கருவாயன்

திண்டுக்கல்லில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளரும் கொல்லப்பட்டார்…………

சீத மகன் கருவாயனா? என்னத்தா சொல்றே?

அவந்தான் மச்சினி! கருவாக் கணேசன்.  கடேசிப் பய.  இப்பந்தான் செயபால் கடைல நின்னுட்டிருந்தப்போ, சண்டியர் கடைல வேல பாக்க பையன் சொல்லீட்ருந்தான்.

கோவக்காரந்தான்.  ஆனா, உசுர எடுக்கத் துணிய மாட்டான்த்தா.  சும்மா மல்லுக்கட்டி ரெண்டு தட்டு தட்டீருப்பான்.

இல்லங்கேன்ல.  நல்லாத் தான் கேட்டுட்டு வந்தேன்.  கொடலு, குந்தாணியெல்லாம் கீழ கெடந்துச்சாம்.  எல்லாத்தயும் அள்ளிப் போட்டுத் தான் காட்டாஸ்பத்திரிக்கு தூக்கீட்டு போனாகளாம்.

அடச்சனியம் புடிச்சவனே! என்னத்துக்குத் தான் இந்தக் காரியம் பண்ணுனானோ?  சீதைக்கு, பெத்த வயிறு பத்தி எரியுமே……

இந்தப் பாட்டுப் பதியுத கட என்னிக்கு தெருவுக்குள்ள நொழைஞ்சதோ, அன்னைலருந்து சனியம் புடிச்சிட்டுது.

பட்டாசலில் படுத்திருந்த எனக்கு அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த குரல், எலத்தூராவோடதுனு கண்டுபிடிக்க முடிஞ்சது.  ரெண்டு பேரும் தெக்கருந்து இங்க வந்து வாக்கப்பட்டதால, பேச்சுல தின்னவேலி வாடையடிக்கும்.

கணேசன் என்ற பெயர் காலப்போக்கில் கருவாயன் என்றே நிலைத்து விட்டது அவனுக்கு.  அதுவே சரியான அடையாளமும் கொடுத்தது.  ஆள் கன்னங்கரேர்னு ஓங்கு தாங்கா இருப்பான்.  சந்துக்குள்ள நடந்து போனா, வீட்டுல தரையில படுத்திருக்கும் நமக்கு, தரையெல்லாம் அதிர்வது தெரியும்.  எப்பவும் உதட்டின் இரு விளிம்பிலும் புண்ணாகி வங்கு பிடிச்சு ப் போயிருக்கும்.  பெரும்பாலும் அழுக்குக் கைலியும், 4 பித்தான்கள் கழட்டி விடப்பட்ட சட்டையோடு தான் அலைவான்.  வேலை…….. புதுப்படம் வந்த ஒரு வாரத்துக்கு அந்த தியேட்டருக்கு வெளியே திருட்டு டிக்கெட் வித்துட்டிருப்பான்.  மத்தபடி எந்த வேளையிலும் வேலைக்கு போனதே கிடையாது.

கேசட் புழக்கத்துக்கு வந்ததும், கேட்ட பாட்டை பதிஞ்சு கொடுக்குற கடைகளும் ஊருக்குள்ள பெருத்துப் போச்சு.  ரெண்டாங்கேட்டுக்கிட்ட இருந்த கேசட் கடை தான் முதல்ல பிரபலமா இருந்துச்சு.  இப்பம் எங்க தெருவுலயும் ஒரு கடை புதுசா வந்திச்சு.  அத முதல் போட்டு ஆரம்பிச்சது நாலு பேர்.  சேது மாமாவும் அதுல ஒரு முதலாளி! பொழுதன்னிக்கும், கட வாசக்கதவுக்குப் பக்கத்துலேயே ஒரு ஸ்டூல் போட்டு ஒக்காந்திருப்பாரு.  அந்தப் பக்கம் போனாலே ஏ மாப்ள எங்கே போற? வாண்ணா கடேல கொஞ்ச நேரம் உக்காந்திரு! கூப்ட்டு உக்கார வச்சிட்டு,  இருக்கவுக எல்லாம் டீ குடிக்கப் போயிருவாக.   பொழுது போகலைன்னா, நானும் அந்த மியூசிக்கல்ஸ்ல தான் உக்காந்திருப்பேன்.  ஜல், ஜல்னு சத்தத்தோட ஸ்டீரியோவுல பாட்டுக் கேக்க முடியும்.  எழவு, எந்தப் பாட்டை அங்கன கேட்டாலும் நல்லா இருந்து தொலையும்.

மியூசிக்கல்ஸ்ல பாட்டு பதியுற வேலை செஞ்சவரோட கையெழுத்து ரொம்ப அழகா இருக்கும்.  நாலைஞ்சு கலர்ல பேனா வச்சிருப்பார்.  படத்து பேருக்கு ஒரு கலர், பாட்டுக்கு ஒரு கலர், பாடுனவங்க பேருக்கு ஒரு கலர்னு கேசட் அட்டைல எழுதுவார். அவரோட மாமா தான் மாரியப்பன்.  எப்பயாச்சும் வந்திட்டிருந்தவன், வர வர தெனைக்கும் வர ஆரம்பிச்சுட்டான்.  அப்பறம் தான் இந்த லெச்சுமிப் புள்ளயக் கூட்டிக்கிட்டு ஊரச் சுத்துறத வாடியான் கேட்டுக்கிட்டப் பாத்தேன், தெப்பத்து எறக்கத்துல பாத்தேன்னு தெருவுக்குள்ள ஒரே பேச்சா இருந்துச்சு.  இப்பத் தான் கொஞ்ச நாளா இங்கிட்டுத் தலயக் காட்டல.

ஏற்கனவே, போன வாரம், எங்க தெருப் புள்ளய, ஏங்கூட்டீட்டு சுத்துறனு கணேசன் பய, மாரியப்பங்கிட்ட சிலுவ இழுத்திருக்கான்.  இன்னைக்கு என்னடானா, மாரியப்பன கணேசன் குத்திட்டான்னு பேச்சு.  கணேசன்ட்ட எப்பமும், ஒரு கத்தி இருக்கும்.  எங்கிட்டயும் ஒரு மட்டம் காமிச்சிருக்கான்.  அத வக்கிறதுக்குண்ணே தோல்ல ஒரு உறை.  உறையோட இடுப்புல சொருகியிருப்பான்.  அந்தக் கத்தி விளிம்புல மொனை கூரா இல்லாம,  லேசா, சுழிச்சமானைக்கு இருக்கும்.  அதுல குத்துனா, உள்ளருக்க கொடல வெளிய இழுத்துட்டு வாறதுக்குத் தான் மொனையை லேசா சுழிச்சு தொரட்டி மாதிரி வேணும்னு சொல்லி செஞ்சிருக்கேன்னு சொன்னான்.

இந்த மாதிரிச் சாமானுகளச் செய்யுறதுக்குண்ணே ஒரு சில ஆளுக இருக்காகனு மணியாசாரி சொல்லீருக்காரு.  அவரும் கொல்லாசாரி தான்.  உளி, கடப்பாரை இதுக்கெல்லாம் கூர் வப்பாரு.  பெரிய வேலைன்னா, மாட்டு வண்டிச் சக்கரத்துக்கு பட்டை மாட்டுறது.  அது கொஞ்சம் நொரண்டு பிடிச்ச வேல.  சக்கரத்தைச் சுத்தி இருக்கிற இரும்புப் பட்டையக் கழட்டி, சக்கரத்து அளவுக்கு கொஞ்சம் கம்மியா, வெட்டி, சேத்து, பட்டை சுத்தளவுக்கு நெருப்பு வச்சு சூடாக்கி, சக்கரத்துல மாட்டணும்.  பட்டை போய் சக்கரத்துல இறுக்கமா உக்காரணும்.  இந்த வேல தெரிஞ்ச ஒரு சிலவங்கள்ல மணியாசாரியும் ஒருத்தர்.

ஒரு நா ராத்திரி அவரோட ஒக்காந்து பேசீட்டிருக்கப்ப, நைசா ஒரு விசயம் சொன்னாரு.  எனக்கும் அந்த மாதிரிச் சாமானெல்லாம் செய்யத் தெரியும்டா.  ஆனா, அந்தச் சோலியப் பாத்து வாற காசு நம்மட்ட நிக்காது.  சீக்கு, சிடுங்கல்னு புடுங்கீட்டுத் தான் போவும்.  ஆனா, ஒரு பயலுக்கு மட்டும் மின்னால அருவா மட்டும் செஞ்சு கொடுத்திட்டிருந்தேன்.  பட்டை மட்டும் அவனே கொணாருவான்.  ராத்திரியோட ராத்திரியா ஒக்காந்து அடிச்சு மட்டும் கொடுப்பேன்.

யாருண்ணே அது?

வெளிய யார்ட்டயும் சொல்லிராத, இப்ப வெயிலு முத்துவப் போட்டுட்டு உள்ள போய்ட்டு வந்திருக்குல்ல காளியப்பன்.  அதுக்கு மட்டுந்தான் செஞ்சு குடுப்பேன்.  அவன் எஞ்சேக்காலி.  சின்னப்புள்ளைல ஒண்ணு மண்ணாத் திரிஞ்சிருக்கோம்.  ஆனா, காசு வாங்க மாட்டேன்.  எதும் நமக்கு பிரச்சனைன்னா, பஞ்சாயத்துக்கு கூப்டா எடத்துக்கு வரும்.  லாரிக்கு அடியில பட்ட இருக்கும்ல, அதுல செஞ்சாத் தான் நல்லா கெனமா, இருக்கும்.  திருப்பியும் போடலாம்.

திருப்பியா?  புரியலண்ணே.

முன்னாடி மட்டும் வெட்டுவாய்ங்ஙனு நெனைக்காதடா.  அருவாள்ல மொன்னப் பக்கம் இருக்குல்ல.  அதுலயும் போடுவாய்ங்ங.

போட்டா?

உசுரு போகாது.  ஆனா, அருவாவ திருப்பிப் போடும் போது மொக்கையடியா விழும்.  ரத்தம் வராது.  ஆனா, காலு கை சேதாரமாகும்.  இழுத்துக்கும்.  போலீசு கேசு நிக்காது.

காலையில் பட்டறைக்கு போயிருக்கப்போ, மணியாசாரி தான் விசயத்தை முழுசாச் சொன்னாரு.  ஒங்க தெருக்காரன் கணேசன், மாரியப்பனக் குத்துனான்ல! உள்ள புடிச்சு போட்டுட்டாங்கடா.  லெச்சுமிப் புள்ளய ரெண்டாவது ஆட்டத்துக்கு, சைக்கிள்ல வச்சு முத்து டாக்கீஸ்க்கு மாரியப்பன் கூட்டீட்டுப் போயிருக்கான்.  இத கணேசன் பய பாத்துருக்கான். அத மனசுல வச்சுக்கிட்டு ரெண்டு பேரும் கொஞ்ச நாளா, எங்கணக்குள்ள பாத்தாலும், உர்ரு… உர்ருன்னே சுத்திட்டிருந்திருக்கானுக.  அன்னைக்கு ஏதோ பேசப்போயி கடேசில கைகலப்பாகிப் போச்சு.  கணேசன் கத்திய எடுத்துக் குத்திட்டான்.  கொடலு துண்டா வெளிய வந்திருச்சு.  அப்புடியே மாரியப்பன் கை வண்டியில குப்புறக் கவுந்துட்டான்.  அதுக்கப்புறம் கணேசன் பக்கத்துல கெடந்த செங்கக்கட்டிய எடுத்து மாரியப்பன் மேல வரிசைக்கு எறிஞ்சிருக்கான்.  மண்டயில, முதுகுல, குறுக்குல சரியான அடி.

இதுக்கப்புறம், அன்னைக்கு சாய்ந்தரமே கச்சேரில சரணடைஞ்சு உள்ள போன கணேசன் மதுர செயில்ல போட்டுட்டாங்க.  மாரியப்பன் பொழச்சி, லச்சுமியவே கட்டிக்கிட்டான்.  ஆனா, குனிய, நிமிர முடியாம குறுக்கு ஒடிஞ்சத ஒண்ணும் பண்ண முடியல. கழுத்தை இங்கிட்டு அங்கிட்டுத் திருப்ப முடியாது.

கடேசியா, சீசனுக்கு போயிருந்தப்ப அருவிக்கரைல கருவாயனப் பாத்தேன். ஊருக்குள்ள இனி வரமுடியாது மண்டையா!  மாரியப்பனோட தம்பி எப்படா என்னப் போட்டுத் தள்ளுவோம்னு காத்துக் கெடக்கான்.   அதனால, எதுக்கு திரும்ப பிரச்சனைனு, செயில்ல பழக்கமான ஒரு அண்ணாச்சிக்கு கையாளா திண்டுக்கல்லுக்கிட்ட இருக்கேன்.  ஒரு மட்டம் உள்ள போய்ட்டு வந்திட்டா, வாழ்க்கையே அம்புட்டுத் தான்னு சொல்லிட்டு அவன் பார்த்த பார்வையில், இளமையை, வாழ்க்கையைத் தொலைத்த வலி தெரிந்தது.

இரு தினங்களுக்கு முன் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளர் கணேசன் (36) என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை என்றும், இரு தினங்களுக்கு முன் திண்டுக்கல்லில் வெட்டிக் கொல்லப்பட்ட, ரவுடியின் கொலைக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Comments on: "கருவாயன்" (13)

 1. //உசுரு போகாது. ஆனா, அருவாவ திருப்பிப் போடும் போது மொக்கையடியா விழும். ரத்தம் வராது. ஆனா, காலு கை சேதாரமாகும். இழுத்துக்கும். போலீசு கேசு நிக்காது.// ஒரு ரவுடி வாழ்க்கையையே வாழ்ந்திருப்பீங்க போல இருக்கு. நல்லா இருக்கு கதை.

 2. அதென்ன அல்லாருமே கருப்பு கண்ணாடி போட்டு போஸ் கொடுக்குறீயளா? நல்லாயிருக்கு.

 3. ஒரு செய்தியை மையமாகக் கொண்டு அருமையாக கதையை அமைத்து இருக்கிறீர்கள். கத்தியெடுத்தவன் கத்தியால் சாவான் என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. பகிர்விற்கு நன்றி.

 4. அருமையான கதை.
  அருமையான எழுத்து நடை.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மிக்க நன்றி.

 5. வட்டார வழக்கு அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: