கொட்டும் மழை, தெருவெங்கும் சாக்கடையோடும் மழை நீர். படகு ஏறித்தான் வீட்டிற்குள் போகும் சூழல்.

பிரதான சாலையிலே இறக்கி விட்டுப்போகும் பேருந்து. இன்னும் 10 மைல் நடக்க வேண்டும். கால்கள் வலிக்குமா? சலிப்பு ஏற்படுமா?

தெருக்களெங்கும் புழுதி, நிலத்தடி நீரெல்லாம் இரசாயனம் கலந்திருக்கிறது. போக்குவரத்து நெரிசல். இனிமே இங்கே வரக்கூடாது என்ற எண்ணம் வருமா?

நிழலுக்கு ஒதுங்க நிழலில்லாத கரடுமுரடான பாதை, கொதிக்கும் வெப்பம், தாங்க முடியாத தண்ணீர் தாகம், இனி இந்தப்பக்கம் எட்டியே பார்க்கக்கூடாது என்ற எண்ணம் வருமா?

தண்ணீர் கிடையாது. சாக்கடை வசதி கிடையாது. ரோடு கிடையாது. பத்து பேருந்து மாறித் தான் போக வேண்டும்.

போகவில்லை. இனிமேல் போகப்போவதில்லை என்ற வார்த்தைகள் நம்மிலிருந்து வருமா?

ம்ஹீம்…….வரவே வராது அது நம் சொந்த ஊராக இருந்தால்……

ஊரிலிருந்து வெளியே வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூரிலிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், தன்னுடைய ஊரின் பெயர் நாளிதழ்களிலோ, பேருந்திலோ தென்பட்டால் மனம் மகிழும். யாராவது ஊரைப் பற்றி பேசினால் தன்னையறியாமல் முகம் மலரும். மனதுள்ளே பனி உருகும்.

விருதுநகர் தெப்பக்குளம்

விருதுநகர் தெப்பக்குளம்

பண்டிகைகளுக்கு முந்தைய இரண்டு நாட்கள் திருப்பூரில் மதுரை, திருச்சி பேருந்தில் ஏறி இருக்கை பிடிப்பதென்பது ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கும் சாதனைக்கு சமம். ஏதோ ஒரு தீபாவளிக்கு ஊருக்கு செல்லுவதற்காக மாலை 6 மணிக்கு பேருந்து நிலையம் வந்து, விடிய, விடிய முயற்சித்தும் கூட்ட நெரிசலில் ஏறமுடியவில்லை. காலை 7 மணிக்கு அடுத்து வரும் ஏதோ ஒரு பேருந்தில் ஏறலாம். அது எங்கே போனாலும் சரி. அந்த ஊரிலிறங்கி மதுரை போய்க் கொள்ளலாம் என முடிவெடுத்து, நானும், என் நண்பனும் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்தோம். நடத்துநர் வந்து ஈரோடு போறவங்க மட்டும் இருங்க. மத்தவங்க இறங்குங்க என சொன்னார். உள்ளிருந்த அனைவரும் மதுரைக்கு போகிறவர்கள். நடத்துநரோடும், ஓட்டுநரோடும், நேரக்காப்பாளரோடும் வாக்கு வாதம் செய்து, பேருந்து ஈரோடு போய் அங்கிருந்து மதுரைக்கு போகும் என முடிவெடுத்தார்கள்.

நின்று கொண்டிருந்த ஓரிருவரைத் தவிர அனைவரும் மதுரை செல்பவர்கள். காலை எட்டு மணிக்கு கிளம்பிய பேருந்து நாலே நாலு பேரை ஈரோடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு, பேருந்து நிலையத்திலிருந்த நேரக்குறிப்பில் கையெழுத்திட்டு விட்டு, மூன்று?! முறை டீ குடிப்பதற்கும், ஒரு தடவை உணவிற்கும் நிறுத்தி, மதுரை சென்று சேரும் போது, மாலை 5 மணி. அங்கிருந்து ஊர் செல்வதற்கு ஒரு மணி நேரம்.

திருப்பூரிலிருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் வந்து சேர வேண்டிய மதுரைக்கு ஒரு நாள் பயணித்து வந்தேனென்றால், வந்தார்களென்றால் அதற்கு காரணம் – ஊர், பிறந்த மண்.  எவ்வளவு பெரிய பணமுடையவராயிருந்தாலும், நகர நாகரீகத்திலே ஊறிக் கிடந்தவராயிருந்தாலும், நூறு வேலைக்காரர்களுடன் கூடிய சொகுசு வீடிருந்தாலும், சொந்த ஊரில் இருக்கும் வீடு/குடிசை தான் சொர்க்கம். (உ.ம் – வைரமுத்து, இளையராஜா)

ஊருக்கே இப்படியென்றால், நாட்டை விட்டு இடம் பெயர்ந்தவர்களின் மனநிலை என்னவாயிருக்கும்? சொல்லொண்ணாத்துயரம்.

உணவகங்களில் உணவு பரிமாறுபவர் வந்தவுடன் பெயரைக் கேட்பேன். கொஞ்சம் மலர்ந்தாரென்றால் ஊர். என்னுடன் வரும் நண்பர்கள் ”ஆரம்பிச்சிட்டான்டா” என்று சலித்துக் கொள்வார்கள். பெரும்பாலும், திருப்பூரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் உணவகங்கள் வைத்துள்ளனர்.  வேலை செய்கின்றனர்.

அவர்களிடம் ஊர்ப்பெயரைக் கேட்டவுடன் சொல்வது – மதுரை

மதுரை திருமலை நாயக்கர் மகால்

மதுரை திருமலை நாயக்கர் மகால்

மதுரையா? மதுரையில எங்கே?

திருமங்கலம்.

திருமங்கலமா?

பக்கத்துல.

பக்கத்துல எந்த ஊர்? சிவரகோட்டையா? கள்ளிக்குடியா? டி. கல்லுப்பட்டியா?

கண்கள் விரிய……சுப்புலாபுரம் தெரியுமாண்ணே உங்களுக்கு?

ஆமா! தெரியும்.

சுப்புலாபுரம் வெலக்குலருந்து உள்ள 5 மைல் போனோம்னா நம்ம ஊரு வரும்ணே – கட்ராம்பட்டி.

அப்புடி சொல்லு வெவரத்த. மதுரை எங்கே இருக்கு? கட்ராம்பட்டி எங்கே இருக்கு? சுப்புலாபுரத்துலருந்து அஞ்சு மைல் தூரமிருக்கிற ஊருக்கு, அம்பது கிலோமீட்டர் முன்னாடி இருக்கிற மதுரையச் சொல்றே? என்று பேச்சு வளர்ந்து கொண்டிருக்கும்.

அதற்கப்புறம் எப்போது போனாலும் ஒரு சிநேகச் சிரிப்பு.

மாவு இன்னைக்கு சரியில்லண்ணே! தோசை வேண்டாம். சப்பாத்தி சொல்லவா?

காபி ஆறிப்போய் இருக்கு. வேண்டாம் என்று அன்புடனான கவனிப்பு.

இது போன்றதொரு அளவலாவல் தான் என்னை மறையூரில் காப்பாற்றியது தெரியுமா? மறக்கவே முடியாது.

இந்தப்பழக்கம் நான் இதற்கு முன்னால் ஒரு பின்னலாடை தொழிற்சாலையில் வேலை செய்த போது ஆரம்பித்தது.

தொழிற்சாலையின் உரிமையாளர் – பெரிய அண்ணாச்சி! (என்னை முதன்முதலில் திருப்பூருக்கு அழைத்து வந்து வேலை கொடுத்து கற்றும் கொடுத்தவர்) எங்கே எந்த இடத்திலும், அவரவர்களுடைய பெயரை கேட்டு தெரிந்து கொள்வார். அதோடு மட்டுமில்லாது நினைவிலும் வைத்திருப்பார். திரும்ப அவர்களைப் பார்க்கும் போது, பெயரை சரியாகச் சொல்லி அழைப்பார். சம்பந்தப்பட்டவருக்கே இவரை அடையாளம் தெரியாது.

வங்கியில் ஒருவரது பெயரைச் சொல்லி, கை குலுக்கி எப்படி இருக்கிறீர்கள் என்று நலம் விசாரித்தார். வழக்கம் போல கையைக் கொடுத்து விட்டு அந்த நபர் முழித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் நம் அண்ணாச்சி முன்னால் எங்கு சந்தித்தோம் என்று விளக்குகிறார். முழித்துக் கொண்டிருந் தவருக்கு நினைவுக்கு வந்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்.

ஏனென்றால் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விமானப் பயணத்தில் அண்ணாச்சிக்கு பக்கத்து இருக்கைக்காரர்.

நாளடைவில், பணி நிமித்தமான இதர சந்திப்புகளிலும் இந்த யுக்தியை நான் உபயோகித்தேன். இப்போது கிட்டத்தட்ட ஒரு வியாதியாகவே ஆகிவிட்டது.

ஒரு பின்னலாடை தொழிற்சாலையின் ஆவணத்துறை பொறுப்பாளர் ஒருவரை சந்திக்கும் போது, பேச்சினூடே திருநெல்வேலி வாடை அடித்தது. ஊர் பெயரைக் கேட்டேன். உங்களுக்கு எந்த ஊரென்று என்னைத் திருப்பிக் கேட்டார் (நம்மளை மடக்குறாராம் 😉 ).

திருநெல்வேலி.

அட! சரியாப்போச்சு போங்க! திருநவேலியில எங்கனக்குள்ள?

(ஜ்யாக்ரபி…. ஜ்யாக்ரபி…..) சாந்தி நகர்.

கோர்ட்டுக்கு எதுக்காலயா?

எதுக்கால…… ஆமாமா (நமக்கு காரியம் ஆகணுமே?)

எனக்கு மகராஜநகரு (மகாராஜ நகராம்!) ஹைக்ரவுண்டை தாண்டிப் போனதும், உழவர் சந்தைக்கு பக்கத்துல.

பூப்பூத்திருச்சு. இனி வேலை சுலபம் தான்.

window

வெயில் சன்னல் வழியாக வெளிச்சத்தை அறைக்குள் குவித்துக் கொண்டிருந்த இனிய ஞாயிறு இரவு 10 மணி.

பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் சத்தம் தூக்கம் கலைத்தது. இமை விரிய விரிய சத்தம் என் வீட்டிற்கு வந்து விட்டது. கேபிள்காரரா? போன வாரமே கொடுத்தாச்சே. பேப்பர்காரர்? – நடு இரவு 7 மணிக்கே, கதவைத் தட்டுவாரே.

வீட்டு உரிமையாளர் – ஆமாமா. அந்த ஊர்க்காரர் தான். கதவை பலமா தட்டுங்க.

அரைத்தூக்கத்தோடு கதவைத் திறந்தால் கையில் துண்டுச்சீட்டுடன் ஒருவர்.

சார்! நீங்க தானா? உங்க வீடு தானா? (இதக்கேட்கவா என்னை இப்ப எழுப்பினே?)

ஹி! ஹி! ஆமா. உங்கள எங்கேயோ பார்த்திருக்கேனே?

சார், !@#$%^&*()*&^%$#@!

ஆங். மகராஜ நகர். வாங்க என்ன இவ்வளவு தூரம்?

போன வாரம் விக்ரமசிங்கபுரத்துல ஒரு கல்யாணம். அங்க உங்க பெரியப்பாவப் பார்த்தேன். நீங்க இங்க இருக்கீகனு சொன்னாவ.அட்ரசும் அவாள் தான் கொடுத்தாவ (ஒரு அட்ரஸ் கிடைச்சுதுன்னா? இப்படியா அர்த்தசாமத்துல வந்து எழுப்புவ?).

உங்க பெரியப்பா எப்படி சொந்தம்னா, எங்கம்மைக்கு நேர……….மூத்த……….மவனுக்கு……. அந்த வகயில எனக்கு சின்னத்தாத்தா முறையாகுது.

டீ, காபி ஏதாவது….. (தண்ணி கூட அரைப்பாட்டில் தான் இருக்கு வீட்டுல).

இல்லைல்ல. இப்பந்தாம் அந்த முக்குல குடிச்சிட்டு, அவம்ட்டயே அட்ரஸ் கேட்டு வந்தேன்.

பரவாயில்ல. வாங்க வெளியே போய் டீ சாப்ட்டுட்டு வரலாம்.

ந்நா! வேண்டாம்னு சொன்னாக் கேளுங்க.

வெளியே வந்தால், வெயிலு சுள்ளுனு அடிக்குது.

நீங்க அன்னைக்கு கம்பனிக்கு வரும் போது திருநவேலி தான் உங்களுக்கு சொந்த ஊர்னு சொன்னீங்களே?

அ… ஆ…. ஆ…. ஆங்…. (ஊர்ப்பேர் கேக்கிறதெல்லாம் பெரிய மார்க்கெட்டிங் டிரிக்ஸ்னு பீத்துன….. நல்லா வசமா மாட்டுனியா?)

உங்க பெரியப்பாவோட பூர்வீகம் விருதுநகருல்ல….. (தெரியுதுல்ல…. நோண்டி நோண்டி கேட்காட்டி என்ன?)

ஆமாமா….. படிச்சதெல்லாம் அங்க தான்.

ஒண்ணுமில்ல. எங்க அக்காவோட, அத்தானோட, அக்காவோட, வரிசையாரோட, அத்தபிள்ளையோட (நானும் ஓட…) மகன் சின்னவன் இங்கன தான் டையிங்ல வேல பாக்கான். டையிங் தண்ணி சேரல பாத்துக்கிடுங்க. டையிங் தண்ணிலேயே பொழங்கிறதுனால, கால்ல கொப்பளம், கொப்பளமா பொத்துக்கிட்டு வருதாம். அதாம் வேற வேலை ஏதாவது கிடைக்குமானு உங்களக் கேட்டுட்டு போலாம்னுட்டு…

அடப்பாவி! இதக் கேட்டுட்டு போறதுக்கா, ஊரை விட்டு 5 ½ கிலோமீட்டர் தள்ளி இருக்கிற வீட்டை கண்டுபிடிச்சு, தூங்கிட்டிருக்கவன எழுப்பி, வேகாத வெயில்ல டீக்கடைக்கு நடக்கடிக்கிற. ஆறு நம்பரை அழுத்தி என்னை அழ வச்சிருக்கலாம்ல.

ஒரு வேலை இருக்கு. முதல்ல தங்க எடமும், சாப்பாடும், கையில ஒரு ஆயிரரூவாயும் தான் கொடுப்பாங்க. பின்னாடி, போகப் போக……. டீக்கடை வந்திருச்சு.

டையிங்லருந்து பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு இப்ப அக்காவோட……..அத்தானோட……… சின்னவன் – சின்னவர் சார்  பெரிய பதவியில் சந்தோசமா இருக்கார்.  நல்லா இருக்கட்டும்!

ரெண்டு, மூணு பேரை வேலைக்கு சேர்த்து விட்ட வகையில், அவர்கள் வாங்கிய முன்பணத்தை நான் கட்டிய சோகமும் உண்டு.

Advertisements

Comments on: "சொர்க்கம் ஒரு தீராத்தாகம்" (41)

 1. இந்தக் கதையினால் அறியப்படும் நீதி என்ன…?

 2. ஒரு ஈரவெங்காயமும் இல்லை சாமி! 😉

  என் சொந்தக்கதை….. சோகக்கதை…..

 3. நல்லாருக்கு உங்க அனுபவத் தொடுப்பு. நீங்க சொல்லும் விதம் படிக்கும்போதே காட்சிகளை கண்முன் விரிக்கிறது!

  //உணவகங்களில் உணவு பரிமாறுபவர் வந்தவுடன் பெயரைக் கேட்பேன். கொஞ்சம் மலர்ந்தாரென்றால் ஊர்.//

  மிக நல்ல வழக்கம்..ஒரு புன்சிரிப்பு, ஒரு சொல் எப்படி மனிதர்களை மலர்த்துகிறது!!!

 4. நல்ல நடை… ஆனால் எதை நோக்கி என்று புரியவில்லை..

 5. // நல்லாருக்கு உங்க அனுபவத் தொடுப்பு. //

  // மிக நல்ல வழக்கம்.. //

  நன்றி!

  // ஒரு புன்சிரிப்பு, ஒரு சொல் எப்படி மனிதர்களை மலர்த்துகிறது!!! //

  ஒரு சிரிப்பையும், சொல்லையும் செலவு செய்வதற்கு கூட சிலர் தயங்குகிறார்கள்.

 6. // நல்ல நடை… ஆனால் எதை நோக்கி என்று புரியவில்லை.. //

  வேறெங்கே? ஊரை நோக்கித்தான் 🙂

  நன்றி அதிஷா!

 7. நல்லா எழுதறீங்க. கொஞ்சமா எழுதறீங்கங்கிற வருத்தத்தை அதிகம் உண்டு பண்ணுது உங்க ஒவ்வொரு பதிவும்.

 8. இதே போல நான் படித்த கல்லூரியான PSG Tech பெயரைச் சொல்லி சில இடங்களில் காரியம் சாதித்திருக்கிறேன்.

 9. // நல்லா எழுதறீங்க. கொஞ்சமா எழுதறீங்கங்கிற வருத்தத்தை அதிகம் உண்டு பண்ணுது உங்க ஒவ்வொரு பதிவும். //

  நன்றி அண்ணாச்சி!

  கொஞ்சமா எழுதுனாலும், நல்லா எழுதணும்ன்ற வருத்தம் தான் அண்ணாச்சி எனக்கு.

 10. // நான் படித்த கல்லூரியான PSG Tech பெயரை //

  PSGயிலா படிச்சீங்க?

  ‘பழனி’யாண்டவர் கல்லூரினுல நினைச்சிட்டிருக்கேன்.

 11. // பெரிய அண்ணாச்சி! (என்னை முதன்முதலில் திருப்பூருக்கு அழைத்து வந்து வேலை கொடுத்து கற்றும் கொடுத்தவர்) //

  உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்று சொல்லுங்கள்.
  இது போன்ற மனிதர்களை காண்பது மிகவும் அரிது வெயிலான்.

 12. // உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்று சொல்லுங்கள். //

  மிகச்சரியாகச் சொன்னீர்கள் அன்பு. என் வாழ்க்கைக்கு வழிகாட்டியவர். இன்றளவும் நான் மதிப்பும் ம்ரியாதையும் கொண்டிருக்கும் முதன்மையானவர். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானமிக்கவர்.

  நன்றி அன்பு!

 13. ஹைய்யோ…… சரளமாப் பேசிக்கிட்டே எங்களை அப்படியே ஊர்ப்பக்கம் கொண்டு போனதுக்கு முதலில் ஒரு நன்றி.

  அப்புறம், அந்த வெய்யில் பளிச்சிடும் சன்னல்
  ஆஹா……………

 14. சொந்த ஊரை நோக்கிய நல்ல நடைங்க

 15. \\நல்லா எழுதறீங்க. கொஞ்சமா எழுதறீங்கங்கிற வருத்தத்தை அதிகம் உண்டு பண்ணுது உங்க ஒவ்வொரு பதிவும்\\

  வடகரை வேலன் அண்ணாச்சி மிகச்சரியா சொல்லிருக்கீங்க

 16. // சரளமாப் பேசிக்கிட்டே எங்களை அப்படியே ஊர்ப்பக்கம் கொண்டு போனதுக்கு முதலில் ஒரு நன்றி //

  மதுரை, திருநெல்வேலி பேச்சை கேட்டுட்டே இருக்கலாம். ரொம்ப நல்லாருக்கும்.

  // அந்த வெய்யில் பளிச்சிடும் சன்னல்
  ஆஹா…………… //

  கூகிளில் இருந்து பிடித்து கொஞ்சம் நகாசு வேலை செய்த படம். நன்றி டீச்சர்.

 17. நன்றி நித்தி!

  \\நல்லா எழுதறீங்க. கொஞ்சமா எழுதறீங்கங்கிற வருத்தத்தை அதிகம் உண்டு பண்ணுது உங்க ஒவ்வொரு பதிவும்\\

  // வடகரை வேலன் அண்ணாச்சி மிகச்சரியா சொல்லிருக்கீங்க //

  நித்தி! நீங்களும் அண்ணாச்சி கூட சேந்துட்டீங்களா? 🙂

 18. நெசமாவே இது தீராத தாகம் தான்…. வேலன் அண்ணாச்சி சொன்னாப்ல… அடிக்கடி எழுதுங்க….

 19. எங்கே எந்த இடத்திலும், அவரவர்களுடைய பெயரை கேட்டு தெரிந்து கொள்வார். அதோடு மட்டுமில்லாது நினைவிலும் வைத்திருப்பார். திரும்ப அவர்களைப் பார்க்கும் போது, பெயரை சரியாகச் சொல்லி அழைப்பார். //

  பல்வேறு வெற்றியாளர்களிடம் இந்த சாகசத்தைக் கண்டிருக்கிறேன். கற்றுக்கொள்ள வேண்டிய வெற்றியின் மந்திரமும் இதுதான் போல. இதை ஞாபகசக்தி என்று மொன்னையாகப் பொருள் கொள்ளக் கூடாது. இதன் பெயர் அக்கறை. அத்தனைக் கவனமாய் மனிதர்களைக் கவனித்திருக்கிறார். கவனித்ததை சமயம் பார்த்து பயன்படுத்தி சகமனிதனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். என்னைப் போன்றவர்களோ ஒவ்வொருமுறை உங்களைப் பார்க்கும்போதும் “…. ஆமாம் எந்த ஊரு சொன்னீங்க…?!” என்று கேட்டுத் தொலைக்கிறோம்.

 20. // வேலன் அண்ணாச்சி சொன்னாப்ல… அடிக்கடி எழுதுங்க… //

  நன்றி! மகேஷ்.

 21. // பல்வேறு வெற்றியாளர்களிடம் இந்த சாகசத்தைக் கண்டிருக்கிறேன். //

  கட்சித் தலைவர்களும் இந்த சாகசம் செய்வார்கள். கடைக்கோடித் தொண்டனையோ, வட்டத்தையோ, மாவட்டத்தையோ பெயர் சொல்லி அழைக்கும் போது உச்சி குளிர்ந்து விடுவர்.

  நன்றி செல்வா!

 22. நானும் பெரும்பாலும் வெளியிடங்களிலும் பெயரைதெரிந்துகொண்டு பெயர்சொல்லி அழைப்பதையே விரும்புவேன்.

  நல்ல மொழிநடை

  //நல்லா எழுதறீங்க. கொஞ்சமா எழுதறீங்கங்கிற வருத்தத்தை அதிகம் உண்டு பண்ணுது உங்க ஒவ்வொரு பதிவும்.//

  வடகரை வேலன் அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்

 23. கடேசியா நீங்க தின்னவேலியா இல்ல விருது நகரா?

 24. யோவ்.. தப்பா நெனைக்கப்படாது.. உண்மையச் சொல்லுதேன்..

  (வராது அந்த பாஷைல்ல விட்டுடலாம்)

  மொதல்ல மலையாளத்தானுகன்னு ஒரு பதிவு போட்டீயள்ல, அட.. சூப்பரா இருக்கேன்னு படிச்சுட்டே வந்தா, கடேசில வேற யாரோ எழுதினதுன்னு முடிச்சுட்டீங்கள்ல.. அதுமாதிரி, இது எஸ்ராவோடவோ, வேறா யாரோடாவதோ கட் அண்ட் பேஸ்ட்னு நெனைச்சுட்டே படிச்சேம்ப்பா.

  பின்னீட்டீங்க! வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல!

 25. // என்னுடன் வரும் நண்பர்கள் ”ஆரம்பிச்சிட்டான்டா” என்று சலித்துக் கொள்வார்கள்//

  சேம் பிளட்.

 26. // வடகரை வேலன் அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன் //

  கார்த்தி! நீங்களுமா……………?

 27. // கடேசியா நீங்க தின்னவேலியா இல்ல விருதுநகரா? //

  கருணா, நீங்க எந்த ஊரோ அதே ஊர் தான் எனக்கும் 🙂

 28. // இது எஸ்ராவோடவோ, வேறா யாரோடாவதோ கட் அண்ட் பேஸ்ட்னு நெனைச்சுட்டே படிச்சேம்ப்பா. //

  போதும்! போதும்! அந்த மாதிரி தெரியாத்தனமா ஒரு போஸ்ட் போட்டு நான் பட்ட பாடு போதும் தண்ணியில இருக்கிறவரே.

  இது நான் தான், நானே தான் எழுதுனேன் பரிசல்!

  // பின்னீட்டீங்க! வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல! //

  நம்ம தொழிலே பின்னலாடை தானே 😉 நன்றி!

 29. ///
  போதும் தண்ணியில இருக்கிறவரே
  ///

  பரிசல் தாங்க தண்ணியில இருக்கும். அவரு பரிசல்காரர், பரிசல்ல தான் இருப்பார்…. ஹி ஹி…

  நாங்களும் ஜெர்க் அடிப்போம்ல….

 30. திருப்பூர் வந்தா பொழைச்சிக்கலாம் போல… நடு வயசு ஆளுக்கு என்ன தொழில் செய்ய முடியும்? 😉

 31. // பரிசல்காரர், பரிசல்ல தான் இருப்பார்…. ஹி ஹி… //

  தண்ணி மேல இருக்கிறவர்னு வச்சுக்கோங்க விஜய்!

 32. // நடு வயசு ஆளுக்கு என்ன தொழில் செய்ய முடியும்? //

  ஒரு அடுப்பு, மாவு, தோசைக்கல், சட்னி, சாம்பார் இத வச்சு, 7 – 11 மணிக்குள்ள 400 – 500 ரூபாய் ஒரு நாள்ல சம்பாதிக்கலாம் ரமேஷ்!

  நகைச்சுவைக்காக சொல்லவில்லை. உண்மையிலேயே தான் சொல்கிறேன். நன்றி!

 33. அழகான எழுத்து நடை ஆரம்பம் முதல் முடிவு வரை, எங்கோ ஆரம்பித்து எங்கேயோ போய் முடித்தாலும்.

  அதற்கப்புறம் எப்போது போனாலும் ஒரு சிநேகச் சிரிப்பு. //

  இதற்காகவே பேசிப்பழகலாம் அல்லவா..,

 34. நன்றி அமித்து அம்மா

 35. \\மாவு இன்னைக்கு சரியில்லண்ணே! தோசை வேண்டாம். சப்பாத்தி சொல்லவா?

  காபி ஆறிப்போய் இருக்கு. வேண்டாம் என்று அன்புடனான கவனிப்பு.\\
  வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும்னு சொல்வாங்க. அது உங்க விசயத்துல உண்மையாயிருச்சு.

 36. //உங்க பெரியப்பா எப்படி சொந்தம்னா, எங்கம்மைக்கு நேர……….மூத்த……….மவனுக்கு……. அந்த வகயில எனக்கு சின்னத்தாத்தா முறையாகுது.

  எங்கம்மா கூட பஸ்சில் போனா , இப்படித்தான் பக்கத்து சீட்டில் உள்ளவர் எங்கள் சொந்தக்காரர் ஆகியிருப்பார். நாங்கள் எல்லோரும் அப்போது கிண்டல் பண்ணினாலும், இப்போது சிரிக்கக்கூட மனதில்லாமல் இருப்பவர்களை பார்க்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது.

 37. நன்றி அன்புமணி.

  // எங்கம்மா கூட பஸ்சில் போனா , இப்படித்தான் பக்கத்து சீட்டில் உள்ளவர் எங்கள் சொந்தக்காரர் ஆகியிருப்பார். //

  🙂

  ஊருக்கு செல்லும் போது பேருந்தில் அருகருகே பேசிக் கொண்டிருப்பவர்களில் வட்டார மொழி அழகை ரசித்துக் கொண்டே செல்வது என் வழக்கம்.

 38. இந்தப் பின்னூட்டத்தை தந்தி போல் பாவித்து பொங்கல் பரிசாக “பட்டாம்பூச்சி” விருதைப்பெற்றுக்கொள்ள நம்மூட்டுத் திண்ணைக்கு வரவும். நன்றி.

 39. என்னை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நண்பரே, மிக மிக அற்புதம். காரணம் உங்களைப்பற்றி முழுமையாக தெரிந்தமைக்கு. என்னுடைய முக்கால்வாசி விபரங்களுடன் ஓத்துப்போகும் இந்தப்பதிவுக்கு. எளிமையாய் இளமையாய் உள்ளது மறக்க முடியாத ஊர் நினைவுகள் போல். பேருந்து பயணம் நான் பட்ட தொடக்க பாடுகள் என் மனதில் வந்து போகின்றது. அத்தனையும் உண்மை. ஊர் விபரம் கேட்டு அறிமுகம் செய்து கொண்டு நல்லதும் கெட்டதுமாய் பெற்ற அனுபவங்கள் ஏராளமாய் உண்டு.

  ஊரில் உள்ள முகம் தெரியாதவர்கள் கூட அம்மா கொடுத்த துண்டுச் சீட்டு வைத்து (சிரமப்பட்டு) உங்கள் நினைவுகள் போல் நானும் சந்தித்து இருக்கின்றேன்.

  வெண்ணிலா கபடிக் குழு போன்ற சொந்த அறிமுக சங்கிலிச் சிக்கல் போல் ஏதும் நடக்கவில்லை. மொத்தத்திலும் நான் மட்டும் பாதை மாறி வந்த கோலத்தால்.

  நூறு சதவிகிதம் என்னை திசைதிருப்பி உங்கள் ஒவ்வொரு வரியிலும் மூழ்கி வாசித்துக் கொண்டு சந்தோஷமாய் மறு மொழி அனுப்ப வேண்டும் என்று தெரியாத்தனமாய் வந்த முதல் பின்னுட்டத்தை பார்த்த போது அதிலும் முதல் ஆளாய் வந்தவர் கேட்ட கேள்வி மொத்தத்தையும் திசை திருப்பி சிரிக்க வைத்து விட்டது. அதற்கு நீங்கள் கொடுத்துள்ள பதில் இன்னும் சுவாரஸ்யம்.

  தேவியர்கள் தான் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

  பிடியுங்கள் பூக்கொத்தை.

  நட்புடன்,

  ஜோதிஜி,
  தேவியர் இல்லம், திருப்பூர்.

  http://texlords.wordpress.com

  • தங்களின் புரிதலுக்குப் பிந்தய நீண்ட பின்னூட்டத்திற்கு என் நன்றி!

   பின்ன என்ன? நானே ரொம்ப சீரியசா பதிவு போட்டுட்டு, பின்னூட்டத்தைப் பார்த்தால் – இதனால் அறியப்படும் நீதி என்னனு கேட்டா என்ன சொல்றது.

   தேவியர் இல்ல பூங்கொத்து வந்து சேர்ந்தது. அதற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: