Archive for the ‘பயணம்’ Category

உள்ளங்கையளவு உலகு

நண்பர்கள் இருவர் சென்ற விடுமுறையில் ஏதாவது பயணத்தை திட்டமிடச் சொல்லியிருந்தனர். கடைசி நேர சூழ்நிலை மாற்றத்தால் திட்டமிட்ட இடத்துக்கு செல்ல முடியவில்லை. மூவரும் எங்காவது ஓரிடத்தில் சந்திக்கலாம் என முடிவு செய்து சென்னையில் கூடினோம். ஒரே ஒரு நாள் மட்டும் ஏதோவொரு விடுதியில் தங்கலாம் என முடிவு செய்து, புறநகரில் இருந்த அதி நவீன வசதிகள் நிறைந்த ஒரு ஆடம்பர விடுதிக்கு கிளம்பினோம்.

ஒரு நண்பர் சுந்தரம் – தனியார் நிறுவன மேலாளர். இன்னொருவர் முத்து – நிதி நிறுவன முகவர். விடுதிக்கு செல்லுமுன்னும், வழி நெடுகிலும் முத்து தான் புதியதாய் வாங்கிய அலைபேசியின் அருமை, பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். தொடுதிரையுடன் கூடிய அலைபேசி. ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்துடன் கூடியது. தேவையான மென் பொருள்களை ஏற்றிக் கொள்ளலாம். பியானோ இசைக்கலாம், மின்னஞ்சல்கள், இணையம் இயக்கலாம், ஒரு தடவலில் படங்களை மாற்றலாம். எந்த திசையில் அலைபேசியைத் திருப்பினாலும் படங்கள் மாறும், வரைபடம் மூலம் வழியைத் தெரிந்து கொள்ளலாம் என பெருமையடித்துக் கொண்டிருந்தார். இது போன்ற அலைபேசிகள் தான் இனி உலகையே ஆட்டிப் படைக்கப் போகிறது. மனிதர்களே இதுவன்றி இயங்க முடியாது என்ற அளவில் இருந்தது அவரது அலைபேசி புராணம்.

நண்பகலில் விடுதியை வந்தடைந்தோம். சப்பானிய கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டிருந்த முகப்பு. வரவேற்பறைப் பணியாளர்கள் முதல் இதர பணியாளர்கள் வரை அனைவரும் சப்பானியர்களின் உடை போன்று அணிந்திருந்தனர். ‘’ வடிவில் மொத்த கட்டிடமும் கட்டப்பட்டு நடுவில் நீச்சல் குளம், பக்கவாட்டில் உள் மற்றும் வெளி உணவு விடுதி இருந்தது. பெரும்பாலும் இரண்டடுக்கு கொண்ட தனித்தனி அறைகள்.

ஒவ்வொன்றிற்கும் நவரத்தினக் கற்களின் பெயர்கள் சூட்டியிருந்தார்கள். எங்களுக்கு ‘நீல மணிக்கல்’ என்ற பெயருடைய அறையை ஒதுக்கியிருந்தார்கள். நண்பர் சுந்தரத்திற்கு விடுதியின் உரிமையாளர் தொழில் முறை நண்பர் என்பதால், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

அறை முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது. நுழைந்ததும் உணவுண்ண அமரும் மேசை, நாற்காலிகளுடன் கூடிய ஒரு அறை, அதிலேயே அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப ஒரு சிறு அமைப்பு. அதிலிருந்து, கொஞ்சம் உயரமாய் இன்னொரு அறை. சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் தட்டைத் தொலைக்காட்சி, அதைப் பார்க்க வசதியாக மெத்தைகளுடன் கூடிய மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை. அந்த அறையிலிருந்து மேலே செல்ல படிக்கட்டுகள். மேல் தளத்தில் படுக்கை அறை.

அங்கும் ஒரு தொங்கு தொலைக்காட்சி. பின் ஒப்பனைக்காகவும், ஆடைகளுக்காகவும் எதிரும் புதிருமாக கண்ணாடியும், அலமாரியும், அதையும் கடந்து சென்றால் கழிப்பறையுடன் கூடிய குளியலறை. குளிக்குமிடம் கண்ணாடிச் சுவர்களால் தடுக்கப்பட்டிருந்தது.

மலேசியாவில் இது போன்ற வடிவமைப்புல கட்டப்பட்டிருந்ததைப் பார்த்த விடுதி உரிமையாளர் அதே வடிவமைப்பில் இங்கும் கட்டியிருந்தார். பெரும்பாலும், சப்பானியர்களே தங்கியிருக்கின்றனர். மிகக் குறைந்த சதவீதத்தில் இதர விருந்தினர்கள் தங்கியிருக்கிறார்கள். விடுதியின் பின்புறத்தில் மிகப்பெரிய புல்தரை மைதானம், சிறு விழாக்கள் நடத்த ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது. உடற்பயிற்சி சாதனங்களை உபயோகிப்பதற்கும், நீச்சல் குளத்திற்கும் கட்டணம் ஏதுமில்லை.

இதையெல்லாம் இவ்வளவு விளக்கமாகச் சொல்ல ஒரு காரணமிருக்கிறது. அறைக்கே வரவழைத்த இரவுணவு முடித்து பயணக்களைப்பில் மேல்தள அறைக்கு சென்று சீக்கிரமாகவே தூங்கி விட்டேன்.

காலையில், நண்பர் முத்து குட்டி போட்ட பூனை மாதிரி கீழ்தளத்தையே சுற்றிக் கொண்டிருந்தார். விபரம் கேட்டதும் என் மொபைலை பார்த்தியா? என்ற கேள்வியுடன் ஏறிட்டார். நான் படுக்கப் போகுமுன், கீழ்தளத்தில் தான் இருந்தது. சொன்னேன். கீழ்தளத்தையே தலைகீழாய் புரட்டிப் போட்டு விட்டார். மேசை, மெத்தை, தலையணை, நீச்சல் குளத்தடியில் என இண்டு இடுக்கெல்லாம் தேடி விட்டார். உள்ளங்கையளவு உலகத்தைக் காணவில்லை.

1800 தொடர்பெண்கள், படங்கள், அசைபடங்கள், பிரத்தியேகமான மென்பொருள்கள் அனைத்தும் போயே போய் விட்டது. அவர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், மணிச்சத்தம் கேட்கிறது. எவரும் அழைப்பை எடுக்கவில்லை. வருத்தத்தின் எல்லையில் இருந்தார். வேறு ஏதேனும் கேட்டால் அழுது விடுவார் போல முகத்தோற்றம். இவரால் சாதாரணமாக இயங்கக் கூட முடியவில்லை. எப்போதும் இது போன்ற சூழ்நிலையில் என்னிலிருந்து எந்த எதிர்வினையும் இருக்காது. ரொம்பவுமே அமைதியாகி விடுவேன். விசயத்தை மட்டும் கேட்டு விட்டு திரும்பவும் தூங்கி விட்டேன்.

ஒரு கட்டத்தில் மிகவும் கோபமாகி, உணவு கொண்டு வந்த நபர்கள் தான் எடுத்திருப்பார்கள் என முடிவு செய்து விடுதி மேலாளரிடம் புகாரளித்தார். அவரும் இரு ஆட்களைக் கூட்டி வந்து திரும்பவும் அறையை அலசி ஆராய்ந்தார். பலனில்லை. நேற்றிரவு பணியாற்றியவர்கள் பணி முடிந்து அதிகாலையில் சென்று விட்டார்கள். செல்லும் போது முழுக்க சோதித்து அனுப்புவது தான் எங்கள் வழக்கம் இருப்பினும் இப்போது செல்லும் பணியாளர்களைக் கூட முழுமையாக சோதித்து அனுப்புமாறு வாயில் பாதுகாவலர்களுக்கு மேலாளர் உத்தரவிட்டார். நேற்றிரவு பணியாளர்களுக்கும் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் எடுக்கவில்லை என்று சொன்னார்கள். ஒரே ஒருவரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அறையில் இருந்த மூவருக்கும் பணியாளர்கள் மேல் மறுக்க முடியாத சந்தேகம் இருந்தது. மணியடிப்பதால் இப்போது எங்காவது ஒளித்து வைத்து விட்டு, ஓரிரு நாட்கள் கழித்து இங்கிருந்து வெளியே எடுத்து செல்லலாமென நினைத்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, அறையைச் சுற்றியுள்ள செடிகள், புல்தரை அனைத்திலும் ஒரு முறை தேடி விட்டு, கிடைத்தால் தகவல் தரச்சொல்லி விட்டு அறையைக் காலி செய்தோம்.

பின் அவரவர் ஊருக்கு கிளம்பினோம். நண்பர் முத்து அவர் அவராகவே இல்லை. இயல்பு மீறிய புது மனிதராக இருந்தார். தன் மகிழுந்தில் உலகம் தொலைத்த வருத்தத்துடன் அவரே ஓட்டியபடி மதுரை நோக்கிப் பயணமானார். நான் புகைவண்டியில் ஊருக்கு வந்து கொண்டிருக்கும் போது, முத்து எண்ணிலிருந்து ஒரு அழைப்பு. தாங்க முடியாத ஆச்சரியத்தில் எடுத்தால், மறுமுனையில் முத்துவே. கூமுட்ட…. கூமுட்ட…. என் பைக்குள்ள தாண்டா மொபைல் இருக்குது! பையில் யாராவது தேடிப்பாத்தமா? என திட்டினார். மனதுக்குள் யார் கூமுட்டை? என நினைத்துக் கொண்டேன். மதுரை செல்லும் வழியில் திருச்சியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கிச் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார். அங்கே, பையின் பக்கவாட்டில் ஏதோ எடுக்க விழையும் போது அலைபேசி கையில் தட்டுப்பட்டு எடுத்திருக்கிறார்.

முதலில், விடுதிக்கு அழைத்து விசயத்தை சொல்லச் சொன்னேன். இதில் விடுதிப் பணியாளர் மீது சந்தேகப்பட்டது மிகப்பெரிய தப்பு என உறைத்தது. முன் பின் தெரியாதவரை சந்தேகப்பட நமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஏன்? எப்படி? தவறு செய்யாத அந்த பணியாளரின் மனம், சந்தேகத்தோடு விசாரிக்கும் போது என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு மனவருத்தம்? மன உளைச்சல்? கேள்விகள் நீண்டு கொண்டேயிருந்தது. விடுதிக்கு அழைத்து, மன்னிப்பு கேட்டு பணியாளரிடமும் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்கச் சொன்னேன்.

அமைதியான சூழ்நிலையில், அற்புதமாய் கழிந்திருக்க வேண்டிய ஒரு நாளை, சிறு நினைவுக் குறைவால் தானும் நிம்மதியிழந்து, மற்றவர்களையும் இழக்க வைத்து வீணாக்கி விட்டார்.

இவ்வளவு களேபரம் நடந்துட்டிருக்கு.  கொஞ்சங்கூட கவலைப்படாம, கண்டுக்காம, தூங்கிட்டிருந்தியேடா?னு எனக்கு கொடுமானம் கிடைச்சது தனிக்கதை.

புறஞ்செலல்

ஒன்றிரெண்டு பள்ளிக்கூடங்கள் மட்டுமே ஊரில் இருந்த காலம்.  இருந்த காலமென்ன, இப்பவும் அப்படித்தான்.  பெரும்புள்ளிகள் வேறு பள்ளிகளை ஊருக்கு வந்து விடாமல், பலவிதங்களில் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  எட்டாம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம் மட்டும் ஊருக்குள் இருக்கும்.   ஒன்பதாம் வகுப்பிலிருந்து பனிரெண்டு வரை இருக்கும் உயர்நிலைப்பள்ளி ஊருக்கு சற்று வெளியே.

அந்தப் பள்ளிக்கூடத்தை ”ஐஸ் ஸ்கூல்” னு பேசும் போது சொல்லுவாங்க.  ஒரு வேளை, ஐஸ் வண்டிக்காரர்கள் பள்ளிக்கூட வாசலில் நிறைய நிற்பதால், வந்த பெயரா இருக்கும்னு, அந்தப் பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போற வரை நினைச்சிட்டிருந்தேன்.  பொறவு தான் ஐஸ் அல்ல, High Schoolனு தெரிஞ்சது.

அங்க, ஒன்பதாப்புக்கு திருமலை ஐயாவும், பத்தில் புயல்நிதி ஐயாவும் (நெசப்பேரே இதான்), பதினொன்னுக்கும், பன்னெண்டுக்கும் முத்தையா ஐயாவும் தான் தமிழாசிரியர்கள்.  மொத மொத தமிழ்க் கட்டுரைக் குறிப்பேடுகளில், சுத்தத் தமிழில் அவங்கவங்க பேரை எழுதச் சொன்னதும் முத்தையா சார் தான்.  அதுலயும், பேர்ல வர்ற சமஸ்கிருத எழுத்தையும் தமிழ்ல எழுதுங்கனு வேற சொல்லீட்டாரு.  ஸ்ரீகாந்த்னு ஒரு பய, தமிழில் திருகாந்த் என்று எழுதீருந்தான்.  அதை சீகாந்த்-னு திருத்திக் கொடுத்தது இன்னும் நினைப்பிருக்கு.

அதே மாதிரி,  எட்வின் பாலையா சார் வரலாற்று பாடம் நடத்தறதோட மட்டுமில்லாம, உலகச் செய்திகள், பொது அறிவு, அப்புறம் வேறு நல்ல விசயங்களைப் புரியற மாதிரி சொல்லுவார்.  அப்படியொரு நாள்ல, ஏம்பா! நீங்களாகவே நாலஞ்சு பேர் சேந்து, மதுரைக்கோ அல்லது வேறு ஏதாவது எடத்துக்கோ போய்ப் பாத்துட்டு வரலாம்ல!  செலவும் கம்மியாத் தான் ஆகும்.  வெளி உலக அறிவும் கெடைக்கும்னு சொன்னாரு.  அவருக்கென்ன சொல்லுவாரு, இதெல்லாம் நடக்குற காரியமா?னு இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதுல விட்றுவோம்.

குத்தாலத்துல சாரல் ஆரம்பிச்சதும்,  பையங்களாச் சேந்து குத்தாலம் போய்ட்டு வாங்கடா!னு ஒரு தடவ சொல்லிருந்தாரு. அதோட எம்புட்டு செலவாகும்ன்றதயும், எப்படியெப்படிப் போணும்றதயும், சொன்னாரு.  ரயில்ல போலாம்.  சினிமால பாத்த குத்தாலத்த நேருல பாக்கலாம், குளிக்கலாம்னு நாளுக்கு நாள் பேசிப் பேசி, போயிட்டு ரெண்டு நாள் இருந்திட்டு வந்திரலாம்னு முடிவு பண்ணுனோம்.

முழுப்பரீச்ச லீவு முடிஞ்சி, பள்ளிக்கூடம் தொறக்கதுறக்கு முந்துன வாரம் போய்ட்டு வந்திரலாம்னு ஒரு யோசன.  நாளும் குறிச்சாச்சு.  நாள் நெருங்க, நெருங்க, பாக்கிறவன் ஒவ்வொருத்தனும் நான் காசு வாங்கீட்டேன், வீட்ல கேட்டுட்டேன்னு கடுப்பேத்திட்டிருந்தாங்ங.  எங்கிட்ட காசுமில்லை, வீட்ல எப்படிக் கேக்கிறது?  கேட்டா அடி தான் விழும்ன்ற யோசனையில நாள் ஓடீட்டே இருந்துச்சு.  கெளம்பற நாளும் வந்துருச்சு.

பரீச்ச முடிஞ்சதுலருந்து, திரும்ப பள்ளிக்கூடம் தொறக்கற வரை, சைக்கிள் கடையில வேலை எனக்கு.  ஏற்கனவே, கடக்காரர்ட்ட குத்தாலம் போற விசயத்தச் சொல்லி, பணம் வேணும்னு காலையில கேட்டதுக்கு, காதுல வாங்கியும், வாங்காமயும் இருந்தாரு.  மதியம் திரும்பயும் காசு வேணும்னு ஞாவப்படுத்துனேன். பஞ்சுக்கடைக்காரர் வண்டி முடியட்டும்.  சாய்ந்தரம் வந்து எடுத்துட்டுப் போறேன்னிருக்காரு.  அவரு வந்தாத் தான் இன்னைக்கு காசு!னு சொல்லிட்டாரு.  ரயில்வே ஸ்டேசன் போற வழியில நான் வேல பாக்குற கடை.  ராத்திரி எட்டு மணிக்கு மேல செங்கோட்டை வண்டி வரும்.  ஏழு மணிக்கு முன்னாடியிருந்தே, ஒவ்வொருத்தனா பையோட வந்திட்டேருந்தாங்ங.

போறப்போ, காத்தடிச்சிட்டு, பஞ்சர் பாத்துக்கிட்டு, அழுக்குக் கையோட நின்னுட்டிருந்தவன்ட்ட,  கெளம்பி போறவன், ஒவ்வொருத்தனாக வந்து என்னடா வரலியா?னு ஐயோ! பாவமாப் பாத்துட்டு போய்ட்டிருந்தாங்ங. எல்லாரும் ஸ்டேசனுக்கு வந்திட்டாங்ங என்னத் தவிர.  நேரம் வேற ஆயிட்டேருக்கு.  நீ கெளம்புனு கடக்காரரும் சொல்லல.  நானும் கேக்கல.  நாம போகப் போறதில்லன்ற முடிவுக்கு வந்திட்டன்.  பொறவு, அவங்ஙளுக்குள்ளேயே பேசி, ஒவ்வொருத்தங்கிட்டயும் எவ்ளோ காசிருக்குனு கணக்கு பாத்துட்டு, கீரி மட்டும் கடைக்கு வந்து, டேய்! வீட்ல மட்டும் கேட்டுட்டு துணிய எடுத்திட்டு வா! ஒனக்குஞ்சேத்து எங்ககிட்ட காசிருக்கு.  பொறவு பாத்துக்கலாம்னு சொன்னான். ஒரே யோசனையா இருந்துச்சு.

யோசிச்சிட்டு ஒரே முடிவா, குத்தாலம் போவப் போறேன், வீட்டுக்குப் போய்ட்டுப் போகணும்னு சொன்னதும், நாம காசு கொடுக்காம எப்படிப் போயிருவாரு ஐயா?பாக்கலாம்னு நினைச்சிட்டிருந்தவர் முகத்துல ஈயாடல.  செரி! கெளம்புனு மட்டும் சொல்லிட்டாரு.  ஆனா, காசு கொடுக்கல.  அங்கயே ஒரு சைக்கிளக் கேட்டு எடுத்துக்கிட்டு, வீட்டுக்குப் போயி, எல்லாரும் எனக்காவக் காத்திட்டிருக்காங்ஞ.  எனக்கும் சேத்து வேற டிக்கெட் எடுத்திட்டாங்ஞனு சொல்லியும், தனியா வெளியூருக்குப் போறது என்ன பழக்கம்?  போவக் கூடாதுன்னுட்டாங்க.  பின்ன, கெஞ்சிக் கெதறி, அழுது புடிச்சதுல, எக்கேடு கெட்டோ போய்த் தொலைன்னுட்டாங்க. அப்ப வீட்லயும் காசுக்கு கஷ்டம். எதும் இல்லை.  செரி! பரவாயில்லைனு துணியெல்லாம் எடுத்து பையில அமுக்கித் திரும்பயும், கடைக்கு வந்து வண்டிய விடும் போது, கடக்காரர் காசு வச்சிருக்கியாடா?னு கேட்டார்.  இல்லன்னதும், அந்த மாசச் சம்பளம் எழுவத்தஞ்சு ரூவாயக் கொடுத்தாரு.

மொத்தம் பதினோரு பேரு.  குத்தாலம் போறேன்/றோம்ன்றத நம்பவே முடியல.  ஆனா, வண்டி வர்றதுக்காக காத்துக் கெடக்கோம்.  திடீர்னு மனசு மாறி, வீட்லருந்து வந்து கூட்டீட்டுப் போயிருவாங்களோ?  இன்னும் ரயில வேற காணோமேனு மனசுக்குள்ள பதட்டம்.  மொத, மொத தனியா, அதுவும் கூடப்படிக்கிறவங்ஙளோட. சொல்ல முடியாத மகிழ்ச்சி.  எல்லாரும் ஒரே கூத்தும், கும்மாளமும் தான் செங்கோட்டை போய்ச் சேர்ற வரைக்கும்.

தெங்காசி வரும் போதே, நல்ல சாரல் அடிச்சது.  செங்கோட்டைக்கு போய்ச் சேந்து ஸ்டேசன்லேயே படுத்திட்டு, காலையில எந்திச்சு குத்தாலம் போங்கனு ஏற்கனவே வாத்தியாரு சொல்லியிருந்தாரு.  குத்தாலச் சாரலும், குளுரும் செங்கோட்டையிலயும் இருந்தது.  விடியுற வரைக்கும் தூங்கவேயில்லை.  தூக்கமும் வரல, அலுப்பாவும் தெரியல.  ஆனாலும், நல்லாருந்துச்சு.

காலயில கெளம்பி குத்தாலத்துக்கு போய், தங்குறதுக்கு எடம் தேடிக் கடேசியா “கண்ணாடி பங்களா”னு ஒரு எடத்துக்கு வந்து சேந்தோம். வாடகையும் கட்டுபடியாகுறாப்புல இருந்தது.  குத்தாலத்துல தண்ணி விழ ஆரம்பிச்சிருச்சுனா,  உள்ளூர்க்காரங்க அவங்க தங்கியிருக்கிற வீட்டையே ரெண்டாப் பிரிச்சு, ஒரு பக்கத்துல அவங்க இருந்துகிட்டு, இன்னொரு பக்கத்தை வாடகைக்கு விடுவாங்க.  அதே மாதிரி ஒரு வீடு.  வீட்டோட வராந்தாவும், உள்ள ஒரு அறையும் இருந்துச்சு. வீட்டுக்காரர் ஒரு நா வாடக அம்பது ரூவா ஆகும்னு சொன்னாரு.  அத விட கொறச்சு பேசலாம்னா,  ஆள் வேற பெரிய மீசையோட, கர கரனு பேசுனாரு.  பேசறதுக்கே பயமாருந்துச்சு.  பெறவு, சாம்பிராணி ரவி மெல்லப் போயி, அண்ணாச்சி! நாங்க பையங்களா காசு சேத்து வந்திருக்கம். வாடகய பாத்துச் சொல்லுங்க அண்ணாச்சினு சொன்னதும், ஒரு நா வாடக முப்பத்தஞ்சு ரூவானு கொறச்சுக் கொடுத்தாரு.

மறுநா மத்தியானமே காலி செய்றதாப் பேச்சு.  அதனால இருந்தமட்டுக்கும் இரவு, பகல்னு பாக்காம, மழ பேஞ்சாலும், குளுரடிச்சாலும், தண்ணி விழறதப் பாத்து பயத்தோட, அருவி அருவியாப் போய்க் குளிச்சோம்.  ஆஹா! என்னவொரு சுகம்ன்றீங்க!  அப்பத்தான் மல மேல நடந்து, செண்பகாதேவி அருவியும், பாறை, பாறையாத் தாவிப் போய் தேனருவியும் பாத்தேன்.  அதுக்குப் பொறவு போறப்போ தேனருவி பாக்க வாய்க்கலை.

போன மாசம் ஊர்ல ஒரு திருமண வரவேற்புக்கு போயிருந்தப்போ, முத்தையா சாரையும், எட்வின் பாலையா சாரையும் தற்செயலாய்ப் பாத்தேன்.  ரெண்டு பேருக்கும் என்ன அடையாளந் தெரியல.  என்னப் பத்துன வெவரம் சொன்னதும் முத்தையா சாருக்கு மட்டும் தெரிஞ்சது.  இப்ப நான் ஒவ்வொரு எடமாச் சுத்திட்டிருக்கதுக்கு காரணமே நீங்க தான்.  அன்னைக்கு, நீங்க குத்தாலத்துக்குப் போங்கடானு சொல்லலைன்னா, இவ்வளவு எடங்கள நான் பாத்திருக்க மாட்டேனு பாலையா சார்ட்ட சொன்னேன்.  இன்னமும் அப்படியே சொல்லீட்டுத் தான் இருக்காருனு முத்தையா சார் சொன்னாரு.

அதே போல, முத்தையா சார்ட்டயும், உங்கட்டருந்து கெடச்ச தமிழ்ப்பற்று தான், இப்ப தமிழ்ல பதிவுகள் எழுதுமளவுக்கு தூண்டியிருக்குன்னு சொன்னதும், ஆர்வத்தோட வலைத்தள முகவரிய குறிச்சு வாங்கிக்கிட்டார்.  நித்திலம் என்ற அவரது பெயரில் தாள் அங்காடியும், ஆயத்த ஆடை விற்பனையகமும் நடத்தி வருகிறார்.

இருவருக்கும் நன்றி கூறி விடைபெறும் போது மிக மிக மகிழ்வாயிருந்தது.

குத்தாலத்துல சாரல் ஆரம்பிச்சு, அருவியில் தண்ணி ஊத்து ஊத்துனு ஊத்துது. திருப்பூரச் சுத்தி குளிக்கதுக்கு எம்புட்டோ அருவியிருந்தாலும், போயிட்டு வந்தாலும், மனசு ஆற மாட்டேம்ங்குது.  இப்பயும் குற்றாலம்னு, யாரோ, யாரிடமோ பேசிக்கிட்டிருக்கது காதுல வுழுந்தாக் கூட சாரலும், குளுரும் மனசுக்குள்ள வந்து அடிச்சிட்டுப் போவுது.  ப்ச்! இந்த வருசமாச்சும் குத்தாலம் போவணும்.

சென்ற பயணத்தின் போது எடுத்த படங்கள்.

%d bloggers like this: