Archive for the ‘பயணம்’ Category

சலம்பல்

அலுவலகப் பயணமாய் சென்ற வாரத்தின் முதலிரண்டு நாட்கள் தூத்துக்குடி.

கோடை கால தூத்துக்குடியின் முகமே வேறு.  வெக்கையும், புழுதியும், கடற்காற்றும் நம்மை பிசுபிசுக்கச் செய்யும். இந்த முறை தூத்துக்குடி அப்படியில்லை.  எப்போதும் தங்கும் விடுதியில், திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்காக வந்திருக்கும் வெள்ளை வேட்டிகள் மற்றும் கொடியுடனான வெள்ளை வண்டிகள் சாலையடைத்து நெரிசல்.

துறைமுக இணைப்புச் சாலை வேலைகள் இன்னும் முடியவில்லை.  எப்போதும் போல ஒரு வழிப்பாதைக் குழப்பம் இம்முறையும்.  இரவு தூக்கம் வராமல் ஐந்தாவது மாடியிலிருந்து சில படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன்.  உணவகங்களைப் பற்றி விசாரித்தால், எல்லோரும் ஒன்றிரண்டு பெயர்களையே சொன்னார்கள். அப்படியொன்றும் விசேசமில்லை.  தூத்துக்குடி வட்டாரமொழி ஒருவித தனித்துவம் கொண்டது.

அவம் ஏம்ல அங்க நிக்கான்….

சாரத்த எறக்கி விடுலே….

இப்பம் கான்ல போட்டுட்டு ஏச்சு வாங்கப் போற பாரு……

மக்ரோன் பொதிகள் பையில் இடம்பிடித்தது எப்பவும் போல.

சாலையோர பனை மரங்களில் ஓலைகளின் சலம்பல்களோடு திரும்பல்.

‘சொல்’லெனும்….

எழுதிட்டியா?

இல்லடா.  இனிமத்தான் எழுதணும்.

எழுதீட்டு எனக்கு கொஞ்சம் காமிடா.  நாம்படிச்சதுக்கப்புறம் வாத்தியார்ட்ட குடு.  என்ன?

செர்ரா.

(தெப்பக்காடு, மாயாற்றைக் கடந்து செல்லும் போது எடுத்த படம் – ஒலியுடன் காணவும் 🙂 )

சுற்றுலா சென்ற மாணவர்கள், முடிந்ததும், சென்ற பள்ளிச்சுற்றுலாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். எனக்கு பள்ளி விடுமுறை நாட்களில், சுற்றுலா?!? என்பது அதிகபட்சமாக தூத்துக்குடி, குறைந்த பட்சமாக திருமங்கலம் அல்லது மதுரை.

பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலாவுக்கு, நானும் பெயர் கொடுப்பேன்.  அது பெயராகவே இருக்கும், கடைசிவரை பணம் கட்டாதவர்களின் அட்டவணையில்.  பின் அந்த சுற்றுலாவை, செவி வழிச் சொற்களிலும், கட்டுரை வழி எழுத்துக்களிலும் சுற்றி வருவேன்.

அந்த கணக்கைச் சமன் செய்யத்தான்,  இப்போது நண்பர்களுடன் என்னால் முடிந்த அளவு/முடியும் வர பயணப்படுகிறேன்/வேன்.

என் பயணப்பதிவுகளைப் படித்தவர்கள், தங்குமிடம், முகவரி, தொலைபேசி எண்கள் வேண்டுமென்று, நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்ந்து கேட்கவே இல்லை 😉  ஓரிருவர் மட்டுமே கேட்டிருந்தனர்.

இருந்தும், வெவ்வேறு வலைத்தளங்களிலிருந்து நான் சேகரித்த தகவல்களை இணைத்திருக்கிறேன். தங்குமிடங்களின் வசதிகள், வாடகை, நம்பகத் தன்மை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்களே விசாரித்து கொள்வது நலம்.

ஊட்டி, குன்னூர், கூடலூர், மசினகுடி, பொக்காபுரம்

%d bloggers like this: