வேடிக்கை

அதிகாலையில் நகர் நோக்கியொரு சிறு பயணம் செல்ல வேண்டியிருந்தது.   செல்லலாமா?  வேண்டாமா? என இரு வேறு யோசனைகள்.  இருந்தும், தவிர்க்க முடியாத கட்டாயம் இருந்ததால், புறப்பட்டேன்.

செல்லும் வழியில் மன்னர் எதிர்ப்பட்டால், ரதங்கள் கடக்கும் வரை பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டி வருமென்பதால்,  பெருவழி தவிர்த்து, சிற்றூர்களின் வழி நகருக்குள் நுழைந்தாயிற்று.  எதிரில் குதிரைப்படை கூட தென்படவில்லை.  ஒரு சில காவல் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

நகர முகப்பில், சிலைகளுடன் கூடிய அலங்காரத் தோரணமே பெருவிழாவொன்று நடைபெறவிருப்பதை கட்டியங்கூறிற்று.

தூய்மையான சாலைகளின் நடுவே சுடர் விளக்குக் கம்பங்கள்,  இலச்சினைகள் பொறிக்கப்பட்ட வர்ணக்கொடிகள், தென்னை, பனையோலைத் தோரணங்கள், ஆங்காங்கே மன்னரின் அருமை, பெருமைகளைப் பறைசாற்றும் பதாகைகள், சாலையின் இருமருங்கிலும் பத்தடிக்கோர் அரண்மனைக் காவல் வீரர் என நகரமே மன்னரின் வருகையையொட்டி, நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

நேற்றிரவு நடைபெற்ற சலங்கை நடனம் காணுவதைக் கூட தவிர்த்து, அரண்மனை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு, தாமதமாய் மன்னர் படுக்கைக்குச் சென்றதால், பரபரப்பின்றி மக்கள் கொஞ்சம் நிம்மதியோடு அலைந்து கொண்டிருந்தனர்.

அனைத்து வழிகாட்டிப் பலகைகளின் அம்புக்குறிகளும் விழா நடக்குமிடம் நோக்கியே இருந்தது.  நிகழ்விடத்தில் சிற்சில சலசலப்புகள் இருந்ததால், கடப்பது தாமதமாயிற்று.  ஊர்வலப்பாதையின் இருமருங்கிலும் வண்ணக்கலவைகளுடனான, கண்ணைக் கவரும் வகையில் ஓவியங்களால், நகரத்தெருக்கள் புதுப்பொலிவுடன் களை கட்டியிருந்தது.

மன்னர் ஊர்வலத்தைப் பார்வையிடுவதற்காக பல்வேறு வண்ணத்துணியலங்காரங்களுடனான தனி உப்பரிகை, இளைப்பாறும் வசதியுடன் தயாராகிக் கொண்டிருந்தது.  இளவரசர், இளவரசி, தளபதிகள் குடும்பத்தாருக்கென தனித்தனியான சிறு உப்பரிகைகள்.  மந்திரிப் பிரதானிகளுக்கும் கூட.

மன்னர் உரைநிகழ்த்தும் நிகழ்விடமெங்கும் சாரை, சாரையாக மக்கள்.  ஆடம்பரத் தோரணவளைவுகள்,  குதிரைப்படை வீரன் சிலை, புலவர்களின் சிலைகள் என ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  கூடாரங்களின் உட்புற மேற்பகுதி கூட அலங்கரிக்கப்பட்டிருந்தது.  கூடங்களில் மிகப்பெரிய பாத்திரங்களில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது.  தங்குமிடங்களனைத்தும் அரண்மனை காவலர்களாலும், சேவகர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.  பயிர் நிலங்களை செப்பனிட்டு, ரதங்களை நிறுத்துவதற்கு தயார்ப்படுத்தியிருந்தனர்.

மன்னர் தங்கியிருந்த மாடமாளிகையின் முன்னே,  எப்போது, என்ன உத்தரவு வந்தாலும் செயல்படுத்துவதற்கேற்ப பல்வேறு ரதங்கள் தயார் நிலையில் இருந்தன. சிறப்பு பயிற்சி பெற்ற காலாட்படை வீரர்களும் வித்தியாசமான உடையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.  அரண்மனை அதிகாரிகளும் அதிகளவில் குழுமியிருந்தனர்.

தமிழினத்தைத் தழைக்கவைத்தால் தமிழ் தன்னால் வளரும்.  அதை விடுத்து, மக்களனைவரும் உழைத்துக் கொடுத்த வரிப்பணத்தில், ஆடம்பர விழாவை விமரிசையாக, நடத்தி வீண் செலவழிக்கிறாரே இம் மன்னர்? என்ற கடைக்கோடிக் குடிமகனுக்கேயுரிய யதார்த்த கேள்வியுடன், வேடிக்கை மட்டும் பார்த்து விட்டுப் பத்திரமாய் ஊர் திரும்பினேன்.

Comments on: "வேடிக்கை" (63)

 1. ஆஹா ஆரம்பிச்சதை விட முடிக்கிற இடத்தில இருக்கு டெரரிசம் 🙂

  வேடிக்கையாய் பார்த்துட்டு/படித்துட்டு வந்துட்டேன் நோ கமெண்ட்ஸ் :))

 2. தமிழினத்தைத் தழைக்கவைத்தால் தமிழ் தன்னால் வளரும். அதை விடுத்து, மக்களனைவரும் உழைத்துக் கொடுத்த வரிப்பணத்தில், ஆடம்பர விழாவை விமரிசையாக, நடத்தி வீண் செலவழிக்கிறாரே இம் மன்னர்?

  ஜிங்ஜாங் உணர்வார்களா?

 3. மன்னராட்சியில 2 இளவரசர்கள், ஒருத்தரு மருதையில இருக்காரு, இன்னொருத்தர் பட்டணத்துல இருக்கார்.

  • இம்மன்னராட்சியில் இளவரசர்களுக்கா பஞ்சம் இளா? முடிசூடிய இளவரசர்கள். முடிசூடா இள இளவரசர்கள்.

   இளா என்பதும் இளவரசரின் சுருக்கமோ? 😉

   • இல்லைங்க, நாம இப்போ ராஜாவாகிட்டோம்(அப்படித்தான் ஊருல கூப்புடுவாங்க), வீட்டுல இளவரசர் தன் பரிவாரத்து கிளம்பிட்டு இருக்காரு,. என்ன நமக்கு ஆள்றது மட்டுமில்லை, வாழ்றதுக்கும் எந்த நாடுன்னு தெரியாம இருக்கோம்

 4. நல்ல கட்டுரை.

 5. பிழைக்கத்தெரிந்த மன்னன், எங்க சிற்றூர் குழுமத்தலைவர் பிழைக்கத் தெரியாதவர் :))

 6. அண்ணன் எழுத்தாளர் வெயிலான் வாழ்க!

  :))

 7. ஆஹா ஆரம்பிச்சாசா.
  இவ்வளவு செலவில் தமிழுக்கு எதாவது உபயோகம் உண்டா என்றால்.அது தமிழ்செம்மொழி மாநாடு ங்ற பேர் மட்டுந்தேன்.

  ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் இடைவெளி தேவைதான் ஆனா இவ்ளோ இடைவெளி வேண்டாம் வெயிலான் அடிக்கடி எழுதுங்கள்

 8. //
  தமிழினத்தைத் தழைக்கவைத்தால் தமிழ் தன்னால் வளரும். அதை விடுத்து, மக்களனைவரும் உழைத்துக் கொடுத்த வரிப்பணத்தில், ஆடம்பர விழாவை விமரிசையாக, நடத்தி வீண் செலவழிக்கிறாரே இம் மன்னர்? என்ற கடைக்கோடிக் குடிமகனுக்கேயுரிய யதார்த்த கேள்வியுடன், வேடிக்கை மட்டும் பார்த்து விட்டுப் பத்திரமாய் ஊர் திரும்பினேன்.
  //

  நம்மால கேள்வி மட்டும் தான் கேக்க முடியும், பதில் எவனும் சொல்ல மாட்டான்!

 9. முழுவதும் கிடைக்காத ஐந்து பெருங் காப்பியங்களையும், திருக்குறளையும் மட்டும் வைத்துக்கொண்டு தமிழைச் செம்மொழி என்று சொல்லிட இயலுமோ!,…

  கவிமிகுந்த கம்பராமயணம், பெருங்காவியம் பெரியபுராணம் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு என்ன செய்யப்போகின்றாரகள் மாநாட்டில்,..

  – ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com

 10. தமிழ் வளர்க்கும் அரசின் முயற்சியைப் பகடி செய்த காரணத்தால் வரும் ஆனித் திங்கள் 30 ஆம் நாள் உம்மீது விசாரணை நடைபெறும்.

  • அன்று தான் சம்பள நாள். ஆதலால், விசாரணையை வேறு ஏதாவது ஒரு நாளில் வைத்துக் கொள்ளும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா!

 11. //தமிழினத்தைத் தளைக்கவைத்தால் தமிழ் தன்னால் வளரும். அதை விடுத்து, மக்களனைவரும் உழைத்துக் கொடுத்த வரிப்பணத்தில், ஆடம்பர விழாவை விமரிசையாக, நடத்தி வீண் செலவழிக்கிறாரே இம் மன்னர்? என்ற கடைக்கோடிக் குடிமகனுக்கேயுரிய யதார்த்த கேள்வியுடன், வேடிக்கை மட்டும் பார்த்து விட்டுப் பத்திரமாய் ஊர் திரும்பினேன்.
  //

  என்ன நடக்குது இங்க என்று ஒரு கேள்வியுடன் வாசித்துக் கொண்டிருந்தேன்…. கடைசியில் இப்படி தாக்கிட்டீங்களே.. அருமையான பதிவு.

 12. //கடைக்கோடிக் குடிமகனுக்கேயுரிய யதார்த்த கேள்வியுடன், வேடிக்கை மட்டும் பார்த்து விட்டுப் பத்திரமாய் ஊர் திரும்பினேன்//
  தலைவரே..நீங்க பத்திரமா ஊருக்கு வந்துட்டீங்க,,நாங்க “பல வழி”யை சுத்தி, சுத்தி “ஒரு வழி”யா ஆகிட்டோம்.

 13. யாமும் அவ்வழி நேற்று சென்றோம். மன்னரின் புகழ்பாடும் பதாகைகள் ஒன்றும் காணவில்லையே அறிஞர் பிரதானியாரே? யாமும் எம்முடன் வந்த எதிரி நாட்டைச் சேர்ந்த – மன்னரை அறவே வெறுக்கும் – ஒருவரும்கூட அதுகுறித்துச் சிலாகித்துக் கொண்டோமே?

  ஆயினும், வலது இடதுபுறங்கள் முழுதும் மரவேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இரவுக்குள் வாழ்த்துப் பதாகைகள் இடம் பெறலாம் என்று நினைத்துக் கொண்டோம்.

  என்னவாயினும், ஏதாவதொன்றின் பெயரால் விழா நடைபெறும் சிற்றூர் ஏதோ சிறிது வளம்பெற்றதாக பலரும் பேசிக் கொள்கின்றனரே.. அதுபற்றித் தங்களின் கருத்து யாதோ?

  • நகரில் பதாகைகள் காணப்பட்டன பரிசலாரே! ஆனால் ஊர்வலப் பாதையில் இல்லை.

   என்ன வளம் பெற்றது என்பது ஒரு புறமிருக்க, யார் வளம் பெற்றார்கள் என்ற இன்னொரு கேள்வியும் இருக்கிறது.

 14. த‌மிழ‌க சிற்ற‌ர‌ச‌ர், பார‌த‌ப் பேர‌ர‌சின் த‌ய‌வுக்காய்,
  செய்த‌ சில‌, ப‌ல‌ த‌வ‌றுக‌ளால், இன‌,மொழி தீவிர‌வாதிக‌ளின்
  கை ஓங்கி அடுத்த‌க‌ட்ட‌ குட‌ஓலையில், காத்திருக்கும் எதிர‌ணி
  அரிய‌ணை ஏறிடுமோ? அப்பால் இள‌வ‌ல்க‌ளின் க‌தி!! என்ற‌
  சிந்த‌னையால், பிற‌ந்த‌ திட்ட‌ம் சிவ‌ப்பு மொழி சிற‌ப்பு மாநாடு.
  விழாவில், அர‌ச‌ர் த‌மிழின் கட‌வுளாக, த‌மிழ‌னின் ஒரே த‌லைவ‌னாக‌
  ‘ஈ‌ங்கிவ‌னை யாம் பெற‌வே’ செய்த‌ த‌வ‌ம் ப‌ற்றி அர‌ச‌வை புல‌வ‌ர்க‌ள்
  புக‌ழாராம் சூட்ட‌, அர‌சு மான்ய ப‌த்திரிக்கை,காட்சி ஊட‌க‌ங்க‌ள்,
  வ‌ழி மொழிய‌, ம‌க்க‌ள் ம‌ய‌க்க‌ம் தெளியும் முன், குட‌ஓலை குலுக்கி
  அர‌சுக‌ட்டிலில் ம‌றுப‌டியும்.
  த‌மிழ், த‌மிழ‌ன்னு, சொல்லிச் சொல்லியே,சோலிய‌ முடிச்சுட்டாங்க‌ல்ல‌.
  இன்னும் என்ன‌ மிச்ச‌மிருக்கு? ஆமா,வ‌ச்சிருக்க‌ர‌த‌ வேற காப்ப‌த்த‌னுமோ?

 15. புனைவு என்ற லேபிளைக்காணோம்!

 16. இது புனைவுதானே… உள்குத்து ஒன்றும் இல்லையே…:-)

 17. முரளிகுமார் பத்மநாபன் said:

  சிற்றூர் குழுமத்தலைவரே! என்ன காரியம் செய்தீர்….. ஓலையனுப்பும் போதெல்லாம் தளபதி, தளபதி என்று சொல்லிவிட்டு, இந்த தளபதியின் பாதுகாப்பின்றி எப்படி நகருக்குள் வலம் சென்று வந்தீர்? ஐயகோ… முதன்மை மந்திரிகள் பேரரசனும், கடலையூராரும் நகர் வலம் சென்று திரும்பி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவலுக்குப் பின்னரே உமது பயண ஏற்பாடுகளிருக்க, தாங்கள் எப்படி இப்படி செய்யலாம்?

  என் பாதுகாப்பில் என்ன குறை கண்டீர் தலைவரே!

  • ஓலையனுப்பும் போது தளபதியை வேறு எவ்வாறு அழைப்பது?
   மன்னனுக்குத் தானய்யா தளபதி பாதுகாப்பு வேண்டும். சிற்றூர்க் குடிமகனுக்கெதற்கு? 🙂

 18. குசும்பன் said:

  பாஸ் வேவு பார்க்க வந்த ஒற்றன் நீங்கள் தானா? போலீஸ் உங்களை தேடிக்கிட்டு இருக்கான்.

 19. உடல் மண்னுக்கு உயிர் தமிழுக்கு என்ற தலைவரையா இழிவுபடுத்திறீர்

  சொல் ஒன்றும் செயல் ஒன்றுமா என் தலைவர்

  ஏன் எதற்க்கு எப்படி

  ஹாஹாஹா

 20. நல்ல பதிவு

  அப்படியே விவசாயக் குடிமக்களுக்கும் , திருப்பூர் பின்னலாடைக்கூலிகளுக்கும் சேலை ஒண்ணைக் கொடுத்து , காலங்காத்தாலேயே மகிழ்வூர்தி ஒண்ணை அனுப்பி ஊட்டுக்கு ஒருத்தரக் கூட்டிட்டு போயி கோயமுத்தூர்ல கொண்டுபோயி எறக்கி உட்டுட்டு சோறு கூடப் போடாம , குழாய்த்தண்ணியை குடிச்சுட்டு வந்த கதையை எழுதியிருந்தீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும்.

  • குழாய்களில் குடிக்குமளவு இலவசமாய் தண்ணீர் வருவதே ஒரு சாதனையல்லவா குமார்!

   இன்றும் ஆங்காங்கே அரசுப் பேருந்துகள் ஆட்திரட்டிக் கொண்டிருக்கிறது.

 21. \\தமிழினத்தைத் தழைக்கவைத்தால் தமிழ் தன்னால் வளரும்\\ அருமையான பதிவுங்க

 22. கார்த்திக் said:

  சரி சரி உங்களுக்கு ஒரு விழா எடுத்துரவேண்டியதுதான்

 23. ஏய் அப்பு, என்ன ஓவரா பேசுர? மன்னாரு 40-45 வருஷ ஆட்சியில எத்தன பழங்கள தின்னு கொட்டய போட்டவரு தெரியுமா? எத்தா மொக்க ஆளு அவருக்கு தெரியாது தமிழ வளக்க, ஊர பிரிக்க… (தன் பொன் குஞ்சுகளுக்கு). போனோமா… வந்து படுத்தோமான்னு பேசாமருக்கனும். வெயிலா…ன்னு பேர வச்சிகிட்டு வெய்யில கொர சொல்ற நீ…

 24. திருப்பூர் – கோவை பயணம் இனிதே நிறைவேறியது அறிந்து மிகவும் மகிழ்ச்சி வெயிலான்.

 25. arumaiyana solladal……

  kalki / sandilyan kathai padithathu pol irunthadu….

  im mathriyana katudari vara karanama iruntharku mannarai
  paradunum allava….!!!!

  vazhthukal…..

  nandri..

 26. அண்ணே, பிறந்தநாள் வாழ்த்துகள்…

 27. வெயிலாரே வணக்கம். வெயிலூர் மாவட்டத்தில் உள்ள நாய்களுக்கு பிரசித்தி பெற்ற நகரத்தை சேர்ந்தவன் நான். தங்களின் பதிவுகளை சுமார் ஒன்றரை வருடமாக பின் தொடர்கிறேன். ஆனால் இதுவே என் முதல் பின்னூட்டம்.

  உங்க அளவுக்கு எனக்கு எழுத தெரியாது. ஆனால் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் கருத்துக்களை படித்துவிட்டு என் நண்பர்களிடம் அவற்றை நான் சொல்வது போல் சொல்லி பலமுறை பாராட்டை பெற்று இருக்கிறேன்.

  இனி தொடர்ந்து பின்னூட்டங்களை அனுப்புவேன்.
  நன்றி வெயிலாரே !!

 28. விழாவிற்கு முன்பே இதைப் படித்திருந்தால் உம்மிடம் எதிர் வாதம் புரிந்திருக்கலாம். இது மன்னவனுக்காக நடத்தப்படும் விழாவன்று! தமிழ் அன்னைக்காக நடத்தப்படும் விழா என்று…

  ஆனால் வாலி, மேத்தா, பழநிபாரதி, விஜய் என அனைத்து அரசவைக் கவிஞர்களும் மன்னன் புகழ் மட்டுமே பாடியதைப் பார்த்து தமிழன்னையோடு சேர்த்து நானும் கண்ணீர் வடிக்கிறேன்.

 29. ஆதிமூலகிருஷ்ணன் said:

  நல்லாருக்குதேன்னு பாராட்டலாம்னு வந்தால் கிளைமாக்ஸில் என்ன நக்கலா? போய்யா.. யோவ்.!

 30. கிளைமாக்சில என்னாது அது?

 31. உங்கள் மன்னரும் அப்படியா செய்தார் ..?
  என்னே கொடுமை .. எம்மன்னரும் அதையே செய்தார் …!!!

 32. நல்ல்ல்…….ல மன்னர்,நல்ல மக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: