Posts tagged ‘சங்கமம்’

சொல்லுதல் யார்க்கும்….

ஈரோடு நண்பர்கள் நடத்திய சங்கமம் இனிதே நடந்து முடிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.  அது எங்கள் நண்பர்கள், இன்னும் சொல்லப்போனால், எங்கள் சகோதரர்கள் நடத்திய ஒரு விழா.  ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், சேர்தளத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள்.

சர்ச்சைக்குரிய பதிவுகளில் பின்னூட்டம் கூட போடாமல், ஒதுங்கிச் சென்று தான் பழக்கம்.  நாட்டாமைத்தனமும் செய்வதில்லை.  எவ்வித குழு அரசியலிலும் தலையிடுவதில்லை. ஒரு சிலரின் பதிவுகளையும், பேச்சுகளையும் ஒதுக்கித் தள்ளி வைத்துப் போய் விடலாம் தான்.  ஆனால், அது மென்மேலும், கண்ணுக்குத் தெரியாத வகையில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் என்பதால் சேர்தளத்தின் சார்பில் இவ்விளக்கப் பதிவு.

எங்களின் (சேர்தளம் நண்பர்கள்) பெரும்பாலான பயணங்கள், விழா, சந்திப்பு ஆகியவை ஈரோடு நண்பர்கள் இணைந்தே நிகழ்ந்திருக்கிறது.  சென்ற ஆண்டு சங்கமத்தில் கூட சேர்தளத்துக்கென, நிகழ்ச்சியில் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.  எப்போதும், ஒருவருக்கொருவர் அன்புடனும், அக்கறையுடனும், ஆலோசனைப் பரிமாற்றங்களுடன் தான் பயணிக்கிறோம் என்ற விசயம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திருப்பூர் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் குழுமம் அமைத்து, தலைவர், செயலாளர், பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து சேர்தளம் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஒரு அமைப்பு.  சேர்தளத்தின் எந்தவொரு விசயமும் எங்கள் குழும மின்னஞ்சல் மூலம், விவாதிக்கப்பட்டுத் தான் முடிவெடுக்கப்படுகிறது.  தற்சமயம் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தும் எண்ணம் இல்லை.  இருந்தால், நிச்சயம் அனைவருக்கும் அழைப்பு விடப்படும்.

சேர்தளம் நண்பர்கள், எங்கள் இலச்சினை அச்சிட்ட பின்னலாடைச் சட்டைகள் அணிந்து வந்தது குறித்து ஒரு விமர்சனம் வந்தது.  உங்கள் குடும்ப விழாவில் தான் நீங்கள் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிவீர்கள்.  அது போல எங்கள் சகோதரர்கள் நடத்திய விழாவில், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு, இப்பிரத்தியேக பின்னலாடைச் சட்டைகள் அணிந்து வந்தோம்.

விழாவை வெளியிலிருந்து பார்த்தவர்களுக்கு, கலந்து கொண்டவர்களுக்கு இத்தகையதொரு விழா சாதாரணமாகத் தெரியக்கூடும்.  விரல் நீட்டி விமர்சிப்பதும் எளிது.  ஒரு விழா நடத்துவதற்கு செலவு தவிர்த்து,  தகுந்த திட்டமிடுதலும், செயற்படுத்தலும், ஒருங்கிணைத்தலும், எத்தனை பேரின் உடல் உழைப்பும் வேண்டும் என்பதை என் சிறு அனுபவத்தில் உணர்ந்தேயிருக்கிறேன்.

என்னளவில் மட்டுமல்ல, விழாவில் கலந்து கொண்ட சேர்தளம் நண்பர்களும் மிகச்சரியாக, இன்னும் சொல்லப் போனால், நேர்த்தியாக நடத்தப்பட்ட விழா என்ற ஒருமித்த கருத்தையே கூறினார்கள்.  மனமுவந்து பாராட்டினார்கள்.

விழாவில், நான் உட்பட மேடையில் அடையாளப்படுத்தி பாராட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும், தகுந்த நேரம் கொடுத்து, ஒப்புதல் வாங்கியே பெயர் சேர்க்கப்பட்டது என்பதை நான் அறிவேன்.  இப்படியிருக்க, ஒரு சிலர் பரபரப்புக்காக, விளம்பரத்துக்காக விமர்சனம் என்ற பெயரில், கற்பனையாக எழுதுவது மாதிரியல்ல.  யார் யாரைப் பாராட்டுகிறீர்கள் என்ற பட்டியல் கேட்பதும் சரியல்ல.

விழா நடத்தியதில் குறைகள் இருந்தால், தனிப்பட்ட முறையில் நாசூக்காக சொன்னால் தவறில்லை.  அதை விடுத்து, சப்பையான குறைகளையும், கட்டுக் கதைகளையும் ஒரு சிலர், பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இது பதிவர்கள் சார்பில், பதிவர்கள் தவிர்த்து முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்ட பெரிய நிகழ்வு.  பதிவர்கள் குடும்பத்துடன், மகிழ்ச்சியாய் பங்கு பெற்றது இன்னும் சிறப்பு.  இவ்விழா பதிவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டியதொரு முக்கிய நிகழ்வு.  தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி, விழா நடத்திய சகோதரர்களை மனவருத்தத்தில் ஆழ்த்த வேண்டாம்.

Advertisements

பொன் மாலை

திருப்பூரிலிருந்து நான், சாமிநாதன், பரிசல்காரன், பேரரசன், சொல்லரசன், முரளி, சிவா, ராமன், வெங்கடேஷ் மற்றும் மதுசூதனன் ஆகியோர் நிகழ்வில் பங்கு கொள்ளச் சென்றோம்.  சாமிநாதனின் ஆலோசனைப்படி மூன்று கார்க் கண்ணாடிகளின் முன்னும் பின்னும் திருப்பூர் வலைப்பதிவர் பேரவை என்ற சீட்டு ஒட்டப்பட்டு மூன்று மணியளவில் திருப்பூரிலிருந்து கிளம்பினோம்.

அரங்க வாசலிலேயே நண்பர்கள் நந்து, கதிர், கார்த்தி, ஆரூரன் உள்ளிட்ட நண்பர்கள் தேநீர் கொடுத்து வரவேற்றனர். ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயர்கள் எழுதி சட்டையில் மாட்டிக் கொள்ளும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.  அனைவரின் தனி அறிமுகத்துக்குப் பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்வுகள் பற்றிய காணொளி விரைவில் தமிழ் மணத்தில் இணைக்கப்படும் என கதிர் தெரிவித்தார்.

படங்களுக்கு நன்றி முரளி.

ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் என்ற பெயரில் இனி ஈரோடு பதிவர்கள் செயல்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.

பதிவுகள், பதிவர்களின் சந்தேகம் தீர்க்கும் கலந்துரையாடலுக்கு பெருந்தலைகளுடன் என்னையும் சேர்த்திருந்தார்கள்.

சிறந்த ஏற்பாடுகளுடனான, மிக அருமையான சந்திப்பு, அருணின் அட்டகாசத்துடன் நிகழ்ச்சி ஏழு மணிக்கு நிறைவுற்றது.

சுவையான இரவுணவுக்குப் பின் சாமிநாதன் காரில் இளையராசாவின் பாடலோடு கிளம்ப யத்தனிக்கும் போது, சென்னை நண்பர்களும் காருக்கருகில் வந்தனர்.  பின்னர், இருபது நிமிடங்களை இளையராசாவின் இசை வெள்ளத்தில் நண்பர்களனைவரும் சேர்ந்திசை பாடி, ஆடிக் கழித்தோம்.

நிகழ்வுகளைப் பற்றிய பேச்சுக்களோடு கார் திருப்பூர் வந்தடைந்தது.

ஞாயிறு மாலைப் பொழுதுகளை, திருப்பூரிலிருந்தால் எப்பவுமே போராடி நகர்த்த வேண்டியிருக்கும்.  சென்ற ஞாயிறுப் பொழுது ஈரோடு நண்பர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் மற்ற நண்பர்களின் சந்திப்பிலும் பொன் மாலைப் பொழுதாகக் கழிந்தது.

நன்றி நண்பர்களே!

%d bloggers like this: