தந்தி மரம்

தெருவின் பெரும்பான்மை முஸ்லீம்கள் தான் குடியிருந்தார்கள். தெருவுக்குள் நுழையும் போதே புலால், பிரியாணி மசாலா, தீப்பெட்டி பசை, வாசனைத் திரவியம் இவைகளெல்லாம் கலந்ததொரு வினோத வாடை வரும்.

நுழைந்து வலதுபுறம் திரும்பியதும், இடது முனையில் பெரிய திண்ணைகளுடன் ஒரு வீடு இருக்கும்.   ஒரு காலத்தில் வீடாக இருந்திருக்கலாம்.  இப்போதும் இருக்கலாம்.  ஆனால், அப்போது அது தான் தந்தியாபீசு.  அதன் எதிரில் ஒரு பள்ளி வாசல் இருக்கும்.  தந்தியாபீசு திண்ணையில் ஏறி பள்ளிவாசலுக்குள் பார்க்கலாம்.  மந்திரம் ஓதுவதற்காக, குழந்தைகளுடன் பள்ளி வாசலில் காத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்தத் தெரு அழகான சிமிட்டி சாலைகளுடன், இரண்டு பேருந்துகளும் ஒன்று சேர்ந்தாற் போல் செல்லக்கூடிய அளவுக்கு அகலமானது.  ஆனால், நீளம் குறைந்த சிறிய தெரு. தந்தி அலுவலகம் இருந்ததால், தெருவின் பெயர் தந்திமரத் தெரு.  உண்மையான பெயரும் அது தான்.  மின் கம்பங்களுக்கு, கம்பம் என்று பெயர் இருக்கும் போது, தந்திக் கம்பி வடங்களைத் தாங்கிச் செல்பவைகளுக்கு மட்டும், மரம் என்று பெயர் எப்படி வந்தது எனத் தெரியவில்லை.

தந்தி அலுவலத்தை கடந்து செல்லும் போது, யாராவது நாலைந்து பேர் கவலை தோய்ந்த முகங்களுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.  நடுநிசியில் கூட சிலநேரம்.  நானும் ஒன்றிரெண்டு தடவை, இரவு முழுவதும் அந்தத் திண்ணையிலேயே கழித்திருக்கிறேன்.  கட்டிடத்தைச் சுற்றி மேற்கூரையுடன் கூடிய உயரமான திண்ணைகள் இருக்கும். வாசலின் இருபுறமும் கூட திண்ணை தான்.  சாய்மானத்திற்கு தகுந்த இடைவெளிகளுடன் மரத்தூண்களும் இருக்கும்.  அழுக்கும், எண்ணைய் பிசுக்கும், கவலையும் தோய்ந்த திண்ணைகளவை.

உறவினர்கள் இறந்த போது,  அனுப்ப வேண்டிய முகவரிகளுடன் தந்தி அலுவலகம் வந்த பின் தான், என்ன அனுப்ப வேண்டுமென்ற தகவலைக் கேட்காமல் வந்து விட்டது நினைவிற்கு வரும்.  மெதுவாக, தயங்கியபடி அரைத் தூக்கத்தில் இருக்கும் அலுவலரிடம் கேட்டால், எரிச்சல் படுவார்.  இல்லையெனில் இறந்தவர் பெயரைச் சொன்னால், தகவலை அவரே தயாரித்துக் கொள்வார்.  முகவரிகளை மட்டும் தனித்தனி படிவத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும்.

நாம் அனுப்ப வேண்டிய வார்த்தைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி கட்டணம்.  ஒரு தந்திக்கு மொத்தமாக எத்தனை வார்த்தைகள் என கூட்டி (முகவரியும் சேர்த்து) எவ்வளவு பணம் எனக்கூறுவார்.  கொடுக்கும் முகவரியையும் சில சமயம் சுருக்கிக் கொள்வார்.  உதாரணத்திற்கு 18, கந்தபுரம் தெரு என இருந்தால் 18, என்பது முதல் வார்த்தை 1 இரண்டாவது 8 மூன்றாவது , (காற்புள்ளி) மூன்று வார்த்தையாக கணக்கில் கொள்ளப்படும்.  இதை Eighteen என சுருக்கினால் ஒரு வார்த்தைக்கு மட்டுமே கட்டணம்.  இரவிலிருந்து, அதிகாலை வரை தந்தி அனுப்ப இரு மடங்கு கட்டணம்.  பெரும்பாலும், இப்படியான நேரங்களில் தான் மரணத் தகவல்கள் அனுப்ப நேரிடும்.

படிவம் பூர்த்தி செய்ய தெரியுமென்பதால், உறவினர்கள், தெருவிலிருப்பவர்கள் யாராவது இறந்து விட்டால் எனக்கு தந்தி அனுப்பும் வேலை தான்.  பல நாட்கள் திண்ணையிலேயே காத்துக் கிடந்திருக்கிறேன்.  தொலைதூர ஊர்களுக்கும், உள்ளடங்கிய கிராமங்களுக்கும் தந்தி அனுப்பினால், நெடு நேரம் ஆகும்.  நாம் அனுப்பும் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் தந்தி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தவுடன், தந்தி போயிடுச்சு என்று உறுதி செய்வுடன் தான் கிளம்ப முடியும்.  அவர்கள், எப்போது தந்தியை சென்று உரிய முகவரிக்கு சேர்ப்பார்களோ தெரியாது.

அப்புறம், தகவல் தெரிந்து சில நாட்கள் கழித்து வரும் சிலர் எனக்கு தந்தி அனுப்பல/வரல….னு சொல்லி சண்டைக்கு வருவார்கள்.  அவர்களை தந்தி அனுப்பிய என்னையும், ரசீதையும் சாட்சியாக காண்பித்து சமாதானப்படுத்துவது ஒரு தனிக்கதை.

அதன்பின் வந்த, தொலை அச்சு இயந்திரம் (TELEX) தந்தி அனுப்புவதை கொஞ்சம் இலகுவாக்கியது.  இவ்வியந்திரத்தை ஒரு அபூர்வ காட்சிப்பொருள் போல தபால் தந்தி அலுவலகத்தில் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.  ஒரு நாள் பக்கத்தில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

தட்டச்சு இயந்திரத்தை விட, கொஞ்சம் பெரிய உருவில் இருக்கும்.

இயங்கும் போது மட்டும், திடுக்கிடும் சத்தமெழுப்பும், இடையிடையே ’கிணிங்’ மணிச்சத்தமும் கேட்கும்.   தட்டச்சும் போது, சிறிய நாடா அளவிலான தாளில் சிறு, சிறு துளையிடப்பட்டு மறுபக்கம் வெளியே வரும்.

தட்டச்சிய விசயங்கள் மிகவும் அதிகமாயிருந்தால்,  இந்த நாடாத்தாள் அனுமார் வால் போல நீளமாகிக் கொண்டேயிருக்கும்.  துளையிடப்பட்ட தாட்சுருளின் ஒரு முனையை இயந்திரத்தின் பக்கவாட்டில் நுழைக்க வேண்டும்.  அதற்கு முன் அனுப்ப வேண்டிய எதிர் முனை இணைப்பும் கிடைத்திருக்க வேண்டும்.  நாடாத்தாள் சுருள் முழுவதும் உள்ளே சென்று முடிந்த பின் செய்தி அங்கு சேர்ந்திருக்கும்.

இவ்வியந்திரத்தின் மேலிருந்த ஈர்ப்பால், பின்னாளில், துணி ஏற்றுமதியகமொன்றிலும், நூற்பாலையிலும் சில மாதங்கள் டெலக்ஸ் ஆபரேட்டராக பணிபுரிந்ததுமுண்டு.

சில தகவல்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் மோர்ஸ் என்பவரால் 1837ம் ஆண்டு தந்தி அனுப்பும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.  1838ம் ஆண்டு இரண்டு மைல் தொலைவிலிருக்கும் இடத்திற்கு முதல் தந்தி அனுப்பப்பட்டது.

அதன்பின், மோர்ஸும், அவரின் உதவியாளர் ஆல்ஃபிரட் வெய்ல் இருவரும் சேர்ந்து மேம்படுத்தப்பட்ட, தந்திக் கருவியை உருவாக்கினர்.  இதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது.  இந்தக் கருவி மூலம் எழுப்பப்படும் சமிக்ஞைகளின் உதவியால் தகவல் அனுப்பப்பட்டது.

மோர்ஸ் தந்திக் குறிப்பு என்ற பெயரில் குறியீடுகள் மூலம் தகவல் அனுப்பும் முறையே காலங்காலமாய் பயன்படுத்தப்பட்டு வந்தது.  முக்கியமாக, வான் போக்குவரத்து தகவல் பரிமாற்றங்களில் உபயோகப்படுத்தப்பட்டது.

மோர்ஸ் தந்திக் குறிப்பு

உதாரணத்திற்கு – Electrical

அதன் பின்னர், ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சினால், நாடாத் தாளில் புள்ளிகள் போன்ற குறியீடுகள் துளையிடப்பட்டு தகவல் என்னவென்று கண்டறியப்பட்டது.

பின், தகவல் பரிமாற்றத்திற்கு தொலைபேசி, தொலை அச்சு, தொலை நகலி, மின்னஞ்சல் ஆகியவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

என் நினைவில் இருந்ததை வைத்தும், இணையத் தகவலுதவியுடனும் எழுதியிருக்கிறேன்.  ஏதேனும் தகவற் பிழை இருந்தால், சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

தாமஸ் ஆல்வா எடிசன் கூட சிறிது நாட்கள் தந்திக் கருவி இயக்குபவராக பணியாற்றியிருந்திருக்கிறார்.

Advertisements

Comments on: "தந்தி மரம்" (20)

 1. ஆரூரன் விசுவநாதன் said:

  வணக்கங்க வெயிலான்…மற(றை)ந்து போன வற்றை மீண்டும் நினைவுபடுத்திவிட்டீர்கள். ஒருகாலத்தில் தந்தி வந்தால் எவன் செத்தானோ என்ற கவலையோடு தந்தியைப் பிரித்துப் பார்ப்பார்கள். சென்ற நூற்றாண்டின் தொழில் நுட்ப வளர்ச்சியின் எச்சமாக மட்டுமே இன்று இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

  நல்ல பகிர்வு..

  வாழ்த்துக்கள்

 2. மரக்கம்புகளை உபயோகித்ததால் ‘கரண்ட் கம்பம்’ ‘தந்தி மரம்’ போன்ற பெயர்கள் வந்திருக்கலாம்.

  தொலைபேசிக்கும் தொலைநகலிக்கும் இடையில் “டெலக்ஸ்” (தொலைஅச்சு??) முறையும் இருந்தது.

 3. கரண்டு கம்பம் என்று கூட ஊரில் சொல்லமாட்டார்கள். கரண்டு கம்பி பக்கத்தில்நிற்காதே என்று தான் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் தெளிவாக போஸ்டு கம்பம் என்று கூட கிராமத்து சொல்ல நான் கேள்வி பட்டுருக்கின்றேன்.

  நீங்கள் சொல்ல வந்த இரண்டு விசயங்கள் வெவ்வேறு தளம். ரெமிங்டனில் அடிக்க உட்காரும் போதே அலறுவார்கள். மெதுவா பார்த்து பார்த்து என்பார்கள். ஆனால் குழந்கைள் இன்று மடிக்கணினியில் நாம் எதையுமே சொல்லிக் கொடுக்காமல் புகுந்து விளையாடுகிறார்கள்.

  அண்ணன் சொன்னது போல தந்தி என்றாலே தடுமாறிப்போனவர்கள் தான் அதிகம்.

  அழகோவியத்தின் அழகு முழுமையாய் விரைவில் வேறொரு பதிவில் வேண்டும். அவசரம் இல்லாத நேரத்தில் வந்தால் இன்னமும் சிறப்பு.

 4. மின் கம்பங்களுக்கு, கம்பம் என்று பெயர் இருக்கும் போது, தந்திக் கம்பி வடங்களைத் தாங்கிச் செல்பவைகளுக்கு மட்டும், மரம் என்று பெயர் எப்படி வந்தது எனத் தெரியவில்லை

  மின்கம்பங்களும் சரி, தந்திமரம் சரி, பொருள் பரிமாற்றத்திற்காகத்தான் உபயோகத்தில் இருந்தன…. ஆனால் மின்கம்பங்கள் எதையும் சொல்லுவதில்லை, தந்திமரங்கள் மரங்களைப் போல செய்திகளைக் கடத்துகின்றன. அதற்காகக் கூட தந்திமரம் என்ற பெயர் வந்திருக்கலாம் (இப்படியல்லாம் யோசிப்போம்ல…)

  இதுவரை நான் தந்தியைப் பார்த்ததேயில்லை. எனில், ஒருவருக்கும் அனுப்பியதேயில்லை.. படிக்கும் காலத்தில் தந்தி செய்தியை சுருக்குவதற்கு பாடம் இருந்தது மட்டும்தான்… இன்று கடிதங்கள் அனுப்புவதே வெகுவாகக் குறைந்துவிட்டதல்லவா? நான் சிறுவயதில் அதிகம் கடிதம் எழுதியிருக்கிறேன் அவ்வளவே!

  புகைப்படங்களுக்கும் கட்டுரைக்கும் நன்றி!!

  • தந்தியைப் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று தான் தந்திச் செய்தியின் பிரதியையும் இணைத்துள்ளேன்.

   இன்னும் நாலைந்து வருடங்கள் கழித்து இது போல், நீங்கள் கடிதம் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டி வரும் ஆதவா!

 5. ஈரோடு கதிர் said:

  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா… சாரி ஓல்டஸ்டான நினைவுகளோடு…

  தந்திக்கம்பத்தில் காது வைத்து ஒட்டுக்கேட்தாகச் சொல்லி, அப்படியே செய்து அதில் ஊறும் எறும்புகளிடம் கடி வாங்கியது உட்பட பல நினைவுகள்

  அது செரி… படத்துல இருக்கிற தந்தி மேட்டர் நம்மூரு சேதி அல்ல போல!

  ஆனா… ஒன்னுங்க
  தகவல் தொழில் நுட்பத்தோட வளர்ச்சி அபரிதம்
  பேஜர் யூஸ் பண்ணிவங்க எழுதினாலும் கூட இப்போது சுவாரசியம்தான்

 6. தந்தியை அனுப்புவ‌து ம‌ட்டும‌ல்ல‌ அதை ப‌டித்து புரிந்து கொள்வ‌தும் கூட‌ ஒரு க‌லை தான்.

  • Ganapathi Expired என்று ஒரு தந்தி வந்து, இவர்கள் அழுது கொண்டே, அங்கு போனால், இவர்கள் நினைத்த கணபதியே இவர்கள் முன்னால் நிற்கிறார். இறந்தது வேறு கணபதி. இப்படியெல்லாம் குழப்பம் நடந்திருக்கிறது.

   நன்றி வாசன்!

 7. கார்த்திக் said:

  தல அப்படியே கொசுவத்தி சுத்துதுங்க :-))

  நானும் சில தட த்ந்தி குடுத்திருக்கேன்

  கால மாற்றத்துல டெலக்ஸ் பேக்ஸ் ஈமெய்ல்னு வந்து நிக்குது
  இன்னும் என்னென்ன வருமோ :-))

  தந்திக்கம்பம் நானும் யோசிச்சிருக்கேன்
  பழைய டீவி சீரியலில் பாத்த நியாபகம்
  முன்னெல்லாம் கம்பத்து மேல நின்னு தட்டி தட்டி தந்தி அனுப்புறமாதிரி பாத்த நியாபகம்
  ஒருவேல அதனலா அந்தப்பேர் வந்திருக்குமோ :-))

 8. அண்ணே குல்பர்கா காரங்க வீட்ட விட்டுடீங்களே 🙂

 9. தமிழ் மணம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்…

 10. ஓல்டாகி போனதை கோல்டாக்கி விட்டீர்கள் நானோ லேட்டாக (தந்தியை போல்) படித்துள்ளேன்

 11. நல்ல பதிவு.
  தந்தியைப் பற்றி இப்போது உள்ள பிள்ளைகளுக்கு தெரியாது. செல் போன் வந்தவுடன் தந்தி ஆபீஸ் எல்லாம் வேறு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: