மாஞ்சோலை

நெல்லை மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் பசுமையும், குளுமையும் நிறைந்த சுற்றுலா ஸ்தலம் அது. திருப்பூரிலிருக்கும் நண்பர்கள், நீலகிரி தவிர்த்து ஒரு மாறுதலான இடத்துக்குப் போக வேண்டுமென சொன்னபோது மாஞ்சோலையைப் பரிந்துரைத்தேன். உடன் ஒப்புக் கொண்டு உணவு, உறைவிட முன்பதிவு செய்யும் பொறுப்பும் எனக்கே வந்தது.

ஏற்கனவே, தூத்துக்குடியைச் சேர்ந்த நண்பர் ராகவன் அவ்விடத்துக்கு சென்று வந்ததாய் சொன்னது நினைவுக்கு வர, அவரை அழைத்து விசாரித்ததில், மணிமுத்தாறில் இருக்கும் குமார் என்ற நண்பரின் தொடர்பெண்ணைக் கொடுத்தார். குமாரைத் தொடர்பு கொண்டபோது, வரும் விருந்தினர்களுக்கு தேவைப்படும் அறை முன்பதிவு, உணவு போன்றவைகளை மிகச்சிறந்த முறையில் இதுவரை செய்து கொடுத்திருக்கிறேன், உங்களுக்கும் அப்படியே சிறப்பாய் செய்து தருகிறேன் என்று சொல்லி, செலவுகளுக்கு ரூ.4000 அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அவருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் தம் நண்பரின் கணக்கில் கட்டுமாறும் கேட்டுக் கொண்டார். அதன் படியே ரூ.4000 கட்டியாயிற்று.

கிளம்புவதற்கு முதல் நாள் அவரைத் தொடர்பு கொண்டு வருகையைத் தெரிவித்த போது, வருமாறும் ஏற்பாடுகள் அனைத்தும் செய்தாயிற்று என்றும் உறுதியளித்தார். திருப்பூரிலிருந்து இரவு 10 மணியளவில் இன்னோவா வண்டியில் ஐவர் கிளம்பினோம். இடைநிறுத்தி, வாங்கி வந்திருந்த உணவு உண்டு, தொடர் பயணமாய் காலை 7 மணியளவில், கல்லிடைக்குறிச்சி வந்து காலை உணவுகளைக் கட்டிக் கொண்டோம். அடுத்து மணிமுத்தாறு ஆயுதப்படை வளாகம். குமாரைத் தொடர்பு கொண்டு, வந்த தகவல் சொல்லிக் கா…..த்….திருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து வந்த அவர், எங்களை மணிமுத்தாறு அணைக்கட்டின் முகப்பில் இருக்கும் வனச்சோதனைச் சாவடிக்கு அழைத்து வந்து, அருவிக்குச் செல்ல அனுமதி வாங்கிக் கொடுத்தார். அருவியில் ஆனந்தமாய் குளித்து விட்டு காலை உணவை முடித்து திரும்பவும் கீழிறங்கி சோதனைச் சாவடிக்கே வந்து சேர்ந்தோம்.

குமார், முத்து என்ற நபரை தன் உறவினர் என அறிமுகம் செய்து வைத்து, இவர் உங்கள் கூடவே வந்து, தங்கி வேண்டிய உதவிகளை செய்வார் என்றும், தனக்கு வேறு முக்கிய வேலை இருப்பதாகவும், சொல்லிக் கிளம்பி விட்டார். அங்கிருந்து, மாஞ்சோலை சோதனைச் சாவடி கடந்து, கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் தொலைவுள்ள நாலு முக்கு என்ற இடத்தை வந்தடைந்தோம். சாலைகள் ரொம்பவும் பழுதடைந்திருந்ததால் ஊர்ந்து தான் வரமுடிந்தது. நாலுமுக்கில் ராஜ் கடை என்ற ஒரே ஒரு உணவகம் மட்டுமே உண்டு. அங்கு முன் பணம் கொடுத்து உணவு ஏற்பாடு செய்திருப்பதாக குமார் சொல்லியிருந்தார். அதை விட்டால் விரதம் இருக்க வேண்டியது தான்.

நாலுமுக்கு ராஜ் கடை

சரி! ரூமைக் காமிங்க.  தூங்காமல் வண்டில வந்திருக்கோம்.  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிடப் போகலாம்.

என முத்துவிடம் சொன்ன போது,

அந்தப் பெய எங்கே ரூம் போட்டிருக்கான்னு தெரியல. இரிங்க! போனடிச்சு கேக்கலாம்!

என்று சாவகாசமாய்ச் சொன்னார். எந்த அலைபேசியும் உயிரோடு இல்லை. அங்கிருந்த ஒரேயொரு பொதுத் தொலைபேசி மட்டுமே தொடர்புக்கு ஒரே வழி. அதன் மூலம் குமாரைத் தொடர்பு கொண்ட போது,

எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சுண்ணே! நீங்க கவலைப்படாதீங்க! சாப்பாட்டுக்கு ஒரு பயட்ட பணத்தைக் கொடுத்து விட்டேன். அவங்கொடுக்கல போல? நீங்க உங்க கூட வந்தாரே, அந்ந ஆள்ட்ட கொடுங்க!

என்று சொன்னார். அறை பற்றி முத்துவிடம் கேட்ட போது,

இங்கேருந்து இன்னுங்கொஞ்ச தொலவட்டுல குதிரை வெட்டினு ஒரு எடம் இருக்குண்ணே! அங்கன தான் ஒங்களுக்கு ரூம் போட்டிருக்கானாம்!

என்று சொன்னார். உணவுக்கு, முன் பணம் கொடுத்து தயார் செய்து வைக்கச் சொல்லி விட்டு, குதிரை வெட்டிக்கு கிளம்பினோம்.

குதிரைவெட்டி காண்கோபுரம்

வண்டி ஓட்டும் நண்பர், இன்னும் போகணுமா? என்று மிரண்டார். இன்னா, கொஞ்ச தொலவு தான். ஏறுங்க! போலாம் என்று முத்து ஆறுதல் சொன்னார். முன்னிலும் மோசமான சாலைகள். இல்லையில்லை…. சாலைகளே இல்லை. வெறும் பாதைகள் தான். ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் பயணித்து குதிரை வெட்டி வந்தடைந்தோம். அந்த இடத்தில் வனத்துறை விடுதி மட்டுமே இருந்தது. விடுதியின் பணியாளரிடம் விசாரித்ததில் அப்படி முன்பதிவு எதுவும் செய்யப்படவில்லை. அறைகளும் காலி இல்லை என்று சொல்லி விட்டார். சாம, தான முறைகளில் (சாமம்-இன்சொல் கூறல், தானம்-விரும்பிக் கொடுத்தல்) முயற்சித்துப் பார்த்தும் முடியவில்லை. பேத, தண்டத்தை (பேதம்-மிரட்டுதல், தண்டம்-தண்டித்தல்) முயற்சிக்க முடியவில்லை. அங்கிருந்து குமாரைத் தொடர்பு கொண்ட போது, அவருடைய அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

குதிரைவெட்டி காண் கோபுரத்திலிருந்து காணும் காட்சி

கோபத்தோடு கூடிய பசியோடு ராஜ் கடைக்கு திரும்ப வந்து, மதிய உணவை முடித்தோம். எங்களுக்கு வேண்டிய எல்லா?!? உதவிகளையும் செய்வதற்காக எங்களோடு வந்த முத்துவிடம் பேதத்தை பிரயோகித்தோம்.

எனக்கு எதுவும் தெரியாது சார்! (அண்ணன் இப்போ சார்! ஆயிடுச்சு) இவங்களோட போ! சாப்பாடு வாங்கிக் கொடுப்பாங்க. கையில செலவுக்கு காசு கொடுப்பாங்கனு சொல்லி அந்தப் பெய வண்டில ஏத்தி அனுப்பிச்சாம் சார்!

என்று அழாத குறையாய்ச் சொன்னார்.

குதிரைவெட்டி காண் கோபுரத்திலிருந்து தெரியும் மலைத்தொடர்

மணிமுத்தாறு நோக்கி திரும்ப பயணிக்க ஆரம்பித்தோம். நண்பர்கள் கூடவே பயணித்த முத்துவை காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தனர். ஒட்டு மொத்த ஏற்பாடுகளின் காராணகர்த்தாவான எனக்கு கிடைக்க வேண்டியது, முத்துவுக்கு கிடைக்கிறது என எனக்குப் புரிந்தது. மிகவும் தர்மசங்கடமான நிலையில் வண்டியில் அமர்ந்திருந்தேன். யாரோடும் பேசவில்லை. முதல்நாள் இரவு கிளம்பி, மறு நாள் மாலை வரை வண்டியிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்திருக்கிறோம். மனதும், உடலும் மிகவும் பலவீனமாய் இருந்தது. நண்பர்களை கூட்டி வந்து, இப்படி ஆகி விட்டதே என்ற பெரும் மன உளைச்சலிலும், வருத்தத்திலும் இருந்தேன். யாருடனும் பேசவில்லை. என் நிலைமையைப் பார்த்து, நண்பர்கள் எனக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர். திரும்பவும் திருப்பூருக்கே செல்லும் மனநிலையில் அனைவரும் இருந்தனர்.  எனக்குச் சம்மதமில்லை.

மாஞ்சோலை தேயிலைப் பண்ணை

காக்காச்சி என்ற இடத்தை அடைந்ததும் அனைவரும் சமநிலை அடைந்தனர்.  பின் மனம் மாற்றி, ஒரு வழியாய் அவர்களை குற்றாலத்துக்குத் திருப்பினேன். குற்றாலத்தில் இதமான தட்பவெப்ப நிலையும், அருவிகளில் சுமாரான தண்ணீரும் விழுந்து கொண்டிருந்தது மனதுக்கு சிறு ஆறுதலாய் இருந்தது. நண்பர்களை மட்டும், அருவிக்கு சென்று வருமாறு கூறிவிட்டு அறைக்குள்ளேயே இருந்தேன். எத்தனையோ இடங்களுக்கு சென்றிருந்தும், இப்படியொரு மோசமான அனுபவம் நிகழ்ந்ததில்லை. குமாரை அறிமுகம் செய்த தூத்துக்குடி ராகவனை அழைத்து நடந்தவைகளைச் சொன்னேன். அவரும், என் வருத்தத்தைப் பகிரவும், ஆறுதல் சொல்லவும் முடிந்ததே தவிர, வேறொன்றும் செய்ய முடியவில்லை.

காக்காச்சி என்ற இடத்திலிருக்கும் அழகிய புல்வெளி

மறுநாள் மதியம் கிளம்பி திருப்பூர் வந்தடைந்தோம். மிகப்பெரிய மழைக்கான அறிகுறி திருப்பூரின் எல்லைக்குள் நுழையும் போதே தெரிந்தது. நனைந்து கொண்டே அனைவரும் வீடடைந்தோம். நீண்ட வருடங்களுக்குப் பின் திருப்பூர் கண்ட மழை….. பெருமழை…. மிகப்பெரு மழை மனநிலைக்கு உகந்ததாய் இருந்தது.

படங்களுக்கு நன்றி – Mohan Photography, Krishps & Anand Photoworkshop

Comments on: "மாஞ்சோலை" (12)

 1. ஆகா…….. நான் ரொம்ப நாளைக்குப் பிறகு திருப்பூரில் பெய்த மழையில் குழந்தைகளுடன் நனைந்து குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த போது, நீங்க கும்மாளத்துடன் திருப்பூருக்குள் வந்தீகளாக்கும். ம்ம்ம்…..

 2. இனிய அனுபவ பகிர்வுக்கு நன்றி…

 3. உங்க கூடவே வந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது

 4. மீதிக் கதை இடைவேளைக்கு அப்புறமாங்களாங்ணா..?

 5. வெயிலான் அவர்களே! மணிமுத்தாறு அணை கட்டும் போது நான் மாணவன் அணை கட்டிக் கொண்டு இருந்தார்கள். மாஞ்சோலைக்கு ஒரு பஸ் போகும். நீர்ப்பிடிப்பு ஆரம்பமாகாததால் தற்போது தண்ணீரால் மூடப்பட்டிருக்கும் ரோட்டில் பஸ் செல்லும். நடந்தும் செல்லலாம். அணையின் கரையில் சுற்றி வளைத்து சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். மணிமுத்தாறு அருவி அப்போதுதான் தெரிய வந்தது. அங்கு சென்று அருவியில் குளிப்போம். தடாகத்தில் பாறைகளில் இருந்து பாய்ந்து நீச்சலடிப்போம். தண்ணீர் நெல்லி மரங்களின் ஊடாகப் பாய்ந்து வருவதால் இனிப்பாக இருக்கும். அணைகட்டுப்பணியில் இருந்தவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளில் தான் எங்கள் குடும்பம் ஐந்தாறு வருடம் தங்கியிருந்தது. மாஞ்சோலை எஸ்டேட் அப்போது சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமாக இருந்தது. ஜமீன் இளவரசர் ஒரு கொலைக்கேசில் சிக்க, அவருக்காக வாதாடிய வக்கீலுக்கு “பீசு”க்காக எஸ்டேட் மும்பை வக்கீலுக்கு கொடுக்கப்பட்டது. நாங்கள் தங்கியிருந்த வீடுகள் தான் இப்போது காவல் துறை ஆயுத முகாமாக மாற்றப்பட்டுள்ளது. மாஞ்சோலை செல்லும் சாலை மரங்களடர்ந்து ரம்மியமாக இருக்கும். “சொர்க்கவாசல்” என்ற திரைப்படத்தில் கே.ஆர். ராமசாமி மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு “கன்னித்தமிழ் சாலை ஓரம்” என்ற பாடலை பாடிக்கொண்டு வரும் காட்சி இந்த மாஞ்சோலை சாலையில் தான் எடுக்கப்பட்டது.

  வாழ்த்துக்களுடன்—காஸ்யபன்.

  • உங்களின் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது காம்ரேட். கூடவே, பல அரிய தகவல்களை தெரியப்படுத்தியதற்கு நன்றி!

 6. […]  இது குறித்த விபரங்களை மாஞ்சோலை http://veyilaan.com/2012/07/20/manjolai/ பதிவில் படித்துக் கொள்ளலாம்.  இந்த […]

 7. அருமையான பதிவு.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: