பழுப்பு வெளிச்சம்

பிள்ளையார் கோவில் தெரு – இந்தப் பெயரை சொன்னாலே, எதிராளியின் முகம் பிரகாசமாகி, ஒரு புன்முறுவல் பூக்கும்.  புன்னகையின் அர்த்தம் என்னவென்று சிறு வயதில் எனக்குத் தெரியாது.  பின்னர் கேட்ட போது, எங்கள் தெரு அழகான இளம்பெண்கள் நிறைந்த தெரு என்று சொன்னார்கள்.  இங்கு தான் என் வீடும் இருந்தது.

Street Light1

கச்சேரி ரோட்டிலிருந்து எங்கள் தெருவில் நுழையும் போதே, வலது புறம் பெட்ரோல் பங்க்-ன் மதிற்சுவர்.  எதிரில் பிள்ளையார் கோவில் மதிற்சுவர்.  இது முடியுமிடத்தில், கோவில் திண்ணை.  பக்கத்தில் நல்ல தண்ணீர் குழாய், அடுத்து உப்பு தண்ணீர் அடிகுழாய்.

பின் வரிசையாக வீட்டுக்கு ஒன்றோ, இரண்டோ திண்ணைகள் உள்ள வீடுகள் அல்லது வளவுகள் இருக்கும்.

பிள்ளையார் கோவில் திண்ணை ஒரே கரடு முரடாக, புல் முளைத்து, உட்கார மட்டுமே உபயோகமாக இருக்கும்.  கொஞ்சம் தெருவுக்குள் வந்தால் செல்லம்மா வீட்டு திண்ணை, செட்டியார் வீட்டு திண்ணை, சிவங்கோயில் வீட்டு திண்ணை இப்படி பல.

கிட்டங்கி வீடு – இந்த வீட்டில் இருக்கும் திண்ணை கொஞ்சம் பெரியது, திண்ணை முழுதும் வழு வழுன்னு சிமிண்டு தரை, கம்பி கிராதியோடு இருக்கும்.  ஏதாவது வீடுகளில் விசேசம் என்றாலோ, திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நிறைய வந்தாலோ, கிட்டங்கி வீட்டு திண்ணை தான் விருந்தினர் மாளிகை.

கிட்டங்கி வீட்டுக்கு எதிரில், பெரிய விறகுக் கடை.  அதுக்கடுத்து நடுக்கடை செட்டியார் வீட்டு காம்பவுண்டு – உள்ளே எதிரும் புதிருமாக நான்கு வீடுகள் இருக்கும்.  வாசலின் இருபுறமும் நீளமான திண்ணைகள் உண்டு.  இது ஒரு ஆள் மட்டுமே படுக்கும் அகலத்துடன் இருக்கும்.  கால்மாடு தலைமாடுனு ஒரு ரெண்டு பேர் படுக்கலாம் ஒரு திண்ணையில்.  இதுல சதுரக்கல் பதிச்சிருக்கும்.  மழைக்காலத்துக்கு ஆகாது.

இந்த திண்ணையில் எப்போதும், இரவில் கோணல்மானலாக கோபாலண்ணன் படுத்திருப்பார்.  காளிமார்க்கில் வேலை பார்க்கும் பெருமாள் எப்போதாவது.  வையாபுரிப் பிள்ளை நடுஇரவில் கூட ஏதோ ஒரு பழைய புத்தகத்தை தான் வேலை செய்யும் பலசரக்குக் கடையிலிருந்து எடுத்து வந்து தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருப்பார்.

சென்னையிலிருக்கும் முருகண்ணன் முன்னாடியெல்லாம், ஊருக்கு வரும் போதெல்லாம், இந்தத் திண்ணையில் தான் உட்கார்ந்திருப்பார்.  சமயத்தில் வெயில் அடிச்சாக்கூட.  நல்ல ஆங்கில அறிவு.  கடிதங்களில் அவர் எழுதியது அச்சடித்தது போல் இருக்கும்.

ஒரு நாள், ஏண்ணே! முன்னாடி கேஸ் சிலிண்டர் போட்டுட்டிருந்தீங்க.  காக்கி டவுசர் போடணும், சரி!  இப்ப, ஆபீஸ்ல தான் வேலைன்னாலும் டவுசரே போட்டிருக்கீங்களே ஏன்? னு கேட்டேன்.

Khaki Shorts

டேய்! நான் ஸ்கூல்ல படிக்கிறப்போ, எனக்குனு வீடு ஏதும் கிடையாது.  அம்மா, அப்பாவும் சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க.  நான் உங்க ஆச்சி வீட்லேயோ, அல்லது நம்ம சொந்தக்காரங்க யார் வீட்லேயாவது சாப்ட்டுட்டு ராத்திரி இந்த திண்ணையில தான் படுப்பேன். இந்த போஸ்ட் மர லைட் வெளிச்சத்துல தான் படிப்பேன்.  அப்போ, எனக்கு ஸ்கூல் யூனிபார்ம் காக்கி டவுசர்.  அதுவும் ஒன்னே ஒன்னு தான் இருக்கும்.  ராத்திரி துண்டைக் கட்டிக்கிட்டு, டவுசரை அடிபைப்ல நனைச்சு திண்ணையில போட்டு அதும்மேல தலைய வச்சு, படுத்திருப்பேன்.  காத்துல பறந்து டவுசர் கீழே இருக்கிற சாக்கடையில விழுந்திருமோனு திடீர்னு முழிச்சு, முழிச்சு பாத்துக்குவேன்.

அன்னைக்கு ஒரு காக்கி டவுசர் தான்டா இருந்துச்சு.  இன்னைக்கு பரவால்ல, ஆறேழு டவுசர் இருக்கு.  அப்போ தான் புரிந்தது, பாசம் டவுசர் மீது மட்டுமில்லை,  திண்ணை மேலும் தான்.

இரவு தெரு விளக்கு வெளிச்சம், பாடம் படிக்குமிடமாகவும், கண்ணாமூச்சி விளையாட்டு தொடங்குமிடமாகவும், பெண்கள் பேசுவதற்கு பாதுகாப்பான இடமாகவும், பஞ்சு மிட்டாய், சோன்பப்டி, சுக்கு காபி, சேலைகள், துணிகள் விற்குமிடமாகவும், தீப்பெட்டி ஒட்டுமிடமாகவும், குச்சிக்கட்டை அடுக்குமிடமாகவும் இருக்கும்.  பெருசுகள் தங்கள் வீட்டுக்கு வந்திருந்த கடிதங்கள், அழைப்பிதழ்களை விளக்குக்கு கீழே நின்று உத்து உத்து பார்த்து படித்துக் கொண்டிருப்பார்கள்.

திண்ணை – காலையில் எல்.ஐ.சி அய்யர் அங்கு உட்கார்ந்து பேப்பரில் லாட்டரிச் சீட்டு ரிசல்ட் பார்த்துக் கொண்டிருப்பார்.  பதினிக்காரர் கூடை இறங்கியிருக்கும்.  திண்ணையில் உட்கார்ந்து பல் விளக்கிக் கொண்டே தெருவை வேடிக்கை பார்க்கும் ஓரிருவர்.  பித்தளை தண்ணீர் குடங்கள் வழியில் ஓய்வெடுக்கும்.  மதிய நேரத்தில், வத்தல், கோதுமை, சாக்கு போன்றவைகள் வெயிலில் காயும்.  பசங்களின் பலவித விளையாட்டுகளில் திண்ணையும் ஒரு உறுப்பினர்.  பொழுது சாய்ந்ததும், ஆண்களின் அரசியல் பேச்சு.  சோசியர்களின் வருங்கால கணிப்புகள் திண்ணையில்.  இரவானதும், திண்ணையின் ஓரங்களிரண்டிலும் அமர்ந்து பெண்கள் பொரணி பேசுவார்கள்.  இரவு வழிப்போக்கர்களின், வழமையானவர்களின் படுக்குமிடம், என பலமுகம் காட்டும்.

திண்ணைகளின் முகங்கள் இப்பொழுது மாறி விட்டது.  பெரிய திண்ணைகள் இப்போது கம்ப்யூட்டர் சென்டர்களாகவும், சிறிய திண்ணைகள் ஜாப் டைப்பிங் ஆபீசாகவோ, அல்லது பத்திரம் எழுதுபவரின் அலுவலகமாகவோ அல்லது சிறிய அறைகளாக உருமாறிவிட்டன.

இப்போது அண்ணன் ஊருக்கு வந்தால், திண்ணைக்கு என்ன செய்வாரோ தெரியவில்லை.

Advertisements

Comments on: "பழுப்பு வெளிச்சம்" (58)

 1. திண்ணையைப் பற்றிய தொடர் பதிவு முன்பு சுற்றிக் கொண்டிருந்ததே அதில் இதையும் சேர்த்தால் சிறப்பான திண்ணை நினைவுகளில் இதுவும் ஒன்று.

  //இப்போது அண்ணன் ஊருக்கு வந்தால், திண்ணைக்கு என்ன செய்வாரோ தெரியவில்லை.//

  சீரியஸா படிச்சிட்டு வந்தவனை சிரிக்க வச்சிட்டீங்க வெயிலான்.

  • அப்போதே கருவானது இப்போது உருவாகி இருக்கிறது நாடோடி!

   //இப்போது அண்ணன் ஊருக்கு வந்தால், திண்ணைக்கு என்ன செய்வாரோ தெரியவில்லை.//

   சீரியஸா படிச்சிட்டு வந்தவனை சிரிக்க வச்சிட்டீங்க வெயிலான் //

   நான் எழுதியதில் தவறா அல்லது உங்கள் புரிதலில் தவறா எனத்தெரியவில்லை. திண்ணை என்பது அவருக்கு வீடு மாதிரி. ஊருக்கு வந்து, அதைத் தேடினால் என்ன செய்வாரோ தெரியவில்லை என்ற பதத்தில் எழுதியிருக்கிறேன்.

 2. சில திண்ணைகள் மேடேத்தி ரோடு போடுவதால் சமதளமா ஆகிடுச்சு 😦

 3. விருதுநகரின் திண்ணைகள் முழுவதும் அதன் பழைய நினைவு சுமந்து வரிசையாக வந்து போகிறது.

 4. நண்பரே!
  பெரும் ஆச்சரியமாய் இருக்கிறது. நானும் இன்றைக்கு பிள்ளையார் கோவில் தெரு (சாத்தூர்) பற்றி எழுதி இருக்கிறேன். கூகிள் ரீடரில் போய்ப் பார்க்கிறேன்….. நீங்களும்! சொன்ன விஷயங்கள் வெவ்வேறாக இருப்பினும் ஒரே சுருதி போலத் தோன்றுகிறது.

  அருமையானப் பதிவு.

 5. ’பழுப்பு வெளிச்சம்’ – தலைப்பு வசீகரிக்கிறது!

 6. திண்ணை நினைவுகள் அட்டகாசமா இருக்கு.

  தலைப்புக்கான படமோ சூப்பர்.

  எதைப் பாராட்டணுமுன்னு தெரியாம இப்படித் திகைக்க வச்சுட்டீங்களே!!!!!

  இனிய பாராட்டுகள்

 7. //திண்ணையும் ஒரு உறுப்பினர்.//

  ஆமாங்க

  இடுகை அருமை
  ரசித்தேன்

 8. தெருவினை பற்றிய அத்தனை குறிப்புக்களும் அசத்திவிட்டது!

  திண்ணை & தாழ்வாரங்கள் ஒரு காலத்தில் சீண்டப்படாத அல்லது ரசிக்கப்படாத இடங்களாய் இருந்து மறைந்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எல்லோருக்குமே திண்ணை & தாழ்வாரங்களின் மீது ஈர்ப்பு/ஆசை வருவது தடுக்க இயலாத விசயமாகிவிட்டது !

  இருக்கும்போது அனுபவிக்காமல், கடந்து செல்லும் வாழ்க்கையில் கற்கும் பாடங்களாய் இந்த நினைப்புக்கள் !

  அருமையான நடை – தெருவுக்கு

  • // இருக்கும்போது அனுபவிக்காமல், கடந்து செல்லும் வாழ்க்கையில் கற்கும் பாடங்களாய் இந்த நினைப்புக்கள் ! //

   அருமையாச் சொல்லியிருக்கீங்க ஆயில்ஸ்! நன்றி!

 9. போட்டோவே வேண்டாம், உங்கள் எழுத்தே காட்சியை கண்ணில் நிறுத்துகிறது. பிரமாதம்.

 10. எங்கள் வீட்டிலும் திண்ணை இருந்தது..

  காலையில் படிப்பும்,
  மாலையில் விளையாட்டும்,
  அவ்வப்பொழுது
  மதிய நேர குட்டித்தூக்கமும்,
  மின்சாரமில்லா பின்னிரவுகளில்
  நிலாக்காய்தலும்
  திண்ணையோடே கழிந்தது.

  இப்பொழுது திண்ணை இல்லை !
  அப்போதைய திளைப்பும் இல்லை !
  😦

 11. நான் சிரிப்பு வந்ததாய் சொன்னதற்குக் காரணம் திண்ணை பற்றிய எனது இடுகையின் ஆரம்பத்தில் சொல்லியிருந்த பழமொழி உங்களின் இடுகையின் கடைசியில் இருப்பதாய் நினைத்ததால்.

  என் புரிதலில் தான் தவறு.நன்றி.

 12. திண்ணையின் நினைவுகள் சூப்பரா இருக்குதுங்ண்ணா.
  உங்க ஊரயே சுத்தி காட்டுனதுக்கு நன்றீ…

 13. \\புன்னகையின் அர்த்தம் என்னவென்று சிறு வயதில் எனக்குத் தெரியாது. பின்னர் கேட்ட போது, எங்கள் தெரு அழகான இளம்பெண்கள் நிறைந்த தெரு என்று சொன்னார்கள். இங்கு தான் என் வீடும் இருந்தது.\\

  கொடுத்து வச்சவருங்க நீங்க :)))

  அப்போதெல்லாம் திண்ணை என்பது அனைவருக்கும் பொதுவாக தனக்கும், பிறருக்கும் உதவியாக இருந்தது.

  ஆனால் இன்று நகரங்களில் திண்ணையும் இல்லை, இருந்தால் பிறரால் இடைஞ்சல்தான்..

  • இன்று திருப்பூரில் திண்ணைகள் இருந்தால், 2 தையல் இயந்திரங்களுடன், நான்கு பேர் வேலை செய்யும் பனியன் தொழிற்சாலையாகியிருக்கும்.

   நன்றி சிவாண்ணே!

 14. hi tala super super super……………..

 15. அனுப்பர்பாளையம் பெருமாள் கோயில் மெரமனையின் போது (தேர்த்திருவிழா) தேர் செல்லும் வழியெல்லாம் எல்லார் வீட்டுத்திண்ணைகளும் ஆட்களால் நிறைந்திருக்கும். என் சிறு வயதில் என் வீட்டுத்திண்ணை என்றும் நாலைந்து நரைத்த முடிக்காரர்களின் அரட்டை அரங்கம். இன்று பாதிக்கூட்டம் டி.வி.யின் முன்னால், பாதிக்கூட்டம் பணத்தின் பின்னால். எங்கள் வீட்டுத்திண்ணையில் பாதி பூக்கடை ஆகிவிட்டது… இந்தப் பதிவு நிதர்சனத்தின் பதிவு…

 16. நன்றி கிர்பால்.

  உங்களுக்கு பின்னாலும் திண்ணை நினைவுகள் இருக்கிறதா?

  அனுப்பர்பாளையத்தில் திண்ணை வீடு இருந்தது என்பதே எனக்கு புதிய விசயம் தான்.

 17. என் நினைவடுக்கிலும் ஒரு திண்ணை இருந்தது.
  ஒரு திண்ணை இருந்தது.
  இருந்தது.

  பதிவு ..அழகு.

  மனக்கண்ணில் எல்லாம் கடந்து போக
  நிரந்தரமாக உறுத்திச்சென்றது
  தீப்பெட்டி வாசம்…லேசாக.

 18. பதிவின் இடையே காக்கிடவுசர் படம் உறுத்துகிறது.
  இப்படியெல்லாம் கோனார் வேண்டுமா?

  ஓ….திருப்பூர்வாசியா..

  • காவலர்களின் பழைய சீருடை கத்தி மாதிரி கஞ்சி போட்ட காக்கி டவுசர் இப்ப எங்கேயாவது இருக்கா? இல்லைல்ல. அது மாதிரி, இன்னும் கொஞ்ச வருசத்துல காக்கி டவுசர் இருக்குமானு தெரியல கும்க்கி.

   அப்பவும் இங்க வந்து பார்த்தீங்கனா, படத்துலேயாவது பார்க்கலாம்ல.

 19. அண்ணா,

  படிச்சு கண் கலங்கிடுச்சு…..

  தேங்க் யூ…

 20. எனக்கும் திண்ணையோடு பல நினைவுகள் உறங்குகிறது. அருமை வெயிலான்.

 21. கிராமிய தெருக்கள் கண்முன் நிற்கிறது தல!

 22. நானும் உங்களைப் போல திண்ணையை இழந்த தமிழன் தான்…..

 23. ஆதிமூலகிருஷ்ணன் said:

  உங்களின் டிபிகல் பதிவு வெயில்.! சிறப்பானதொன்று.

  ராசுவுன் கவிதையும் அழகு.!

  ஆமா, என்ன நிறைய எழுதிக்குமிச்சுட்டீங்களே.. என்னாச்சு? இனிதான் படிக்கணும் எல்லாத்தியும். ஹிஹி..

 24. ந‌ல்ல‌ ப‌திவு வெயிலான்.

 25. புன்னகையின் அர்த்தம் என்னவென்று சிறு வயதில் எனக்குத் தெரியாது. //

  நீங்க இன்னும் அந்த வயதில் தானே இருக்கீங்க… 😉

  நல்ல திண்ணை நினைவுகள். நல்லாருக்கு வெயிலான். தலைப்பு அழகு.

 26. இன்று திருப்பூரில் திண்ணைகள் இருந்தால், 2 தையல் இயந்திரங்களுடன், நான்கு பேர் வேலை செய்யும் பனியன் தொழிற்சாலையாகியிருக்கும்..

  பதிவு எழுத்துக்களை வரிகளைப்போல எதார்த்தம். சிறப்பு.

 27. எல்லா ஊரிலும் ஒரு ”பிள்ளையார் கோவில் தெரு” இருக்கும். வயது ஏறியதும், தெருவும் இடம் மாறும்.

 28. ரொம்ப அருமையா இருக்கு வெயில்ஸ்.

  அனுஜன்யா

 29. I was taken back 35-40 years when I read your words about ‘thinnai’. Excellent! Your words truly brought back the nostalgic memories of the calm and quiet streets of Virudhunagar in 1960s and 1970s. Very nice!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: