Archive for the ‘சிறுகதை’ Category

கருவாயன்

திண்டுக்கல்லில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளரும் கொல்லப்பட்டார்…………

சீத மகன் கருவாயனா? என்னத்தா சொல்றே?

அவந்தான் மச்சினி! கருவாக் கணேசன்.  கடேசிப் பய.  இப்பந்தான் செயபால் கடைல நின்னுட்டிருந்தப்போ, சண்டியர் கடைல வேல பாக்க பையன் சொல்லீட்ருந்தான்.

கோவக்காரந்தான்.  ஆனா, உசுர எடுக்கத் துணிய மாட்டான்த்தா.  சும்மா மல்லுக்கட்டி ரெண்டு தட்டு தட்டீருப்பான்.

இல்லங்கேன்ல.  நல்லாத் தான் கேட்டுட்டு வந்தேன்.  கொடலு, குந்தாணியெல்லாம் கீழ கெடந்துச்சாம்.  எல்லாத்தயும் அள்ளிப் போட்டுத் தான் காட்டாஸ்பத்திரிக்கு தூக்கீட்டு போனாகளாம்.

அடச்சனியம் புடிச்சவனே! என்னத்துக்குத் தான் இந்தக் காரியம் பண்ணுனானோ?  சீதைக்கு, பெத்த வயிறு பத்தி எரியுமே……

இந்தப் பாட்டுப் பதியுத கட என்னிக்கு தெருவுக்குள்ள நொழைஞ்சதோ, அன்னைலருந்து சனியம் புடிச்சிட்டுது.

பட்டாசலில் படுத்திருந்த எனக்கு அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த குரல், எலத்தூராவோடதுனு கண்டுபிடிக்க முடிஞ்சது.  ரெண்டு பேரும் தெக்கருந்து இங்க வந்து வாக்கப்பட்டதால, பேச்சுல தின்னவேலி வாடையடிக்கும்.

கணேசன் என்ற பெயர் காலப்போக்கில் கருவாயன் என்றே நிலைத்து விட்டது அவனுக்கு.  அதுவே சரியான அடையாளமும் கொடுத்தது.  ஆள் கன்னங்கரேர்னு ஓங்கு தாங்கா இருப்பான்.  சந்துக்குள்ள நடந்து போனா, வீட்டுல தரையில படுத்திருக்கும் நமக்கு, தரையெல்லாம் அதிர்வது தெரியும்.  எப்பவும் உதட்டின் இரு விளிம்பிலும் புண்ணாகி வங்கு பிடிச்சு ப் போயிருக்கும்.  பெரும்பாலும் அழுக்குக் கைலியும், 4 பித்தான்கள் கழட்டி விடப்பட்ட சட்டையோடு தான் அலைவான்.  வேலை…….. புதுப்படம் வந்த ஒரு வாரத்துக்கு அந்த தியேட்டருக்கு வெளியே திருட்டு டிக்கெட் வித்துட்டிருப்பான்.  மத்தபடி எந்த வேளையிலும் வேலைக்கு போனதே கிடையாது.

கேசட் புழக்கத்துக்கு வந்ததும், கேட்ட பாட்டை பதிஞ்சு கொடுக்குற கடைகளும் ஊருக்குள்ள பெருத்துப் போச்சு.  ரெண்டாங்கேட்டுக்கிட்ட இருந்த கேசட் கடை தான் முதல்ல பிரபலமா இருந்துச்சு.  இப்பம் எங்க தெருவுலயும் ஒரு கடை புதுசா வந்திச்சு.  அத முதல் போட்டு ஆரம்பிச்சது நாலு பேர்.  சேது மாமாவும் அதுல ஒரு முதலாளி! பொழுதன்னிக்கும், கட வாசக்கதவுக்குப் பக்கத்துலேயே ஒரு ஸ்டூல் போட்டு ஒக்காந்திருப்பாரு.  அந்தப் பக்கம் போனாலே ஏ மாப்ள எங்கே போற? வாண்ணா கடேல கொஞ்ச நேரம் உக்காந்திரு! கூப்ட்டு உக்கார வச்சிட்டு,  இருக்கவுக எல்லாம் டீ குடிக்கப் போயிருவாக.   பொழுது போகலைன்னா, நானும் அந்த மியூசிக்கல்ஸ்ல தான் உக்காந்திருப்பேன்.  ஜல், ஜல்னு சத்தத்தோட ஸ்டீரியோவுல பாட்டுக் கேக்க முடியும்.  எழவு, எந்தப் பாட்டை அங்கன கேட்டாலும் நல்லா இருந்து தொலையும்.

மியூசிக்கல்ஸ்ல பாட்டு பதியுற வேலை செஞ்சவரோட கையெழுத்து ரொம்ப அழகா இருக்கும்.  நாலைஞ்சு கலர்ல பேனா வச்சிருப்பார்.  படத்து பேருக்கு ஒரு கலர், பாட்டுக்கு ஒரு கலர், பாடுனவங்க பேருக்கு ஒரு கலர்னு கேசட் அட்டைல எழுதுவார். அவரோட மாமா தான் மாரியப்பன்.  எப்பயாச்சும் வந்திட்டிருந்தவன், வர வர தெனைக்கும் வர ஆரம்பிச்சுட்டான்.  அப்பறம் தான் இந்த லெச்சுமிப் புள்ளயக் கூட்டிக்கிட்டு ஊரச் சுத்துறத வாடியான் கேட்டுக்கிட்டப் பாத்தேன், தெப்பத்து எறக்கத்துல பாத்தேன்னு தெருவுக்குள்ள ஒரே பேச்சா இருந்துச்சு.  இப்பத் தான் கொஞ்ச நாளா இங்கிட்டுத் தலயக் காட்டல.

ஏற்கனவே, போன வாரம், எங்க தெருப் புள்ளய, ஏங்கூட்டீட்டு சுத்துறனு கணேசன் பய, மாரியப்பங்கிட்ட சிலுவ இழுத்திருக்கான்.  இன்னைக்கு என்னடானா, மாரியப்பன கணேசன் குத்திட்டான்னு பேச்சு.  கணேசன்ட்ட எப்பமும், ஒரு கத்தி இருக்கும்.  எங்கிட்டயும் ஒரு மட்டம் காமிச்சிருக்கான்.  அத வக்கிறதுக்குண்ணே தோல்ல ஒரு உறை.  உறையோட இடுப்புல சொருகியிருப்பான்.  அந்தக் கத்தி விளிம்புல மொனை கூரா இல்லாம,  லேசா, சுழிச்சமானைக்கு இருக்கும்.  அதுல குத்துனா, உள்ளருக்க கொடல வெளிய இழுத்துட்டு வாறதுக்குத் தான் மொனையை லேசா சுழிச்சு தொரட்டி மாதிரி வேணும்னு சொல்லி செஞ்சிருக்கேன்னு சொன்னான்.

இந்த மாதிரிச் சாமானுகளச் செய்யுறதுக்குண்ணே ஒரு சில ஆளுக இருக்காகனு மணியாசாரி சொல்லீருக்காரு.  அவரும் கொல்லாசாரி தான்.  உளி, கடப்பாரை இதுக்கெல்லாம் கூர் வப்பாரு.  பெரிய வேலைன்னா, மாட்டு வண்டிச் சக்கரத்துக்கு பட்டை மாட்டுறது.  அது கொஞ்சம் நொரண்டு பிடிச்ச வேல.  சக்கரத்தைச் சுத்தி இருக்கிற இரும்புப் பட்டையக் கழட்டி, சக்கரத்து அளவுக்கு கொஞ்சம் கம்மியா, வெட்டி, சேத்து, பட்டை சுத்தளவுக்கு நெருப்பு வச்சு சூடாக்கி, சக்கரத்துல மாட்டணும்.  பட்டை போய் சக்கரத்துல இறுக்கமா உக்காரணும்.  இந்த வேல தெரிஞ்ச ஒரு சிலவங்கள்ல மணியாசாரியும் ஒருத்தர்.

ஒரு நா ராத்திரி அவரோட ஒக்காந்து பேசீட்டிருக்கப்ப, நைசா ஒரு விசயம் சொன்னாரு.  எனக்கும் அந்த மாதிரிச் சாமானெல்லாம் செய்யத் தெரியும்டா.  ஆனா, அந்தச் சோலியப் பாத்து வாற காசு நம்மட்ட நிக்காது.  சீக்கு, சிடுங்கல்னு புடுங்கீட்டுத் தான் போவும்.  ஆனா, ஒரு பயலுக்கு மட்டும் மின்னால அருவா மட்டும் செஞ்சு கொடுத்திட்டிருந்தேன்.  பட்டை மட்டும் அவனே கொணாருவான்.  ராத்திரியோட ராத்திரியா ஒக்காந்து அடிச்சு மட்டும் கொடுப்பேன்.

யாருண்ணே அது?

வெளிய யார்ட்டயும் சொல்லிராத, இப்ப வெயிலு முத்துவப் போட்டுட்டு உள்ள போய்ட்டு வந்திருக்குல்ல காளியப்பன்.  அதுக்கு மட்டுந்தான் செஞ்சு குடுப்பேன்.  அவன் எஞ்சேக்காலி.  சின்னப்புள்ளைல ஒண்ணு மண்ணாத் திரிஞ்சிருக்கோம்.  ஆனா, காசு வாங்க மாட்டேன்.  எதும் நமக்கு பிரச்சனைன்னா, பஞ்சாயத்துக்கு கூப்டா எடத்துக்கு வரும்.  லாரிக்கு அடியில பட்ட இருக்கும்ல, அதுல செஞ்சாத் தான் நல்லா கெனமா, இருக்கும்.  திருப்பியும் போடலாம்.

திருப்பியா?  புரியலண்ணே.

முன்னாடி மட்டும் வெட்டுவாய்ங்ஙனு நெனைக்காதடா.  அருவாள்ல மொன்னப் பக்கம் இருக்குல்ல.  அதுலயும் போடுவாய்ங்ங.

போட்டா?

உசுரு போகாது.  ஆனா, அருவாவ திருப்பிப் போடும் போது மொக்கையடியா விழும்.  ரத்தம் வராது.  ஆனா, காலு கை சேதாரமாகும்.  இழுத்துக்கும்.  போலீசு கேசு நிக்காது.

காலையில் பட்டறைக்கு போயிருக்கப்போ, மணியாசாரி தான் விசயத்தை முழுசாச் சொன்னாரு.  ஒங்க தெருக்காரன் கணேசன், மாரியப்பனக் குத்துனான்ல! உள்ள புடிச்சு போட்டுட்டாங்கடா.  லெச்சுமிப் புள்ளய ரெண்டாவது ஆட்டத்துக்கு, சைக்கிள்ல வச்சு முத்து டாக்கீஸ்க்கு மாரியப்பன் கூட்டீட்டுப் போயிருக்கான்.  இத கணேசன் பய பாத்துருக்கான். அத மனசுல வச்சுக்கிட்டு ரெண்டு பேரும் கொஞ்ச நாளா, எங்கணக்குள்ள பாத்தாலும், உர்ரு… உர்ருன்னே சுத்திட்டிருந்திருக்கானுக.  அன்னைக்கு ஏதோ பேசப்போயி கடேசில கைகலப்பாகிப் போச்சு.  கணேசன் கத்திய எடுத்துக் குத்திட்டான்.  கொடலு துண்டா வெளிய வந்திருச்சு.  அப்புடியே மாரியப்பன் கை வண்டியில குப்புறக் கவுந்துட்டான்.  அதுக்கப்புறம் கணேசன் பக்கத்துல கெடந்த செங்கக்கட்டிய எடுத்து மாரியப்பன் மேல வரிசைக்கு எறிஞ்சிருக்கான்.  மண்டயில, முதுகுல, குறுக்குல சரியான அடி.

இதுக்கப்புறம், அன்னைக்கு சாய்ந்தரமே கச்சேரில சரணடைஞ்சு உள்ள போன கணேசன் மதுர செயில்ல போட்டுட்டாங்க.  மாரியப்பன் பொழச்சி, லச்சுமியவே கட்டிக்கிட்டான்.  ஆனா, குனிய, நிமிர முடியாம குறுக்கு ஒடிஞ்சத ஒண்ணும் பண்ண முடியல. கழுத்தை இங்கிட்டு அங்கிட்டுத் திருப்ப முடியாது.

கடேசியா, சீசனுக்கு போயிருந்தப்ப அருவிக்கரைல கருவாயனப் பாத்தேன். ஊருக்குள்ள இனி வரமுடியாது மண்டையா!  மாரியப்பனோட தம்பி எப்படா என்னப் போட்டுத் தள்ளுவோம்னு காத்துக் கெடக்கான்.   அதனால, எதுக்கு திரும்ப பிரச்சனைனு, செயில்ல பழக்கமான ஒரு அண்ணாச்சிக்கு கையாளா திண்டுக்கல்லுக்கிட்ட இருக்கேன்.  ஒரு மட்டம் உள்ள போய்ட்டு வந்திட்டா, வாழ்க்கையே அம்புட்டுத் தான்னு சொல்லிட்டு அவன் பார்த்த பார்வையில், இளமையை, வாழ்க்கையைத் தொலைத்த வலி தெரிந்தது.

இரு தினங்களுக்கு முன் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளர் கணேசன் (36) என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை என்றும், இரு தினங்களுக்கு முன் திண்டுக்கல்லில் வெட்டிக் கொல்லப்பட்ட, ரவுடியின் கொலைக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisements

ஆறு தையல்

வர்றேன்னு தான சொன்னான்…. மறந்திருப்பானோ?
நேத்து நைட்லருந்து அலைச்சல் சாஸ்தி தான். காசு கூடக்கொஞ்சம் இருந்திருந்தா, சீலுத்தூர்லருந்து பர்வீன் டிராவல்ஸ்லேயே வந்திருக்கலாம். நாலு பஸ்சு மாற வேண்டியதாப் போச்சு. மெட்ராஸ்ல எறங்கி டவுண்பஸ் ஏறத்தெரியாம, ஆட்டோக்காரனுக்கு வேற நூத்தம்பது ரூவா அழுதாச்சு.

ரொம்ப ஆழமா வெட்டியிருக்கு…. டாக்டர் வர லேட்டாகும். ஜே.ஜே கூட்டிட்டுப் போயிடுங்க.
சீக்கிரமாப் போடா…. வலிக்குது.

வெயில் நம்ம ஊரவிட கொஞ்சம் சாஸ்தி தான். இதுலயும், இங்கிட்டும் அங்கிட்டும் அலைஞ்சிட்டுத் தான இருக்கானுக. அவதி, அவதியா வந்தது நல்லதாப் போச்சு. கடைசிக்கு மூஞ்சியவாவது பாக்க முடிஞ்சது. என்ன தான் வயசானவர்னாலும், எல்லாருக்கும் வருத்தமிருக்கும்ல. எல்லாம் முடிச்சிட்டு குளிச்சப்பறம் தான் கொஞ்சம் நல்லாருக்கு.

காலை மேல வைங்க. எப்படி ஆச்சு?
டூவீலர்ல போய்ட்டிருக்கப்போ எதிர்ல வந்தவன் மோதிட்டான்.
காயம் பெருசா இருக்கு. இத ஆர்த்தோட்ட காமிக்கறது தான் நல்லது.

பசி வயத்தக் கிள்ளுது. வீட்டுக்கு வழி தெரிஞ்சா நடந்தே போயிரலாம். வெக்கயில எப்படி நடந்து வழி கண்டுபிடிக்கிறது? எல்லாக் கழுத ரோடும் ஒரே மாதிரி இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் நிக்கலாம். லாட்ஜ் முன்னாடியே நில்லுங்க. பெருமாள் அண்ணனை விட்டுட்டு வந்து கூட்டீட்டுப் போறேன்னு தான சொன்னான்.

பல்லவா ஆஸ்பிடல் போயிடலாமாடா?
மொதல்ல போய் ஒரு பால் வாங்கீட்டு வா. தலையச் சுத்துது. ஆட்டோ எதுனா இருந்தா வரச்சொல்லு. பைக்ல உக்காரமுடியுமானு தெரியல.

ஒரு வேளைக்கு என்ன நிக்கச் சொன்னத மறந்திட்டானோ? நல்ல பய தான். பாலண்ணன் கல்யாணத்தப்போ ஒரு வாட்டி குத்தாலத்துல பாத்துருக்கேன். அவ்வளவா பழக்கமில்ல. இருந்தாலும் நடந்து வர்றேன்னு சொன்னவன நிக்கச் சொன்னது அவன் தானே.

எப்படி ஆச்சு? ஆக்ஸிடெண்டா?
ஆமா! பைக்ல.
எக்ஸ்ரே எடுத்துப் பாத்துட்டுத் தான் சொல்ல முடியும். அந்த ரூம்ல போய் எக்ஸ்ரே எடுத்துட்டு வந்துடுங்க.

ஏன் இந்தப்பய இப்படிப் பண்றான்? மண்டக்கனம் பிடிச்ச பயலா இருப்பானோ?  கணேசனக் கூப்பிடலான்னா வடபழனி போயிட்டான்.  பாலண்ணனுக்கு கூப்பிடலாம். அவர் வேலையா இருப்பாரு.

எக்ஸ்ரேல க்ராக் எதும் இல்ல. ஸ்டிச் தான் போடணும்.
உங்க பேர் என்ன?

திமிர் பிடிச்சவனா இருப்பானோ? ஒரு ஆள நிறுத்தி வச்சிட்டுப் போனோமே? என்ன ஆனான்னு கொஞ்சமாவது நினைச்சுப் பாக்காம தெரியாத ஊர்ல காக்கப் போட்டுட்டுப் போயிட்டானே தடிப்பய….

ஸ்……
வலி இருக்கா? வலி தெரியாம இருக்க சிஸ்டர் இன்ஞெக்சன் போட்டாங்கள்ள?
ரொம்ப வலிக்குது டாக்டர்.
கொஞ்சம் பொறுத்துக்கோங்க. முடிஞ்சது.

இவ்ளோ நேரமாகியும் வரலயே அந்தப் பய. எங்க போய்த் தொலைஞ்சானோ? அட்ரசக் கேட்டுக் கேட்டு பாலண்ணன் வீட்டுக்குப் போய்ர வேண்டியது தான். சாப்பிட்டுட்டு காலாகாலத்துல ஊருக்குப் பொட்டியக் கட்டணும்.

எத்தனை தையல் டாக்டர்?
எல்லாரும் ஏன் இந்தக் கேள்வியக் கேக்கறீங்கனு புரியல? தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?

பாஸ்பரஸ் விளைவுகள்

டேய் செரட்ட! எதுக்குடா ஸ்டிரைக்கு?
எனக்கென்ன தெரியும்?  நானும் உங்கூடத்தான வர்றேன்.
அந்தா, அவன் உந்தெருக்காரன் தான? கேட்டுப் பாரேன்!
டேய் சைசு! இப்பக் கேட்டேன்னா அப்பியே புடுவாங்ஙடி!  மூடிட்டு வா!

வெளியேறு!  வெளியேறு!  பள்ளியை விட்டு வெளியேறு!
மாற்று!  மாற்று!  தலைமையாசிரியரை மாற்று!

என்ன ஸ்டிரைக்குடா?  எதுக்கு இப்புடி ஊர்வலம் போறீங்க?
தெர்லண்ணாச்சி!  பன்னெண்டாப்பு அண்ணங்ஙெல்லாம் காலைலயே பள்ளியூடத்துக்குள்ளயே உடல.  அங்கருந்து ரோட்டு வழியெ கூட்டீட்டு வந்துட்டாங்கண்ணாச்சி!

பள்ளிக்கூடம் இன்னிக்கு இருக்காடா?
போயிப் பாத்தாத்தான தெரியும்.  கெளம்பு!
காக்கி டவுசர் மாத்தீட்டு வரட்டா?
போய்ப் போட்டுட்டு வா!  இல்லேண்ணா, ஒண்ணுமில்லாமக் கூட வா! எனக்கென்ன?
இர்றா மயிரு! மாத்தீட்டு வர்றேன்! பள்ளிக்கூடம் தொறந்திருந்தா திரும்ப ஓடியாறணும்?

பள்ளியூடத்து பக்கம் போனியாடா?
இல்லடா!  நா அங்கிட்டுப் போகல…. கவட்டக் காலன் காலைல நந்தவனத்துக்கிட்ட வெளிக்குப் போம்போது பாத்தானாம்.  திரும்ப சொல்ற வரைக்கிம் லீவுனு தட்டில எழுதிப்போட்டிருந்துச்சாம்.
ஐய்யய்யோ!  சும்மாவே எங்கய்யா படி! படிம்பாரு.  இனி பொஸ்தவமும், கையுமா வீட்டுக்குள்ளயே ஒக்கார வச்சிருவாரு.  என்ன பண்றதுடா?
நம்ம க்ளாசு வாத்தியார் வீட்ல வச்சு பாடம் நடத்துறாராம்.  க்ளாஸ் மாதிரி இல்லியாம்.  நல்லா ஜாலியா சொல்லித் தர்றாருனு மூக்கன் சொன்னான்.  அங்க போயிரலாண்டா!

காட்டாஸ்பத்திரிக்கிட்டருக்கு வாத்தியார் வூடு! அது வரைக்கும் பைக்கட்டத் தூக்கீட்டு வரமுடியாதாடா சைசு?
சைக்கிள்ல சும்மா டக்கடிச்சிட்டு  தான வர்ற…. பின்னாடி கேரியல்ல வச்சா கொறஞ்சா போற?
செரட்ட! எதுக்கு லீவு வுட்டாங்ஙனு மாங்காயன்ட்ட கேட்டியாடா?
இல்ல. அவன் தெருப்புள்ளைக கூட சேந்து தீப்பெட்டி ஒட்டீட்டிருந்தான்.  கேக்க முடியல.

எதாச்சும் தெரிஞ்சுச்சாடா?
ம்… ம்…. சொல்றேன் எவங்கிட்டயும் சொல்லீராத!  பக்கத்துக்க்ளாசுல ஆரோக்யராஸ் இருக்கான்ல.  லூயிசு கூடச் சுத்திட்டிருப்பான்ல.
ஆமா! அவிங்ங ஞாய்த்துக்கிழம கோயிலுக்கு ஒண்ணாப்போவாங்ங.
அப்பம்போது தான் ஆரோக்கியத்துக்கிட்ட, லூயிசு சொன்னானாம்.
என்ன சொன்னானாம்டா?
அது, லூயிசு கூடப்படிக்கிறவன் ஒருத்தன் கேட்டான்னு, பாஸ்பரஸ்னு ஒரு மருந்து இருக்காமே? அதுல கொஞ்சத்த மிச்சர் பொட்டணம் மாதிரி மடக்கி பள்ளிக்கூடத்துக்கு கொணாந்தானாம்.

அவனுக்கு எப்படிக் கெடச்சதுடா?

லூயிசோட மச்சான் அல்லம்பட்டில தீப்ட்டி ஆபிசு வச்சிருக்காரு.  அங்கணருந்து எடுத்திட்டு வந்திருக்கான்.
எடவேளையப்ப தொடயில சுரு சுருன்ருக்கு.  என்னனு பாத்தா, டவுசர் பைக்கட்ல இருந்த பொட்டணம் கிழிஞ்சு, பைக்கட்ல ஓட்டை விழுந்திருக்கு.  தொடையிலயும் லேசா பொத்துப் போன மாதிரி இருந்திருக்கு.

பொறவு?

எந்திச்சுப் போயி எட்மாஸ்டரப் பாத்து வீட்டுக்குப் போறதுக்கு கேட்டிருக்கான்.  வெவரத்தச் சொல்லி, தொடையக் காமிச்சிருக்கான்.  கடசி ரூம்ல இரு. பெல்லடிச்சதும் நா வர்றேன்ருக்காரு.

அப்றம்?

அம்புட்டுத் தான் சொன்னானாம் லூயிசு.

ஆனா, எட்மாஸ்டர் ரெஸ்ட் எடுக்குற ரூம்லருந்து லூயிசு அழுதுட்டே வந்தத இட்லிக் கருப்பையா வாத்தியார் கிளாசுப் பயங்ஙெல்லாம் சன்ன வழியா பாத்திருக்காங்ங.

ரூம்ல என்ன நடந்துச்சுடா?

ம்… எட்மாஸ்டர வேணாக் கேட்டுச் சொல்லட்டுமா?  இப்பம் அவருமில்ல.

என்னடா சொல்ற?  எங்க போயிட்டாரு?

அவரு இங்கயில்ல?  அவங்க வேதக்கோயில்ல சாமியார் முன்னாடி கட்டப்பஞ்சாயத்தாம்.  லூயிசிட்டயும், சாமியார்ட்டயும் மன்னிப்பு கேட்டுட்டு வேற ஊருக்குப் போயிட்டாராம்.

நல்ல வேளைக்கு ரெண்டு பேரும், ஒரு சாமி கும்புடுற வேதக்காரங்ஙன்றதுனால பிரச்சனை முடிஞ்சுதாம்.

பாஸ்பரச பைக்கட்ல வச்சா எப்புடிடா ஓட்ட விழும்?

பாஸ்பரச காத்துல வச்சாக்கூட புகையா வந்திருமாம்.  சண்டைக்காரங்ங, அவங்ஙளுக்குப் புடிக்காதவங்ங வீட்டுக் கூரைல இத எறிஞ்சிட்டுப் போயிருவாங்ஙளாம்.  கொஞ்சநேரங் கழிச்சு கூரை தீப்பிடிச்சிருமாம்.  அதெயும் ஆரோக்கியந்தான் சொன்னான்.

டவுசர் பைக்கட்ல ஓட்ட விழுந்ததுக்கெதுக்குடா செரட்ட ஸ்ட்ரைக்கு? எட்மாஸ்டர் எதுக்கு மன்னிப்பு கேட்டாரு?  ஏன் போனாரு?
அப்டியே குண்டில நாலு வப்பு வச்சா எப்டிருக்கும் தெரியும்ல?  நானே அது தெரியாமத் தான் மண்டய கொழப்பிட்டிருக்கேன்.

முயல் மார்க்

கந்தையா!  டேய்…. கந்தையா! வெளையாடப் போனன்னா ஒரேடியா போக்கழிஞ்சு போயிருவ.

சொல்லும்மா! 

நேரத்துக்கு வந்து தின்னுட்டுப் போனா என்னடா?  பசையில கை வச்சிட்டேன்னா, நீயே தான் எடுத்துப் போட்டு தின்னுக்கணும்.

எனக்கு பசிக்கலம்மா! இங்கன பிள்ளையார் கோவில் கிட்ட வெளாண்டிட்டிருக்கேன்.  அப்பா வர்ற நேரத்துக்கு கூப்பிடு.

வாடா மொதல்ல வீட்டுக்கு.  அங்க போய் ஆடுற நேரத்துக்கு ரெண்டு கட்டு ஒட்டலாம்லடா. 

போம்மா! ஒட்டுனா நீ காசு தரமாட்ட.  ஒட்டி முடிச்சு சனிக்கெழம சம்பளம் வாங்குனதும் வீட்டுச் செலவுக்கு பத்தலம்ப.

இல்ல ஆங்ஞான்!  இப்பம் வந்து ஒட்டு.  இன்னைக்கு கொண்டோய் குடுக்கணும்டா.  இல்லைன்னா, காளியப்பன் வைவான்டா.

இப்புடி அவசர   அவசரமா ஒட்டி காஞ்சும், காயாம கொண்டு போனா, போறதுக்குள்ள வாயப் பொளந்திருது.  அவன் சத்தந்தான் போடுவான்.

சரி! ஓடியா.  நல்ல பிள்ளைல்ல.  வந்து பசை தடவி குடுக்கேன்.  சமத்தா ஒட்டி மட்டும் போடுவியாம்.  போய் கை, கால் கழுவீட்டு வந்து உக்காரு.  சாப்ட்டுட்டு ஒட்டலாம்.

 

ம்மா! ம்மா!

நொய்யு நொய்யுங்காம சீக்கிரம் ஒட்டிப் போடுடா!

நாராயணசாமி டாக்கீஸ்ல புதுப்படம் போட்டிருக்கான்.  நா நாலு கட்டு ஒட்றேன்.  சம்பளம் வாங்கி அம்பதீசா குடுப்பியா?

படத்துக்கு போறது, அப்பாக்கு தெரிஞ்சது கொன்னே போட்ருவாங்க.

நாயித்துக் கெழம சரசத்த வீட்டு நிச்சியத்துக்கு தூத்தூடி போவாங்கள்ள.  முந்தாநா கூட லெட்டர் வந்திச்சே.  அப்ப போய்ட்டு வந்திர்றேன்.

இத  மட்டும் கரெக்டா தெரிஞ்சு வச்சுக்கோ.  களவாணிப்பெய. களவாணிப்பெய. அதென்ன நாலு கட்டு கணக்கு? நாலு கட்டு ஒட்டுனேன்னா, கட்டுக்கு 7 பீசா.  28 பீசா தாண்டா வரும்.

போம்மா! ஒரு கட்டுக்கு 144 தாள்.  அத முழுசும் ஒட்டுனா 7 பீசா தானா?  முத்துராம்பட்டியிலெல்லாம் பத்து பீசாவாம்மா. கூடப்படிக்கிறவங்ங சொன்னாங்ங.

அடிப்பெட்டிக்கா இருக்குண்டா. அதுல சில்லு போடுற வேல இருக்குல்ல.

இல்லம்மா, மேப்பெட்டிக்குத்தான்!

இங்கனக்குள்ள, தந்திமரத் தெரு வரைக்கும் மூட்டய சைக்கிள்ல கொண்டாந்து தாடான்னா, ஒனக்கு வலிக்குது.  இதுல முத்துராம்பட்டி வரைக்கும் எப்புடி நான் ஒத்தயில மூட்டயத் தூக்கீட்டுப் போறது?  என்னால முடியுற வரைக்கும் ஒட்றேன்.  இப்பவே அப்பப்ப ஒருவடியா வருது. 

 

எம்மா நா போய்ட்டு வாறேன்!

பத்தரமா போய்ட்டு வா!  அங்க இங்க பராக்கு பாத்துட்டு நிக்காத.  படம் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்து சேரு.

சரிம்மா!

 

கையில அம்பத்தஞ்சீசா இருந்ததுடா மாரியப்பா!  நாப்பதீசா டிக்கட்டு.  பத்தீசா வாங்கித்திங்க. அஞ்சீசா எதுக்குமிருக்கட்டுன்னு அமுல் டப்பாக்கு அடியிலருந்து எடுத்திட்டுப் போனேன். ஒரு வேளைக்கு நாப்பதீசா டிக்கட்டு கிடைக்கலீன்னா, அம்பத்தஞ்சீசா டிக்கட்டு எடுத்துக்கலானு வச்சிருந்தேன்.

புதுப்படம்னா,பேருக்கு பத்து டிக்கெட்டக் குடுத்துட்டு இல்லைன்னுருவாங்ஙனு கவுண்டர் கதவ  ஒட்டி நின்னுட்டிருந்தேன்டா.

கதவத் தொறந்ததும்… நெரிச்சு தள்ளினாங்ங. யப்பா! கவுண்டருக்குள்ள போறதுக்குள்ள நச்சு சாணி சக்கையெடுத்திட்டாங்ங.  உள்ள போம்போதே ஒருத்தன் என்ன உள்ள வுடாம டவுசர் பையப் பிடிச்சு இழுத்தான்.  நானும் உடாம பிச்சுப் புடுங்கிட்டு உள்ள போய்ட்டு, டிக்கெட் எடுக்க டவுசர் பைக்குள்ளருந்து காச எடுக்குறேன்…..  இருவதீசா தாமரத் துட்டக் காணம்.  எவனோ அடிச்சிட்டான்.

பொறவு…. என்ன பண்ணுன?

பெறவென்ன? நாராயணா பாட்டு வேற போட்டுட்டாங்ங.  நாப்பதீசா தரை டிக்கெட்டுக்கே அஞ்சீசா குறஞ்சது.  வீட்டுக்கு திருப்பி வந்துட்டேன்.  அம்மாட்ட டிக்கெட் கெடைக்கலைனு சொன்னேன்.

காசத் திருப்பித் தரச்சொல்லி கேட்ருப்பாங்கள்ள?

இருபதீசாக்கு பால் அய்ஸ் வாங்கித் தின்னேன்னு சொல்லி, மிச்சக்காசக் குடுத்திட்டேன்.

அப்பம் படம் திருப்ப எப்ப பாக்கப் போற?

எங்கப்பா எங்கியாவது ஊருக்கு போனாத்தான்.  அதுக்குள்ள காசு வேற சேக்கணும்.  நா பள்ளிவாச வழியா காளியப்பன் தீப்பெட்டி ஆபிஸ்க்குப் போயி பசை மாவு வாங்கப் போறேன்.   

 

இதென்ன தீப்டி ஆபீஸ் அண்ணாச்சி? 

என் பசை மாவு டப்பால துத்தம் எடுத்து போட்டுட்டிருந்த கணக்கப்பிள்ள ‘முயலு’  ‘முயலு’ன்னாரு.

rabbit drawing

நூத்தியொண்ணு, ரெண்டு, மூணு, நாலு…

ச்சே! நூத்தி நாப்பத்தி நாலு தீப்பெட்டி ஒட்டுனாத்தான் ஒரு கட்டு முடியும்.  இன்னம் மூணு கட்டு ஒட்டணும்.

 

உரையாடல் : சமூகக் கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை

காத்திருந்த காதலி – 3

வடகரை வேலனின் – காத்திருந்த காதலி – 1

பரிசல்காரனின்         – காத்திருந்த காதலி – 2

நண்பர் பரிசல்காரன், இன்னும் காத்திருந்த காதலியக் காணோமே? னு என்னை போன்ல கூப்பிட்டுப் பார்த்தார்.  அப்புறம், நேர்லேயே வந்துட்டார்.  இதுக்கு மேலயும் காக்க வைக்க விரும்பலை.

ஆனா கதையைப் படிக்கிறதுக்கு முன்னாடி நிபந்தனைகளைப் படிச்சுக்கோங்க.

வடகரை வேலன் போட்ட கண்டிஷன்கள்:

1. யாரையும் சாகடிக்க கூடாது.

2. இதெல்லாம் கனவுன்னு டுமீல் விடக்கூடாது.

3. ஏற்கனவே வந்த கதை அல்லது திரைப்படத்தின் சாயல் வரக்கூடாது.

பரிசல்காரனின் எக்ஸ்ட்ரா கண்டிஷன்..

4. எந்த டாக்டரையும் மோசமானவராகக் காட்டக்கூடாது.

என்னா ஒரு வில்லத்தனம் பாத்தீங்களா? 😦

டாக்டரை என்ன பண்ணீங்க? னு நேர்ல வந்து விசாரிப்பு வேற…….. நல்லாருப்பு……நல்லாரு……..

இனிமே கதை………

“கௌ.. கௌரி…”

“கார்த்திக்.. என்னாச்சு…?”

கௌரிக்கு பதில் சொல்ல முடியாமல் அரை மயக்கமாய் கார்த்திக் நாற்காலியில் விழ, அவன் கையிலிருந்த செல்ஃபோனை வாங்கிப் பார்த்தாள்.

அதில்…

daddy serious
go home immly

ஐசியுவிலிருந்து வெளியே வந்த நர்ஸ்,

சங்கர்ன்ற பேஷண்ட் கூட வந்தது யாருங்க?

அருகே சென்ற கெளரியிடம்,

உள்ளே எல்லாம் இத வச்சுக்கக்கூடாதுனு சொன்னாக்கூட வச்சு பேசிட்டே இருக்காருங்க.  சீப் பார்த்தா என்னையும் சேத்து திட்டுவாருங்க.

அப்புறம் நான் வாங்கும் போது, அவசரமா ஒரு மெசேஜ் அனுப்பணும்னு சொன்னதால,  நானே அவர் சொன்னா மாதிரி மெசேஜ் அனுப்பிட்டேன்ங்க.

இந்தாங்க!

என்று செல்ஃபோனைக் கொடுத்து விட்டு கண்ணாடி கதவின் பின் மறைந்தார்.

ஆமா! கார்த்திக்! என்கிட்ட பேசுறப்ப கூட, எனக்கு ஒண்ணுமில்லை!

அப்பா என் கூட பேசிட்டிருக்கும் போதே மயக்கம் போட்டு விழுந்துட்டார்!

உடனே எங்க வீட்டுக்குப் போ!னு சொன்னார்.

நான் உடனே உனக்கு போன் பண்ணிப்பார்த்தேன்.  செல் ஆஃப்ல இருந்தது.

அரை மயக்கத்திலிருந்த கார்த்திக்குக்கு இப்போது ஓரளவு புரிந்தது.

இந்த மடையன் ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்ட்ட ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சுனு சொல்லியிருப்பான்.

ஏன் வீட்டுக்கு போன் பண்றான்? ச்சே!

இப்ப என்ன பண்றதுனு தெரியலையே?

உன்ன தனியா விட்டுட்டும் போக முடியாது.

கொஞ்சம் யோசித்த கெளரி,

எனக்கு ஒண்ணும் பிரச்னையில்ல கார்த்திக்!

இந்த விசயம் தெரிஞ்சதும், அப்பா தான் அவரோட ப்ரெண்ட் இருதயராஜ் அங்கிளை இங்க அனுப்பிச்சார்.

நான் பார்த்துக்கறேன்.  நீ மொதல்ல கெளம்பு!

ஆட்டோவில் விரைந்த கார்த்திக், கெளரியின் நிலையில் நம் சகோதரிகள் இருந்தால் இந்த அளவிற்கு தைரியமாக இருப்பார்களா? என்று பலவாறு யோசித்துக் கொண்டும்,  கெளரியின் மனஉறுதியை தனக்குள்ளே வியந்த படியும், சங்கர் வீட்டை அடைந்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது.

கதவைத் திறந்து வெளியே வந்த டாக்டர். இருதயராஜ்,

என்னம்மா கெளரி? எப்டி இருக்கே? அப்பா எப்படி இருக்கார்?

நல்லாருக்கார் அங்கிள்! சங்கருக்கு எப்படி இருக்கு?

கெளரியின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்து விட்டு,

ஸ்கேன் பண்ணினப்புறம் தான் உறுதியா சொல்ல முடியும்மா!

அதுக்கு இடையில நினைவு தப்பிட்டா, ரொம்ப கிரிட்டிகல் ஆயிரும்.

எதுக்கும் இன்னும் ரெண்டு ஸ்பெசலிஷ்ட்டை வரச்சொல்லியிருக்கேன். பார்க்கலாம்!

‘இந்து’ வலைத்தளத்தில் BLOG பற்றி வந்த செய்தியை படித்துக் கொண்டிருந்த கெளரியின் அப்பா, மேசை மேல் இருந்த செல்ஃபோன் திரையில் யார் கூப்பிடுவது? என திரும்பிப் பார்க்கிறார்.

Irudhayaraj calling…….

செல்ஃபோன் பொத்தானை அழுத்தி பேச,

ஹலோ! கேட்டரிங்கா?

இல்…. ஆமாங்க! சொல்லுங்க!

என்றாள் கெளரி தடுமாற்றத்துடன்!

ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே சாப்பாடு வந்திட்டிருக்குனு சொன்னாங்க, இன்னும் வந்து சேரலை?  ஒறமொற எல்லாம் பசியோட காத்திட்டிருக்காங்க.  உங்க ஓனர்ட்ட போனை குடு கண்ணு!  நான் பேசிக்கறேன்!

↔↔↔↔

உஷ்…..ஷ்….ஷ்….. போதும்….. இதுக்கு மேல கதையை தொடர ஒரு பின்னூட்டத்தையே கதை அளவுக்கு எழுதும் 😉 நண்பர் கிரியை அழைக்கிறேன்.

மேலே இருக்கிற நாலு கண்டிசனே போதும். அதுக்கு மேலயும் கண்டிசன் வேணுமானு யோசிச்சேன். ஆனா, யான் பெற்ற இன்பம்! பெறுக இவ்வலையுகம்! என்பதற்கேற்ப ஒரே ஒரு சின்ன கண்டிசன்.

5. இதுக்கு மேலே கதாபாத்திரங்களை அதிகப்படுத்தக் கூடாது.

கிரி! நீங்களாவது நாலாவதா கதையை தொடரப் போறீங்க. பத்தாவதாகவோ, அதற்கு மேலேயே எழுதப் போறவங்களை நெனச்சு பாத்தா 😦 😦 😦

அவங்களுக்கெல்லாம் கண்டிசனே ஒரு கதை அளவுக்கு இருக்கும்னு நினைக்கிறேன்.

வடகரை வேலன் அண்ணாச்சி, கதையோட பேரை பேசாம ‘கங்கா ஆஸ்பத்திரி’னு மாத்திரலாம் போல………. ஒரே பெனாயில் வாடை…….

எடத்த ‘கோபி செட்டிபாளையம்’ பக்கம் மாத்துங்க கிரி!

கிரி                                            பாகம் 4

ஜெகதீசன்                                பாகம் 5

டிபிசிடி                                     பாகம் 6

கயல்விழி முத்துலெட்சுமி    பாகம் 7

மை பிரண்ட்                           பாகம் 8

கோபிநாத்                               பாகம் 9

கப்பி பய                                 பாகம் 10

%d bloggers like this: