உள்ளங்கையளவு உலகு

நண்பர்கள் இருவர் சென்ற விடுமுறையில் ஏதாவது பயணத்தை திட்டமிடச் சொல்லியிருந்தனர். கடைசி நேர சூழ்நிலை மாற்றத்தால் திட்டமிட்ட இடத்துக்கு செல்ல முடியவில்லை. மூவரும் எங்காவது ஓரிடத்தில் சந்திக்கலாம் என முடிவு செய்து சென்னையில் கூடினோம். ஒரே ஒரு நாள் மட்டும் ஏதோவொரு விடுதியில் தங்கலாம் என முடிவு செய்து, புறநகரில் இருந்த அதி நவீன வசதிகள் நிறைந்த ஒரு ஆடம்பர விடுதிக்கு கிளம்பினோம்.

ஒரு நண்பர் சுந்தரம் – தனியார் நிறுவன மேலாளர். இன்னொருவர் முத்து – நிதி நிறுவன முகவர். விடுதிக்கு செல்லுமுன்னும், வழி நெடுகிலும் முத்து தான் புதியதாய் வாங்கிய அலைபேசியின் அருமை, பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். தொடுதிரையுடன் கூடிய அலைபேசி. ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்துடன் கூடியது. தேவையான மென் பொருள்களை ஏற்றிக் கொள்ளலாம். பியானோ இசைக்கலாம், மின்னஞ்சல்கள், இணையம் இயக்கலாம், ஒரு தடவலில் படங்களை மாற்றலாம். எந்த திசையில் அலைபேசியைத் திருப்பினாலும் படங்கள் மாறும், வரைபடம் மூலம் வழியைத் தெரிந்து கொள்ளலாம் என பெருமையடித்துக் கொண்டிருந்தார். இது போன்ற அலைபேசிகள் தான் இனி உலகையே ஆட்டிப் படைக்கப் போகிறது. மனிதர்களே இதுவன்றி இயங்க முடியாது என்ற அளவில் இருந்தது அவரது அலைபேசி புராணம்.

நண்பகலில் விடுதியை வந்தடைந்தோம். சப்பானிய கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டிருந்த முகப்பு. வரவேற்பறைப் பணியாளர்கள் முதல் இதர பணியாளர்கள் வரை அனைவரும் சப்பானியர்களின் உடை போன்று அணிந்திருந்தனர். ‘’ வடிவில் மொத்த கட்டிடமும் கட்டப்பட்டு நடுவில் நீச்சல் குளம், பக்கவாட்டில் உள் மற்றும் வெளி உணவு விடுதி இருந்தது. பெரும்பாலும் இரண்டடுக்கு கொண்ட தனித்தனி அறைகள்.

ஒவ்வொன்றிற்கும் நவரத்தினக் கற்களின் பெயர்கள் சூட்டியிருந்தார்கள். எங்களுக்கு ‘நீல மணிக்கல்’ என்ற பெயருடைய அறையை ஒதுக்கியிருந்தார்கள். நண்பர் சுந்தரத்திற்கு விடுதியின் உரிமையாளர் தொழில் முறை நண்பர் என்பதால், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

அறை முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது. நுழைந்ததும் உணவுண்ண அமரும் மேசை, நாற்காலிகளுடன் கூடிய ஒரு அறை, அதிலேயே அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப ஒரு சிறு அமைப்பு. அதிலிருந்து, கொஞ்சம் உயரமாய் இன்னொரு அறை. சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் தட்டைத் தொலைக்காட்சி, அதைப் பார்க்க வசதியாக மெத்தைகளுடன் கூடிய மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை. அந்த அறையிலிருந்து மேலே செல்ல படிக்கட்டுகள். மேல் தளத்தில் படுக்கை அறை.

அங்கும் ஒரு தொங்கு தொலைக்காட்சி. பின் ஒப்பனைக்காகவும், ஆடைகளுக்காகவும் எதிரும் புதிருமாக கண்ணாடியும், அலமாரியும், அதையும் கடந்து சென்றால் கழிப்பறையுடன் கூடிய குளியலறை. குளிக்குமிடம் கண்ணாடிச் சுவர்களால் தடுக்கப்பட்டிருந்தது.

மலேசியாவில் இது போன்ற வடிவமைப்புல கட்டப்பட்டிருந்ததைப் பார்த்த விடுதி உரிமையாளர் அதே வடிவமைப்பில் இங்கும் கட்டியிருந்தார். பெரும்பாலும், சப்பானியர்களே தங்கியிருக்கின்றனர். மிகக் குறைந்த சதவீதத்தில் இதர விருந்தினர்கள் தங்கியிருக்கிறார்கள். விடுதியின் பின்புறத்தில் மிகப்பெரிய புல்தரை மைதானம், சிறு விழாக்கள் நடத்த ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது. உடற்பயிற்சி சாதனங்களை உபயோகிப்பதற்கும், நீச்சல் குளத்திற்கும் கட்டணம் ஏதுமில்லை.

இதையெல்லாம் இவ்வளவு விளக்கமாகச் சொல்ல ஒரு காரணமிருக்கிறது. அறைக்கே வரவழைத்த இரவுணவு முடித்து பயணக்களைப்பில் மேல்தள அறைக்கு சென்று சீக்கிரமாகவே தூங்கி விட்டேன்.

காலையில், நண்பர் முத்து குட்டி போட்ட பூனை மாதிரி கீழ்தளத்தையே சுற்றிக் கொண்டிருந்தார். விபரம் கேட்டதும் என் மொபைலை பார்த்தியா? என்ற கேள்வியுடன் ஏறிட்டார். நான் படுக்கப் போகுமுன், கீழ்தளத்தில் தான் இருந்தது. சொன்னேன். கீழ்தளத்தையே தலைகீழாய் புரட்டிப் போட்டு விட்டார். மேசை, மெத்தை, தலையணை, நீச்சல் குளத்தடியில் என இண்டு இடுக்கெல்லாம் தேடி விட்டார். உள்ளங்கையளவு உலகத்தைக் காணவில்லை.

1800 தொடர்பெண்கள், படங்கள், அசைபடங்கள், பிரத்தியேகமான மென்பொருள்கள் அனைத்தும் போயே போய் விட்டது. அவர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், மணிச்சத்தம் கேட்கிறது. எவரும் அழைப்பை எடுக்கவில்லை. வருத்தத்தின் எல்லையில் இருந்தார். வேறு ஏதேனும் கேட்டால் அழுது விடுவார் போல முகத்தோற்றம். இவரால் சாதாரணமாக இயங்கக் கூட முடியவில்லை. எப்போதும் இது போன்ற சூழ்நிலையில் என்னிலிருந்து எந்த எதிர்வினையும் இருக்காது. ரொம்பவுமே அமைதியாகி விடுவேன். விசயத்தை மட்டும் கேட்டு விட்டு திரும்பவும் தூங்கி விட்டேன்.

ஒரு கட்டத்தில் மிகவும் கோபமாகி, உணவு கொண்டு வந்த நபர்கள் தான் எடுத்திருப்பார்கள் என முடிவு செய்து விடுதி மேலாளரிடம் புகாரளித்தார். அவரும் இரு ஆட்களைக் கூட்டி வந்து திரும்பவும் அறையை அலசி ஆராய்ந்தார். பலனில்லை. நேற்றிரவு பணியாற்றியவர்கள் பணி முடிந்து அதிகாலையில் சென்று விட்டார்கள். செல்லும் போது முழுக்க சோதித்து அனுப்புவது தான் எங்கள் வழக்கம் இருப்பினும் இப்போது செல்லும் பணியாளர்களைக் கூட முழுமையாக சோதித்து அனுப்புமாறு வாயில் பாதுகாவலர்களுக்கு மேலாளர் உத்தரவிட்டார். நேற்றிரவு பணியாளர்களுக்கும் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் எடுக்கவில்லை என்று சொன்னார்கள். ஒரே ஒருவரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அறையில் இருந்த மூவருக்கும் பணியாளர்கள் மேல் மறுக்க முடியாத சந்தேகம் இருந்தது. மணியடிப்பதால் இப்போது எங்காவது ஒளித்து வைத்து விட்டு, ஓரிரு நாட்கள் கழித்து இங்கிருந்து வெளியே எடுத்து செல்லலாமென நினைத்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, அறையைச் சுற்றியுள்ள செடிகள், புல்தரை அனைத்திலும் ஒரு முறை தேடி விட்டு, கிடைத்தால் தகவல் தரச்சொல்லி விட்டு அறையைக் காலி செய்தோம்.

பின் அவரவர் ஊருக்கு கிளம்பினோம். நண்பர் முத்து அவர் அவராகவே இல்லை. இயல்பு மீறிய புது மனிதராக இருந்தார். தன் மகிழுந்தில் உலகம் தொலைத்த வருத்தத்துடன் அவரே ஓட்டியபடி மதுரை நோக்கிப் பயணமானார். நான் புகைவண்டியில் ஊருக்கு வந்து கொண்டிருக்கும் போது, முத்து எண்ணிலிருந்து ஒரு அழைப்பு. தாங்க முடியாத ஆச்சரியத்தில் எடுத்தால், மறுமுனையில் முத்துவே. கூமுட்ட…. கூமுட்ட…. என் பைக்குள்ள தாண்டா மொபைல் இருக்குது! பையில் யாராவது தேடிப்பாத்தமா? என திட்டினார். மனதுக்குள் யார் கூமுட்டை? என நினைத்துக் கொண்டேன். மதுரை செல்லும் வழியில் திருச்சியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கிச் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார். அங்கே, பையின் பக்கவாட்டில் ஏதோ எடுக்க விழையும் போது அலைபேசி கையில் தட்டுப்பட்டு எடுத்திருக்கிறார்.

முதலில், விடுதிக்கு அழைத்து விசயத்தை சொல்லச் சொன்னேன். இதில் விடுதிப் பணியாளர் மீது சந்தேகப்பட்டது மிகப்பெரிய தப்பு என உறைத்தது. முன் பின் தெரியாதவரை சந்தேகப்பட நமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஏன்? எப்படி? தவறு செய்யாத அந்த பணியாளரின் மனம், சந்தேகத்தோடு விசாரிக்கும் போது என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு மனவருத்தம்? மன உளைச்சல்? கேள்விகள் நீண்டு கொண்டேயிருந்தது. விடுதிக்கு அழைத்து, மன்னிப்பு கேட்டு பணியாளரிடமும் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்கச் சொன்னேன்.

அமைதியான சூழ்நிலையில், அற்புதமாய் கழிந்திருக்க வேண்டிய ஒரு நாளை, சிறு நினைவுக் குறைவால் தானும் நிம்மதியிழந்து, மற்றவர்களையும் இழக்க வைத்து வீணாக்கி விட்டார்.

இவ்வளவு களேபரம் நடந்துட்டிருக்கு.  கொஞ்சங்கூட கவலைப்படாம, கண்டுக்காம, தூங்கிட்டிருந்தியேடா?னு எனக்கு கொடுமானம் கிடைச்சது தனிக்கதை.

31 thoughts on “உள்ளங்கையளவு உலகு

  1. எனக்கு mob phone பார்த்தாலே ஒரே எரிச்சல் தான். ஒரு சிலர் அதைக் கட்டி அழும்போது கடுப்பா இருக்கும். சமயத்தில் தல சுத்தி வீசிடணும்னு தோணும். நான் இரவு mobile swithch off செய்வதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறேன். அப்புறம் costly mob வாங்குவதேயில்லை. இவருடைய சூழ்நிலையில் சந்தேகப்படத்தான் தோன்றும். ஆனாலும் தப்பு, நன்றாய் தேடிப்பார்த்திருக்கலாம்.. எது எப்படியோ நீங்க நல்லா தூங்கியிருக்கீங்க. very good..

    1. கொடுத்து வச்சவங்க நீங்க! என்னோட தொழிலுக்கு அலைபேசியை எப்போதும் இயக்கத்திலேயே வைக்க வேண்டும். அலைபேசி தொலைந்த பதற்றத்தை ஏன் ஏற்றிக் கொள்ள வேண்டுமென நினைத்து தூங்கி விட்டேன். நன்றி ப்ரஜ்னா!

  2. முதலில், விடுதிக்கு அழைத்து விசயத்தை சொல்லச் சொன்னேன். இதில் விடுதிப் பணியாளர் மீது சந்தேகப்பட்டது மிகப்பெரிய தப்பு என உறைத்தது

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

  3. ஜெ.மோவோட நேபாள பயணத்தில் கூட இது மாதிரியான ஒரு நிகழ்வு நடந்து அனாவசியமா அந்த ஒட்டல் உரிமையாளரை சந்தேகப்பட்டிருங்காங்க…உடனே உண்மை தெரிஞ்சவுடனே அவங்களே அந்த ஒட்டலுக்கு கூப்பிட்டு மன்னிப்புக் கேட்டிருக்காங்க..உங்களுக்கும் அதே மாதிரியான ஒரு சம்பவம்..இதுல இருந்து என்ன தெரியுதுனா…….வேண்டாம்பா…நமக்கேன் வம்பு…..

  4. அட விடுங்க தல! அந்தப் பசங்களும், மேலாளரும் இந்த மாதிரி எவ்வளவு பேர்த்த பாத்திருப்பாங்க :-))
    உங்க நணபர் எவ்வளவு விசயம் பண்ணுறார். அந்த மொபைல யார் எடுத்து சிம்கார்டு போட்டாலும் நமக்கு மெசேஜ் வர்ர ஆப்சன் இருக்குல்ல அத எனேபில் பண்ணச்சொல்லுங்க.

  5. அங்கே நீங்க எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பிங்கன்னு என்னால அப்படிய்யே மனசுல ஓட்டிப்பார்க்க முடியுது, தல. 🙂

  6. ‘அத்தனை தூரம் போய்… தூங்கினீர்களா?’ என்று எனக்கும் கேட்கத் தோன்றுகிறது 🙂
    இந்த இடத்தின் பெயரென்ன? எங்கே இருக்கிறது? சப்பானியக் கட்டிடக்கலைக்கு சற்று விஸ்தாரமான அறைகளாகவே தோன்றுகிறது. படங்கள் அருமை.

  7. விலைஉயர்ந்த பொருட்கள் வாங்கும் போது அதை கவனமாக பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு. மேலும், அதை பயணங்களுக்கு எடுத்துச் சென்றால் நேரும் சிக்கல்களை கூறும் நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.

கார்த்திக் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி