வேடிக்கை

அதிகாலையில் நகர் நோக்கியொரு சிறு பயணம் செல்ல வேண்டியிருந்தது.   செல்லலாமா?  வேண்டாமா? என இரு வேறு யோசனைகள்.  இருந்தும், தவிர்க்க முடியாத கட்டாயம் இருந்ததால், புறப்பட்டேன்.

செல்லும் வழியில் மன்னர் எதிர்ப்பட்டால், ரதங்கள் கடக்கும் வரை பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டி வருமென்பதால்,  பெருவழி தவிர்த்து, சிற்றூர்களின் வழி நகருக்குள் நுழைந்தாயிற்று.  எதிரில் குதிரைப்படை கூட தென்படவில்லை.  ஒரு சில காவல் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

நகர முகப்பில், சிலைகளுடன் கூடிய அலங்காரத் தோரணமே பெருவிழாவொன்று நடைபெறவிருப்பதை கட்டியங்கூறிற்று.

தூய்மையான சாலைகளின் நடுவே சுடர் விளக்குக் கம்பங்கள்,  இலச்சினைகள் பொறிக்கப்பட்ட வர்ணக்கொடிகள், தென்னை, பனையோலைத் தோரணங்கள், ஆங்காங்கே மன்னரின் அருமை, பெருமைகளைப் பறைசாற்றும் பதாகைகள், சாலையின் இருமருங்கிலும் பத்தடிக்கோர் அரண்மனைக் காவல் வீரர் என நகரமே மன்னரின் வருகையையொட்டி, நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

நேற்றிரவு நடைபெற்ற சலங்கை நடனம் காணுவதைக் கூட தவிர்த்து, அரண்மனை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு, தாமதமாய் மன்னர் படுக்கைக்குச் சென்றதால், பரபரப்பின்றி மக்கள் கொஞ்சம் நிம்மதியோடு அலைந்து கொண்டிருந்தனர்.

அனைத்து வழிகாட்டிப் பலகைகளின் அம்புக்குறிகளும் விழா நடக்குமிடம் நோக்கியே இருந்தது.  நிகழ்விடத்தில் சிற்சில சலசலப்புகள் இருந்ததால், கடப்பது தாமதமாயிற்று.  ஊர்வலப்பாதையின் இருமருங்கிலும் வண்ணக்கலவைகளுடனான, கண்ணைக் கவரும் வகையில் ஓவியங்களால், நகரத்தெருக்கள் புதுப்பொலிவுடன் களை கட்டியிருந்தது.

மன்னர் ஊர்வலத்தைப் பார்வையிடுவதற்காக பல்வேறு வண்ணத்துணியலங்காரங்களுடனான தனி உப்பரிகை, இளைப்பாறும் வசதியுடன் தயாராகிக் கொண்டிருந்தது.  இளவரசர், இளவரசி, தளபதிகள் குடும்பத்தாருக்கென தனித்தனியான சிறு உப்பரிகைகள்.  மந்திரிப் பிரதானிகளுக்கும் கூட.

மன்னர் உரைநிகழ்த்தும் நிகழ்விடமெங்கும் சாரை, சாரையாக மக்கள்.  ஆடம்பரத் தோரணவளைவுகள்,  குதிரைப்படை வீரன் சிலை, புலவர்களின் சிலைகள் என ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  கூடாரங்களின் உட்புற மேற்பகுதி கூட அலங்கரிக்கப்பட்டிருந்தது.  கூடங்களில் மிகப்பெரிய பாத்திரங்களில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது.  தங்குமிடங்களனைத்தும் அரண்மனை காவலர்களாலும், சேவகர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.  பயிர் நிலங்களை செப்பனிட்டு, ரதங்களை நிறுத்துவதற்கு தயார்ப்படுத்தியிருந்தனர்.

மன்னர் தங்கியிருந்த மாடமாளிகையின் முன்னே,  எப்போது, என்ன உத்தரவு வந்தாலும் செயல்படுத்துவதற்கேற்ப பல்வேறு ரதங்கள் தயார் நிலையில் இருந்தன. சிறப்பு பயிற்சி பெற்ற காலாட்படை வீரர்களும் வித்தியாசமான உடையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.  அரண்மனை அதிகாரிகளும் அதிகளவில் குழுமியிருந்தனர்.

தமிழினத்தைத் தழைக்கவைத்தால் தமிழ் தன்னால் வளரும்.  அதை விடுத்து, மக்களனைவரும் உழைத்துக் கொடுத்த வரிப்பணத்தில், ஆடம்பர விழாவை விமரிசையாக, நடத்தி வீண் செலவழிக்கிறாரே இம் மன்னர்? என்ற கடைக்கோடிக் குடிமகனுக்கேயுரிய யதார்த்த கேள்வியுடன், வேடிக்கை மட்டும் பார்த்து விட்டுப் பத்திரமாய் ஊர் திரும்பினேன்.

பொன் மாலை

திருப்பூரிலிருந்து நான், சாமிநாதன், பரிசல்காரன், பேரரசன், சொல்லரசன், முரளி, சிவா, ராமன், வெங்கடேஷ் மற்றும் மதுசூதனன் ஆகியோர் நிகழ்வில் பங்கு கொள்ளச் சென்றோம்.  சாமிநாதனின் ஆலோசனைப்படி மூன்று கார்க் கண்ணாடிகளின் முன்னும் பின்னும் திருப்பூர் வலைப்பதிவர் பேரவை என்ற சீட்டு ஒட்டப்பட்டு மூன்று மணியளவில் திருப்பூரிலிருந்து கிளம்பினோம்.

அரங்க வாசலிலேயே நண்பர்கள் நந்து, கதிர், கார்த்தி, ஆரூரன் உள்ளிட்ட நண்பர்கள் தேநீர் கொடுத்து வரவேற்றனர். ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயர்கள் எழுதி சட்டையில் மாட்டிக் கொள்ளும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.  அனைவரின் தனி அறிமுகத்துக்குப் பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்வுகள் பற்றிய காணொளி விரைவில் தமிழ் மணத்தில் இணைக்கப்படும் என கதிர் தெரிவித்தார்.

படங்களுக்கு நன்றி முரளி.

ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் என்ற பெயரில் இனி ஈரோடு பதிவர்கள் செயல்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.

பதிவுகள், பதிவர்களின் சந்தேகம் தீர்க்கும் கலந்துரையாடலுக்கு பெருந்தலைகளுடன் என்னையும் சேர்த்திருந்தார்கள்.

சிறந்த ஏற்பாடுகளுடனான, மிக அருமையான சந்திப்பு, அருணின் அட்டகாசத்துடன் நிகழ்ச்சி ஏழு மணிக்கு நிறைவுற்றது.

சுவையான இரவுணவுக்குப் பின் சாமிநாதன் காரில் இளையராசாவின் பாடலோடு கிளம்ப யத்தனிக்கும் போது, சென்னை நண்பர்களும் காருக்கருகில் வந்தனர்.  பின்னர், இருபது நிமிடங்களை இளையராசாவின் இசை வெள்ளத்தில் நண்பர்களனைவரும் சேர்ந்திசை பாடி, ஆடிக் கழித்தோம்.

நிகழ்வுகளைப் பற்றிய பேச்சுக்களோடு கார் திருப்பூர் வந்தடைந்தது.

ஞாயிறு மாலைப் பொழுதுகளை, திருப்பூரிலிருந்தால் எப்பவுமே போராடி நகர்த்த வேண்டியிருக்கும்.  சென்ற ஞாயிறுப் பொழுது ஈரோடு நண்பர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் மற்ற நண்பர்களின் சந்திப்பிலும் பொன் மாலைப் பொழுதாகக் கழிந்தது.

நன்றி நண்பர்களே!