Posts tagged ‘திருப்பூர்’

நெனப்பு…

வலைப்பக்கம் ஆரம்பித்த போது, நிறைய எழுத வேண்டும் என்று ஒவ்வொரு  பயணங்களிலும், ஓய்வுகளிலும், உறங்கா இரவுகளிலும் நினைப்பதுண்டு.  படிக்க மட்டும் முடிகிறது.

நெனப்பெல்லாம் எப்பயுமே நெசமாகுறதில்லயே!

திருப்பூர் வந்த புதிதில், அலுவல் நிமித்தமாய், முன்பு அந்த அலுவலகத்துக்கு அடிக்கடி போக வேண்டியிருந்தது.  அப்படியொரு தொழில்முறை சந்திப்பின், ஒரு மாலையில் அந்த அலுவலகத்தில், நண்பர். வேலுச்சாமி ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

என்ன புத்தகம்? என ஆவலுடன் கேட்டேன்.  அது கணையாழி!  அதன் பின்னான உரையாடலில், வேல்ச்சாமியும், அவருடைய நண்பரும் நீங்கள் என்ன படிப்பீர்கள்? என என்னிடம் விசாரித்தனர்.  குமுதம், குங்குமம், ஆனந்த விகடன் இந்த மாதிரி தானே? என கேள்விப் பட்டியலிட்டார்கள்.  அதுவும் படிப்பேன்.  அதில்லாமல், சுபமங்களா, புதிய பார்வை இரண்டு மட்டும் தான் வழக்கமாக வாங்கி படிக்கிறேன் எனக் கூறியதும், அவர்களிருவரும், வேற்றுக் கிரக மனிதனை பார்ப்பது போல் அதிசயமாக பார்த்தனர்.  அவர்கள் அறிந்த வரை, அப்போது அவர்களது நட்பு வட்டத்தில் எவரும் இத்தகைய புத்தகங்களைப் படிப்பதில்லை.  ஆதலால் என் பதில் அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமூட்டியது.

ஏனென்றால், திருப்பூரில் இது போன்று சொல்பவர்களே அரிது.  நாங்கள் உங்களிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவேயில்லை எனச் சொல்லி, ஏன் கணையாழி படிப்பதில்லை? என கேட்டு விட்டு கணையாழியில் வெளியாயிருந்த ஒரு கவிதையைக் காண்பித்தார்.

கவிதைக்குக் கீழே மகுடேசுவரன் என்ற பெயர் இருந்தது.  நண்பர் வேலுச்சாமியிடம் கேட்ட போது ”நம்ம மகுடேஸ் எழுதுனது தாங்க!”னு உறுதிப்படுத்தினார். அப்போதிலிருந்து தான் எனக்கும் அவர் கவிதை எழுதுவார் என்று எனக்கு தெரியும்.  பின் கணையாழி அலுவலக முகவரியும் எழுதிக் கொடுத்து, சந்தாதாரராகும் படி சொன்னார்.

அவருடைய கவிதைகள் ஒரு சில தீவிர இலக்கியப் பத்திரிக்கைகளில் மட்டும் தான் வெளி வந்து கொண்டிருந்தது.

பின்னான சந்திப்புகளில், பிரசுரமாகாத அவருடைய கையெழுத்துப் பிரதியை வாசித்து விட்டுக் கொடுப்பது வழக்கம். அவருடைய கையெழுத்து மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்.  கரிசல் கதைகளையும், எழுத்தாளர்களையும் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் சிலாகித்துப் பேசுவார்.

எனக்கு மிகவும் ஊக்கமளித்து நிறைய எழுத சொல்லுவார் கவிஞர். மகுடேசுவரன்.  கவிதையோ, கதையோ  ஏதாவது எழுதுங்கள், எழுதிவிட்டு என்னிடம் காண்பித்தால் சரி செய்து தருகிறேன் என ஒவ்வொரு சந்திப்பின் போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

காலப்பின்னலில் நானும் பஞ்சும், நூலுமாகிப் போனேன்.

வலைப்பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்த நாட்களில், அவரையும் வலைத்தளங்களில் எழுதச் சொன்னேன்.  ஆனால், அப்போது அவருக்கு  ஆர்வமில்லை.  இப்போது அவருடைய வலைத்தளத்தில் பதிவுகள் எழுதுகிறார்.

அச்சு அசலான கொங்கு வட்டார வழக்கில், காதலின் அழுத்தத்தை இப்படிப் பதிவு செய்கிறார்.
என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ
மாப்புள்ளைக்கெ என்னெக் கெட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்
அவனுக்கு புள்ளெ பெத்துத் தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்…. ஆமா….
வரும் ஜீலை 25ம் தேதி மாலை கவிஞர். மகுடேசுவரனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு, திருப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  
நிகழ்வுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

பணிப்பெண்கள்

திருப்பூரின் சாலையோரங்களில், எங்காவது நீங்கள் சிறிது நேரம் அசையாது நின்றால், உங்கள் கழுத்தில் “செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை” என்ற வாசகங்கள் தாங்கிய அட்டை தொங்க விடப்பட்டிருக்கும்.  மின் கம்பங்களில், வாயிற் கதவுகளில், என எங்கு திரும்பினாலும் இந்த அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.  பனியன் தயாரிப்பு தொழிற்சாலைகளில், ஆடைகளின் தையல் வேலைகள் வேலைகள் முடிந்தபின், தேவையில்லாத நூல் மற்றும் இதர பிசுறுகளை நறுக்குவது, துணிகளில் எங்காவது கறை அல்லது துளை இருக்கிறதா?  தையல் விடுபட்டிருக்கிறதா, வண்ண மாற்றமிருக்கிறதா என பரிசோதனை செய்து, ஆடையை உதறி மடித்து வைக்கும் வேலையைச் செய்யும் பெண்களை செக்கிங் பெண்கள் என தமிழில்?! அழைப்பார்கள்.

செக்கிங் பணிக்கு வரும் பெண்களைப் பற்றிய கவிஞர். மகுடேசுவரனின் கவிதை.

செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை

பஞ்சுக்குப்பை
மண்டிய தலை
அரிக்கிறது

பனியன் கம்பெனி உஷ்ணத்தில்
சன்னமாய்ச் சுரக்கும் வியர்வையில்
ரவிக்கைக் கையிடுக்கு ஊறி
உறுத்துகிறது

சமயத்தில்
கொண்டுவந்த பழஞ்சோறு
ஊசிப்போய் ஏமாற்றுகிறது

விடிய விடிய பணியிருக்கிறது
கண்ணுக்குள் மண்ணறுக்கிறது

துணி உதறி உதறி
கைகளிரண்டும்
கதறுகிறது

அவ்வப்போது
பூவாத்தா மடித்துத்தரும் வெற்றிலையில்
அன்பு தடவியிருக்கிறது

தங்கமணியக்கா
தன் குடும்பக் கதை சொன்னால்
எனக்கும் அழுகை வருகிறது

மேற்பார்வையிடும்
மெர்ச்சண்டைசரின் பார்வையில்
இன்பத்திற்கான யாசிப்பு
எப்பொழுதும் தென்படுகிறது

இடையிடையே நினைவும் வருகிறது
குடிகாரப் புருஷ முகம்
ஸ்கூல் போகும் சுப்பரமணி முகம்

– மகுடேசுவரன்
(மண்ணே மலர்ந்து மணக்கிறது தொகுப்பிலிருந்து…)

%d bloggers like this: