படிப்பினை

ஒரு நாள் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் வலி, மனதை அறுத்துக் கொண்டியிருந்தது.  எனக்கு நானே எவ்வளவோ சமாதானம் சொல்லியும், ஆறுதலடையவில்லை.  பொதுவாய், என்னிடம் பணம் வாங்கியவர்கள், அவர்களாக திரும்பக் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வேன்.  கேட்பதில்லை.  அவர்கள் மிகுந்த சிரமப்பட்டுக் கொடுத்தால், முடியும் போது கொடுங்கள் என்று கூறி விடுவேன்.  இதையே சாதகமாகக் கொண்டு, என்னை எப்போதுமே சிலர் ஏமாற்றிக் கொண்டேயிருப்பதால், இந்த இயல்பு மாறி விட்டது.  என் பணத்தேவையின் காரணமாகக் கூட மாறியிருக்கலாம்.

ஒரு சுற்றுலா மையத்தில் தங்குமிட முன்பதிவுக்கும், உணவுக்கும், முன்பணமாய் ரூ.4000/- ஒருவரிடம் கொடுத்திருந்தேன்.  எதுவுமே ஏற்பாடு செய்யாமலும், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி விட்டார்.  இது குறித்த விபரங்களை மாஞ்சோலை http://veyilaan.com/2012/07/20/manjolai/ பதிவில் படித்துக் கொள்ளலாம்.  இந்த சம்பவம் தான் எனக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

மற்றது போகட்டும், கொடுத்த பணத்தையாவது திரும்ப வாங்கலாம் என்பதற்காக, சம்பந்தப்பட்ட குமார் என்பவரை, பல முறை கைப்பேசியில் அழைத்த போது, அலட்சியமாயும், தொடர்பறுத்தும், அருகில் இருக்கும் யாரிடமாவது தவறான அழைப்பு போல பேசச் செய்வதுமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  இப்படியே ஒன்றிரண்டு மாதங்களாகி விட்டது.  பொறுத்துப் பார்த்து விட்டு, காவல் நிலையத்தில் எழுத்தராய் பணிபுரியும் என் இளவலிடம் தகவல் சொன்னேன்.  இவ்வளவு நாள் எங்கிட்டே சொல்லாம, என்ன பண்ணிட்டிருந்தே? எனக் கடிந்து விட்டு, அவரே தொடர்பு கொண்டார்.  சகோதரர் பேசும் போது, வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்தால் பணத்தை கட்டி விடுகிறேன் என்று உறுதி கூறியிருக்கிறார்.  அதைக் கொடுத்த பின்னும் பணம் வரவில்லை.  ஒரு சில நாட்களில் தொடர்பு கொண்டிருந்த அலைபேசி எண்ணையும் மாற்றி விட்டார்.

இதற்கிடையில், குமாரின் தந்தையின் பெயர், வேலை, தொடர்பு எண் போன்ற விபரங்கள் சகோதரரின் நண்பர்கள் மூலம் கிடைத்து விட்டது.  அவரும் காவல்துறை தான்.  அவரிடம் பேசும் போதெல்லாம், நான் அவன்ட்ட சொல்லி, பணத்தைக் கட்டச் சொல்றேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தாரே தவிர,  நாட்கள் பலகடந்தும், ஒரு பலனும் இல்லை.

சகோதரரின் ஆலோசனையின் பெயரில், அப்பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பி வைத்தேன்.  நல்லவேளையாக, நான் குமாரை ஒரு படம் எடுத்து வைத்திருந்தேன்.  வங்கியில் பணம் கட்டிய ரசீதையும் பத்திரமாய் வைத்திருந்தேன்.  இவையனைத்தையும் இணைத்து அனுப்பி, சில மாதங்களாகியும் அதற்கு ஒரு பதிலும் இல்லை.


திரும்பவும் சகோதரர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறி,  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பச் சொல்லி ஆலோசனை கூறினார்.  அதன்படி அனுப்பினேன். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு :

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.  இந்த உரிமையை, பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது.  இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் படி

1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்
2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.

போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.

http://goo.gl/cCla8

http://www.tnpolice.gov.in/rti.html

ஊட்டியில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் இருந்த போது, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து தொடர்ச்சியாக மூன்று, நான்கு தடவை தொடர்ச்சியான கைப்பேசி அழைப்பு வந்தது.  அடுத்து, நண்பர் ராகவன் எண்ணிலிருந்து தொடர்ச்சியான அழைப்பு.  கூட்டத்தின் முக்கிய விதி பாதியில் எழுந்து வெளியே செல்லக் கூடாது என்பது.  இருந்தும், வெளியே வந்து அநாமதேய எண்ணுக்கு அழைத்தேன்.

 

நன்றிHindu Business Line

எதிர்முனையில் பேசியது, காவல் நிலைய எழுத்தர்,

நீங்கள் முதலில் குமார் என்பவர் மீது அனுப்பிய புகார் மனு கிடைத்தது.  அடுத்து ஆர்.டி.ஐ (RTI – Right to information act) மனுவும் கிடைத்தது.  அதன்படி, குமார் என்பவரை விசாரித்தோம்.  பணத்தைத் திருப்பித் தருவதாக சொல்லுகிறார்.  உடனே வந்து பணத்தை வாங்கிச் செல்லுங்கள் எனக்கூறினார்.

பதிலுக்கு நான், அவ்வளவு தூரம் பயணம் செய்து வரமுடியாது.  அந்தப் பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.  அதற்கு அவர், உங்களுக்குத் தெரிந்த உள்ளூர் நபரை பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சிக் கடிதத்துடன் அனுப்புங்கள்.  கொடுத்து விடுகிறேன் என்றும் சொன்னார்.

அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? ஒரு உதவி வேண்டுமென இணைய நண்பர்களிடம் விசாரித்த போது, நண்பர் இராஜகோபால் தொடர்பு கொண்டு, என்ன வேண்டும்? சொல்லுங்கள்.  உதவத் தயாராய் இருக்கிறேன் என்று சொன்னார்.  விபரங்கள் கூறியதும், அதே ஊரிலிருக்கும் அவரது தந்தையார் தொடர்பு கொண்டார்கள்.  விபரங்கள், மனுவின் நகல் ஆகியவற்றை அனுப்பினேன்.  இரண்டு, மூன்று முறை எழுத்தரைத் தொடர்பு கொண்டும், அவரிடமிருந்து முறையான பதிலில்லை.  தம்முடைய உள்ளூர் செல்வாக்கின் மூலம் தொடர்பு கொண்ட பின்,  காவல் நிலையத்திலிருந்து பணம் பெறப்பட்டது.

கோடி ரூபாய் கிடைத்தாலும், கிடைக்காத மகிழ்ச்சி இந்தப் பணம் ரூ.4000/- திரும்பக் கிடைத்த போது அடைந்தேன்.  விவரிக்க வார்த்தைகளே இல்லை.  என்னுடன் சுற்றுலா வந்திருந்த நண்பர்களிடம் சொன்ன போது, அவர்கள் இதை நம்பவே இல்லை.  முழு விபரமும் கூறியபின் அவர்களுக்கும் மகிழ்ச்சி!

அதன்பின், ஓரிரு நாட்களுக்குப் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய மேற்கண்ட கடிதமும் கிடைத்தது.

இதற்காக, மிகுந்த சிரமப்பட்ட அப்பா சண்முக வேலாயுதம் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.  மேலும், இதில் பேருதவியாய் இருந்த சகோ. சேது, நண்பர். ராஜ கோபால் ஆகியோருக்கும் இதை நிச்சயமாய் எழுதுங்கள், எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என வற்புறுத்திய சரவண குமாருக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றி!

யாருக்காவது உதவக்கூடும் என்ற எண்ணத்தில் தான் இப்பதிவும் மனுவின் பிரதிகளும் இத்துடன் இணைத்திருக்கிறேன்.  சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பெயர்கள், மற்றும் அனைத்து பெயர்களையும் மறைத்திருக்கிறேன்.  இந்த மனுவுக்கும் முறையான பதில் கிடைக்க வில்லையென்றால் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

இதில் முக்கியமான விசயம், சம்பந்தப்பட்டவரின் முகவரி தெரியாது, ஆனால் படம் இருந்தது, மேலும் வங்கியில் பணம் செலுத்திய ரசீதும் இருந்தது.  அது தான் முக்கிய சாட்சி ஆவணமாக கருதப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சாதாரண குடிமக்களுக்கு கிடைத்த ஒரு அருமையான பொக்கிஷம்.

பெங்களூர், ஜூலை 20

பத்மாவதி தாயாரைக் காதலித்த திருப்பதி ஏழுமலையான், அவரைத் திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், தேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதைப் போன்று தவறாகவோ, விளையாட்டாகவோ பயன்படுத்தினால் அரசு, இச்சட்டத்தை முடக்கும் அபாயமும் இருக்கிறது.  ஏற்கனவே நீதிபதி இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இச்சட்டத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள அரசே இலவச இணையச் சான்றிதழ் படிப்புத் திட்டம் வைத்திருக்கிறது.  படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வலைத்தளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம்.

http://goo.gl/FQdBd
http://goo.gl/IIsZU

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு மனு அனுப்பிய நான்காம் நாள், என் மனு மீது நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, விசாரித்து பணத்தையும் வசூலித்து விட்டார்கள்.  த.அ.உ.ச மனுவை விசாரணை செய்து, மேலதிகாரிகளுக்கு  பதில் அனுப்ப வேண்டுமென்பதால், உடனே வந்து வாங்கிப் போகச் சொல்லியும் என்னை அவசரப்படுத்தினார்கள்.  எல்லாவற்றிற்கும் சட்டமும், வழிமுறைகளும் இருக்கிறது.  கேட்கிற விதத்தில் கேட்டால் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

26 thoughts on “படிப்பினை

  1. இப்போது கூட நாகரிகம் கருதி எழுதி நீங்கள் பெயர் குறிப்பிடாமல் வெளியிடும் உள்ளப் பாங்கை நினைத்து அந்த சம்மந்தப்பட்டவர் வருத்தம் கொள்வாரா? அவசியமான பதிவு.

  2. அடடா..மிகவும் அற்புதமான நடவடிக்கைகள்.. நல்ல தீர்வு.! வெயிலான் எப்பவும் வெற்றியான் தான் !! 🙂 – கேட்டால் கிடைக்கும் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்..!!

  3. இனிமே உங்கிட்ட யாரும் பணம் கேட்டுவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை போலவும் இந்த பதிவிருக்கிறது..

  4. யோவ் சத்தியமா நம்ப முடியலைய்யா.
    கேள்விப்படுற எனக்கே மகிழ்ச்சி கரைபுரண்டோடுது. உமக்கு இருக்காதா என்ன?
    எழுத்தாளனின் பேனாமுனையைவிட தகவல் அறியும் உரிமை மனு எழுதுபவனின் பேனாமுனைக்கே வலிமை அதிகம்

  5. நாம் வாழும் சூழலின் மீது குறைந்துகொண்டே வரும் நம்பிக்கையை மீட்டுத்தரும் பகிர்வு. நன்றி, வாழ்த்துகள், மகிழ்ச்சி.

  6. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சாதாரண குடிமக்களுக்கு கிடைத்த ஒரு அருமையான பொக்கிஷம்.
    திரு வெயிலான் அவர்களின் சரியான, விடா முயற்சிகளை பாராட்டுகிறேன்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி & பாராட்டுகள் திரு வெயிலான்.

  7. நல்ல பதிவு. என் உறவினர் ஒருவர் ஆசிரியபணி செய்து ஓய்வு பெற்றவர். அவரும் இது போல் சட்டத்தை பயன்படுத்தி பாக்கிப்பணம் பெற்றார். தகவலுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!!!!

☼ வெயிலான் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி