படைப்பாளி

திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் இல்லையென அரசாங்கமோ, தொழிலதிபர்களோ உரக்கச் சொல்ல முடியாது.  தெரிந்தும், தெரியாமலும் குழந்தைத் தொழிலாளர்களின் பங்களிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

வெளிநாட்டு விற்பனை நிலையங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் தங்களது ஆடைகள் குழந்தைத் தொழிலாளர்களின்றி தயாரித்தவை என இப்போது விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.  பனியன் சார்ந்த உபதொழில்களிலும், உள்நாட்டில் விற்கப்படும் ஆடைத் தயாரிப்புகளிலும், குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

உறுத்தும் உண்மை ஒன்றைச் சொல்லட்டுமா?

உங்கள் உடலோடு ஒட்டி உறவாடும் உள்ளாடைகள் வியர்வை உறிஞ்சுவது போல், குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சித் தயாரானது தான்.

குழந்தைத் தொழிலாளர் அவலங்களை என்னுடைய முந்தைய கனியா கனிகளும், கண்ணாடி கனவுகளும் பதிவில் ஓரளவு பதிவு செய்திருக்கிறேன்.  எழுத்துக்களை விட, படங்கள் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.  அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளம் படைப்பாளி ரவிக்குமார் என்ற குறும்பட இயக்குநரும் ஒருவர்.

திருப்பூரைச் சேர்ந்த, ரவிக்குமார் பனியன்கள் தைப்பதற்குத் தேவையான தையல் நூல் வியாபாரம் செய்து வருகிறார். லீவு, எட்டா(ம்) வகுப்பு, சுழல் என்ற தலைப்புகளில் குறும்படங்களை எடுத்திருக்கிறார்.

இதில் எட்டா(ம்) வகுப்பு என்ற குறும்படம் திரையிடல்களின் போது பாராட்டைப் பெற்றது.

ஐந்தாம் வகுப்போடு பழைய பேப்பர் கடைக்கு வேலைக்கு போய் விட்ட சிறுவன், அவனுடைய 8ம் வகுப்பு படிக்கும் நண்பன், தன்னைப் போலல்லாது,  ஒரு டாக்டராகவோ, பொறியாளனாகவோ ஆக வேண்டும் என்ற கனவுடன் பழைய புத்தகங்கள், செருப்புகள் போன்ற தன்னாலான உதவிகள் செய்தும், பயனளிக்காது பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விடுகிறான் என்பது தான் கரு.

தன்னைப் பற்றியான அறிமுகத்தில்,

“நான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றபோதே விடுமுறைக் காலங்களில் பனியன் கம்பனிகளில் வேலைக்குச் செல்வேன். அதுதானோ என்னவோ பின் நாட்களில் என் குறும்படங்களில் பிரதிபலித்தது.

துபாய் சென்றுவந்த ஒரு நண்பரிடம் இருந்த கேமராவை எடுத்துக் கொண்டு ஏதோ படம் பிடித்தேன். நிறைவாக இல்லை. நண்பன் தே.ராம் ஒரு குறும்படம் இயக்கினான். அவனுடன் சேர்ந்து பணியாற்றினேன். கொஞ்சம் கற்றுக் கொண்டு ‘லீவு’ குறும்படத்தை இயக்கினேன். அதற்குப் பின்னர் ஒரு வருட இடைவெளியில் ‘சுழல்’, ‘எட்டா(ம்) வகுப்பு’ என்னும் குறும்படங்களை இயக்கினேன்.

குறிப்பாக குழந்தைத் தொழிலாளர் பற்றியே நான் குறும்படம் எடுத்ததற்கான காரணம் என் மனதின் சிதைவு என்றே எண்ணுகின்றேன் “

ரவிக்குமாரின் கருவில் உருவான ஒரு அசைபடத்தை நண்பர் கேபிள் சங்கர் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.  கேபிள் சங்கருடனான திருப்பூர் சந்திப்பில் ரவிக்குமாரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இப்போது பின்னல் நகரம் என்ற வலைத்தளத்தில் பதிவுகள் எழுத ஆரம்பித்துள்ளார்.

வளரும் இளம் படைப்பாளி ரவிக்குமாரை வாழ்த்தி வரவேற்போம்.

22 thoughts on “படைப்பாளி

  1. பதிவும், இணைக்கப்பட்டுள்ள குறும்படமும் வேறு வேறு டாபிக்கா?

    குறும்படத்தின் கான்செப்ட் அழகென்றால், ஒற்றையாளாய் ஜெகதீசனின் அனிமேஷன் கலக்கல்.!

    1. பதிவில் குறிப்பிட்டுள்ள எட்டா(ம்) வகுப்பு குறும்படத்தின் சுட்டி கிடைக்க வில்லை.

      இணைக்கப்பட்டுள்ள குறும்படத்தை ஏற்கனவே கேபிள் அறிமுகப்படுத்தியிருந்தார். அனிமேஷனும் நீங்கள் சொல்வது போல் அழகு!

  2. சமூகம் மக்களின் மனோதத்துவத்தில்தான் வாழ்ந்துகொண்டிருகின்றது. உண்மைகளைப்பற்றி சமூகத்தில் யாருக்கும் அக்கறை கிடையாது. மற்றவர்களுடன் கருத்து வேறுபாடின்றி சேர்ந்து ஒத்துப்போவது பற்றித்தான் சமூகம் கவலை கொள்கின்றது.
    ஒரு ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் யேசுவின் குடும்பத்தை சித்திரமாக ஒரு தாளில் வரையச் சொன்னார். எல்லாக் குழந்தைகளும் யோசப், மேரி, யேசு ஆகிய மூவரையும் தங்களுக்கு தெரிந்தவிதத்தில் வரைந்தனர். ஆனால் ஒரு மாணவன் இயேசுவின் குடும்பத்தினர் ஆகாயத்தில் விமானம் ஒன்றில் பறப்பதாக வரைந்திருந்தான். ஒரு விமானம். அதன் யன்னல்கள் வழியாக நான்கு பேர் தெரிந்தனர். ஒருவர் யோசப், ஒருவர் மேரி, ஒருவர் யேசு. யார் அந்த நான்காவது மனிதன்? என ஆசிரியர் கேட்டார். அதுதான் விமானத்தின் விமானி என்று மாணவன் பதிலளித்தான்.
    குழந்தைகளாலும் எழுத்தாளர்களாலும் மட்டுமே இப்படி எண்ண கற்பனை பண்ண முடியும். மற்றவர்களுக்கெல்லாம் வித்தியாசமாக புதிதாக எண்ண பயம், தயக்கம். ஆனால் குழந்தைகளுக்கும் படைப்பாளிகளுக்கும் எந்தவித தயக்கமோ பயமோ கிடையாது. அவர்களின் எண்ணங்களை செயல்களை யாராலும் எதனாலும் கட்டுப்படுத்த இயலாது. அதனால்தான் சாதாரண மக்கள் ஒரு கலைஞனையோ, படைப்பாளியையோ மரியாதைக்குரிய மனிதராக, ஒரு கனவானாகப் பார்க்க முடிவதில்லை. மரியாதைக்குரியவர்களாகவும், கனவான்களாகவும் இருப்பவர்களால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. கனவானாக மாறிய பின்பு சுதந்திரமாக வாழ முடியாது. ஒரு கலைஞன் கனவானாக மாறிவிட்டால் அவன் இறந்தவனுக்குச் சமமாகி விடுகின்றான்.
    மரியாதையையும், சுயகௌரவத்தையும் இழக்கத் தயாராக இருப்பவர்களே படைப்பாளிகளாக இருக்கமுடியும். படைப்பாளிகளை சாதாரணமக்கள் பைத்தியக்காரர்கள் என்றே கருதுகின்றார்கள். படைப்பாளிகள் மிகத்தாமதமாகவே அடையாளம் காணப்படுகின்றார்கள்.

☼ வெயிலான் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி