நடுக்காட்டில் வலைப்பதிவர்கள்

வலைப்பதிவர் சந்திப்புகள் கடற்கரையில், சிறிய மற்றும் பெரிய அறைகளில் நடந்திருக்கிறது.  தமிழ் வலைப்பதிவர்  வரலாற்றில் முதல் முறையாக பொள்ளாச்சியிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள டாப் சிலிப் எனப்படும் ஆனைமலைக் காட்டில் நடந்தது.

Nandhu f/o Nila

சில மாதங்களாக வலையுலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் சகலகலாவல்லவர் லதானந்த் மற்றும் நான் எனது நண்பர்கள் நந்த கோபால் மற்றும் சுரேஷ் ஆகியோர் பதிவர் நந்து f/o நிலா மற்றும் அவரது சகோதரர் ரவி வருகைக்காக அடர்ந்த மூங்கில் மரங்கள் சூழ்ந்த, யானை(யோ)களோ, காட்டெருமையோ, நாயோ, நரியோ அல்லது கரடியோ எந்நேரமும் நடமாடும் நடுக்காட்டில் காத்திருந்தோம்.

அவர்கள் வருவதற்குள் ஆனைமலை வனவிலங்குகள் சரணாலயம் – டாப்சிலிப் என்ற இந்த இடத்தைப் பற்றி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பொள்ளாச்சியிலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 958 சதுர கி.மீ பரப்பளவுடையது.

இங்கிலாந்தில் கப்பல் கட்டுவதற்குத் தேவைப்பட்ட தேக்கு, மற்றும் ஈட்டி மரங்களைப் பயிரிடக் கடந்த 1847-ல் ஆங்கிலேய அரசு இப்பகுதியில் விஞ்ஞான வன மேலாண்மையைத் துவக்கியது.

வனப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களை யானைகளின் மூலம் கொண்டு வந்து டாப்சிலிப் பகுதியில் இருந்து உருட்டி விட்டால் மலையடிவாரத்துக்கு அவை வந்துவிடுமாம். இதன்பின் துறைமுகங்களுக்கு மரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

Nandhu f/o Nila

மரங்களை உருட்டிவிடும் மிக உயரமான இடம் டாப்சிலிப் என அழைக்கப்பட்டது. இம்முறையைக் கேப்டன் மைக்கேல் என்பவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆயிரக்கணக்கான யானைகள், காட்டெருமைகள் (நான்கு கால்களும் வெள்ளை காலுறை அணிந்திருப்பது போல் இருக்கும்), காட்டு மாடுகள், புலிகள், சிறுத்தைகள், காட்டு கரடிகள், தேன் குடிக்கும் கரடிகள், நீலகிரி வரையாடுகள், புள்ளி மான்கள், சாம்பார் இனமான்கள், மறிமான், எறும்பு தின்னி, சிங்கவால் குரங்குகள், காட்டுப்பன்றிகள், செந்நாய்கள், நரிகள், மலபார் அணில், ஒலியெழுப்பும் பலவகை புல்புல் பறவைகள், காஞ்சனப்புள் எனப்படும் கறுப்பு தலையும், மஞ்சள் நிற இறகும் கொண்ட பறவை, சோலை காக்கா, மரங்கொத்திகள், புறாக்கள் மற்றும் எண்ணிலடங்காத உயிரினங்களும் இவ்வனத்திலிருக்கிறது.

படங்களை பெரிதாக்கியும் பார்க்கலாம்.

நிறைய தேக்கு மரங்களும் (Wood என்ற ஆங்கிலேயர் தினம் காட்டில் நடந்து போகும் போது விதைத்த தேக்கு விதைகள் இன்று அடர்ந்த காடாகியுள்ளது), புல்லமருது, மூங்கில் மற்றும் பலவகை மரங்கள் காட்டை ஆக்கிரமித்திருக்கின்றன.  யானைகள் ஒடித்துப் போட்டுள்ள மூங்கில்கள், காய்ந்த இலைகள், மக்கி விழுந்த மரங்கள், கிளைகள் எதையும் எடுக்க யாருக்கும் அனுமதியில்லை.

நந்துவும், அவரது சகோதரரும் அரைமணி நேர காத்திருத்தலுக்குப்  பின் வந்தார்கள். அறிமுகத்திற்கு பின் அனைவரும் கோழி கமுத்தி என்ற இடத்திலுள்ள யானைகள் முகாமுக்கு சென்றோம்.  செல்லும் வழியின் வலதுபுறம் திடீரென பெரிய தந்தங்களுடன் முன் தலை முழுவதும் புழுதி படர பாதைக்கு வர முயற்சித்துக் கொண்டிருந்தது.  ஒரு கணம் அனைவரும் திகைத்து சிறிது தொலைவில் நின்று பார்த்து விட்டு பின் பயணத்தை தொடர்ந்தோம்.

Nandhu f/o Nila

மலைகளும், மரங்களும் சூழ்ந்த பள்ளத்தாக்கின் நடுவே இயற்கை எழிலிலுடன் யானைகள் முகாம் அமைந்திருக்கிறது.  விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஊடகங்கள் வந்து யானைகள் விநாயகரை பூசை செய்வதை படம் எடுத்து வெளியிடுவார்கள்.  குட்டி யானை எதுவும் முகாமுக்கு வந்தால் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடும்.

பத்துக்கும் மேற்பட்ட பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் இங்கிருக்கின்றன.  நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மலைவாழ் இனத்தவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இம்முகாமை பராமரித்து வருகிறார்கள்.  வனங்களில் சுற்றித் திரியும் இந்த யானைகள் தினமும் மாலை 5.30 மணியளவில் முகாமுக்கு வருகிறது.  அப்போது ராகி உருண்டையுடன் இரு அச்சு வெல்லம் வைத்து கொடுக்கப்படுகிறது.

Nandhu f/o Nila

யானைகளின் உடல்நலன் பரிசோதிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்குகிறார்கள். கால் நகங்களுக்கும், தந்தத்திற்கும் வேப்பெண்ணை கலந்த ஒரு மருந்து தடவப்படுகிறது. அங்கு வந்திருந்த கால்நடை மருத்துவர். திரு. மனோகரன் அவர்களும், வனத்துறை உயர் அதிகாரிகள் திரு. ரத்தின சபாபதி மற்றும் தியாகராசன் அவர்களும், யானைகளின் உடற்கூறு, குணநலன்கள் மற்றும் பல்வேறு விசயங்களை விளக்கி கூறினர்.

Nandhu f/o Nila

இதெல்லாம் எங்களுக்கு முன்னமே தெரியும். வேண்டாம் என்பவர்கள் எலிக்குட்டி உதவியுடன் கீழே சென்று விடுங்கள்.

யானைகளின் வயது சராசரி ஆயுட்காலம் 65 – 68 ஆண்டுகள்.

வயதாக, ஆக தும்பிக்கையிலும், தலையிலும் மற்றும் காதிலும் வெள்ளை புள்ளிகள் போன்று தோன்றும்.  காதுகள் மடங்குதலும், தொங்குதலும் வயதின் முதிர்ச்சி தான்.

தும்பிக்கை லட்சத்திற்கும் மேற்பட்ட தசைக் கோளங்களால் ஆனது.

யானை தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

யானையின் கண்களில் வழியும் நீரின் அளவையும், நிறத்தையும் பொறுத்து அதன் அப்போதய மனநிலை தெரிந்து விடுமாம்.

யானை வாயினுள்ளே மேலண்ணத்தில் உள்ள ஓட்டையின் மூலம் பல்வேறு வாசனைகளை உணரமுடியுமாம்.

யானைகளின் வயிற்றில் குடற்புழு 100 அடி நீளம் வரை வளரக்கூடும்.

ஒரு முறை வெளிப்படும் விந்தின் அளவு ஒன்றரை லிட்டர். அதன் கர்ப்ப காலம் 22 மாதங்கள். பெரும்பாலும் ஒரே ஒரு குட்டி தான் போடும்.

கண்கள் இரண்டும் பக்கவாட்டில் இருப்பதால் யானையால் ஓரளவுக்கு தான் முன்னால் இருப்பவற்றை பார்க்க முடியும்.

நெருக்கமாக யானையின் முன்னால் சென்றால் தன்னை தாக்க வருகிறார்களோ என யானை மிரண்டு, தலையை இடம் வலம் ஆட்டி என்ன? என்று பார்க்க முயலுமாம்.  எனவே யானையின் நேர் எதிரே எப்போதும் நிற்கக்கூடாதாம்.

யானையின் பக்கவாட்டில் பாகனுடன் பேசிக்கொண்டே, பாகனுக்கு பின் நாம் நின்று யானையை தொட்டால் தான் யானை பயப்படாதாம்.

நாம் யானையின் பக்கத்தில் நிற்கும் போது, அதனிடமிருந்து ஏப்பம் போன்ற ஒரு ஒலி வந்தால் நம்மை மிகவும் தோழமையுடன் நினைக்கிறது என்று அர்த்தமாம்.

மாவூத்தன் 60 கட்டளைகள் மூலம் யானையை கட்டுப்படுத்துகிறான்.

ஒரு மைக்ரோ சிப் (ஒரு குண்டூசியின் அளவை விட சிறியது) யானையின் காதுக்கு பின்னால் பொருத்தி முகாமிலிருந்து யானையை கண்காணிக்கிறார்கள்.

Nandhu f/o Nila

திரும்ப அறைக்கு வந்தவுடன், அனானிகளின் அட்டகாசங்கள் பற்றியும், சில வலைப்பதிவு நுணுக்கங்கள் பற்றியும் பேச்சு ஆரம்பமாகியது.

இனி எழுத மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு காட்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்ட லதானந்த்தை திரும்ப எழுதுங்கள் என்று நந்துகளும், நானும், கூடவே பரிசல்காரன் கைப்பேசியில் அழைத்து கேட்டுக் கொண்டார்.  கடற்பயண அனுபவங்களையும், நண்டு ஆராய்ச்சி பற்றியும் நந்து பகிர்ந்து கொண்டார். நந்துவின் சகோதரர் ரவியிடம் தாய்லாந்து பயணத்தில் ஏற்பட்ட ‘அரிய’ அனுபவங்களை ஆர்வமாக லதானந்த் கேட்டுக் கொண்டார்.  இரண்டு மணி நேர அளவலாவலுக்கு பின் உணவருந்த சென்றோம்.

இரவு உணவை முடித்து விட்டு பெரிய வாகனத்தில் காட்டு உலா சென்றோம்.  வாகனத்தின் முகப்பு விளக்கின் உதவியாலும், கையிலிருந்த திறன் வாய்ந்த மின்கல விளக்கின் ஒளியிலும் காட்டெருமை சண்டை, மான் கூட்டம், மற்றும் பெரிய கரடிகள் இரண்டையும் காணமுடிந்தது.

வன அலுவலர்களாகிய நாங்களே கரடியை இப்போது தான் பார்ப்பதாகவும், நீங்கள் யோகக்காரர்கள் என்று கூறி எங்கள் மனதை தேற்றி இன்னும் சுற்ற வேண்டும் என்ற ஆவலை மட்டுப்படுத்தி ஓட்டுநர் ராசேந்திரன் வண்டியை திருப்பி கூட்டி வந்து விட்டார். பாதையின் இருபுறமும் காட்டெருமைகள் மற்றும் மான்களின் கண்கள் விளக்கொளியில் மிளிர்ந்தன.  படம் எடுக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் நிலா அப்பா.

Nandhu f/o Nila

எங்களுக்கான அறையில் புகுந்தவுடன், நண்பர்கள் இருவரும் தூங்கி விட்டனர்.  நான் அறையின் சன்னலைத் திறந்து நாற்காலியில் அமர்ந்து, வண்டுகளின் இரைச்சல், பறவைகளின் ஒலி, பன்றியின் உறுமல், மான்களின் நடமாட்ட ஒலி இவைகளை கேட்டவாறு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.  பின் கைப்பேசியிலிருந்த பாரதியார் பாடல்களை செவி ஒலிக்கருவியில் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆஹா!!  அந்த நிமிடங்களுக்காக தான் இது வரை உயிர் வாழ்ந்தேனோ?  இனி இது போன்ற அனுபவம் என் வாழ்நாளில் கிடைக்குமா? என்று நினைத்துக் கொண்டே தூக்கம் வரும் வரை சிலு சிலு காற்றை சுவாசித்து, காற்றணிந்தமர்ந்திருந்தேன்.

காலை எழுந்து கண்ணாடி சன்னல் வழியே பார்த்தபோது நண்பர் சுல்தான் தேநீர் அருந்த அழைத்தார்.  அந்த அதிகாலையில், மிதமான குளிரில் தேநீர் தேவார்தமாக இருந்தது. (இந்த சுல்தான் தான் சுவையான மதிய, இரவு உணவுகளை அளித்தார்) பின் அருகிருந்த புல்வெளிக்கு சென்று பார்த்த போது முப்பது, நாற்பது மான்கள் மேய்ந்து கொண்டிருந்தது காணக்கிடைக்காத காட்சி.

சில மான்கள் மட்டும் நந்துவின் படப்பெட்டி வழியாக உங்களுக்காக…….

Nandhu f/o Nila

மலையேற்றம் –  டாப்சிலிப்பில் ஆரம்பித்து > கரியான்சோலை > பண்டாரவரை > டாப்சிலிப் என்று முடியும் 12 கி.மீ., பயணம். சராசரியா 5 மணி நேரம் ஆகும்.  வன அலுவலர் உதவியுடன் காட்டிற்குள் செல்ல வேண்டும்.  வழியில் பல வனவிலங்குகளை அருகில் பார்க்கலாம்.  முன்கூட்டியே பதிவு செய்து வைக்க வேண்டும்.

நானும் என் இரு நண்பர்களும் பணி நெருக்கடியால், மலையேற்றத்தை தவறவிட்டு நரகத்திற்கு இல்லையேல் நகரத்திற்கு கிளம்ப வேண்டியதாயிற்று.  இந்த அருமையான சந்திப்புக்கும், பயணத்திற்கும், சுவையான உணவிற்கும், உறைவிடத்திற்கும், உலாத்தலுக்கும் ஏற்பாடு செய்த பனியன், கைலியுடன் நின்று கொண்டிருந்த வன உயர் அதிகாரிக்கு நன்றி கூறி விட்டு, நந்து சகோதரர்களும், லதானந்தும் அறையிலிருந்து கிளம்பி பக்கத்து காட்டுப் பாதையில் நடந்து சென்று விட்டார்கள் என்ற தகவலறிந்து சென்று சந்தித்து விடைபெற்றோம். அவர்கள் மூவரும் மதியத்திற்கு மேல் கிளம்புவதாகவும், வழியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் கவனமாக செல்லும்படியும் அன்பாக வழியனுப்பினார்கள்.

கீழே வரும் வழியில் உயர்ந்த மூங்கில் மரங்களையும், கம்பீரமாக நிற்கும் தேக்கு மரங்களையும், பார்த்து ரசித்துக் கொண்டும், சாலையில் தேங்கியிருந்த நீரை அருந்தும் கீரியை கண்டு வியந்தும், சாலை நடுவில் நடுவில் கிடந்த காயாத யானை லத்தியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பக்கவாட்டிலிருந்து வந்த யானை பிளிறலை கேட்டு பயந்து கொண்டும், மலையிலிருந்து பார்க்கும் போதே பளிச்சென வெள்ளை நிறத்தில் கீழே தென்னந்தோப்புக்கிடையில் தெரிந்த அரண்மனை போன்ற வீட்டை பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டே கனத்த மனதுடன் மலையை விட்டு பிரிந்தோம்.

நான் கொஞ்சமாக எழுத வேண்டுமென நினைத்தேன்.  கடைசியில் பள்ளிப் பருவத்தில் எழுதும் பயணக்கட்டுரை போலாகி விட்டது. எவ்வளவு எழுதினாலும் என்  அனுபவத்தை என்னால் முழுமையாக புரிய வைக்க முடியாது. நீங்களும் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.

Nandhu f/o Nila

செப்டம்பர் – மார்ச் வரை டாப்சிலிப் பயணத்துக்கு ஏற்ற காலங்கள். நீங்க எப்போ வர்றீங்க?

டாப்சிலிப்பில் தங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டிய முகவரி :

கள இயக்குநர்,
ஆனைமலை புலிகள் காப்பகம்,
176, மீன்கரை ரோடு,
பொள்ளாச்சி 642 001.
தொலைபேசி : (04259) 225356, 238360

மேலே இருக்கும் படங்கள் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை குரங்கு கையிலிருந்த D80 ல எடுத்தது – நன்றி.

28 thoughts on “நடுக்காட்டில் வலைப்பதிவர்கள்

  1. கொடுத்து வச்சவங்க பாஸ். நானும் பல வருஷமா அங்க போகணும் போகணும்னு நினைச்சு வீட்டுலயே இருந்துட்டு இருக்கேன். ம்.. பார்ப்போம்.
    வாழ்த்துகள் வெயிலான்

  2. டீச்சர்,

    உங்க ஆள்களைப் பத்தின பதிவுன்றதுனால மொத ஆளா வந்துட்டீங்க.

    நான் படங்களை பதியும் போதே உங்களையும், பொன்ஸையும் தான் நினைத்தேன்.

    மகிழ்ச்சி!

    அதென்னனு தெரியலை. ஒரு உருண்டைக்கு ரெண்டே ரெண்டு அச்சு வெல்லம் தான் வச்சு கொடுக்கிறாங்க. பத்தாது தான்.

  3. நண்பர் வெயிலான் கட்டுரையை படிக்கும் பொழுது மீண்டும் ஒரு முறை சென்று வந்ததை போல் உணர்ந்தேன்.

    மைக்ரோ சிப் ஒரு குண்டு ஊசி முனை அளவு என்பதுதான் சரி.

    யானைகளை பற்றி அருமையாக எடுத்து கூறிய மருத்துவர். திரு. மனோகரன் அவர்களுக்கு மிக்க நன்றி!!!

    குறுகிய கால அவகாசத்தில் இப்படி ஒரு அருமையான ஏற்பாடு செய்து அசத்திய நண்பருக்கு (சிறந்த விருந்தோம்பல்) ஒரு சிறப்பு சபாஷ்.

    திரு. லதானந்த் அவர்களை பற்றி எழுத தனி பக்கங்கள் வேண்டும்.

    ரவி, நந்து – நம் அடுத்த சந்திப்பு எப்பொழுது? தாய்லாந்து விஷயம், சுஜாதாவின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக் அருமை.

  4. விழிகள் விரிய வைத்த புகைப்படங்களும்……

    யானைகள் பற்றிய அரிய செய்திகளும் அருமை….

    காட்டு விலங்குகள் பெயர்களின் பட்டியலும் அசர வைத்தன.

    தமிழில் ஒரு புதிய வார்த்தை கிடைத்தது.

    “காற்றணிந்தமர்ந்திருந்தேன்”

    ஏன் வார இதழ்களுக்கு எழுத கூடாது?

    வாழ்த்துகளுடன்……

  5. // மைக்ரோ சிப் ஒரு குண்டு ஊசி முனை அளவு என்பதுதான் சரி //

    சுரேஷ்,

    மருத்துவர். மனோகரன் அவர்களே 1.5 இன்ச் அளவுள்ள மைக்ரோ சிப் என்று சொல்லியதாக பத்திரிக்கை செய்தி.

    http://sify.com/news/fullstory.php?id=14668948

  6. கார்த்தி,

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    // விழிகள் விரிய வைத்த புகைப்படங்களும் //

    படம் காண்பிக்கிறது மட்டும் தான் நான். படம் எடுத்தவர் நந்து. உங்கள் பாராட்டுகள் அவருக்கே உரித்தாகுக.

    // ஏன் வார இதழ்களுக்கு எழுத கூடாது? //

    அதுக்கெல்லாம் பெரிய, பெரிய ஆளுங்க இருக்காங்க.
    நானே ஏதோ இங்க கிறுக்கிட்டிருக்கேன். உங்களுக்கு அது பிடிக்கலையா?

    என் எழுத்துக்கள் எனக்கே பிடிக்க வில்லை என்பது தான் உண்மை.

  7. அண்ணா!

    இதுவரை நான் டாப்சிலிப் போனது இல்லை, ஆனால் இதை படித்த பிறகு அங்கேயே போனது போல ஒரு உணர்வு.

    யானைகளை பற்றியும் நிறைய தெரிந்து கொண்டேன் மிக்க நன்றிண்ணா!

    நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக போக வேண்டும்.

  8. நன்றி! ரிஷான்.

    என்ன அட்லாஸ்ல லதானந்த அங்கிளை வாரு, வாருன்னு வாரிட்டிங்களாமே? சொல்லி, சொல்லி, ரொம்ப ரசிச்சார் உங்கள் எழுத்துக்களை.

  9. நல்ல பதிவுக்கு நன்றி!

    டாப் என்றாலே எனக்கெல்லாம் இதுவரை ஃபிகர்கள் மிடிக்கு அணியும் டாப்ஸ் தான் நினைவுக்கு வந்துக்கொண்டிருந்தது. இனிமேல் டாப் ஸ்லிப்பும் நினைவுக்கு வரும்!

  10. அன்று வந்தவர்களில் யாராவது எழுதட்டும். விடுபட்டிருந்தால் நாம் எழுதலாம் என நினைத்தேன். எதையும் விடாமல் சுவையாய் எழுதிவிட்டீர்கள்.

    இன்னும் சிறப்பாக ஆர்கனைஸ் செய்து மீண்டும் வேறோர் இடத்தில் சந்திப்போம்.

    ஆமாம் அந்தத் “தக்கதுணை” படத்தை ஏன் போடவில்லை?

  11. ///
    ஆமாம் அந்தத் “தக்கதுணை” படத்தை ஏன் போடவில்லை?
    ///

    போட்டுக் குடுக்குற புத்தி. என்னைக்காவது வச்ச சூனியம் அவருக்கே திரும்பப் போகுது. அப்போ இருக்குடி மாப்பிளைகளா என் மாமன் வீட்டுல காமெடி.

  12. மிக நல்லதொரு அனுபவத்தை, மிக நல்ல முறையில் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்..

    எழுதிய விதமும், புகைப்படங்களை லே-அவுட் செய்திருந்த விதமும், நீங்கள் ஒரு தேர்ந்த இயற்கை ரசிகர் என்று பறைசாற்றுகிறது!

    //ஆமாம் அந்தத் “தக்கதுணை” படத்தை ஏன் போடவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்… பாலச்சந்தர் படங்கள்ல வர்ற அனானி கேரக்டர் போல ஆய்டுச்சுப்பா இந்த `தக்கதுணை’ கேரக்டர்!!

  13. /// டாப் என்றாலே எனக்கெல்லாம் இதுவரை ஃபிகர்கள் மிடிக்கு அணியும் டாப்ஸ் தான் நினைவுக்கு வந்துக்கொண்டிருந்தது. ///

    இதான்! இதான் லக்கி லுக் ஸ்டைல்!

    ஒரு வருடம் கழிச்சு நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க.

    நன்றி லக்கிலுக்!

  14. நன்றி! லதானந்த் ஐயா,

    // இன்னும் சிறப்பாக ஆர்கனைஸ் செய்து மீண்டும் வேறோர் இடத்தில் சந்திப்போம். //

    இந்தப் பயணமே சிறப்பான ஏற்பாடு தான். அடுத்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    //ஆமாம் அந்தத் “தக்கதுணை” படத்தை ஏன் போடவில்லை?//

    இதற்கு விஜய் பதில் சொல்லியிருக்கிறார்.

  15. // என்னைக்காவது வச்ச சூனியம் அவருக்கே திரும்பப் போகுது. அப்போ இருக்குடி மாப்பிளைகளா என் மாமன் வீட்டுல காமெடி. //

    சூப்பர்! சூப்பர்!!

  16. // எழுதிய விதமும், புகைப்படங்களை லே-அவுட் செய்திருந்த விதமும், நீங்கள் ஒரு தேர்ந்த இயற்கை ரசிகர் என்று பறைசாற்றுகிறது! //

    நன்றி!

    நல்லதொரு பயண அனுபவத்தை தவறவிட்டு விட்டீர்கள் பரிசல்!

    அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாயிருங்கள்.

  17. நானும் என் நண்பர்களும் 1993ம் வருடம் சென்றிருந்தோம். அருமையான வானிலை, ஆனால், அந்த சமயம் அவ்வளவாக வசதிகள் இல்லை. சுற்றி பார்க்க எந்த வாகனமும் இல்லாததால்
    ஒரு உள்ளூர் ஆளுடன் காட்டுக்குள் சென்றோம்.

    நானும் உங்களைப்போல் இரவில் வாக்மேனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.

    அது ‘புதிய முகம்’ படம் வெளி வந்த சமயம். அந்த பாடல்கள் இன்று கேட்டாலும் எனக்கு டாப் சிலிப் ஞாபகம் தான் வரும்.

    – பாபு.

  18. அருமையான சந்திப்பின் விபரங்கள். நண்பர்கள் காட்டினுள் சந்திப்பதென்பது -( பல வித விலங்குகளுடன்) – ஒரு வித்தியாசமான சந்திப்பு.

    நல்வாழ்த்துகள்

Kana praba -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி