காக்காப்பொன்

சின்ன சின்னதா, மினுமினுன்னு, கருநிறத்தில், தகடு தகடாக ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியிருக்கும் இந்த காக்காப்பொன். சிறு வயதில் நானும் நிறைய சேர்த்திருக்கிறேன். அதைப் பொடியாக்கி முகத்தில் பூசிக்கொண்டால் முகமெங்கும் ஜிகு ஜிகுவென ஜிகினா போட்டார்போலிருக்கும்.

காக்காப்பொன்

காக்காப்பொன்

வெள்ளந்தியான மனிதர்கள், எந்நேரத்திலும் என்ன சத்தம் கேட்டாலும், ஒத்தாசைக்கு ஓடிவரும் பக்கமனிதர்கள்.  ஏழை ஓலைக் குடிசைகளும், பனைமரங்களும், வேட்டாபீசும், பாவாடை தாவணியும், டயர் மாட்டிய ரெட்டை மாட்டு வண்டிகளும், பர்ஸ் வச்ச பெல்ட் கட்டிய மூடை தூக்கிகளும், எண்ணைய்க் குடோன், பயராபீஸ் முதலாளிகளும், நடுஇரவு குடுகுடுப்பைக்காரரும், வேட்டி கட்டிய கிராமத்து! டாக்டர்களும், சுட்டுப் பொசுக்கும் வெயிலும், கருவேலங்காடுகளும், கத்தாழை, கள்ளிச்செடிகளும் நம்மில் பலருக்கு புதியதாக இருக்கும்.

ஒரு தேங்காய் உடைத்து முழுவதும் கீறி சில் (துண்டு) போட்டு விற்றபின் தான் அடுத்து    முழு தேங்காயை கடைக்காரர் உடைப்பார். அப்போது நாம் ஏதாவது வாங்க கடையில் நின்றால், இல்லையென்றால் தேங்காய் சில் வாங்கினால், தேங்காய் தண்ணி இலவசமாக கிடைக்கும். தேங்காய் சில் வாங்குவதற்காக போய் தேங்காய் தண்ணி குடிப்பதற்கே பல நேரங்கள் பலசரக்கு கடையில் காத்திருந்திக்கிறேன். பண்டிகையன்று தான் முழுத் தேங்காய் வீட்டிற்கு வரும்.

பொதுவாக டீக்கடைகளின் அன்னன்னைய வியாபாரத்தை எத்தனை லிட்டர் பால் செலவழிந்தது என்பதைக் கொண்டும், சிறு மளிகைக் கடைகளில் அன்றைய தேங்காய் விற்பனையைக் கொண்டும் நிர்ணயிப்பார்கள்.  ஏனென்றால் ஒரு தேங்காயோ அல்லது   தேங்காய் சில்களை வாங்குபவர்கள் அதனுடன் இதர பொருட்களையும் வாங்குவார்கள்.

பலசரக்குக் கடை நடத்தும் கணவனுடன் சேர்ந்து கூடமாட யாவாரத்தை கவனிக்கும் மனைவி.

வேட்டாபீஸ் (பட்டாசு தொழிற்சாலை) – வெடிமருந்து கைகளுடன் வேலை செய்து கொண்டிருக்கும் வருங்காலம். கையை எப்படி கழுவினாலும் முழுமையாக மருந்து போகவேபோகாது. அதே மருந்துக் கையோடு தான் பெரும்பாலும் சாப்பிடுவார்கள்.

மருந்தடைக்கும் (பட்டாசுக்குள் வெடிமருந்தை இறுக்கமாக அடைப்பவர்) மனிதருக்கு மட்டும் தலை முதல் கால் வரை வெடிமருந்தோடு தான் வேலையே செய்வார். தெருவில் அலுமினிய வர்ணம் பூசிக்கொண்டு காந்தி தாத்தா போல் வேசமிட்டு அசையாமல் நிற்பார்களே, அது போல் இருப்பார் பட்டாசுக்கு மருந்தடைப்பவர்.  அவருக்கு மட்டும் மற்றவர்களை விட வேலை நேரம் குறைவு, அதே சமயம் ஆயுசும் ரொம்ப குறைவு.

வேட்டாபீஸில் எதற்கெடுத்தாலும் ‘சள்ளு’ ‘புள்ளு’னு விழும் போர்மேன்.

வீட்டில், கண்ணில் கண்ணீரோடும், கையில் வெளக்குமாறோடும் அம்மா, வீடு கூட்ட, கோழி துரத்த, அதே வெளக்குமாறு தான் மகளை அடிப்பதற்கும்.

கருவேலங்குச்சிகளை வெட்டி வந்து மூட்டம் போட்டு ‘கரி’யாக்கும் வேலையில் அண்ணன்.

மச்சானையே கல்யாணம் செய்ய வேண்டும் என்ற கனவோடும், டவுண் பெண்ணைப்பார்த்து ரெண்டாயிரம் ரூபாய்க்கு சுரிதார் வாங்க ஆசைப்படும் வேட்டாபீசுக்கு வேலைக்கு போகும் தங்கை, ஒரு திண்ணிப்பண்டாரத் தோழி.

மகன் இஞ்சினியராகி குடும்பத்தை காப்பாற்றும் வரை உழைக்கலாம் என்ற கனவுகளுடன், அரிசி, பருப்பு, கடலை மூடை சுமந்து கொண்டு சேர்க்கும் மாட்டு ‘வண்டிக்கார’ மாமா. மாமாவுக்கு அடங்கி வீட்டில் அடிவாங்கிக் கொண்டிருக்கும் அத்தை.

தனக்கு வரப்போகிறவள் ஒரு டிகிரி, கணினி தெரிந்த பெண்ணாக இருந்தாலே போதுமென்ற சராசரிக் கனவுகளுடன் இஞ்சினியருக்கு படித்துக் கொண்டிருக்கும் மச்சான்.

கனவுகள்………

கரிசக்காட்டு மக்களின் கனவுகள். கருப்பிக்கு ஒரு கனவு, கருத்த மாமனுக்கொரு கனவு. சிவத்த மச்சானுக்கொரு கனவு….

எல்லோரும் மிகச்சாதாரணர்கள். இவர்களின் கனவுப்பூக்களின் உரசல்கள் தான் ’பூ’. சொல்லியவிதத்திற்காகவும், கதையை தேர்ந்தெடுத்த துணிச்சலுக்காகவும் இயக்குநர் சசி நிச்சயம் பாராட்டுக்குரியவர். அனைத்து கதாபாத்திரங்களையும், மிகப்பொருத்தமாக தேர்வு செய்திருக்கிறார்.  எழுத்தாளர்கள் லட்சுமணப் பெருமாள், சிவதாணு மற்றும் பாரதிதேவி ஆகியோரையும் அரிதாரம் பூச வைத்திருக்கிறார்.

கதாநாயகி கரிசக்காட்டு கருப்பியாகவே மாறி விட்டார்.  அருமையான நடிப்பு.

கதாநாயகன் தேர்வில் மட்டும் சசி கொஞ்சம் சமரசமாயிருக்கிறார். று பரிசீலனை செய்திருக்கலாம்.

 

கதையின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த இவர்களின் முகங்கள் படவிளம்பரங்களில் இல்லாததால், ஏதோ என்னாலானது – அவர்தம் முகங்கள் சிறு படங்களாக (நன்றி – Indiaglitz).

இதில் இனி தான் மூலக்கதையான எழுத்தாளர் தமிழ்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை படிக்க வேண்டும்.

கரிசக்காட்டின் புழுதி, சோளக்காடு, கந்தக பூமியின் உக்கிரம், பனைமரங்கள், கால் பொசுக்கும் ’வெயில்’ என கரிசல்காட்டை திரைக்கு சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முத்தையா. தலை தட்டும் வாசலுள்ள குடிசைக்குள்ளும், வயல்வெளிகளுக்குள்ளும்,  வெகு இயல்பாக ஒளிப்பதிவுக் கருவி சென்று வருகிறது.

இந்த திரைப்படம் தகிக்கும் தங்கமோ, ஜொலிக்கும் வைரமோ அல்ல. கரிசக்காட்டில் மினுமினுக்கும் காக்காப்பொன்.

இந்தக் கரிசக்காட்டுப்’பூ’ பற்றி பலரும் எழுதியிருக்கலாம். ஆனால் நான் ’வெயிலான்’ எழுதுவது தான் ஆகப்பொருத்தமாயிருக்கும்.

டிஸ்கி – பதிவு முழுவதும் எழுதிவிட்டு மேலேயுள்ள கதாபாத்திரங்களின் படங்களை தேடிப்போகும் போது தான் டிரெய்லரைப் பார்க்க நேர்ந்தது.  படத்தின் டிரெய்லரிலும், நான் எழுதியது போலவே கனவுகளை பிரித்திருந்தார்கள்.

Advertisements

Comments on: "காக்காப்பொன்" (48)

 1. அருமை நண்பரே,

  வித்தியாசமான விமர்சனம். கதைக் களம் மற்றும் கதாபாத்திரங்களின் தன்மைகளை மட்டுமே கூறி கதையைப் பற்றி ஒரு நூலிழை அளவுகூட சொல்லாமல் வாசகனை படம் பார்க்க தூண்டும் விதத்தில் மிக அழகாக வந்திருக்கிறது இந்த பதிவு.

  வாழ்த்துகள்..!

 2. பலசரக்கு கடைக்காரரை எங்கோ பார்த்த மாதிரியே இருந்தது. இப்போதுதான் தெரிகிறது சென்னை 28ல் நடித்தவரென்று.

 3. பாராட்டுக்கு நன்றி நாடோடி இலக்கியன்.

  பலசரக்கு கடைக்காரர் சிறிது நேரமே வந்தாலும், மிகவும் நன்றாக, அமைதியாக நடித்திருப்பார்.

  சென்னை 28ல் எதிரணி தலைவராக நடித்திருந்தார்.

 4. ம்ம்… நம்ம ஊருக்கதை….
  பாக்கனும் போல இருக்கு.. ஆனா இங்க வெளியிட மாட்டாங்களே…..

  CD வரும்வரை காத்திருக்க வேண்டியது தான்…
  🙂

 5. அருமையாக எழுதி இருக்கீங்க! படம் இங்கே ரிலீஸ் ஆகாது, சீடியில்தான் பார்க்கனும்

  காக்காப்பொன் பற்றி கொஞ்ச டீட்டெயிலாக சொல்லுங்களேன்!

 6. அருமையான நடையில் வித்தியாசமான விமர்சனம்! பார்க்கத் தூண்டுகிறது உங்களின் விமர்சனம்! கவனத்தை வசியப்படுத்துகிறது உங்கள் எழுத்து. ஒரு சிவகாசத் தெருவை கண்முன் கொண்டுவர எத்தனிக்கிறது உங்கள் விவரிப்பு! அந்த சசிதான் சுப்பிரமணியபுரம் இயக்கியதா?

 7. காக்காபொன் – படம் இருந்தால் போடவும். பார்த்திருக்கலாம் அதுதான் இதுவென்று தெரியாமலே!!

 8. நன்றி! சந்தன முல்லை.

  // அந்த சசிதான் சுப்பிரமணியபுரம் இயக்கியதா? //

  இல்லை இந்தப் படத்தின் இயக்குநர் வேறு.

 9. // காக்காப்பொன் பற்றி கொஞ்ச டீட்டெயிலாக சொல்லுங்களேன்! //

  // காக்காபொன் – படம் இருந்தால் போடவும். //

  பதிவை எழுதிவிட்டு, காக்காப்பொன்னைத் தான் மூணு – நாலு நாளா கூகிள்ல தேடி, கிடைக்காம வெறுத்துப் போய் இன்னைக்கு பதிவை வெளியிட்டேன்.

  இன்னும் தேடிப் பார்க்கிறேன்.

  நன்றி குசும்பரே !

 10. ஒரு விமர்சனம் எப்படி இருக்கனும்னு சொல்லியிருக்கீங்க வெயிலான். நன்றி.

 11. ரொம்ப பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க.

  நன்றி அண்ணாச்சி!

 12. நேற்று பார்த்தேன். அருமையான படத்துக்கு அடக்கமான அறிமுகம்.

  /// நம் சமூகத்தில் எப்பவுமே ஆண்களின் பழைய காதல்கள் ஒரு அழகான நினைவுகளாகவும், பெண்களின் பழைய காதல்களை ஒரு அசிங்கமாகவும் நினைக்கின்றோம். ஒரு திருமணமான பெண்ணின் பழைய காதலை சொல்லும் முயற்சி இது.///

  இது போன்ற முயற்சிகளுக்கு வெற்றியைத் தர வேண்டியது நமது கடமை!

 13. // ம்ம்… நம்ம ஊருக்கதை…. பாக்கணும் போல இருக்கு.. //

  ஆமா ஜெகதீசன்! நம்ம ஊருக்கதை தான்.

  கண்டிப்பா சிடி எங்கே கிடைக்கும்னு தேடிக்கண்டுபிடிச்சு பாருங்க. நன்றி!

 14. // நேற்று பார்த்தேன். அருமையான படத்துக்கு அடக்கமான அறிமுகம். //

  நீங்களும் நாலு வரிகளில் அழகாக எழுதியிருந்தீர்கள் தமிழ்பிரியன்.

  நன்றி!

 15. // காக்காப்பொன் பற்றி கொஞ்ச டீட்டெயில் //

  இது கல்லுல இருக்கும்.
  பள்ளி நாட்களில் வீடு கட்ட கருங்கல் வருமுல்லா. அதுல எப்பவாச்சும் அங்கங்க இருக்கும். தட்டி எடுக்கணும்.
  இங்கிலீஷ்ல silica னு சொல்லுவாங்க.
  Electrical Insulator தயார் பண்றதுகுரிய முக்கியமான மூலப்பொருள்.

 16. நான் இன்னும் படம் பாக்கல. நாளை பாப்பேன் பாத்துட்டு வந்து சொல்லுறேன்.

  ஆனா உங்க விமர்சனம் மிக அருமை வெயிலான்.

 17. படம் நல்லாயிருக்கோ இல்லையோ உங்க விமர்சனம் சூப்பரா இருக்கு வெயிலான்..

 18. // வீடு கட்ட கருங்கல் வருமுல்லா. அதுல எப்பவாச்சும் அங்கங்க இருக்கும். //

  விளக்கங்களுக்கும், கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி சுந்தரம்.

  வடகரை வேலன் கூட கிணறு தோண்டும் போது உள்ளிருந்து எடுக்கும் மண்ணோடு கலந்து கிடைக்கும் என்று சொன்னார்கள்.

 19. // இன்னும் படம் பாக்கல. நாளை பாப்பேன் பாத்துட்டு வந்து சொல்லுறேன். //

  படம் பாத்துட்டு சொல்லுங்க கார்த்தி! நன்றி!

 20. // படம் நல்லாயிருக்கோ இல்லையோ உங்க விமர்சனம் சூப்பரா இருக்கு வெயிலான்.. //

  படம் நல்லாயிருந்ததால் தான் விமர்சனமே எழுதியிருக்கிறேன். நன்றி வெண்பூ.

 21. வெயிலான் .. விமர்சனம் மாதிரியே இல்லை. மிக வித்யாசமா இருக்கு. அந்த படம் மாதிரியே.

  அதே மாதிரி அந்த காக்கபொன் மேட்டர் கூட சின்னவயசில நானும் பண்ணிருக்கேன். பிற்காலத்திலதான் தெரிஞ்சுது அதுக்கு பேரு மைக்கா னு.

 22. நன்றி அதிஷா!

  எப்பவும் நீங்க முதல்ல விமர்சனம் போடுவீங்க. இந்தப் படத்துக்கு இன்னும் போடலியே?

  ஆமா. மைக்கா தான் அதோட பேரு.

 23. அடப் போங்கப்பு நான் ஏதோ உங்க ஊர்க் கதை எண்டு நினைச்சன்.

 24. அருமையான நடையில் வித்தியாசமான விமர்சனம்!

 25. //பனைமரங்களும், வேட்டாபீசும், பாவாடை தாவணியும், டயர் மாட்டிய ரெட்டை மாட்டு வண்டிகளும், பர்ஸ் வச்ச பெல்ட் கட்டிய மூடை தூக்கிகளும், எண்ணைய்க்குடோன், பயராபீஸ் முதலாளிகளும், நடுஇரவு குடுகுடுப்பைக்காரரும், வேட்டி கட்டிய கிராமத்து! டாக்டர்களும், சுட்டுப் பொசுக்கும் வெயிலும், கருவேலங்காடுகளும், கத்தாழை, கள்ளிச்செடிகளும் நம்மில் பலருக்கு புதியதாக இருக்கும்//

  ஆமாங்க!

 26. // அடப் போங்கப்பு நான் ஏதோ உங்க ஊர்க் கதை எண்டு நினைச்சன். //

  எங்க ஊர்க்கதை தான்ப்பு படமா எடுத்திருக்காக ஆட்காட்டி. நன்றி!

 27. பாராட்டுக்கு நன்றி குந்தவை.

 28. // //பனைமரங்களும், வேட்டாபீசும், பாவாடை தாவணியும், டயர் மாட்டிய ரெட்டை மாட்டு வண்டிகளும், பர்ஸ் வச்ச பெல்ட் கட்டிய மூடை தூக்கிகளும், எண்ணைய்க்குடோன், பயராபீஸ் முதலாளிகளும், நடுஇரவு குடுகுடுப்பைக்காரரும், வேட்டி கட்டிய கிராமத்து! டாக்டர்களும், சுட்டுப் பொசுக்கும் வெயிலும், கருவேலங்காடுகளும், கத்தாழை, கள்ளிச்செடிகளும் நம்மில் பலருக்கு புதியதாக இருக்கும்//

  // ஆமாங்க! //

  நித்தி, உங்களுக்கு இதெல்லாம் புதுசாத்தான் இருக்கும். உங்க ஊர் குளு குளுனு தென்னை மரத்துக் காத்து, வாய்க்கால்ல சல சலனு ஓடற தண்ணி, எங்கே பாத்தாலும் பச்சை பசேல்னு இருக்கும்.

  எங்க ஊர்ல எங்கெங்கும் வழிஞ்சு ஓடறது வெயில் வெயில் வெயில் தான்.

 29. வெயிலான்,
  விமர்சனம் அருமை. நான் படம் பார்த்தேன்….

  ஆனால் பார்க்கவில்லை.

 30. தேங்காய் தண்ணீரும், முக்கா ரூவா சில்லும்,

  இனிப்பு என்றாலே வெல்லமும் கருப்பட்டியும்,

  கள்ளிப்பழமும் கீற்றுகொட்டகையும்,

  பனை மரமும், பட்டாசுக்கம்பெனி பஸ்சும்

  இன்னும் பலவும்…..

  படம் முழுதும் உங்கள் மண்ணின் மனம்….

  படத்துக்கேற்ற விமர்சனம்……அருமை !

 31. காக்காப்பொன் சுட்டிக்கு நன்றி ராஜ்குமார்.

 32. // விமர்சனம் அருமை. நான் படம் பார்த்தேன்….

  ஆனால் பார்க்கவில்லை. //

  பாராட்டுக்கு நன்றி சகோதரரே!

  பார்த்தேன் ஆனால் பார்க்கவில்லை – நானும் சில படங்களுக்கு இப்படித்தான்.

 33. // தேங்காய் தண்ணீரும், முக்கா ரூவா சில்லும்,
  இனிப்பு என்றாலே வெல்லமும் கருப்பட்டியும்,
  கள்ளிப்பழமும் கீற்றுகொட்டகையும்,
  பனை மரமும், பட்டாசுக்கம்பெனி பஸ்சும்
  இன்னும் பலவும்…..
  படம் முழுதும் உங்கள் மண்ணின் மனம்….
  படத்துக்கேற்ற விமர்சனம்……அருமை ! //

  அட! கலக்கீட்டீங்க ராசு. படம் பாத்துட்டீங்களா?

  மண்ணின் மனம் இல்லை.

  மனிதர்களின் மனம்
  மண்ணின் மணம்

 34. சன் ம்யூசிக்கில் கேட்ட “ச்சூ ச்சூ மாரி” கண்ணவிட்டு மறையவே மாட்டேங்குது… ஊருக்கு வர்ற வரைக்கும் படம் தியேட்டர்ல ஓடுனா நிச்சயம் பாப்பேன்.

 35. ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. 🙂

 36. அசத்தலாக இருக்கிறது உங்கள் விமர்சன உத்தி.

 37. படம் இன்று தான் பார்த்தேன் அட்டகாசம். உங்கள் விமர்சனம் வித்யாசமாக இருக்கிறது

 38. // படம் தியேட்டர்ல ஓடுனா நிச்சயம் பாப்பேன். //

  நிச்சயம் பாருங்க விஜய்! நன்றி!

  நீங்களும், மாமாவும் இன்னைக்கு ரொம்ப உச்சத்துக்கு போயிட்டீங்க போல? 😉

 39. // ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. //

  நன்றி மு.க 🙂

 40. // அசத்தலாக இருக்கிறது உங்கள் விமர்சன உத்தி. //

  உங்களுடைய பதிவுகளைப் படித்து கற்றுக் கொண்டதால் தான் 😉

  நன்றி! முரளிகண்ணன்.

 41. // படம் இன்று தான் பார்த்தேன் அட்டகாசம். உங்கள் விமர்சனம் வித்யாசமாக இருக்கிறது //

  ஓ! சிங்கப்பூர்ல படம் பார்த்தாச்சா? கதை, நாவல் படிப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும்.

  நன்றி கிரி.

 42. //ஓ! சிங்கப்பூர்ல படம் பார்த்தாச்சா? கதை, நாவல் படிப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும்.//

  உண்மையில் நான் கதை நாவல் எல்லாம் படிக்க மாட்டேன் வெயிலான். அதில் எனக்கு அவ்வளவா ஆர்வம் இல்லை. ஆனால் நல்ல படத்தை ரசிக்க தெரியும்

 43. //அட! கலக்கீட்டீங்க ராசு. படம் பாத்துட்டீங்களா?

  மண்ணின் மனம் இல்லை.

  மனிதர்களின் மனம்
  மண்ணின் மணம்//

  திருத்தியமைக்கு நன்றி..

  சும்மா நானா இந்த படத்தை பார்த்திருக்க மாட்டேன்..

  ஒரு நண்பர் கூட்டிட்டு போனார்..

  இதில கலக்குறதுக்கு என்னங்க இருக்கு ? 🙂

 44. அண்ணாச்சி., கொஞ்சம் லேட்டாத்தான் படிச்சேன். நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

 45. என்ன ரொம்ப நாளா ஆளக்காணோமே அண்ணாச்சி. வேலை அதிகமோ?

  வாழ்த்துக்கு நன்றி!

 46. ஆகா! படத்தோட, ஊரையே கொண்டாந்து நிறுத்திட்டீங்க…இதமா இருக்கு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: