பரமபதம்

ஒரு நாள் பயணமாக மதுரை, விருதுநகர் மற்றும் சாத்தூர்.

மதுரை – இன்னும் பழமை மாறாமல்.

நாடோடிகள் சின்னமணி புண்ணியத்தாலோ, என்னவோ, மதுரைக்கே அடையாளம் கொடுத்த ‘அ’ண்ணன் படங்களுடனான நெகிழ் தாள் தட்டிகளை எங்கும் காணமுடியவில்லை.  ஒன்றிரண்டு இடங்களில் பெரிய பெரிய சுவரொட்டிகள் மட்டும் புகழ் பரப்பியபடி.

செருப்பு தைப்பவர் கூட தலைக்கு மேல் நெகிழ் தாள் விளம்பரம் தொங்க விட்டிருக்கிறார்.  இரவு இட்லி, இடியாப்பங்களுடன், பட்டர் பன்னும் கூட.  முருகன் இட்லி கடைக்கு எதிரே போத்தீஸின் புதிய துணிக்கடை மிக நீளமான இரும்பு பட்டை கதவுடன்.

நடுநிசி வரை கடையில் துணிகளை அள்ளிப் போட்டு எடுத்துக் கொண்டிருந்தார்கள் மதுரை மாந்தர்கள்.  அடுத்த கடை ஆரெம்கேவியா?

செவப்பாருந்தா தக்காளிச் சட்னியா?  யார்ட்ட கத விடுற?  எத்தன வருசமா சாப்ட்டிட்டிருக்கோம்? எங்களுக்கே லந்தக் குடுக்குறியா?

ஒழுங்கு மரியாதயா ஏழ்ரையக் கூட்டாம எந்திரிச்சு போயிரு!

போன்ற சலம்பல்களுடன் மண்ணின் மைந்தர்கள் முருகன் இட்லி கடைக்குள்.

சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், மாரட் வீதிகள், வெளி வீதிகள், வடம்போக்கி வீதிகள், மேஸ்திரி வீதிகள் மற்றும் காக்காத் தோப்பு தெரு, பச்சரிசிக்காரத் தெரு, நாப்பாளையத் தெரு, வளையக்காரத் தெரு, பந்தடி தெரு, சித்திரைக்காரத் தெரு, வெங்கலக்கடைத் தெரு, ஏழுகடல் தெரு, வெத்தலக் கடை தெரு, மஞ்சனக்காரத் தெரு, முனிச்சாலை, குருவிக்காரன் சாலை போன்ற பழமையான பெயர்கள் பெரியார் சாலை, அண்ணா சாலை, எம்.ஜி.ஆர் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படாமலே.

மதுரை இன்னும் பழமை மாறாமல் புதுத்துணி போர்த்தியிருக்கிறது.

விருதுநகர் – ஊரைச் சுற்றி பரமபதம் விளையாடும் புதிய சாலைப் பாம்புகள், பிரம்மாண்ட பாலங்களுடன்.

அமைச்சர் வீடு இருக்கும் முக்கிய! சாலையை சிமெண்ட் சாலையாக்குவதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது ரெண்டு மாதங்களாக.  அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லும் வண்டிகள் கூட மாற்றுச் சாலை தேடும் நிலையில்.  மற்ற இடங்களில் சாலைகள் பள்ளங்களுடன் மோசமான நிலையில்.

பெரும்பாலான மக்கள் ஒரு பெரிய தொகை கட்டி, கணணியில் விளம்பரங்களைக் கிளிக்கினால் பணம் அள்ளித் தருகிறார்கள் என்ற மயக்கத்துடன்.

பதிவர்கள் திரு. மாதவ்ராஜ் / காமராஜ் ஆகியோரை விருதுநகரில் அவர்களது வங்கி சங்கக்கட்டிடத்தில் சந்தித்த போது பத்திரிக்கையில் எழுதியதற்காக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட திரு. காமராஜ்/அண்டோ ஆகியோரை மீண்டும் பணியமர்த்த நீதிமன்ற இடைக்கால உத்தரவு கிடைத்திருக்கிறது என்ற இனிய செய்தியோடு இனிப்பு பகிர்ந்தனர் (விவரங்களுக்கு).

சாத்தூர் – செல்லும் வழியெங்கும் பாளங்கள்…… பாலங்கள்….

ராம்கோ சிமெண்டு ஆலையைப் பாதிக்காதவாறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

தீப்பெட்டி தொழில் குளோரைடு பிரச்சனையால் சிறிது சுணங்கியிருக்கிறது.  இதிலும் ‘அ’ண்ணனின் ஆதிக்கம் என கேள்வி.

தானியங்கி காகித தீப்பெட்டிகள் தயாரிப்பு இயந்திரங்களின் வரவாலும், கேரளாவில் மழை பெய்வதால் மரங்களின் வரத்து குறைந்ததாலும் மரத்தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் நிலை ‘?’

நவீன குளிரூட்டப்பட்ட உணவு விடுதி நகரின் மிகப்பெரிய அச்சகத்தாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாற்று தொழிலாக.

கருப்பட்டி மிட்டாய்

கருப்பட்டி மிட்டாய்

வழக்கம் போல சேவு, கருப்பட்டி மிட்டாய் பொதிகளோடு திரும்பல்.

Advertisements

Comments on: "பரமபதம்" (48)

 1. 🙂

  ஒரு கேள்வி? ப்ரொபைல் போட்டோல தொப்பி போட்டு ஏன் கண்ணை மறைச்சுக்கிட்டீங்க ? 😉

 2. பதிவர் சந்திப்பா..

  தொழில் முறை பயணமா…

  தனிப்பட்ட பயணமா….

 3. கருப்பட்டி மிட்டாய்…. ஹ்ம்ம்ம்…. எச்சி ஊறுது… 🙂

 4. பேர் வெயிலானாக இருந்தாலும் உங்கள் எழுத்து பனியாக, (கோடை)மழையாக,தென்றலாக இருக்கிறது. இன்னும் நிறைய ஊர்கள் பற்றி எழுதுங்கள்.

  ஹோசூர் வந்திருக்கிறீர்களா?

  http://kgjawarlal.wordpress.com

 5. பல இடங்களில் மத்தாப்பும்,சில இடங்களில் பட்டாசுமாக இருக்கிறது வெயிலான்,அருமையான அனுபவ பகிர்வு.

 6. மாற்றப்பட்ட வலைத்தள முகப்பு அருமை நண்பரே!

  பல இடங்களில் வார்த்தைகளை வைத்து சடுகுடு ஆடியிருக்கிறீர்கள்! (பாளங்கள்-பாலங்கள்)

  நெறைய எழுதுமய்யா…

 7. அருமையான பயண குறிப்பு.. பட்டர் பன் என்பதை தவிர ஆங்கில வார்த்தைகளே இல்லை..

  எனக்கு கடைசி வரை ‘அ’ண்ணன் அப்படினா யாருன்னே தெரியலை.. ஏன்??

  • பட்டர் பன் என்பதை மதுரை மக்கள் தமிழ்ச் சொல்லாக்கி விட்டார்கள் லோகு 🙂

   மதுரையில் ‘அ’ என்றாலும் அண்ணன் என்றாலும் அஞ்சா நெஞ்சன் தான். இப்போ தெரிஞ்சதா யாருனு?

   நன்றி லோகு!

 8. //
  அமைச்சர் வீடு இருக்கும் முக்கிய! சாலையை சிமெண்ட் சாலையாக்குவதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது ரெண்டு மாதங்களாக. அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லும் வண்டிகள் கூட மாற்றுச் சாலை தேடும் நிலையில். மற்ற இடங்களில் சாலைகள் பள்ளங்களுடன் மோசமான நிலையில்.
  //
  அதே சாலையில் அமைச்சரின் திரைஅரங்கு இருப்பதால் ரயில்வே மேம்பாலம் கட்டப்படவில்லை எனக் கேள்விப்பட்டேன்…..

  • அமைச்சர் வீடு, திரையரங்கம் மற்றும் இதர சொத்துகள் பாலத்துக்கு கீழே போய் விடுமென்பதால் மேம்பாலம் 2-3 கிலோ மீட்டர்கள் தள்ளி கட்டப்பட்டிருக்கிறது.

   அரசு மருத்துவமனைக்கு வரும் அவசர நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

   நன்றி ஜெகதீசன்!

 9. மாதவராஜ் said:

  சாத்தூரில் இன்னும் முக்கியமான மாற்றங்கள் எல்லாம் இருக்கின்றன நண்பரே! ஒருமுறை வாருங்கள்.
  அன்று உங்களோடு உட்கார்ந்து பேச முடியாமல் போனது மிகவும் வருத்தமாயிருந்தது. இனி எப்போது இந்தப்பக்கம் வருவதாக உத்தேசம்?

 10. அருமை இருக்குங்க இந்த பதிவு.

  கருப்பட்டி மிட்டாய், படம் போடுங்க. அது எப்படி இருக்கும், எப்படி பண்ணனும்?

  • நன்றி ரமேஷ்!

   கருப்பட்டி மிட்டாய் படம் இணையத்தில் எங்குமே இல்லை. திரும்பவும் வாங்கி வந்து கைப்பேசியில் படம் எடுத்து உங்களுக்காக இணைத்திருக்கிறேன்.

 11. பயணக்கட்டுரை,ஊர்,சம்பவங்கள்,நிகழ்வுகள் இவற்றை அதே மண் வாசத்தோடு எழுத உங்களை விட்டால் ஆளில்லை 🙂

 12. தலைப்புப்படம் இருந்தாலும் கொஞ்சம் ஓவருதான்.

  அப்புறம் டூர் ரிப்போர்ட்டும் அழகு.! அப்பிடியே கொஞ்சம் நம்மூரு வரைக்கும் போய் வந்திருக்கவேண்டியதுதானே..!

  • // தலைப்புப்படம் இருந்தாலும் கொஞ்சம் ஓவருதான். //

   😉

   நம்மூருக்கு போக நேரமில்ல. நீங்க ஊர்ல இருக்கும் போது சொல்லுங்க.

 13. வெயிலான்.. ஆஹா அருமை நம்ம கருப்பட்டி முட்டாயிக்கு
  கெடச்ச வரவேற்பு ரொம்ப தூக்கல்.

  நீங்கள் கொடுத்துவிட்டுப்போன சூஸ்பொரி அள்ள அள்ள குறையாமல் இன்னும் இருந்து திகட்டுகிறது.

  ஆமா இந்த வலைத்தளத்து புகைப்படத்தில் இருப்பது யார் ?

 14. அனைத்து தகுதிகளும் இருக்கிறது தலைவர் ஆவதற்கு ஆனதற்கு?

  இப்போது தான் நான் விரும்பி எதிர்பார்த்த அத்தனையும் வார்த்தைகளாக வடிவப்பைப் பெற்று வண்டி பெருந்துறை சாலையில் பயணிக்கிறது?

  பார்த்த பயணித்த பார்வை அற்புதம் என்பதை விட வேறு எந்த வார்த்தைகளால் (தேவியர் இல்ல பூங்கொத்து) உங்களை பாராட்டி விட முடியும்?

  அத்தனை சாலைகளும் நினைவில் வைத்து எழுதி இருந்தால்? மெமரி ப்ளஸ் காரன் வியாபாரம் எப்படி நடக்கும்?

  உருவத்தை உருமாற்றிய விதம் நன்றாக இருந்தாலும் உண்மையான உங்கள் அழகை ரசித்தவன் என்ற முறையில் அந்த கதாநாயகன் முகத்தை கருணையோடு காட்டுங்களேன்?

  இந்தக் கவிதையில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கிறது? காரணம் நீங்களும் அன்றாடம் ஏதோ ஒரு அரசாங்க அலுவலகத்திற்கு சென்று கொண்டு தான் இருப்பீர்கள். அங்கு நீங்கள் சந்திக்கும் எல்லாவற்றையும் பார்த்து இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.?

  பசிக்கான போராட்டத்திலேயே
  உருவாகிறான் வேலையாள்
  ஊதியத்தில் அடங்கிவிடாத பசிக்கு
  உணர்வை ஊட்டுகிறது தொழிற்சங்கம்

  ஊரைப் போல, எழுத்தைப்போல, அடிக்கும் வெயிலைப்போல எளிமையாய் இருக்கும் உங்களை பின்தொடர்பவனின் விரலில் கவனம் தேவை,

  நாளும் நட்புடன்
  ஜோதிஜி

  திருப்பூர் தேவியர் இல்லம்.

  பின்குறிப்பு. (ஈர) வெங்காயம் பதில் இல்லாதது பெரிய ஏமாற்றம்?

 15. பிரபு.இரா said:

  ரொம்ப நல்லா இருக்குண்ணே, அடுத்து நம்ம ஏரியாவுக்கு வாங்க!

 16. டெம்ப்ளேட் அட்டகாசம் தல
  உங்களோட பயணக்கட்டுரைக்கு நான் ரசிகன்

 17. வணக்கம் நண்பரே.

  எல்லாவற்றையும் படிக்க கொஞ்சம் நேரப்பற்றாக்குறை.
  படித்துவிட்டு அப்பாலிக்கா வரேன்.

 18. சுவாரசியமான பயணத்தொகுப்பு – படிக்கும்போதே நாங்களும் உங்கக்கூடயே வர மாதிரி தோண வைக்குது உங்க எழுத்து நடை! அந்த கருப்பட்டி மிட்டாய் – சென்னை சங்கமம்-இல் கிடைத்தது! உங்க படத்துலே இருக்கிற ஃப்ரெஷ் லுக் இல்லை..

  //பெரும்பாலான மக்கள் ஒரு பெரிய தொகை கட்டி, கணணியில் விளம்பரங்களைக் கிளிக்கினால் பணம் அள்ளித் தருகிறார்கள் என்ற மயக்கத்துடன்.//

  இது என்ன?புரியலை..!

  • நன்றி சந்தனமுல்லை!

   எத்தனைவிதமான இனிப்புகள் சுவைத்திருந்தாலும், சாத்தூர் கருப்பட்டி மிட்டாய்க்கு தனிச்சுவை.

   // இது என்ன?புரியலை..! //

   ஒரு தொகையை (ரூ.10, 20, 30 ஆயிரம்) வங்கி வரைவோலை எடுத்து சென்னையிலிருக்கும் ஒரு பிரதிநிதி அலுவலகத்துக்கு அனுப்புகிறார்கள். அங்கிருந்து ஒரு வலைத்தளத்திற்குள் நுழைய பயனர் மற்றும் கடவுச்சொல் அனுப்பப்படுகிறது. பயனர் கணக்கு மூலமாக எத்தனை வலைத்தளத்தை சொடுக்குகிறீர்களோ அதற்கேற்றாற் போல் உங்கள் கணக்குக்கு புள்ளிகள் அளிக்கப்படுகிறது.

   புள்ளிகளுக்கேற்றபடி மாதாமாதம் காசோலைகள் வீட்டு முகவரிக்கு வந்து சேர்கிறது. கணிப்பொறி இல்லாதவர்களும், இயக்கத் தெரியாதவர்களும் ஒரு பிரதிநிதியை நியமித்துக் கொள்கிறார்கள். பிரதிநிதிகள் ஒரு மாதம் முழுவதும் ஒருவருடைய பயனர் கணக்கில் புள்ளிகள் சேர்ப்பதற்கு கமிசன் பெற்றுக் கொள்கிறார்கள்.

   காசோலைகள் வராவிட்டால் சென்னைப் பிரதிநிதி ஊரை விட்டு ஓடிவிட்டான் என்று அர்த்தம் 😦

   AdSense போலிகள் இவர்கள்.

 19. உங்க ஹெட்டர் நல்லாருக்கு….:-) ரசித்தேன்!! ஆனாலும் முதல்ல இருந்ததுதான் பிடிச்சிருந்தது….ஓடறமாதிரி கால்கள் இருந்ததே, அது!!

 20. // Google Adsense போன்ற போலிகள் இவர்கள்.//

  தல!

  கூகுள் போலி இல்ல. அதுல நம்மகிட்ட பணம் எதுவும் வாங்குறதில்லை. பதிலா அவங்க தான் கொடுக்கறாங்க 🙂

 21. டெம்ப்ளேட் நல்லா இருக்கு.. போட்டோக்கு சொன்ன விளக்கம் நல்லா இருக்கே.. 🙂

  பதிவு ரசித்தேன்..

 22. சின்ன அம்மணி said:

  இட்லி, இடியாப்பம், பட்டர் பன், தக்காளிச்சட்னி, கருப்பட்டி மிட்டாய்னு சாப்பாட்டு பேர் தான் கண்ணுக்கு படுது. பசி நேரம் பாருங்க 🙂

 23. ரவுண்ட் அப் நல்லா இருக்கு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: