தோற்றுப் பார்!

எப்போதும் வெற்றியை நோக்கித் தான் ஒவ்வொருவருடைய பயணமும் இருக்கும்.  இவனென்ன தோற்றுப் பார் என்கிறானே? என்ற கேள்வி தான் உங்களைப் போல எனக்கும் இருந்தது.  தோல்வி என்னைச் செருப்பால் அடித்தது.  எந்த இடத்தில் தோற்றேன்?  எது என்னைத் தோற்கச் செய்தது என்ற கேள்விகளே அடுத்து வெற்றியை நோக்கி இட்டுச் சென்றது.  இதைச் சொல்பவர், சிறிதும், பெரிதுமாய் கிட்டத்தட்ட இருபத்தாறு விருதுகள் பெற்றிருக்கும் வெயில் படத்தை இயக்கியவரும், அங்காடித் தெரு என்ற தமிழ் வார்த்தையை இப்போது தமிழனுக்கே மீண்டும் நினைவுபடுத்தும் விதமாய், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் இயக்குநருமான வசந்தபாலன் தான்.

இருங்க!  இருங்க!  நான் படத்தைப் பற்றிய விமர்சனம் எழுதவில்லை.  அதனால், மீதியையும் தைரியமாய் படிக்கலாம்.

மேற் சொன்னதைப் போல, அவரைப் பற்றிய அறிமுகங்கள் எப்போதும், வெயிலில் இருந்து தான் தொடங்குகிறது.  ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளினி அவரைப் பற்றிய அறிமுகத்தின் போது, ஆல்பம், வெயில் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் என்று அறிமுகப்படுத்தும் போதே, இடைமறித்து ஒரு சிறு திருத்தம் – ஆல்பம் தோல்விப்படம்.  இதைச் சொல்ல என்றும் நான் கூச்சப்பட்டதில்லை,  அந்த தோல்வியிலிருந்து தான் நான் நிறையக் கற்றுக் கொண்டேன் என்று தலை நிமிர்த்திச் சொன்னார்.

தோல்வியை தலை நிமிர்த்திச் சொல்லவும் ஒரு துணிவு வேண்டும்.  ஆல்பம் தோல்விக்குப் பின் பல தூக்கமில்லா இரவுகளில் தோல்விக் காரணம் தேடியலைந்தேன். வெயில் படத்துக்கான கரு கிட்டியது என்கிறார்.  வெயிலுக்குப் பின் நான் வியாபாரப் படங்கள் எடுக்கும் பொதி மாடாக விரும்பவில்லை.  மயிலிறகாய் இருக்க நினைத்தேன். அதனால் தான் அங்காடித் தெரு வந்தது என்கிறார்.

முரளியுடனும் (நுழைவுச் சீட்டு உபயம்), குறும்பட இயக்குநர் ரவிக்குமாருடனும் அங்காடித் தெருவுக்குப் போயிருந்தேன்.  இயக்குநருடன் படம் பார்க்கும் போது, பல விசயங்களை விவாதிக்க முடிந்தது.  அங்காடித் தெரு என்ற எழுத்தின் வடிவமைப்பில் சில எழுத்துக்கள் உடை தொங்க விடப்படும் கொக்கி (Hanger) போன்ற அமைப்பிலிருக்கிறது எனச் சுட்டினார். ஒரு காட்சியில், இது போன்ற பேரங்காடிகளின் உள்ளே கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருக்குமே? என்று ரவி சந்தேகம் எழுப்ப, இரவு நேரங்களில் காமிராக்கள் செயல்படாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, திரையில் கடையின் கண்காணிப்புக் கேமிரா காட்டப்பட்டது. ஒவ்வொரு காட்சியின் பின்புலத்திலும் நிறைய சேகரிப்புகள், ஆராய்ச்சிகள் இருக்கும் எனப் பேசிக் கொண்டிருந்தோம்.

இனி வசந்தபாலன் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.

முதன்முதலில் ஜீனியர் விகடன் வாசகர் கடிதத்தில், என் பெயர் வந்திருந்தது.  அதை எடுத்துக்கொண்டு சைக்கிளில் விருதுநகர் முழுவதும் சுற்றினேன்.

வெயில் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய வேலைகளின் போது, இரவு பதினோரு மணிக்கு மேல் ரங்கநாதன் தெருவுக்குச் சென்ற போது, சோர்வடைந்த இளைஞர் கூட்டம் கடந்து போனது.  யார் இவர்கள்?  எல்லாமே தெக்கத்தி முகங்களாய் இருக்கிறதே என்று என் தேடல் தொடங்கியது.  நான்கு வருடங்களுக்குப் பின் இன்று ஒரு படமாய் விரிந்து நிற்கிறது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ரங்கநாதன் தெருவின் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன்.  தங்கியிருந்த காலத்தில், கையடக்க காமிராவில் பதிவானது, முந்நூறு மணி நேர ரங்கநாதன் தெரு நடவடிக்கைகள்.

கதாநாயகன் தேர்வுக்கு எடுத்துக் கொண்டது மூன்று மாதகாலமும், முப்பதாயிரம் முகங்களும்.  உண்மையிலேயே ஏழ்மையான, இயலாமை முகத்தில் தெரியும் ஆளைக் கடைசியாய் கைப்பந்து மைதானத்தில் கண்டெடுத்தேன்.  மூன்று மாதங்கள் தனியாக நடிப்புப் பயிற்சியும் கொடுத்தேன்.

கதாநாயகியை ரங்கநாதன் தெருவுக்குள் உண்மையாகவே வியாபாரம் செய்யச் சொல்லி, உயர்ந்த கட்டிடத்தின் மேலே காமிரா வைத்து சில காட்சிகள் எடுத்தேன்.  மூன்று மணி நேரத்தில் கதாநாயகி தெருவில் நின்று விற்பனை செய்த சிறு பொருட்களின் விற்பனைத் தொகை அறுநூறு.

நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெருவில் படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகச்சிரமமான செயல் தான்.  இருந்தும், அங்கு தான் படமெடுக்க வேண்டுமென்ற முனைப்பில், முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

என்னய்யா மனுசன் இவன்?  இந்தப்படத்துக்காக செலவழித்த நான்காண்டுகளில், நான்கு படங்கள் எடுத்திருக்கலாம்.  தன் சம்பளத்தை உயர்த்தியிருக்கலாம்.  வெயில் வெற்றிக்குப் பின் கொஞ்சம் காசு, பணம் சேத்திருக்கலாம்.

அப்படி என்ன தான் நாலு வருசமா படம் எடுத்துக் கிழிச்சார் அந்த ஆளு?  என்று கேள்வி கேட்பவர்கள் அங்காடித் தெரு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

வசந்த பாலன் அண்ணாச்சி, ஏழைகளுக்கு வேலை கொடுக்கிறேன் என்று தயாளகுணம் காட்டி, ரத்தம் உறிஞ்சும் பிராணிகள் நம்ம ஊரிலும் இருக்கிறது. நீங்களும், நானும் இன்னும் ஒரு சிலர் மட்டும் தான் தப்பித்திருக்கிறோம்.  உங்களின் படம் நம்ம ஊர் அண்ணாச்சிகளுக்கும் பொருந்துமென நினைக்கிறேன்.

உங்களின் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள்!

Advertisements

Comments on: "தோற்றுப் பார்!" (39)

 1. துணிச்சலுக்கு என் பாராட்டுக்களும் 🙂

  படம் செம!!

 2. சின்னம்மணி said:

  பாத்திடறேன். இங்கே வரலை. டிவிடி வரட்டும்

 3. வெயிலான் நல்லா எழுதியிருக்கீங்க.

  சில கதைகள். நாவல்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்க்கப்படும் ‘டீட்டெய்ல்’, இந்தப் படத்தில்தான் அதிகம் கையாளப்பட்டிருக்கிறது. இதற்கான, இயக்குனரின் கவனிப்பும் நுண்ணிய விவரிப்பும் முக்கியமானதாக இருக்கிறது.

  ‘அங்காடி தெரு’ , கூலித்தொழிலாளர்களைப் பற்றி பேசிய ஒரு சில படங்களில் முக்கியமான படம்.

  வாழ்த்துகள்.

  • நன்றி அண்ணாச்சி!

   இதை வேறு யாரும் படமாக எடுப்பதற்கு வசந்த பாலனால் மட்டும் தான் முடியும்.

   வேறு யாரும் அங்கு இலகுவாக நுழைந்துவிட முடியாது.

 4. இது போன்ற விமர்சனத்திற்கும் என்னுடைய பாராட்டும் வாழ்த்தும்.

 5. Nice blog. First image is very nice.

 6. படத்தை பற்றி படித்தவுடனே… எனக்கு நம்ம திருப்பூர்,ஈரோடு கண்ணன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் கண்முன்னே வந்தது.

 7. குசும்பன் said:

  தல அருமையா எழுதியிருக்கீங்க!

 8. உழைப்பால் உயர்ந்த நம்ம அண்ணாச்சிகளை இழுவுப்படுத்திய வசந்த பாலனை கண்டிக்கிறோம் என்று தென்மாவட்டங்களில் சில சாதி சங்கங்கள் போஸ்டர் ஒட்டாமல் இருந்தால் நல்லது…

  கதாநாயகனுக்கு ஏன் அவ்வளவு அலையனும்?
  சரவணா ஸ்டோர்க்குள் போய் ஒரு பையனை தேர்ந்தெடுத்தாலே போதுமே?
  இதுக்கு ஏன் அவர் இப்படி அலைந்து ஒரு மைதானத்தைல பிடித்தாராம். அப்ப யதார்த்தம் சினிமாவை விட்டு விலகியே நிற்குமா?

  ஆயிரம் பேர்களை நிராகரித்து அந்த இளைஞனை கதாநாயகனாக்கி வேண்டாம்.
  அந்த கதைக்குரிய கதாநாயகன், சரவணா ஸ்டோரிலே இருக்கிறான்.

 9. வெயிலான்,

  தோல்வி என்பது விலக்கி வைக்கப்பட்ட வெற்றி என்பார் வைரமுத்து.

  நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

 10. ‘தோற்றுப்பார்’ எனக்கு இது மிகப்பெரிய வேதவாக்கு வெயிலான். அங்காடித்தெரு பேசுவதற்கான டாபிக் தான்.

  இருந்த போதும் கொஞ்சம் தள்ளி நின்னு புளகாங்கிதப்படுகிற இந்த பதிவு ரொம்ப நல்லாருக்கும்மா.

  பேட்டியின் போது குரலை உயர்த்திப்பேசுகிற வசந்த பாலன் படைப்புகள் இன்னும் சத்தமாய் ஒலிக்கணும்.

 11. //இருங்க! இருங்க! நான் படத்தைப் பற்றிய விமர்சனம் எழுதவில்லை. அதனால், மீதியையும் தைரியமாய் படிக்கலாம்.//

  தினம் தினம் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம். பரவாயில்லை எழுதுங்க சார்..

 12. ரைட்டு தல, நாம அன்னைக்கு நைட்டே பேசியிருக்கலாம் போல, வசந்தபாலனும் பழக்கம் உண்டா?

  நாம பேசணும்.

 13. வெயிலான்

  சிறப்பான பகிர்வு. தோற்பதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய கலை.ஓஷோவின் புகழ்பெற்ற பிரசங்கம் ஒன்று நினைவிற்கு வருகிறது only losers can win this game 🙂

  மற்றபடி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பல நுட்பங்களை எழுத தவறிவிட்டேன். இன்னொரு முறை பார்த்துவிட்டு விரிவாய் எழுதவும் எண்ணம்.

  • // தோற்பது தான் இருப்பதிலேயே மிகப்பெரிய கலை //

   அருமை! அருமை!

   நன்றி அய்ஸ்!

   உங்கள் விமர்சனமும் வாசித்தேன். நன்றாய் இருந்தது. நானும் இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

 14. பேட்டியின்போதே பேசுன மனுஷங்க சிலர் கண்ணு கலங்கினாங்க பாருங்க தல.. அதுதான் அந்தக் கலைஞனோட உண்மையான உழைப்புக்கு கிடைத்த மரியாதை..:-)))

 15. வெற்றியின் பின்னால் ஒளிந்திருக்கும் தோல்வியின் வலி..

  அதுதான் வெற்றிக்கான வைராக்கியத்தைக் கொடுக்கிறது…

  நல்ல பகிர்வு..

 16. அண்ணா இன்னும் படம் பார்க்கல கண்டிப்பா போயி பார்த்துட்டு வந்து சொல்றேண்ணா…டைரக்டர் வெயிலூர்க்காரர் தானே!!!!!!!!!!!!!!!

 17. என்ன நம்மூர்க்காரரா.? ஹிஹி.. வொர்த்தியான ஆளுதான். பாராட்டுகளுக்குத் தகுதியானவர்தான்.

 18. “அங்காடித்தெரு” வெறும் படமல்ல,ஒரு தோல்வியாளன் பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ள தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் ஒரு பரீட்சை. இதில் அவர் வெற்றிபெற்று விட்டார். அவர் மேலும் நிலைத்து நிற்க எனது வாழ்த்துக்கள்.

 19. //கதாநாயகனுக்கு ஏன் அவ்வளவு அலையனும்?//

  கலைஞர் தொலைக்காட்சியில் அங்காடித் தெரு வணிக விரிவாக்கலுக்கான (Promotion) நேரலையில் வசந்தபாலன் குழுவினரின் கருத்துக்கள் கேட்க நேர்ந்தது.

  கதாநாயகன் மகேஷ் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருவதாகவும் அங்காடித் தெரு தனது தயாரிப்பு மாதிரி மகேசும் தனது தயாரிப்பு எனவும் அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

  தமிழ் சினிமாவிலும் வாரிசுகளின் ஆதிக்கம் உள்ள இக்கால கட்டத்தில் சாதாரண நிலையில் இருந்த மகேசை தேடிக் கண்டு பிடித்த வசந்த பாலனின் உதவியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

  இன்னும் விளம்பர யுகத்துக்குள் நுழையாத மகேசும்,அருகிலிருந்து அவரை தட்டிக் கொடுத்து புன்முறுவல் பூக்கும் வசந்த பாலனுக்குமிடையில் காணப்பட்ட மன வேதியியலும்(Chemistry) கதாநாய்கனுக்கு ஏன் அலைந்தார் என்பதில் தெரிந்தது.

 20. டைரக்டர் வசந்த பாலன் அவர்களை பற்றி எழுதியமைக்கு
  மிக்க நன்றி! வசந்த பாலனுக்கு பாராட்டுதல் கிடைப்பதில் முதலில் மகிழ்ச்சி அடைபவன் நானாகதான் இருப்பேன். எனக்கு மிக பெரிய உதவி புரிய வேண்டும். அவரின் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்கிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: