Posts tagged ‘பனியன்’

படைப்பாளி

திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் இல்லையென அரசாங்கமோ, தொழிலதிபர்களோ உரக்கச் சொல்ல முடியாது.  தெரிந்தும், தெரியாமலும் குழந்தைத் தொழிலாளர்களின் பங்களிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

வெளிநாட்டு விற்பனை நிலையங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் தங்களது ஆடைகள் குழந்தைத் தொழிலாளர்களின்றி தயாரித்தவை என இப்போது விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.  பனியன் சார்ந்த உபதொழில்களிலும், உள்நாட்டில் விற்கப்படும் ஆடைத் தயாரிப்புகளிலும், குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

உறுத்தும் உண்மை ஒன்றைச் சொல்லட்டுமா?

உங்கள் உடலோடு ஒட்டி உறவாடும் உள்ளாடைகள் வியர்வை உறிஞ்சுவது போல், குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சித் தயாரானது தான்.

குழந்தைத் தொழிலாளர் அவலங்களை என்னுடைய முந்தைய கனியா கனிகளும், கண்ணாடி கனவுகளும் பதிவில் ஓரளவு பதிவு செய்திருக்கிறேன்.  எழுத்துக்களை விட, படங்கள் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.  அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளம் படைப்பாளி ரவிக்குமார் என்ற குறும்பட இயக்குநரும் ஒருவர்.

திருப்பூரைச் சேர்ந்த, ரவிக்குமார் பனியன்கள் தைப்பதற்குத் தேவையான தையல் நூல் வியாபாரம் செய்து வருகிறார். லீவு, எட்டா(ம்) வகுப்பு, சுழல் என்ற தலைப்புகளில் குறும்படங்களை எடுத்திருக்கிறார்.

இதில் எட்டா(ம்) வகுப்பு என்ற குறும்படம் திரையிடல்களின் போது பாராட்டைப் பெற்றது.

ஐந்தாம் வகுப்போடு பழைய பேப்பர் கடைக்கு வேலைக்கு போய் விட்ட சிறுவன், அவனுடைய 8ம் வகுப்பு படிக்கும் நண்பன், தன்னைப் போலல்லாது,  ஒரு டாக்டராகவோ, பொறியாளனாகவோ ஆக வேண்டும் என்ற கனவுடன் பழைய புத்தகங்கள், செருப்புகள் போன்ற தன்னாலான உதவிகள் செய்தும், பயனளிக்காது பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விடுகிறான் என்பது தான் கரு.

தன்னைப் பற்றியான அறிமுகத்தில்,

“நான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றபோதே விடுமுறைக் காலங்களில் பனியன் கம்பனிகளில் வேலைக்குச் செல்வேன். அதுதானோ என்னவோ பின் நாட்களில் என் குறும்படங்களில் பிரதிபலித்தது.

துபாய் சென்றுவந்த ஒரு நண்பரிடம் இருந்த கேமராவை எடுத்துக் கொண்டு ஏதோ படம் பிடித்தேன். நிறைவாக இல்லை. நண்பன் தே.ராம் ஒரு குறும்படம் இயக்கினான். அவனுடன் சேர்ந்து பணியாற்றினேன். கொஞ்சம் கற்றுக் கொண்டு ‘லீவு’ குறும்படத்தை இயக்கினேன். அதற்குப் பின்னர் ஒரு வருட இடைவெளியில் ‘சுழல்’, ‘எட்டா(ம்) வகுப்பு’ என்னும் குறும்படங்களை இயக்கினேன்.

குறிப்பாக குழந்தைத் தொழிலாளர் பற்றியே நான் குறும்படம் எடுத்ததற்கான காரணம் என் மனதின் சிதைவு என்றே எண்ணுகின்றேன் “

ரவிக்குமாரின் கருவில் உருவான ஒரு அசைபடத்தை நண்பர் கேபிள் சங்கர் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.  கேபிள் சங்கருடனான திருப்பூர் சந்திப்பில் ரவிக்குமாரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இப்போது பின்னல் நகரம் என்ற வலைத்தளத்தில் பதிவுகள் எழுத ஆரம்பித்துள்ளார்.

வளரும் இளம் படைப்பாளி ரவிக்குமாரை வாழ்த்தி வரவேற்போம்.

பத்தான் என்ற பத்மநாபன்

மதுரை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து அப்போது தான் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு, திருப்பூருக்கு வேலைக்கு வந்திருந்தான் பத்மநாபன்.

திருப்பூர் கள்ளங்கபடமறியாத மனிதர்களையும், மிக விரைவில் மாற்றி விடும் நகரம். பத்மநாபனை உடன் பணிபுரியும் உள்ளூரார்கள் ‘பத்தான்’ என அழைக்கலானார்கள். கொங்குச் சீமையில் இது ஒரு பழக்கம் – மணி – மணியான், பாலு – பாலான், முத்து – முத்தான், நாகராசு – நாகான், ரகு – ரகான் என விளிப்பார்கள்.

பத்தான் தென்பாண்டிச் சீமைக்கே உரிய கடின உழைப்பின் காரணமாக பனியன் கம்பெனியின் எல்லாத் தொழில் நுணுக்கங்களையும் விரைவில் கற்றுக் கொண்டான். என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வான். தன் வசீகர சிரிப்பினால் அனைவருக்கும் நல்ல நண்பனானான். எனக்கு இன்னொரு தம்பியானான்.

பனியன் கம்பெனிகளில், தங்குவதற்கு மட்டும் வசதிகள் செய்து கொடுப்பார்கள். என்ன பெரிய வசதி? வேலை எப்போது முடிகிறதோ, முடிந்ததும் அதே இடத்தில் படுத்துக் கொள்வார்கள். படுக்கும் நேரம் 10 மணியோ, 2 மணியோ அல்லது காலை 6 மணியாக கூட இருக்கலாம். ஏனென்றால், அது வரைக்கும் பெரும்பாலான நேரங்களில் கம்பெனியில் வேலை நடந்து கொண்டிருக்கும். ஆனால் அடுத்த நாள் காலை 8 மணிக்கு சரியான நேரத்தில் தயாராக இருக்க வேண்டும்.

தனியாக அறை எடுத்து தங்கினால் எப்போது வேண்டுமானாலும் வேறு பக்கம் வேலைக்கு போய் விடக்கூடும் என்பதற்காகவும், சம்பளமில்லாமல் கம்பெனிக்கு ஒரு காவல் என்பதற்காக இந்த வசதி செய்து கொடுப்பார்கள்.

ஒரு விடுமுறை நாளில் என் நண்பர்களின் அறையில், என்னோடு டிவி பார்த்துக் கொண்டிருந்தவன் தூங்கி விட்டான். எந்திரி போகலாம் என சொல்லி, எழுப்புவதற்காக ஒரு துண்டை எடுத்து அவன் மேல் போட்டேன். துண்டு அவனுடைய ஒரு கண்ணை மறைத்து விழுந்தது. முழித்தவன்,

அண்ணே! என்ன டிவி மங்கலாத் தெரியுது!

இல்லடா, நல்லாத்தான் தெரியுது!

ஐயயோ! எனக்கு மங்கலாத்தேன் தெரியுது! துண்டை எடுத்துட்டுப் பாத்தா தான் நல்லாத் தெரியுது!

உடனடியாக கண் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தால் உடனே அறுவை சிகிச்சை செய்தால் தான் கண் பார்வை பெற முடியும். இல்லையென்றால் ஒரு கண்ணை இழக்க வேண்டிவரும் என்றார்கள். காரணம் சிறு வயதில் கள்ளிக்காட்டுக்குள் விளையாடும் போது கண்ணில் தெறித்த கள்ளிப்பாலினால் வந்த வினை.

இங்கேயே சிகிச்சை செய்யலாமென்ற போது பத்தான் சொன்னான்.

இல்லண்ணே! இங்க பத்தாயிர ரூவா கேக்கிறாங்ங! என்கிட்ட காசு இல்லை. கம்பெனில அவ்வளவு ரூவா கேட்டாலும் கெடைக்காது.

மதுரயில அரவிந்த் கண்ணாஸ்பத்திரியில பண்ணுனா காசில்லாம பண்ணிக்கலாம்! அதும் போக எங்க ஊருப்புள்ளைக ரெண்டு மூணு பேரு நர்சா இருக்காங்க. நல்லாப் பாத்துக்குவாங்க.

என்று சொல்லி மதுரையில் அறுவை சிகிச்சை பண்ணி விட்டு பதினைந்து நாளில் திரும்பினான்.

ஓரிரு மாதங்களில் இன்னொரு கண்ணும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை.

கம்பெனி மேனேஜர் வேறு ‘கண் தெரியலைன்னா, எப்படி வேலை பார்ப்பே?’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கண்பார்வை வேறு மங்கிக் கொண்டிருந்ததால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம் சரியாக ஓட்ட முடியவில்லை.

திருப்பூரில், இரவு நேரங்களில் தான் பணி அதிகமாக இருக்கும்.

துணி ரோல்கள் தயாராகி விட்டதா என தயாராகும் இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும். சாயத் தொழிற்சாலையில் நம்முடைய துணிகள் தான் சாயமேற்றிக் கொண்டிருக்கிறதா என்று மேற்பார்வை செய்ய வேண்டும். இப்படியாக பல வேலைகள் இரவுகளில் இருக்கும்.

திரும்பவும் விடுப்பு எடுத்தால் வேலை பறிபோகும் சூழ்நிலையில் இருந்தது. ஒரு வழியாக யோசித்து வேலையை விட்டு போய் விடலாம் என முடிவு செய்து விட்டான்.

சிகிச்சை முடிந்து வந்தால் வேறு கம்பெனியில் கூட வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம் என சமாதானம் கூறினேன்.

இல்லண்ணே, டாக்டர் ஏற்கனவே ஆப்ரேசன் பண்ணுன கண்ணுல தூசியே படக்கூடாதுன்னு சொல்லிருக்கார்.

இங்க இருந்தா தூசி படாம வேல செய்ய முடியாது! வண்டில போம் போதும் தூசி கண்டிப்பா படும், அதுனால நான் எங்கண்ணன் வச்சிருக்கிற புரோட்டா கடைக்கு போகப் போறேன்.

அவனது கிராமத்திலிருக்கும் வீட்டுக்கு ஒருவர் இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் ‘முனியாண்டி விலாஸ் ஓட்டல்’ என்ற பெயரில் கடை வைத்திருப்பார்கள். அந்த விதிக்கேற்ப விருத்தாச்சலம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் தன் அண்ணனின் கடையில் தஞ்சமானான்.

ஒரு முறை தொலைபேசி அழைப்பின் போது, சொன்னான்.

அண்ணே! நான் பேசாம நீங்க சொன்ன மாதிரி திருப்பூர்லேயே இருந்திருக்கலாம்ணே! இங்க நைட் பண்ணெண்டு மணிக்கு படுத்து காலையில் நாலு மணிக்கு எந்திரிக்க வேண்டியதிருக்குண்ணே!

என் தம்பிக்கு எஸ்.ஐ ஆகணும்னு ஆசப்படுறான். அவன எப்படியாவது எஸ்.ஐ ஆக்கிரணும்ணே! அதுக்கு காசு நெறய செலவாகும், அவன் செலக்சனாகி போற வரைக்கும் கடயில இருந்துட்டு அப்புறம் திருப்பூர் வந்திர்றேண்ணே!

என்னய ஏதாவது ஒரு கம்பெனியில சேத்து விடுங்கண்ணே!

நண்பர்கள் ஐவருடன், விருத்தாச்சலத்திற்கு அவனைப்பார்க்கச் சென்றேன்.

அரசு மருத்துவமனையில், பத்தானைப் பார்க்கும் போது பிணப் பரிசோதனைக்காக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான்.

தைப்பூசத்தன்று கடை விடுமுறை என்பதால், பக்கத்து கிராமத்திலிருக்கும் தன் அண்ணனைப் பார்ப்பதற்காக பேருந்தில் ஏறியிருக்கிறான். பேருந்தின் உள் செல்வதற்குள், ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்ப, பேருந்திலிருந்து வெளியே வீசப்பட்டு, சாலையில் விழுந்து, கருங்கல்லின் முனை நெற்றிப் பொட்டில் பட்டு அரை மணி நேரத்தில் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்திருக்கிறான்.

எத்தனை, எத்தனை கனவுகளோடு, வாழ்ந்தவன், எவ்வளவு பேரை மகிழ்வித்தவன், எத்தனை பேருக்கு உழைத்துக் கொடுத்தவன், எத்தனை பேருக்கு உதவியவன், பிணப்பரிசோதனை அறையில்.

ஒரு கட்டில் போன்ற அமைப்பில், சிமெண்ட் மேடை, சுற்றிலும் காய்ந்த சதைத் துணுக்குகள், ரத்தக் கறைகள். கீழே இரும்பு உளி, சுத்தியல்,கத்திரி போன்ற பல்வேறு உபகரணங்கள்.

அறையின் பின்புறம் வயல்வெளி. இரவு முழுவதும் பூட்டப்பட்ட அறையின், திறந்த சன்னலருகே அவனது உறவினர்கள், வயலிலிருந்து எலிகள் சன்னல் வழியாக உள் சென்று கடிக்காமல் இருப்பதற்காக காவல் இருந்தனராம். அரசு மருத்துவமனைகளின் நிலை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

உயிரிழப்பு தந்த சோகத்தை விட பெரிய சோகம் என்னவென்றால், சம்பவம் நடந்து ஒன்றரை நாட்கள் அரசு இயந்திரங்களோடு போராடி, உடலைப் பெற வேண்டியதாயிற்று.

நன்றியோடு கூறுகிறேன். தொகுதி எம்.எல்.ஏ விஜய்காந்தின் நேரடி தலையீட்டால், அவருடைய கட்சி ஆட்கள் வந்து தான் உடலைப் பெற உதவினார்கள்.

ஒவ்வொருவர் வரும் போதும், பூட்டப்பட்டிருக்கும் அறையைத் திறப்பதற்கு, அந்தப் பொறுப்பாளரிடம் கெஞ்சி, பணம் கொடுத்து உடலைப் பார்க்க வேண்டியதாயிற்று.

நாயே! அது என்ன, மிருகக்காட்சி சாலையில் உள்ள அபூர்வ மிருகமா? பணம் வாங்கிக் கொண்டு காட்டுகிறாயே? நாமும் ஒருநாள் அங்கே கிடத்தப்படும் நிலை வரு்மென நினைத்துப் பார்த்தால் இப்படி நடந்து கொள்வாயா? அன்பும், கருணையும், பாசமும்,கனவுகளும் கொண்ட ஒரு உயிரிழந்த இளைஞனின் உடலடா…. உடல்.

பத்தானின் தம்பி எஸ்.ஐ டிரைனிங்கிற்காக டெல்லியிலிருந்தவன், வந்தபின் காவல் நிலைய சம்பிரதாயங்கள் விரைந்து முடிக்கப்பட்டது.

இதுக்குத் தான் உன் தம்பிய எஸ்.ஐ ஆக்கணும்னு ஆசப்பட்டியாடா பத்தா?

எப்போ உன் நினப்பு வந்தாலும் ஆஸ்பத்திரில பாத்தது தான் ஞாபகத்துக்கு வருது! உன்னப் பாக்க நான் விருத்தாச்சலத்துக்கு வராமயே இருந்திருக்கலாம்டா! வராம இருந்திருந்தா, நான் திருப்பூர்ல உயிரோட பாத்த சிரிச்ச முகம் தான என் நெனப்புல இருந்திருக்கும்.

%d bloggers like this: