு தங்கமணிட்ட சொன்னப்ப ரொம்ப நெகிழ்ந்துட்டாங்க. இது சின்ன விசயம்தான், எனக்கென்னவோ ஒரு முக்கியமான விசயமா தெரியுது அப்படினு சொன்னேன்//

  கால் தலவாணிய வைச்சு வீட்டம்மாட்ட உருக்கமா பேசி நல்ல பேரை வாங்கீட்டீருவே.

  உம்மகிட்ட படிக்க நெறைய விசயமிருக்கும் போலருகே. எப்பம் முடியும்னு சொல்லும் நேர்ல வாறேன்.

  ஏங் கொழுந்தியா பையன் பேரு வெயில் முத்து, உம்ம பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டேன்.

 15. /// கால் தலவாணிய வைச்சு வீட்டம்மாட்ட உருக்கமா பேசி நல்ல பேரை வாங்கீட்டீருவே. ///
  உண்மைய பேசினு சொல்லுங்க வேலன். எப்பம்னாலும் வரலாம்.
  உங்க கொழுந்தன் ‘வெயில் முத்து’ மாதிரியே எங்க ஊர்ல நிறைய பேருக்கு வெயிலோட பேர் இருக்குது. அதான் நானும் வச்சுக்கிட்டேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: