Posts tagged ‘காடு’

மூங்கில்

ஒரு சில நண்பர்களை நாம் பார்க்கவோ, பேசியிருக்கவோ ஏன் மின்னஞ்சல் தொடர்பு கூட இருந்திருக்காது.   இல்லை. இருந்தும் அய்யனார் என்னைப் புரிந்திருக்கிறார்.  அவரது ரசனை, மன ஓட்டம் நான் கணித்ததாகவே இருந்தது.  என் கருத்து என்னவாக இருக்குமென்பதை, அவராகவே சொல்கிறார்.  பொருந்தியே இருக்கிறது.

P1040739

சிங்கப்பூரிலிருந்து முன் தினம் வந்த கதிர் அய்யனாருடன் வந்திருந்தார். அவர் பதிவொன்றில் எனக்கு பிடித்தது –  பாகிஸ்தானியுடன் பயணித்த அனுபவத்தை ஒரு குறும்படத்தின் அம்சங்களுடன் எழுதியிருப்பார்.  மிரட்டும் தோற்றமாயிருந்தாலும், பழக மிகச்சுவாரசியமான, இலகுவான மனிதராயிருந்தார்.  இவர் அய்யனாருக்கு சரியானதொரு இணை.

செல்வேந்திரனும், சிவக்குமரனும் அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள்.  எல்லாமே இணைய நட்புகள்.

அய்யனார் கோவை வருவதாகவும், வனம் புக வேண்டும் என்றும் தொலைபேசினார். மிகக்குறுகிய கால இடைவெளி.  காந்தி ஜெயந்தி விடுமுறையுடனான வார இறுதியாகையால், மலைப்பிரதேசங்களில், சாதாரண அறை கூட கிடைக்காத நிலை.

அண்ணாச்சி, சஞ்சய், செல்வேந்திரனுடன் ஏற்பாடுகளுக்குத் தயாராய் நானும்.  மற்ற நேரங்களில், வருகிறோம் என்று தகவல் தெரிவித்தாலே, நாம் கிளம்புமிடத்திலிருந்து நம்மை தொலை பேசியில் தொடரும் விடுதிக்காரர்கள், நாங்கள் தேதி சொன்னதும் அறை காலியில்லையுடன் முடித்துக் கொண்டார்கள்.

பயணத்தேதிக்கு முன் காலை,  தேவராஜன், தம் நண்பரின் உதவியுடன் தங்குவதற்கு ஆவன செய்தார்.  அதற்குப் பின், வரும்/கிளம்பும்/திரும்பும் நேரம்/நண்பர்கள் பற்றி விவாதித்து முடிக்கப்பட்டது.

இரண்டாம் தேதி காலை அய்ஸ், கதிர், சிவக்குமரன் கோவை வந்து சேர, அண்ணாச்சியும், சஞ்சயும், மழையும் மாலையில் வழியனுப்ப பயணம் தொடங்கியது.  அண்ணாச்சி வராததால், எனக்கு மேலதிக பொறுப்பும், கூடவே அறிவுரைகளும்.  வழிநெடுக, அய்யனார் மழைத்தூறலுக்கு தலையும், பனிமூட்டத்துக்கு வியப்பும் காட்டினார். அனுபவித்தார்.

பொக்காபுரம் என்ற இடத்தில் தங்கும் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  உதகை, மசினகுடி – அங்கிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் பொக்காபுரம்.  விடுதிப் பொறுப்பாளரை வழிநெடுக முயற்சித்தும், அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவரது தம்பி தொடர்பு கொண்டார். வழியும், வேறு தொடர்பு எண்ணும் வாங்கிய பின் தான் எனக்கு நிம்மதி.

மசினகுடியிலிருந்து, பொக்காபுரம் செல்லும் வழியே வனம் தான்.  மான் கூட்டம், காட்டெருமை மற்றும் கழுதைப்புலி காணக் கிடைத்தது.  பொக்காபுரத்திலிருந்து விடுதிக்கு செல்வதற்கு குறுகிய மண்பாதை மட்டுமே. சுற்றிலும், மூங்கில் புதர்கள் சூழப்பட்ட இடத்தில் – வண்டி நிறுத்துமிடம் 🙂

ஒற்றைக் குழல் விளக்கு வெளிச்ச, சிறு பாதையில் நடந்தால் விடுதி.  வாசலில் இருபக்கமும் மிகப்பெரிய பாறை. மேலாளர் வரவேற்று, எங்களின் அறைக்கு கூட்டிச் சென்றார்.  அறைகள் மூங்கில்களின் முன்/பின் புலத்தில் இருந்தன.   விடுதி மிகச்சிறந்த ரசனையாளர்களால், சுற்றிலும் வேலிப் பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்டிருந்தது.  இடமாக வாங்கிய போதிருந்த மரங்கள், மூங்கிற்புதர்கள், பாறைகள் எதையும் அப்புறப்படுத்தாது, உள்ளது உள்ளபடியே விட்டு, அதனூடே அறைகளை அமைத்திருக்கிறார்கள்.

காய்ந்த இலைகளில் விழும் மழைச்சத்தமும், மூங்கில்கள் காற்றிலசைந்து உராயும் சத்தமும் புதிதாய் இருந்தன.

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ
அது தன்னைச் சொல்லுதோ
இல்லை உன்னைச் சொல்லுதோ
அட! புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது
அதோ அதோ அதோ அங்கே,
ஐயையோ! வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ
அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ
அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி
மீண்டும் நாம் ஆதிவாசி
காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ?

மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ?

மேகம்போல் காட்டை நேசி

மீண்டும் நாம் ஆதிவாசி

நமக்கு வேண்டியதை உண்ண தேர்ந்தெடுக்கும் வசதியுடன், தனியிடத்தில் உணவு ஏற்பாடுகள்.  அமர்வதற்கேதுவாய் அரைவட்ட மூங்கிலிருக்கைகள்.  தட்டு வைப்பதற்கு மரத்தடிகள்.  எங்களின் இரவுணவுக்காய் பணியாளர்கள் விழித்திருந்தனர்.  மாரி என்ற பணியாளர் கடைசி வரை எங்களுக்கான தனிக்கவனிப்பாளரானார்.

மறுநாள் காலை வழக்கமான சுற்றுலா இடங்களை தவிர்த்து, மனம் போன போக்கில் கூடலூர்ப் பாதையில் பயணித்தோம். துளிர்த்த மழைத் துளி, சுழித்தோடும் காட்டாறு ரசித்தாவாறே பயணம்.  மண்ணுடன் கலந்த நீரோடியதால், ஆற்றுக்குளியலாசை துறந்தோம்.  இஷ்டம் போல் இடை நிறுத்திக் கொண்டோம். நீரருந்த வந்த மான் கூட்டம் யாரடா இவர்கள்? என வெருண்டன.  தனித்த காட்டெருமை தலை தூக்கி, என்ன? என்ற கம்பீரம் காட்டியது.  மூங்கில் மரங்கள் பாதைக்கு இருட்கூரை வேய்ந்திருந்தன.

இருப்பிடந்திரும்பி, இளைப்பாறிய சிறிது நேரத்தில், வனமழைத்துச் செல்லும் நண்பர் வந்து விட்டார்.  அவருடைய ஜீப்பில் பயணம்.  நண்பர் அவ்வூரைச் சேர்ந்தவர்.  வெளிநாட்டுப் பயணிகளை மலையேற்றத்திற்கும், வனச்சுற்றுக்கும் அழைத்துச் செல்பவர்.  பிரபல விலங்காராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டியாயுமிருந்திருக்கிறார். மேலும், குடியிருப்புகளுக்கு வரும் பாம்புகளைப் பிடித்து வனத்திற்குள் விட்டு வரும் சேவையும் செய்கிறார். வனங்கள், வனவிலங்குகளைப் பற்றியும், வன அதிகாரிகளுடனான கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இருளில் நம் கண்களுக்கு அகப்படாத விலங்குகள் அவருக்கு மட்டும் புலப்பட்டன. முதலில் யானைகள்.  பின் காட்டெருமைகள் – வண்டியின் விளக்கணைத்து, ஆண் காட்டெருமை போன்று இவர் ஒலியெழுப்பியவுடன், காட்டெருமைக் கூட்டத்திலிருந்து பதில் ஒலி வந்தது அசாத்தியம்.

வழியெங்கும் மான் கூட்டங்கள் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன.  குடியிருப்புகளை ஒட்டிய இடங்களில் மான்கள் அதிகம் இருக்குமாம்.  மனிதநடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வேட்டையாடும் மிருகங்கள் வரும் வாய்ப்பு குறைவாம்.

மழையால், மண்பாதைகள் சகதியாயிருந்ததால், வெவ்வேறு இடங்களுக்கு கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் சுற்றியலைந்தோம்.  விடுதி திரும்பும் வழியில், வேகமாய் சென்று கொண்டிருந்த வண்டி திடீரென்று நிறுத்தப்பட்டது.  எதிரே பாதையில் ஆறேழு யானைகள் குட்டியுடன்.  முன் நின்று தென்னைக்கீற்றிழுத்துக் கொண்டிருந்த யானை, எங்களைக் கண்டு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது.  குட்டியை இரு யானைகள் தங்களுக்கிடையில் லாகவமாய் பத்திரப்படுத்தின.

நண்பர் முகப்பு விளக்கணைத்து, ஒரு வினோத குரலெழுப்ப, கூட்டத்திலேயே மிகப்பெரிய யானை எங்களைத் தாக்க ஆவேசமாய் வந்தது.  யானை எங்களை அடைய சில அடிகளே இருந்தது.  அதற்குள் நண்பர்கள் பயந்து வண்டியை பின்னே எடுக்கச்சொல்லி குரல் கொடுக்க,  நண்பர் வண்டியை பின்னோக்கி செலுத்தினார்.  எங்களைத் தாக்க வந்த யானையும் கூட்டத்தை ஒருங்கிணைத்து பக்கப்பாதையில் சென்றது.

பின் நண்பரிடம் விசாரித்ததில், ஒவ்வொரு யானைக்கூட்டத்திற்கும் ஒரு யானை தலைமையேற்று நடத்திச் செல்லுமாம்.  நண்பர் எழுப்பிய வினோத ஒலி, ஆபத்தைக் குறிக்கும் சமிக்ஞை.  ஒலி கேட்டு, ஏதோ ஆபத்து என்று தலைமை யானை எங்களைத் தாக்க வந்தது.  நண்பரும் வண்டியை பின்னோக்கி செலுத்த தயாராய்த் தான் இருந்தார்.  கோவில்களிலிலும், முகாம்களிலும் பார்த்த யானைக்கும், இதற்கும் நிறைய வித்தியாசங்கள். எங்களை நோக்கி ஓடி வந்த போது ஏதோ ஒரு கறுப்பு பிரம்மாண்டம் நம்மை நோக்கி வருவது போல் இருந்தது – ஆங்கிலப்படங்களில் டைனோசர் மற்றும் விநோத விலங்குகளின் அருகாமை காட்சி போல.

நானும், செல்வேந்திரனும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தோம்.  மற்றவர்கள் எச்சரிக்கையாக பின்னிருக்கையில் 🙂  செல்வேந்திரனுக்கு அதே இரவிலும், கற்பனையிலும் துரத்திய யானை தான் 🙂

மேலும், சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி தப்புவது என்பதும், எங்கள் வன வழிகாட்டிக்கு தெரிந்தே தான் இருந்தது.

(கிட்டத்தட்ட எங்களது அனுபவமும் இந்த யூ ட்யூப் படத்தை ஒத்தே இருந்தது.  இரவானதால் படமெடுபடவில்லை)

இரவு ஒன்பதரைக்கு ஆரம்பித்த பயணத்தை, ஒரு மணிக்கு முடித்துத் திரும்பினோம்.  இரவுணவு முடிக்கும் போது மணி இரண்டு.  காலை ஊர் திரும்ப ஆயத்தமாயிருந்த வேளையில், விடுதி நண்பர் அருகிருக்கும் ஒரு வீட்டை காண்பிப்பதற்காய் கூட்டிச் சென்றார்.  அறையின் பக்கவாட்டுப் பாதையில் வேலி தாண்டிச் சென்ற போது யானைகள் நேற்றிரவு வந்து சென்றிருப்பதற்கான தடயங்கள்.

யானைகள் சேதப்படுத்த முடியாத கருங்கற்களால் கட்டப்பட்ட ரசனையான பரந்த வீடு.   உரிமையாளர் வெளி நாட்டிலிருந்து வந்து ஓரிரண்டு நாட்கள் தங்கிச் செல்வாராம்.  இங்கும் சுற்றிலும் மூங்கில் புதர்கள்.  வீட்டின் முன் மூங்கில் துண்டுகளில் துளையிட்டு சிறு செடிகள் வளர்க்கப்பட்டு, தொங்க விடப்பட்டிருந்தன.

மூங்கில்கள் இப்பகுதி மக்களின் வாழ்வின் முக்கியமாய் இடம் பிடித்திருக்கிறது.  சிறு சிறு பொருட்கள் மூங்கில்களாலே செய்கிறார்கள்.  தங்குமிடத்தில் சுவர் எழுப்புவதற்கு பதில் மூங்கில், மேசை, நாற்காலிகள், கைத்தாள் செருகி வைப்பதும் மூங்கில் குழலில் தான்.  ஏன் அறைச்சாவி இணைத்திருப்பதும் சிறு மூங்கில் துண்டில் தான்.  மண்ணும், மழையும், மரமும், மனிதர்களும் மூங்கில்களே!

மேலும் படங்களுக்கு – பொக்காபுரம்

அடர் வனம்

காட்டுக்குள் மூங்கில்களாலான அறை, மிகச்சிறந்த உணவு, அருமையான விருந்தோம்பல், மனதொத்த நண்பர்கள், சிறு மழையும், கடுங்குளிருமாய் கழிந்தன மூன்று நாட்கள்.

அடர்வனத்துக்குள் நான்கு மணி நேர நள்ளிரவுப் பயணம்.  வனவிலங்குகள் பல காணக்கிடைத்தன.  யானைக்கூட்டமொன்று துரத்தியது.   நள்ளிரவாகையால் விலங்குகளை  தெளிவாக படமெடுக்க இயலவில்லை.

%d bloggers like this: