மதுரை 1980

சுப்ரமணியபுரம் படத்தின் தலைப்பு ‘மதுரை 1980’ என்று தான் இருந்திருக்க வேண்டும்.

என் சிறுவயதில் பார்த்த எண்பதுகளின் காலகட்டங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட இயக்குநரும், கலை இயக்குநரும் பட்ட மெனக்கெடல்கள் வீண் போகவில்லை.

ஒவ்வொரு காட்சியிலும், ஏதோ ஒரு நினைவை, உணர்வை தொட்டுச் செல்கிறார்கள்.


பழமை மாறா தெருக்கள்

கம்பி போட்ட பணக்கார வீடுகள்,

உடைகள் (கலர், கலர் கட்டம் போட்ட சட்டை, பெல்பாட்டம் பேண்ட், பாவாடை தாவணி)

சிகை அலங்காரம் (ஹிப்பி, குருவிக்கூடு)

பெல்ட்கள், கண் கண்ணாடிகள்

கதாநாயகி கடித்துக் கொண்டே இருக்கும் கல் வைத்த அன்னம் டாலர்

நடுவே தகரம் இணைத்து விளம்பரம் எழுதியிருக்கும் மிதி வண்டி

பழைய ஸ்கூட்டர், அம்பாசிடர்

அலுமினிய பெயிண்ட் பூசப்பட்ட பாண்டியன் டவுண் பஸ்

கே.ஏ.எஸ் சேகர் லாட்டரி விற்பனை வண்டிகள்

லிமோ டெய்லர், காளி மார்க் கலர், ஐ டெக்ஸ் கண் மை விளம்பரங்கள்

தெருவெங்கும், எண்பதுகளில் வெளி வந்த திரைப்படங்களின் சுவரொட்டிகள்

பஞ்சு வைக்காத புகைப்பான்கள் [பில்டர் இல்லாத சிகரெட் – இப்ப தெரிஞ்சுதா 🙂 ]

லாரி பட்டையிலிருந்து செய்யப்படும் கத்தி,அரிவாள்கள்

பழைய மாதிரியான மிதி ரிக்‌ஷாக்கள்

டீக்கடைகளில் கூட பாய்லர்கள், பூப்போட்ட கண்ணாடி டீ டம்ளர்

மதுரையின் சீட்டாட்ட கிளப்கள்

சிறைச்சாலை உள் அமைப்புகள்

அண்ணாச்சிகளே மறந்த பழைய கடை, குண்டு சோடா

தோல் தொழிற்சாலைகள்

நீளமான துணி துவைக்கும் இடங்கள்

எண்கள் சுழற்றும் கறுப்பு தொலைபேசி

கதவு வைக்கப்பட்ட கறுப்பு வெள்ளை டிவி

பெரிய பளிச்சிடும் விளக்குகள் பொருத்திய புகைப்படக்கருவி

வயர் பின்னப்பட்ட சாய்வு நாற்காலி

பழைய சென்ட்ரல் திரையரங்கம்

தள்ளிக் கொண்டே செல்லக்கூடிய திரைப்பட விளம்பர வண்டி

தியேட்டர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களின் படபெயர்களில் மின்னும் குண்டூசி வைத்து குத்தி வைக்கப்படும் ஜிகினாக்கள்

தினசரி செய்தித்தாள்களின் தலைப்பு செய்தி விளம்பரங்கள்

டீக்கடை ரேடியோக்களில் ஒலிக்கும் செய்திகளில் கூட தனி கவனம்

இன்னும் நான் விட்டுப்போன, மறந்தவைகள் எத்தனையோ.

இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள், இது வரை தமிழ் படங்களில் குறைந்த அளவே வந்திருக்கும் கதையோடு ஒட்டிய ‘சிரிக்க’ வைக்கும் நகைச்சுவை.

[http://www.youtube.com/watch?v=S3HA-eJa4no]

மதுரைக்காரங்ஙளின் மண் மணம் மாறா பேச்சு (ஜெய் தவிர), ஆத்திரம், கோபம், குசும்பு, சிரிப்பு, வெள்ளந்தித்தனம், குரூரம் என அப்படியே பெயர்த்தெடுத்து காட்டியிருக்கிறார் இயக்குநர் சசிகுமார் (படத்துல பார்க்கும் போது தாடி வைத்த பாண்டியன் மாதிரி இருக்கார்). புரியும்படியான வசனங்கள்.  இரண்டாவது பாதியில் ஒரே ரத்தம்.

கதைக்கேற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இணை, துணை நடிக, நடிகைகள். காதைப் பிளக்காத ஜேம்ஸ் வசந்தனின் (சன் டிவியில மொத, மொத கால் மேல கால் போட்டு எகத்தாளமா உக்காந்து திரைவிமர்சனம் சொல்லுவார்ல அவர் தான்.  காலம் எப்படி அவரையே விமர்சனம் செய்யும் அளவு மாற்றி விட்டது பார்த்தீர்களா?) பாடல் மற்றும் பின்னணி இசை. கதாநாயகி சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி தங்களுடைய பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலான தொழில் நுட்ப கலைஞர்கள் பருத்தி வீரனில் பணியாற்றியிருப்பதால் இயக்குநருக்கு கூடுதல் வசதி. இப்படம் இயக்குநரையும், கலை இயக்குநரையும், இசையமைப்பாளரையும், உடை வடிவமைப்பாளரையும் மற்றும் ஒளிப்பதிவாளரையும் உழைப்பிற்கேற்ற உயரத்திற்கு கொண்டு சேர்க்கும்.

போதும்! மீதியை நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

குறைகளும் இருக்கிறது.  மொத்தத்தில் நிறைவாயிருக்கிறது.

வாழ்த்துவோம்!  வளரட்டும்!

வலைப்பதிவர்கள் கூடி தசாவதாரம் விமர்சனம் எழுதியபோது கூட, படவிமர்சனம் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஏனோ, இந்த படம் பார்த்த பின் நிறைய பேரை கூப்பிட்டு படம் பார்க்க சொல்லி, படத்தைப் பற்றியே வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன் என்பது பின் யோசித்து பார்க்கும் போது என்னால் அறியப்பட்டது.

படம் பாருங்கள்! என நான் சொன்ன பலரும் சிடி வரட்டும், பார்க்கிறேன் என்று சொன்னார்கள்.

என்ன கொடும சசிகுமார் இது 😦

 

 

 

 

 

 

 

 

 

Comments on: "மதுரை 1980" (25)

 1. நான் ஊருக்கு சென்றவுடன் கண்டிப்பாக பார்க்க போகிறேன் (திரை அரங்கில்)

 2. கண்டிப்பா திரை அரங்கில் மட்டும் பாருங்க கிரி! அது தான் அவங்களோட உழைப்புக்கு கொடுக்கிற மரியாதையா இருக்கும்.

 3. இரா.பிரபு said:

  மதுரைய மையமா வச்சு எந்த படம் வந்தாலும் முதல் ஆளா பார்த்திருவேண்ணே!

  இது கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சுண்ணே! இன்னைக்கே போய் பாக்குறேண்ணே…!

 4. சரி தம்பி!

  அவசியம் பாத்துட்டு உனக்கு பிடிச்சிருக்கானு சொல்லு!

 5. Worth than Universal Hero Movie

  Pretty movie( feeling is reached to audience) – last 15mins hats off

 6. தியேட்டருக்கு நோட்டு, பேனா சகிதம் எண்பதுகளில் காலேஜ் செல்வது போலவே போனீர்களோ..? எல்லாத்தையும் விலாவாரியாக விவரித்திருக்கிறீர்களே?

  படம் பார்க்கும் ஆவலை, உங்கள் விமர்சனமும் அதற்குத் தகுந்த படங்களும் தூண்டுகிறது..

 7. // தியேட்டருக்கு நோட்டு, பேனா சகிதம் எண்பதுகளில் காலேஜ் செல்வது போலவே போனீர்களோ..? //

  நோட்டு, பேனால்லாம் எடுத்துட்டு போகலை. ஒரு விசயம் மனசைத் தொட்டுட்டா மறக்காதுல்ல.

  நன்றி! கிருச்ணகுமார்.

 8. எங்களூர் தேவி கருமாரி தியேட்டரில் பாலைவனச்சோலை போட்றுக்குறாக!

 9. // எங்களூர் தேவி கருமாரி தியேட்டரில் பாலைவனச்சோலை போட்றுக்குறாக! //

  பாத்துட்டு சீக்கிரமா விமர்சனம் போடுங்க. வேற யாராவது முந்திக்கப் போறாங்க.

  ‘ரமேசு’னு பேர் இருக்கிறவங்கெல்லாம் ரொம்ப குசும்பு பிடிச்சவங்கனு சொல்லி கேட்டிருக்கேன். இப்ப தான் பாக்கிறேன். 😉

 10. நன்றி வெயிலான்,

  பெல்பாட்டம் பேண்ட் (வக்கீல் கூட), தோள்பட்டை வரை நீளும் சட்டைக் காலர், விலாப்பகுதியில் பிடிப்பாக இருக்கும் தையல், LP ரெக்காடுகள், நீள குழாய் ஸ்பீக்கர், ஊக்கமுள்ளோருக்குப் பரம திருப்தி-சிஸர்ஸ் விளம்பரம், இன்னும் சொல்ல நிறைய உள்ளது.

  விகடன்ல 44 மார்க். கொடுமை என்னன்னா, முனியாண்டிக்கு 41 மார்க். என்ன நியாயம்னு புரியல.

  ஹிந்து விமர்சனம் லபக்தாஸ் எழுதியிருப்பார் போல.

  மதுரைக்கு வெளியே இந்தப் படம் எவ்வாறான வரவேற்பைப் பெறும் என்பது தெரியவில்லை.

 11. நன்றி! வடகரை வேலன் (பேர கொஞ்சம் சுருக்கக்கூடாதா? 😉 ) அண்ணாச்சி!

  இன்னும் நிறைய இருக்கு! பழைய பத்து ரூபாய், நூறு ரூபாய் நோட்டுகள்.

  // கொடுமை என்னன்னா, முனியாண்டிக்கு 41 மார்க் //
  அந்தக் கொடுமய என் கண்ணால பாத்தேன் 😦

  மதுரைக்கு வெளியேவும் கண்டிப்பா நல்ல வரவேற்பு இருக்கும். பருத்தி வீரனுக்கு இருந்ததே!

 12. வேலன்னு வச்சுக்குங்க. காசா பணமா?

 13. தமிழ் ராஜா said:

  உங்களின் கவனிப்பு மிக அருமை. மதுரையை இயக்குநர் காட்டிய விதமெல்லாமே நன்றாகத் தான்
  இருந்தது. இவ்வளவு சொல்லிக் கொண்டு போகும் நீங்கள் கதையின் போக்கை மட்டும் ஏன் சொல்லாமல்
  விட்டு விட்டீர்கள். பருத்தி வீரனுக்கு இணையாக ஒரு காலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
  பருத்தி வீரன் கதையில் உயிர் இருந்தது. இதில் சிறிதும் அது இல்லை.
  1980 யை காட்ட அவ்வளவு மெனக் கெட்டவர்கள் கதையை காட்ட வில்லையே…
  கதாநாயகியின் அறிமுக காட்சிகள் பருத்தி வீரன் கதாநாயகியையே ஞாபகப் படுத்துகிறது.
  நடையும் பிரியமாணியின் நடையையே பிரதிபலிக்கிறது. பருத்தி வீரன் போல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று மட்டும் முயற்சி செய்திருக்கிறார்கள்.
  கால் நடக்க முடியாமல் வரும் கதாப்பாத்திரமும் , சமுத்திரதகணியின் கதாப்பாத்திரமும் தவிர
  வேறு எதுவும் மனதில் நிற்கும் படியாக இல்லை

 14. […] தவற விட்டுட்டேன் – வெயிலாரே மன்னிக்க. மதுரை 1980 சுப்ரமணியபுரம் படத்தின் தலைப்பு […]

 15. // . இவ்வளவு சொல்லிக் கொண்டு போகும் நீங்கள் கதையின் போக்கை மட்டும் ஏன் சொல்லாமல்
  விட்டு விட்டீர்கள். //

  கதையின் போக்கை வேண்டுமென்றே தான் சொல்லாமல் விட்டேன்.

  // பருத்தி வீரனுக்கு இணையாக ஒரு காலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. பருத்தி வீரன் கதையில் உயிர் இருந்தது.
  கதாநாயகியின் அறிமுக காட்சிகள் பருத்தி வீரன் கதாநாயகியையே ஞாபகப் படுத்துகிறது. //

  பருத்தி வீரனை நினைத்துக் கொண்டும், ஒப்பிட்டும் சுப்ரமணியபுரம் பார்த்திருக்கிறீர்கள். படத்தில் கோளாறு இல்லை. உங்கள் பார்வையில் தான்.

  நன்றி தமிழ்ராஜா!

 16. // தவற விட்டுட்டேன் – வெயிலாரே மன்னிக்க.//

  பரவாயில்லைங்க. அதுக்காக எதுக்கு மன்னிப்பெல்லாம்….

  கதம்ப மாலையிலிருந்து ஒரு பூ உதிர்வதில்லையா, அது மாதிரி நினைச்சுக்கோங்க.

 17. பாலபாரதி அவர்கள் தளத்தில் படத்தைப் பார்க்குமாறு பரிந்துரை ஃப்ளாஷ் ஆகிக் கொண்டேயிருக்கிறது. இப்போது அருமையான விமர்சனமாகத் தங்கள் பரிந்துரை.

  கடைசி இரண்டு வரிகள் ‘நச்’! நான் சொல்லலைப்பா:))!

 18. // இப்போது அருமையான விமர்சனமாகத் தங்கள் பரிந்துரை //

  பரிந்துரையெல்லாம் இல்லை.
  இது வரைக்கும் எந்த படத்துக்கும் நான் விமர்சனம் எழுதினதில்லை. இந்தப் படம் நல்லாருக்குனு எனக்கு பட்டதனால், உங்களுக்கும் சொன்னேன்.

  நன்றி!

 19. தமிழ்த் திரை யுலகில் எப்போதாவது நல்ல படங்கள் வருவதுண்டு அதை குறிஞ்சி மலர் போல என்பர்.
  உங்கள் விமர்சன்ம் ” சூப்பர்”
  தி.விஜய்

  மறுமொழிகள் | விஜய்

 20. படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது
  உங்கள் விமர்சனம்…..

 21. // படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது
  உங்கள் விமர்சனம்… //

  நன்றி! விஜய்.

 22. கானா பிரபா said:

  நான் இருக்கும் நாட்டில் ரஜனி, கமல் விஜயை தவிர வேறு படம் வராது, சுப்ரமணியபுரத்துக்காக வழிமேல் விழி வைத்திருக்கிறேன்.

 23. காத்திருத்தல் வீண் போகாது பிரபு!

 24. 🙂

  நீங்களும் எல்லாத்தையும் கவனிச்சிருக்கீங்களே !! இன்னொரு முறையும் கண்டிப்பாகப் படத்தைப் பார்ப்பேன் !! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: