Archive for the ‘அரசியல் / சமூகம்’ Category

சொல்லுதல் யார்க்கும்….

ஈரோடு நண்பர்கள் நடத்திய சங்கமம் இனிதே நடந்து முடிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.  அது எங்கள் நண்பர்கள், இன்னும் சொல்லப்போனால், எங்கள் சகோதரர்கள் நடத்திய ஒரு விழா.  ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், சேர்தளத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள்.

சர்ச்சைக்குரிய பதிவுகளில் பின்னூட்டம் கூட போடாமல், ஒதுங்கிச் சென்று தான் பழக்கம்.  நாட்டாமைத்தனமும் செய்வதில்லை.  எவ்வித குழு அரசியலிலும் தலையிடுவதில்லை. ஒரு சிலரின் பதிவுகளையும், பேச்சுகளையும் ஒதுக்கித் தள்ளி வைத்துப் போய் விடலாம் தான்.  ஆனால், அது மென்மேலும், கண்ணுக்குத் தெரியாத வகையில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் என்பதால் சேர்தளத்தின் சார்பில் இவ்விளக்கப் பதிவு.

எங்களின் (சேர்தளம் நண்பர்கள்) பெரும்பாலான பயணங்கள், விழா, சந்திப்பு ஆகியவை ஈரோடு நண்பர்கள் இணைந்தே நிகழ்ந்திருக்கிறது.  சென்ற ஆண்டு சங்கமத்தில் கூட சேர்தளத்துக்கென, நிகழ்ச்சியில் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.  எப்போதும், ஒருவருக்கொருவர் அன்புடனும், அக்கறையுடனும், ஆலோசனைப் பரிமாற்றங்களுடன் தான் பயணிக்கிறோம் என்ற விசயம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திருப்பூர் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் குழுமம் அமைத்து, தலைவர், செயலாளர், பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து சேர்தளம் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஒரு அமைப்பு.  சேர்தளத்தின் எந்தவொரு விசயமும் எங்கள் குழும மின்னஞ்சல் மூலம், விவாதிக்கப்பட்டுத் தான் முடிவெடுக்கப்படுகிறது.  தற்சமயம் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தும் எண்ணம் இல்லை.  இருந்தால், நிச்சயம் அனைவருக்கும் அழைப்பு விடப்படும்.

சேர்தளம் நண்பர்கள், எங்கள் இலச்சினை அச்சிட்ட பின்னலாடைச் சட்டைகள் அணிந்து வந்தது குறித்து ஒரு விமர்சனம் வந்தது.  உங்கள் குடும்ப விழாவில் தான் நீங்கள் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிவீர்கள்.  அது போல எங்கள் சகோதரர்கள் நடத்திய விழாவில், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு, இப்பிரத்தியேக பின்னலாடைச் சட்டைகள் அணிந்து வந்தோம்.

விழாவை வெளியிலிருந்து பார்த்தவர்களுக்கு, கலந்து கொண்டவர்களுக்கு இத்தகையதொரு விழா சாதாரணமாகத் தெரியக்கூடும்.  விரல் நீட்டி விமர்சிப்பதும் எளிது.  ஒரு விழா நடத்துவதற்கு செலவு தவிர்த்து,  தகுந்த திட்டமிடுதலும், செயற்படுத்தலும், ஒருங்கிணைத்தலும், எத்தனை பேரின் உடல் உழைப்பும் வேண்டும் என்பதை என் சிறு அனுபவத்தில் உணர்ந்தேயிருக்கிறேன்.

என்னளவில் மட்டுமல்ல, விழாவில் கலந்து கொண்ட சேர்தளம் நண்பர்களும் மிகச்சரியாக, இன்னும் சொல்லப் போனால், நேர்த்தியாக நடத்தப்பட்ட விழா என்ற ஒருமித்த கருத்தையே கூறினார்கள்.  மனமுவந்து பாராட்டினார்கள்.

விழாவில், நான் உட்பட மேடையில் அடையாளப்படுத்தி பாராட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும், தகுந்த நேரம் கொடுத்து, ஒப்புதல் வாங்கியே பெயர் சேர்க்கப்பட்டது என்பதை நான் அறிவேன்.  இப்படியிருக்க, ஒரு சிலர் பரபரப்புக்காக, விளம்பரத்துக்காக விமர்சனம் என்ற பெயரில், கற்பனையாக எழுதுவது மாதிரியல்ல.  யார் யாரைப் பாராட்டுகிறீர்கள் என்ற பட்டியல் கேட்பதும் சரியல்ல.

விழா நடத்தியதில் குறைகள் இருந்தால், தனிப்பட்ட முறையில் நாசூக்காக சொன்னால் தவறில்லை.  அதை விடுத்து, சப்பையான குறைகளையும், கட்டுக் கதைகளையும் ஒரு சிலர், பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இது பதிவர்கள் சார்பில், பதிவர்கள் தவிர்த்து முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்ட பெரிய நிகழ்வு.  பதிவர்கள் குடும்பத்துடன், மகிழ்ச்சியாய் பங்கு பெற்றது இன்னும் சிறப்பு.  இவ்விழா பதிவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டியதொரு முக்கிய நிகழ்வு.  தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி, விழா நடத்திய சகோதரர்களை மனவருத்தத்தில் ஆழ்த்த வேண்டாம்.

Advertisements

வாயு மண்டலம்

காலணிகளை வெளியே கழட்டி வரச் சொல்லி மிரட்டும் கண்ணாடிக் கதவு அறிவிப்பு, வழுவழுவென்று இருந்த கற்கள் பதித்த தரை, கழுத்துயர முன் தடுப்பின் பின் அமர்ந்திருக்கும் பணியாளர்கள்,  அவர்கள் மட்டும் அமர்வதற்கான மெத்தை இருக்கைகள், வருபவர்கள் நின்று, சென்று கொண்டேயிருக்க வேண்டுமென தீர்மானித்து, அளவாய் விடப்பட்டிருக்கும் காலியிடம்.

இது தான் அரசால் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விநியோகிக்கும் முகவர்களின் பெரும்பான்மையான அலுவலகம். எப்போதும், பொறுமை கிலோ என்ன விலை? கனிவு என்றால் என்னவென்று கேட்கும் முகபாவம், கேள்வி கேட்டு முடிக்குமுன் முகத்திலறையும் பதில்கள், இப்படியான தகுதிகள் பார்த்து தேர்ந்தெடுத்த பணியாளர்களே பெரும்பாலுமிருப்பர்.

மக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயுவை ஏன் அரசே விநியோகம் செய்யக் கூடாது?  முகவர்களுக்கு ஏன் கொடுத்து கொள்ளை லாபம் அடிக்க அவர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்?  அல்லது முகவாண்மை அலுவலகப் பணியாளர்களுக்காவது முறையான பயிற்சியும், சரியான சம்பளமும் கிடைக்கப் பெற அரசு ஆவண செய்தால் மக்களுக்கு மிகப் பயனுள்ளதொன்றாய் இருக்கும்.

கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு உருளைகள் கேட்டு விண்ணப்பிக்காததால், என்னுடைய இணைப்பை, உயிரற்ற பட்டியலில் சேர்த்து விட்டார்கள். அதனை உயிரூட்ட, உரிய ஆவணங்களைச் சேகரித்துக் கொடுக்கவே சில நாட்களாயின.  ஆவணங்களைச் சரி பார்த்து, ஒரு வழியாக சரியென தலையசைப்பதற்கு மேலும் ஒன்றிரண்டு நாட்கள்.  வீட்டுக்கு ஆய்வு செய்ய ஒருவர் வருவார், அவரின் அறிக்கை கிடைத்த பின் நாங்கள் சொல்கிறோம் என்ற பதிலோடு வெளியே வந்தேன்.

தொடர்ச்சியாக தொடர்பு கொண்டதில், வீட்டுக்கு ஆய்வு செய்ய வருபவரின் தொடர்பு எண் கிடைத்தது.  அவரை ஒருவாறாக தொடர்ச்சியாக தொடர்ந்ததில், ஆய்வுக்கு வந்தார்.  பார்க்க வேண்டியதைப் பார்த்து பெற வேண்டியதைப் பெற்றுச் சென்ற ஓரிரு நாட்களுக்குப் பின் முகவர் அலுவலகத்தை அழைத்த போது,

உங்க வீட்டுக்கு வந்தார்ல, அவர் இன்ஸ்பெக்சன் பண்ணுன பேப்பர் எதுவும் குடுக்கல. நீங்க அவரையே கூப்பிட்டு கேட்டுக்கோங்க.

என்ற பதிலுக்குப் பின், ஆய்வாளர் (வீட்டுக்கு உருளை கொண்டு வந்து கொடுக்கும் பணியாளரும் இவரே),

நான், எல்லா பேப்பரையும், ஆபீஸ்ல ஒல்லியா ஒரு மேடம் இருப்பாங்க பாருங்க! அவங்க கிட்ட கொடுத்திட்டேன்.  அவங்ககிட்ட கேட்டுப்பாருங்க!

என்று முடித்தார்.

அடுத்த கட்ட முயற்சியில், இது போன்ற விசயங்களைக் கண்காணிக்கும் பணியாளரின் எண் கிடைத்து, கேட்ட போது அலுவலகத்துக்கு வரச்சொன்னார்.

இந்த பேப்பரையெல்லாம் எடுத்துட்டு, சீனிவாசா போங்க! அங்க மேடம் வருவாங்க! 12 டூ 2 மணி வரைக்கும் தான் இருப்பாங்க. கையெழுத்து வாங்கிட்டு வந்திடுங்க. பதிஞ்சிடலாம்.

சீனிவாசா என்பது இன்னொரு பகுதியில் இருக்கும் முகவர் அலுவலகம். அங்கு சென்று, 12 மணியிலிருந்து, 2 மணி வரை காத்திருந்தது தான் மிச்சம். ஒன்றரை மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக, எல்லோரையும் வெளியே தள்ளி கதவை அடைத்து விட்டார்கள்.  பசியுடன் சுமார் 30 பேர் வரை இது போன்ற தாள்களுடன், பகுதி அலுவரின் வருகைக்காக காத்திருக்க, வருவதற்கான அறிகுறியே இல்லை.  கேட்ட போது தெளிவான பதிலுமில்லையாதலால், 2 மணிக்கு மேல் திரும்ப வேண்டியதாயிற்று.

இப்படியாக, படையெடுத்து தோற்றதில், தீச்சுவாலையில்லா அடுப்பு வாங்கி ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில், விண்ணப்பத்தை கிடப்பில் போட்டேன்.  சென்னையில் எரிவாயு முகவர் அலுவலகத்தில் பணிபுரியும், என் உறவினர் ஒருவரிடம், புலம்பிக் கொண்டிருந்த போது, நேராக கோவையிலிருக்கும் முதன்மை அலுவலகத்தை அணுகச் சொன்னார்.

கோவை, முதன்மை அலுவலகத்தின் வரவேற்பறையில், காவலர்கள் என்ன விசயமாய் வந்திருக்கிறீர்கள்?  யாரைச் சந்திக்க வேண்டும்? என்ற விபரங்களைத் தெரிந்து, எத்தனை மணிக்கு நுழைந்தோம் என்பதையும் பதிவு செய்து உள்ளே அனுப்புகிறார்கள்.

அலுவலரின் அறைக்கு அழைத்து சென்று, இருக்கையில் அமர வைத்து காவலர் திரும்பிச் செல்கிறார்.  அலுவலர், எனக்கு முன் இருந்த ஒரு வயதான பெண்மணியிடம், பெயர் மாற்ற விண்ணப்பத்தை எப்படி எழுத வேண்டும் என பொறுமையோடு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பெண்மணியின் அப்பாவித்தனமான கேள்விகளுக்கும், கனிவோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

என் முறை வந்த போது, விசயங்களை பொறுமையாகக் கேட்டு விட்டு, திருப்பூரிலேயே இந்தக் காரியத்தை முடித்திருக்கலாமே?  ஏன் இங்கு வரை வந்து அலைகிறீர்கள்? என ஆதங்கப்பட்டார்.  என் இணைப்பு இருக்கும், முகவர் அலுவலத்துக்கு தொலைபேசியில் அழைத்து, இனி மேல் கையொப்பத்துக்காக வாடிக்கையாளர்களை அலைக்கழிக்காதீர்கள். அவர்களுக்கும் வேலை இருக்கும்.  இதற்காக, அலுவலக விடுப்பு, அனுமதி போன்றவைகள் எடுத்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். முறையான ஆவணங்களை வாங்கிக் கொண்டு, எரிவாயு உருளைகளைக் கொடுங்கள். பின்பு, அதிகாரியிடம் கையொப்பம் வாங்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இது, அவரது பணியென்ற போதிலும், அலுவலகத்தின் வாயிலிலிருக்கும் காவலர்கள் முதல் அலுவலர் வரை சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது என்ற மன ஓட்டம் மேல் மட்டத்திலிருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும். போகும் போது இவரின் பெயரை அவசியம் தெரிந்து கொண்டு, பாராட்டி ஒரு பதிவாவது எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

சமையல் எரிவாயு இணைப்பைப் புதுப்பிக்க ஆணையிட்டு ஒப்பமிட்டார். அதிக பட்சமாய் பத்து மணித்துளிகளாயிற்று.  மிகுந்த மகிழ்வோடும், நன்றியோடும் விடைபெற்றேன்.  வாசலையடைந்தும், பெயர் கேட்க மறந்ததை நினைத்து, ஆவணங்களைப் பையில் திணித்த போது, கையொப்பத்தின் கீழே, அலுவலக முகவரியுடன் கூடிய முத்திரையில் பெயரும் இருந்தது.

வள்ளுவன்!

வேடிக்கை

அதிகாலையில் நகர் நோக்கியொரு சிறு பயணம் செல்ல வேண்டியிருந்தது.   செல்லலாமா?  வேண்டாமா? என இரு வேறு யோசனைகள்.  இருந்தும், தவிர்க்க முடியாத கட்டாயம் இருந்ததால், புறப்பட்டேன்.

செல்லும் வழியில் மன்னர் எதிர்ப்பட்டால், ரதங்கள் கடக்கும் வரை பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டி வருமென்பதால்,  பெருவழி தவிர்த்து, சிற்றூர்களின் வழி நகருக்குள் நுழைந்தாயிற்று.  எதிரில் குதிரைப்படை கூட தென்படவில்லை.  ஒரு சில காவல் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

நகர முகப்பில், சிலைகளுடன் கூடிய அலங்காரத் தோரணமே பெருவிழாவொன்று நடைபெறவிருப்பதை கட்டியங்கூறிற்று.

தூய்மையான சாலைகளின் நடுவே சுடர் விளக்குக் கம்பங்கள்,  இலச்சினைகள் பொறிக்கப்பட்ட வர்ணக்கொடிகள், தென்னை, பனையோலைத் தோரணங்கள், ஆங்காங்கே மன்னரின் அருமை, பெருமைகளைப் பறைசாற்றும் பதாகைகள், சாலையின் இருமருங்கிலும் பத்தடிக்கோர் அரண்மனைக் காவல் வீரர் என நகரமே மன்னரின் வருகையையொட்டி, நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

நேற்றிரவு நடைபெற்ற சலங்கை நடனம் காணுவதைக் கூட தவிர்த்து, அரண்மனை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு, தாமதமாய் மன்னர் படுக்கைக்குச் சென்றதால், பரபரப்பின்றி மக்கள் கொஞ்சம் நிம்மதியோடு அலைந்து கொண்டிருந்தனர்.

அனைத்து வழிகாட்டிப் பலகைகளின் அம்புக்குறிகளும் விழா நடக்குமிடம் நோக்கியே இருந்தது.  நிகழ்விடத்தில் சிற்சில சலசலப்புகள் இருந்ததால், கடப்பது தாமதமாயிற்று.  ஊர்வலப்பாதையின் இருமருங்கிலும் வண்ணக்கலவைகளுடனான, கண்ணைக் கவரும் வகையில் ஓவியங்களால், நகரத்தெருக்கள் புதுப்பொலிவுடன் களை கட்டியிருந்தது.

மன்னர் ஊர்வலத்தைப் பார்வையிடுவதற்காக பல்வேறு வண்ணத்துணியலங்காரங்களுடனான தனி உப்பரிகை, இளைப்பாறும் வசதியுடன் தயாராகிக் கொண்டிருந்தது.  இளவரசர், இளவரசி, தளபதிகள் குடும்பத்தாருக்கென தனித்தனியான சிறு உப்பரிகைகள்.  மந்திரிப் பிரதானிகளுக்கும் கூட.

மன்னர் உரைநிகழ்த்தும் நிகழ்விடமெங்கும் சாரை, சாரையாக மக்கள்.  ஆடம்பரத் தோரணவளைவுகள்,  குதிரைப்படை வீரன் சிலை, புலவர்களின் சிலைகள் என ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  கூடாரங்களின் உட்புற மேற்பகுதி கூட அலங்கரிக்கப்பட்டிருந்தது.  கூடங்களில் மிகப்பெரிய பாத்திரங்களில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது.  தங்குமிடங்களனைத்தும் அரண்மனை காவலர்களாலும், சேவகர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.  பயிர் நிலங்களை செப்பனிட்டு, ரதங்களை நிறுத்துவதற்கு தயார்ப்படுத்தியிருந்தனர்.

மன்னர் தங்கியிருந்த மாடமாளிகையின் முன்னே,  எப்போது, என்ன உத்தரவு வந்தாலும் செயல்படுத்துவதற்கேற்ப பல்வேறு ரதங்கள் தயார் நிலையில் இருந்தன. சிறப்பு பயிற்சி பெற்ற காலாட்படை வீரர்களும் வித்தியாசமான உடையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.  அரண்மனை அதிகாரிகளும் அதிகளவில் குழுமியிருந்தனர்.

தமிழினத்தைத் தழைக்கவைத்தால் தமிழ் தன்னால் வளரும்.  அதை விடுத்து, மக்களனைவரும் உழைத்துக் கொடுத்த வரிப்பணத்தில், ஆடம்பர விழாவை விமரிசையாக, நடத்தி வீண் செலவழிக்கிறாரே இம் மன்னர்? என்ற கடைக்கோடிக் குடிமகனுக்கேயுரிய யதார்த்த கேள்வியுடன், வேடிக்கை மட்டும் பார்த்து விட்டுப் பத்திரமாய் ஊர் திரும்பினேன்.

பொன் மாலை

திருப்பூரிலிருந்து நான், சாமிநாதன், பரிசல்காரன், பேரரசன், சொல்லரசன், முரளி, சிவா, ராமன், வெங்கடேஷ் மற்றும் மதுசூதனன் ஆகியோர் நிகழ்வில் பங்கு கொள்ளச் சென்றோம்.  சாமிநாதனின் ஆலோசனைப்படி மூன்று கார்க் கண்ணாடிகளின் முன்னும் பின்னும் திருப்பூர் வலைப்பதிவர் பேரவை என்ற சீட்டு ஒட்டப்பட்டு மூன்று மணியளவில் திருப்பூரிலிருந்து கிளம்பினோம்.

அரங்க வாசலிலேயே நண்பர்கள் நந்து, கதிர், கார்த்தி, ஆரூரன் உள்ளிட்ட நண்பர்கள் தேநீர் கொடுத்து வரவேற்றனர். ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயர்கள் எழுதி சட்டையில் மாட்டிக் கொள்ளும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.  அனைவரின் தனி அறிமுகத்துக்குப் பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்வுகள் பற்றிய காணொளி விரைவில் தமிழ் மணத்தில் இணைக்கப்படும் என கதிர் தெரிவித்தார்.

படங்களுக்கு நன்றி முரளி.

ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் என்ற பெயரில் இனி ஈரோடு பதிவர்கள் செயல்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.

பதிவுகள், பதிவர்களின் சந்தேகம் தீர்க்கும் கலந்துரையாடலுக்கு பெருந்தலைகளுடன் என்னையும் சேர்த்திருந்தார்கள்.

சிறந்த ஏற்பாடுகளுடனான, மிக அருமையான சந்திப்பு, அருணின் அட்டகாசத்துடன் நிகழ்ச்சி ஏழு மணிக்கு நிறைவுற்றது.

சுவையான இரவுணவுக்குப் பின் சாமிநாதன் காரில் இளையராசாவின் பாடலோடு கிளம்ப யத்தனிக்கும் போது, சென்னை நண்பர்களும் காருக்கருகில் வந்தனர்.  பின்னர், இருபது நிமிடங்களை இளையராசாவின் இசை வெள்ளத்தில் நண்பர்களனைவரும் சேர்ந்திசை பாடி, ஆடிக் கழித்தோம்.

நிகழ்வுகளைப் பற்றிய பேச்சுக்களோடு கார் திருப்பூர் வந்தடைந்தது.

ஞாயிறு மாலைப் பொழுதுகளை, திருப்பூரிலிருந்தால் எப்பவுமே போராடி நகர்த்த வேண்டியிருக்கும்.  சென்ற ஞாயிறுப் பொழுது ஈரோடு நண்பர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் மற்ற நண்பர்களின் சந்திப்பிலும் பொன் மாலைப் பொழுதாகக் கழிந்தது.

நன்றி நண்பர்களே!

படைப்பாளி

திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் இல்லையென அரசாங்கமோ, தொழிலதிபர்களோ உரக்கச் சொல்ல முடியாது.  தெரிந்தும், தெரியாமலும் குழந்தைத் தொழிலாளர்களின் பங்களிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

வெளிநாட்டு விற்பனை நிலையங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் தங்களது ஆடைகள் குழந்தைத் தொழிலாளர்களின்றி தயாரித்தவை என இப்போது விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.  பனியன் சார்ந்த உபதொழில்களிலும், உள்நாட்டில் விற்கப்படும் ஆடைத் தயாரிப்புகளிலும், குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

உறுத்தும் உண்மை ஒன்றைச் சொல்லட்டுமா?

உங்கள் உடலோடு ஒட்டி உறவாடும் உள்ளாடைகள் வியர்வை உறிஞ்சுவது போல், குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சித் தயாரானது தான்.

குழந்தைத் தொழிலாளர் அவலங்களை என்னுடைய முந்தைய கனியா கனிகளும், கண்ணாடி கனவுகளும் பதிவில் ஓரளவு பதிவு செய்திருக்கிறேன்.  எழுத்துக்களை விட, படங்கள் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.  அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளம் படைப்பாளி ரவிக்குமார் என்ற குறும்பட இயக்குநரும் ஒருவர்.

திருப்பூரைச் சேர்ந்த, ரவிக்குமார் பனியன்கள் தைப்பதற்குத் தேவையான தையல் நூல் வியாபாரம் செய்து வருகிறார். லீவு, எட்டா(ம்) வகுப்பு, சுழல் என்ற தலைப்புகளில் குறும்படங்களை எடுத்திருக்கிறார்.

இதில் எட்டா(ம்) வகுப்பு என்ற குறும்படம் திரையிடல்களின் போது பாராட்டைப் பெற்றது.

ஐந்தாம் வகுப்போடு பழைய பேப்பர் கடைக்கு வேலைக்கு போய் விட்ட சிறுவன், அவனுடைய 8ம் வகுப்பு படிக்கும் நண்பன், தன்னைப் போலல்லாது,  ஒரு டாக்டராகவோ, பொறியாளனாகவோ ஆக வேண்டும் என்ற கனவுடன் பழைய புத்தகங்கள், செருப்புகள் போன்ற தன்னாலான உதவிகள் செய்தும், பயனளிக்காது பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விடுகிறான் என்பது தான் கரு.

தன்னைப் பற்றியான அறிமுகத்தில்,

“நான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றபோதே விடுமுறைக் காலங்களில் பனியன் கம்பனிகளில் வேலைக்குச் செல்வேன். அதுதானோ என்னவோ பின் நாட்களில் என் குறும்படங்களில் பிரதிபலித்தது.

துபாய் சென்றுவந்த ஒரு நண்பரிடம் இருந்த கேமராவை எடுத்துக் கொண்டு ஏதோ படம் பிடித்தேன். நிறைவாக இல்லை. நண்பன் தே.ராம் ஒரு குறும்படம் இயக்கினான். அவனுடன் சேர்ந்து பணியாற்றினேன். கொஞ்சம் கற்றுக் கொண்டு ‘லீவு’ குறும்படத்தை இயக்கினேன். அதற்குப் பின்னர் ஒரு வருட இடைவெளியில் ‘சுழல்’, ‘எட்டா(ம்) வகுப்பு’ என்னும் குறும்படங்களை இயக்கினேன்.

குறிப்பாக குழந்தைத் தொழிலாளர் பற்றியே நான் குறும்படம் எடுத்ததற்கான காரணம் என் மனதின் சிதைவு என்றே எண்ணுகின்றேன் “

ரவிக்குமாரின் கருவில் உருவான ஒரு அசைபடத்தை நண்பர் கேபிள் சங்கர் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.  கேபிள் சங்கருடனான திருப்பூர் சந்திப்பில் ரவிக்குமாரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இப்போது பின்னல் நகரம் என்ற வலைத்தளத்தில் பதிவுகள் எழுத ஆரம்பித்துள்ளார்.

வளரும் இளம் படைப்பாளி ரவிக்குமாரை வாழ்த்தி வரவேற்போம்.

சொர்க்கம் ஒரு தீராத்தாகம்

கொட்டும் மழை, தெருவெங்கும் சாக்கடையோடும் மழை நீர். படகு ஏறித்தான் வீட்டிற்குள் போகும் சூழல்.

பிரதான சாலையிலே இறக்கி விட்டுப்போகும் பேருந்து. இன்னும் 10 மைல் நடக்க வேண்டும். கால்கள் வலிக்குமா? சலிப்பு ஏற்படுமா?

தெருக்களெங்கும் புழுதி, நிலத்தடி நீரெல்லாம் இரசாயனம் கலந்திருக்கிறது. போக்குவரத்து நெரிசல். இனிமே இங்கே வரக்கூடாது என்ற எண்ணம் வருமா?

நிழலுக்கு ஒதுங்க நிழலில்லாத கரடுமுரடான பாதை, கொதிக்கும் வெப்பம், தாங்க முடியாத தண்ணீர் தாகம், இனி இந்தப்பக்கம் எட்டியே பார்க்கக்கூடாது என்ற எண்ணம் வருமா?

தண்ணீர் கிடையாது. சாக்கடை வசதி கிடையாது. ரோடு கிடையாது. பத்து பேருந்து மாறித் தான் போக வேண்டும்.

போகவில்லை. இனிமேல் போகப்போவதில்லை என்ற வார்த்தைகள் நம்மிலிருந்து வருமா?

ம்ஹீம்…….வரவே வராது அது நம் சொந்த ஊராக இருந்தால்……

ஊரிலிருந்து வெளியே வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூரிலிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், தன்னுடைய ஊரின் பெயர் நாளிதழ்களிலோ, பேருந்திலோ தென்பட்டால் மனம் மகிழும். யாராவது ஊரைப் பற்றி பேசினால் தன்னையறியாமல் முகம் மலரும். மனதுள்ளே பனி உருகும்.

விருதுநகர் தெப்பக்குளம்

விருதுநகர் தெப்பக்குளம்

பண்டிகைகளுக்கு முந்தைய இரண்டு நாட்கள் திருப்பூரில் மதுரை, திருச்சி பேருந்தில் ஏறி இருக்கை பிடிப்பதென்பது ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கும் சாதனைக்கு சமம். ஏதோ ஒரு தீபாவளிக்கு ஊருக்கு செல்லுவதற்காக மாலை 6 மணிக்கு பேருந்து நிலையம் வந்து, விடிய, விடிய முயற்சித்தும் கூட்ட நெரிசலில் ஏறமுடியவில்லை. காலை 7 மணிக்கு அடுத்து வரும் ஏதோ ஒரு பேருந்தில் ஏறலாம். அது எங்கே போனாலும் சரி. அந்த ஊரிலிறங்கி மதுரை போய்க் கொள்ளலாம் என முடிவெடுத்து, நானும், என் நண்பனும் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்தோம். நடத்துநர் வந்து ஈரோடு போறவங்க மட்டும் இருங்க. மத்தவங்க இறங்குங்க என சொன்னார். உள்ளிருந்த அனைவரும் மதுரைக்கு போகிறவர்கள். நடத்துநரோடும், ஓட்டுநரோடும், நேரக்காப்பாளரோடும் வாக்கு வாதம் செய்து, பேருந்து ஈரோடு போய் அங்கிருந்து மதுரைக்கு போகும் என முடிவெடுத்தார்கள்.

நின்று கொண்டிருந்த ஓரிருவரைத் தவிர அனைவரும் மதுரை செல்பவர்கள். காலை எட்டு மணிக்கு கிளம்பிய பேருந்து நாலே நாலு பேரை ஈரோடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு, பேருந்து நிலையத்திலிருந்த நேரக்குறிப்பில் கையெழுத்திட்டு விட்டு, மூன்று?! முறை டீ குடிப்பதற்கும், ஒரு தடவை உணவிற்கும் நிறுத்தி, மதுரை சென்று சேரும் போது, மாலை 5 மணி. அங்கிருந்து ஊர் செல்வதற்கு ஒரு மணி நேரம்.

திருப்பூரிலிருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் வந்து சேர வேண்டிய மதுரைக்கு ஒரு நாள் பயணித்து வந்தேனென்றால், வந்தார்களென்றால் அதற்கு காரணம் – ஊர், பிறந்த மண்.  எவ்வளவு பெரிய பணமுடையவராயிருந்தாலும், நகர நாகரீகத்திலே ஊறிக் கிடந்தவராயிருந்தாலும், நூறு வேலைக்காரர்களுடன் கூடிய சொகுசு வீடிருந்தாலும், சொந்த ஊரில் இருக்கும் வீடு/குடிசை தான் சொர்க்கம். (உ.ம் – வைரமுத்து, இளையராஜா)

ஊருக்கே இப்படியென்றால், நாட்டை விட்டு இடம் பெயர்ந்தவர்களின் மனநிலை என்னவாயிருக்கும்? சொல்லொண்ணாத்துயரம்.

உணவகங்களில் உணவு பரிமாறுபவர் வந்தவுடன் பெயரைக் கேட்பேன். கொஞ்சம் மலர்ந்தாரென்றால் ஊர். என்னுடன் வரும் நண்பர்கள் ”ஆரம்பிச்சிட்டான்டா” என்று சலித்துக் கொள்வார்கள். பெரும்பாலும், திருப்பூரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் உணவகங்கள் வைத்துள்ளனர்.  வேலை செய்கின்றனர்.

அவர்களிடம் ஊர்ப்பெயரைக் கேட்டவுடன் சொல்வது – மதுரை

மதுரை திருமலை நாயக்கர் மகால்

மதுரை திருமலை நாயக்கர் மகால்

மதுரையா? மதுரையில எங்கே?

திருமங்கலம்.

திருமங்கலமா?

பக்கத்துல.

பக்கத்துல எந்த ஊர்? சிவரகோட்டையா? கள்ளிக்குடியா? டி. கல்லுப்பட்டியா?

கண்கள் விரிய……சுப்புலாபுரம் தெரியுமாண்ணே உங்களுக்கு?

ஆமா! தெரியும்.

சுப்புலாபுரம் வெலக்குலருந்து உள்ள 5 மைல் போனோம்னா நம்ம ஊரு வரும்ணே – கட்ராம்பட்டி.

அப்புடி சொல்லு வெவரத்த. மதுரை எங்கே இருக்கு? கட்ராம்பட்டி எங்கே இருக்கு? சுப்புலாபுரத்துலருந்து அஞ்சு மைல் தூரமிருக்கிற ஊருக்கு, அம்பது கிலோமீட்டர் முன்னாடி இருக்கிற மதுரையச் சொல்றே? என்று பேச்சு வளர்ந்து கொண்டிருக்கும்.

அதற்கப்புறம் எப்போது போனாலும் ஒரு சிநேகச் சிரிப்பு.

மாவு இன்னைக்கு சரியில்லண்ணே! தோசை வேண்டாம். சப்பாத்தி சொல்லவா?

காபி ஆறிப்போய் இருக்கு. வேண்டாம் என்று அன்புடனான கவனிப்பு.

இது போன்றதொரு அளவலாவல் தான் என்னை மறையூரில் காப்பாற்றியது தெரியுமா? மறக்கவே முடியாது.

இந்தப்பழக்கம் நான் இதற்கு முன்னால் ஒரு பின்னலாடை தொழிற்சாலையில் வேலை செய்த போது ஆரம்பித்தது.

தொழிற்சாலையின் உரிமையாளர் – பெரிய அண்ணாச்சி! (என்னை முதன்முதலில் திருப்பூருக்கு அழைத்து வந்து வேலை கொடுத்து கற்றும் கொடுத்தவர்) எங்கே எந்த இடத்திலும், அவரவர்களுடைய பெயரை கேட்டு தெரிந்து கொள்வார். அதோடு மட்டுமில்லாது நினைவிலும் வைத்திருப்பார். திரும்ப அவர்களைப் பார்க்கும் போது, பெயரை சரியாகச் சொல்லி அழைப்பார். சம்பந்தப்பட்டவருக்கே இவரை அடையாளம் தெரியாது.

வங்கியில் ஒருவரது பெயரைச் சொல்லி, கை குலுக்கி எப்படி இருக்கிறீர்கள் என்று நலம் விசாரித்தார். வழக்கம் போல கையைக் கொடுத்து விட்டு அந்த நபர் முழித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் நம் அண்ணாச்சி முன்னால் எங்கு சந்தித்தோம் என்று விளக்குகிறார். முழித்துக் கொண்டிருந் தவருக்கு நினைவுக்கு வந்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்.

ஏனென்றால் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விமானப் பயணத்தில் அண்ணாச்சிக்கு பக்கத்து இருக்கைக்காரர்.

நாளடைவில், பணி நிமித்தமான இதர சந்திப்புகளிலும் இந்த யுக்தியை நான் உபயோகித்தேன். இப்போது கிட்டத்தட்ட ஒரு வியாதியாகவே ஆகிவிட்டது.

ஒரு பின்னலாடை தொழிற்சாலையின் ஆவணத்துறை பொறுப்பாளர் ஒருவரை சந்திக்கும் போது, பேச்சினூடே திருநெல்வேலி வாடை அடித்தது. ஊர் பெயரைக் கேட்டேன். உங்களுக்கு எந்த ஊரென்று என்னைத் திருப்பிக் கேட்டார் (நம்மளை மடக்குறாராம் 😉 ).

திருநெல்வேலி.

அட! சரியாப்போச்சு போங்க! திருநவேலியில எங்கனக்குள்ள?

(ஜ்யாக்ரபி…. ஜ்யாக்ரபி…..) சாந்தி நகர்.

கோர்ட்டுக்கு எதுக்காலயா?

எதுக்கால…… ஆமாமா (நமக்கு காரியம் ஆகணுமே?)

எனக்கு மகராஜநகரு (மகாராஜ நகராம்!) ஹைக்ரவுண்டை தாண்டிப் போனதும், உழவர் சந்தைக்கு பக்கத்துல.

பூப்பூத்திருச்சு. இனி வேலை சுலபம் தான்.

window

வெயில் சன்னல் வழியாக வெளிச்சத்தை அறைக்குள் குவித்துக் கொண்டிருந்த இனிய ஞாயிறு இரவு 10 மணி.

பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் சத்தம் தூக்கம் கலைத்தது. இமை விரிய விரிய சத்தம் என் வீட்டிற்கு வந்து விட்டது. கேபிள்காரரா? போன வாரமே கொடுத்தாச்சே. பேப்பர்காரர்? – நடு இரவு 7 மணிக்கே, கதவைத் தட்டுவாரே.

வீட்டு உரிமையாளர் – ஆமாமா. அந்த ஊர்க்காரர் தான். கதவை பலமா தட்டுங்க.

அரைத்தூக்கத்தோடு கதவைத் திறந்தால் கையில் துண்டுச்சீட்டுடன் ஒருவர்.

சார்! நீங்க தானா? உங்க வீடு தானா? (இதக்கேட்கவா என்னை இப்ப எழுப்பினே?)

ஹி! ஹி! ஆமா. உங்கள எங்கேயோ பார்த்திருக்கேனே?

சார், !@#$%^&*()*&^%$#@!

ஆங். மகராஜ நகர். வாங்க என்ன இவ்வளவு தூரம்?

போன வாரம் விக்ரமசிங்கபுரத்துல ஒரு கல்யாணம். அங்க உங்க பெரியப்பாவப் பார்த்தேன். நீங்க இங்க இருக்கீகனு சொன்னாவ.அட்ரசும் அவாள் தான் கொடுத்தாவ (ஒரு அட்ரஸ் கிடைச்சுதுன்னா? இப்படியா அர்த்தசாமத்துல வந்து எழுப்புவ?).

உங்க பெரியப்பா எப்படி சொந்தம்னா, எங்கம்மைக்கு நேர……….மூத்த……….மவனுக்கு……. அந்த வகயில எனக்கு சின்னத்தாத்தா முறையாகுது.

டீ, காபி ஏதாவது….. (தண்ணி கூட அரைப்பாட்டில் தான் இருக்கு வீட்டுல).

இல்லைல்ல. இப்பந்தாம் அந்த முக்குல குடிச்சிட்டு, அவம்ட்டயே அட்ரஸ் கேட்டு வந்தேன்.

பரவாயில்ல. வாங்க வெளியே போய் டீ சாப்ட்டுட்டு வரலாம்.

ந்நா! வேண்டாம்னு சொன்னாக் கேளுங்க.

வெளியே வந்தால், வெயிலு சுள்ளுனு அடிக்குது.

நீங்க அன்னைக்கு கம்பனிக்கு வரும் போது திருநவேலி தான் உங்களுக்கு சொந்த ஊர்னு சொன்னீங்களே?

அ… ஆ…. ஆ…. ஆங்…. (ஊர்ப்பேர் கேக்கிறதெல்லாம் பெரிய மார்க்கெட்டிங் டிரிக்ஸ்னு பீத்துன….. நல்லா வசமா மாட்டுனியா?)

உங்க பெரியப்பாவோட பூர்வீகம் விருதுநகருல்ல….. (தெரியுதுல்ல…. நோண்டி நோண்டி கேட்காட்டி என்ன?)

ஆமாமா….. படிச்சதெல்லாம் அங்க தான்.

ஒண்ணுமில்ல. எங்க அக்காவோட, அத்தானோட, அக்காவோட, வரிசையாரோட, அத்தபிள்ளையோட (நானும் ஓட…) மகன் சின்னவன் இங்கன தான் டையிங்ல வேல பாக்கான். டையிங் தண்ணி சேரல பாத்துக்கிடுங்க. டையிங் தண்ணிலேயே பொழங்கிறதுனால, கால்ல கொப்பளம், கொப்பளமா பொத்துக்கிட்டு வருதாம். அதாம் வேற வேலை ஏதாவது கிடைக்குமானு உங்களக் கேட்டுட்டு போலாம்னுட்டு…

அடப்பாவி! இதக் கேட்டுட்டு போறதுக்கா, ஊரை விட்டு 5 ½ கிலோமீட்டர் தள்ளி இருக்கிற வீட்டை கண்டுபிடிச்சு, தூங்கிட்டிருக்கவன எழுப்பி, வேகாத வெயில்ல டீக்கடைக்கு நடக்கடிக்கிற. ஆறு நம்பரை அழுத்தி என்னை அழ வச்சிருக்கலாம்ல.

ஒரு வேலை இருக்கு. முதல்ல தங்க எடமும், சாப்பாடும், கையில ஒரு ஆயிரரூவாயும் தான் கொடுப்பாங்க. பின்னாடி, போகப் போக……. டீக்கடை வந்திருச்சு.

டையிங்லருந்து பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு இப்ப அக்காவோட……..அத்தானோட……… சின்னவன் – சின்னவர் சார்  பெரிய பதவியில் சந்தோசமா இருக்கார்.  நல்லா இருக்கட்டும்!

ரெண்டு, மூணு பேரை வேலைக்கு சேர்த்து விட்ட வகையில், அவர்கள் வாங்கிய முன்பணத்தை நான் கட்டிய சோகமும் உண்டு.

தடுமாறும் தமிழக ஊடகங்கள்

என்னுடைய நண்பர் விஸ்வநாத் “தடுமாறும் தமிழக ஊடகங்கள்என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை 03.12.08 – தினமணியில் ஆறாம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

 

viswanath

தமிழகத்தில் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திப்பிரிவு தங்கள் கடமையை சரிவரச் செய்கின்றனவா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது. பல விஷயங்களில் மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள் அவர்களைக் குழப்பத்திற்கு ஆளாக்குவதால் ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது. நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் அரசியல் கட்சிகள் சார்பிலோ அல்லது அரசியல் சார்புடையதாகவோ உள்ளதால் அவை வெளியிடும் செய்திகள்முழுவதுமாகமக்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழல் காரணமாக இவை தவிர்க்க முடியாதது என்றாலும்கூட மேற்கண்ட பட்டியல் சேராத ஊடகங்களிலும் பொது ஜனத்தின் குரல் ஈனஸ்வரத்தில் தான் ஒலிக்கிறது. ஆனால் இவற்றிற்கு செய்தி நிறுவனங்களை மட்டுமே குறை கூறிவிட முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

தமிழகத்தில் ஊடகங்களின் எண்ணிக்கை அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நிறுவனத் தேவைக்கேற்ப அனுபவம் வாய்ந்த செய்தியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.

தமிழகத்தில் தொலைக்காட்சிகள் முதன் முதலாக தொடங்கப்பட்டபோது, அவற்றில் பணியில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அச்சுப்பத்திரிகையில் இருந்து வந்தவர்கள்தான்.

அன்று இத்துறையில் கால்பதித்தவர்களின் அறிவும், பணி அனுபவமும், ஆழமான செய்தி ஆர்வமும் தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கு அடியுரமாக பயன்பட்டது.

ஆனால், இன்று செய்தித்துறைக்கு வரும் புதிய செய்தியாளர்களிடம் அத்தகைய ஆர்வத்தையும், பணி ஈடுபாட்டையும் காண்பது அரிதாக உள்ளது.

மேலும், கற்றுக்கொள்வதில்கூட அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க மூத்த செய்தியாளர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை.  இதுவும் ஊடகச் செய்திகளின் தரத்தைப் பாதிக்கும் காரணியாக உள்ளது.

மேலும், தொலைக்காட்சி செய்தி என்பதைபைட்ஜர்னலிஸம் என்று கூறுவார்கள். உதாரணமாக ஒரு கட்சியின் தலைவர் அல்லது பிரபலமானவர் பேசுகிறார் என்றால் செய்தி நிறுவனத்தின்கொள்கைக்குஏற்ப அவரது பேச்சின் சில விநாடிகளை அல்லது நிமிடங்களை மட்டும் ஒளிபரப்பத் தேவையான தகவல்களை அந்த நிறுவனச் செய்தியாளர் சேகரித்தால் போதுமானது. எனவே, தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி மிகவும் எளிதானதாகி விடுகிறது.  ஒளிப்பதிவு கருவியில் பதிவு செய்த அரசியல் கட்சி அல்லது பிரபலமானவரின் பேச்சை அலுவலகத்திற்கு வந்து 10 வரி எழுதிக் கொடுத்தால் போதுமானது. மேலும், இப்போது பரவலாக வரும்லைவ்என்ற நேரலை செய்தி சேகரிப்பின்போதும் கூட, சம்பவ இடத்தில் நடந்ததை ஒளிப்பதிவு கருவி முன்னால் நின்று ஒப்பித்தால் போதும் அல்லது ஸ்டூடியோவில் இருந்து செய்தி வாசிப்பாளர் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொன்னாலேகூட போதுமானது என்ற அளவில் தொலைக்காட்சி செய்தியாளர்களின் பணி மிகவும் மேலோட்டமாகவே உள்ளது. ஆனால், இது மட்டுமே தொலைக் காட்சி செய்தியாளர்களின் பணி அல்ல.

அச்சுப் பத்திரிகை போலவே ஒவ்வொரு தகவலையும் நுணுக்கமாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்து, அந்த செய்தியின் பின்புலம் அறிந்து செய்திக்கோவையாக மாற்ற வேண்டியது தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு மிகவும் அவசியம்.  செய்திகளைத் தேடிச் சென்று அல்லது கிடைக்கும் தகவல்களை செய்திகளாக உருவாக்கும் பணியும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு உள் ளது. ஒவ்வொரு தொலைக்காட்சியும் நாள் ஒன்றுக்கு ஐந்து அல்லது பத்துக்கும் மேற்பட்ட செய்தித் தொகுப்புகளை ஒளிபரப்புவதால் அதற்கேற்ப செய்திகளைஅப்டேட்செய்ய செய்தியாளர்கள் ஓய்வின்றி ஓடிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஆனாலும்கூட இத்தகைய சூழலும் தங்கள் திறமைகளையும், பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானது. எனவே அச்சு செய்தியாளர்களை ஒப்பிடும்போது, தொலைக்காட்சி செய்தியாளர்கள் இதற்கு அதிகம் உழைக்க வேண்டியது மட்டுமல்லாமல் அர்ப்பணிப்போடும் செயலாற்றுவதும் அவசியமாகிறது. ஆனால், இத்தகைய தன்மையும் இப்போது ஆதிக்கம் காண முடிவதில்லை. எனவே, கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாலான தொலைக் காட்சி செய்திகளில் (பொதுவாகவே ஊடகச் செய்திகளில்) “நடுநிலைஎன்ற தன்மை காணவே முடிவதில்லை. “நடு நிலைஎன்பது இரு தரப்பினரின் கருத்துகளையும் பதிவு செய்வதாக இருக்க வேண்டும். அத்தகைய தன்மை அவசியமானதாக இருந்தாலும்கூட செய்தி நிறுவன உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகள் இதற்கு மாறாக இருப்பதால் செய்திகளின் தரம் கேள்விக்குறியாகி விடுகிறது.

வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் அவ்வளவு எளிதானவர்கள் அல்ல. அவர்களுக்காகத்தான் செய்தி நிறுவனமே செயல்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இரு தரப்பு கருத்துகளையும் முன்வைத்தால் அவர்கள் எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து முடி வெடுப்பார்கள். ஆனால், ஓரு தரப்பு கருத்துகளை மட்டுமே செய்தியின் வாயிலாக மக்களிடையே திணித்தால் நீண்டகாலம் வாசகர்களையோ, பார்வையாளர்களையோ தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதை செய்தி நிறுவனங்களாகட்டும் அல்லது அவற்றை நடத்தும் அரசியல்வாதிகளாகட் டும் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தொலைக்காட்சி செய்தியாளர்களின் நிலை இவ்வாறு இருக்க, அச்சுப் பத்திரிகை செய்தியாளர்களின் நிலை சற்று வேறாக உள்ளது. மேலே குறிப்பிட்டவாறு தொலைக் காட்சிகளில், செய்தியாளர்களுக்கு பற்றாக் குறை ஏற்படுவதால் அந்த பற்றாக்குறையைப் போக்க அச்சுப் பத்திரிகை செய்தியாளர்களுக்குத்தான் இப்போது வலை வீசப்படுகிறது. இதனால், அச்சுத்துறையில் அனுபவம் வாய்ந்த பல செய்தியாளர்களை அப்பத்திரிகைகள் தற்போது இழந்து வருகின்றன.

எனவே, தொலைக்காட்சிகளின் அதிகரிப்பால் அச்சுப்பத்திரிகைகளிலும் செய்தியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகிவிட்டது. எனவே, அச்சுப்பத்திரிகையின் செய்தித் தரத்திலும் இது தாக்கத்தை உண்டாக்கும் என்பதை மறுக்க முடியாது.

செய்தியாளர்களின் பணி என்பது மகத்தான பணி. தவறு செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தினசரிச் செய்திகளை கண்டு அலறி தங்களை திருத்திக்கொண்ட கால கட்டம் கடந்து விட்டது. காரணம், புலனாய்வுச் செய்திகள் அப்போது அதிகம் வெளியானது. ஆனால், தற்போது புலனாய்வுச் செய்திகளை பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காண முடிவதில்லை.  இதுவும் ஊடகங்களின் பலத்தை வெகுவாக பாதித்துள்ளது

இதற்கு உதாரணமாக இலங்கைப் பிரச்னையைக் கூறலாம். இந்திய அரசியல்வாதிகள் இப்பிரச்னையில் பல்வேறு மாறுபட்ட கருத்துகளைக் கொண்டு அரசியல் லாபத்திற்காக ஒரு தெளிவற்ற தன்மையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றால், ஊடகங்களும் இப் பிரச்னையில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் இத்தனை ஊடகங்கள் இருந்தாலும்கூட எந்த பத்திரிகையோ, தொலைக்காட்சியோ இலங்கை இனப்பிரச்னையின் உண்மையான கோணத்தை வெளிப்படுத்தவே இல்லை. நமது அண்டை நாட்டில், தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையில்கூட தமிழ் ஊடகங்கள் நடு நிலையோடு செயல்படவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலை மாறவேண்டும்.

ஏனெனில், ஊடகங்கள் நினைத்தால் இப் பிரச்னையில் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதோடு, நாடு முழுவதும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்ய முடியும். இதே போலத்தான் ஒவ்வொரு பிரச்னையும்.

தமிழ் ஊடகங்கள் தரமானதாக மாற, ஊடக உரிமையாளர்களின் பார்வை சமூக நலன் கொண்டதாக அமைதல் அவசியம்.

மேலும், ஊடகத்தில் பணியாற்றும் அல்லது கால்பதிக்கும் செய்தியாளர்களுக்குதேடுதல்தேவை.   இதற்கு விசாலமான பார்வை மிக முக்கியம். இல்லாவிடில், செய்திகளும் வருங்காலத்தில் பொழுதுபோக்காக மாறிவிடும் அபாயம் உள்ளது.

நன்றிதினமணி http://www.dinamani.com/epaper/epapermain.aspx

விசுவானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!!!!!! 

தமிழக ஊடகங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறதா? என நம் வலைப்பெருந்தலைகள் தான் சொல்ல வேண்டும்.

%d bloggers like this: