புதிய தலைமுறை – வீடு

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தினர், ’வீடு’ என்ற தொகுப்பில் இடம் பெறும் தனி நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்காக வீட்டைப் படம்பிடிக்க வந்தனர்.

இயக்குநர். க்ருஷ், தொகுப்பாளர். விஷ்ணு, ஒளிப்பதிவாளர். ஆனந்த் ஆகிய நண்பர்கள் முதல் நாளே சென்னையிலிருந்து, விருதுநகர் வந்து தங்கும் விடுதியில் தங்கி, மறுநாள், காலை வீட்டுக்கு வந்து சிறப்பாக படப்பிடிப்பும், நேர்காணலும் நடத்தி முடித்து, மிக அருமையான காணொலியை ஒலிபரப்பினர்.

01.01.2023ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி, வீடு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான காணொளியின் சுட்டி கீழே…….

https://youtu.be/4epS2WchkBk

அன்பின் சகோதரர். பரிசல் கிருஷ்ணா,

நண்பர்கள். க்ருஷ், விஷ்ணு, ஆனந்த் மற்றும் தணிகைவேல் மற்றும்

பி.டி.ப்ரைம் குழுவினருக்கு நன்றி!

நல்லாருக்கு

தலவாசக் கதவும் நிலையும் தேக்கு
கேரளாலருந்து கொணாந்த தடி
பாலிசுக்கே பாஞ்சாயிரமாச்சு

ம்….

தரைக்கு கிரானைட் போட்டிருக்கலாம்
கடசீல சதுரக்கல்லு பதிச்சிட்டேன்
சதுர அடிக்கு அஞ்சாயிரமாச்சு

ம்…. நல்லாருக்கு

புள்ளைக ரூமு டிசைனே தனி
கட்டில்லருந்து சுவத்துலருக்கிற படம் வரைக்கும்
மானத்துல இருக்குற மாதிரி நட்சத்திரம் வேற

ம்…. டிசைன் நல்லாருக்கு

பாத்ரூமுக்கே ஜாக்குவார் குழாயி
டப்பு டைல்ஸ் பேசினு கண்ணாடினு
காசு அத்துருச்சு

ம்…. எல்லாந்நல்லாருக்கு

பெட்ரூம் கட்டிலும் மிச்ச தேக்குலயே
அப்படியே பீரோலும் மரத்துலேயே புதுசா
கையோட ஏசியும் மாட்டியாச்சு

ம்…. ரொம்ப நல்லாருக்கு

எல்லாமே நீட்டா இருக்கணும் எனக்கு
அதனால தான் காசக்கூட பாக்கல
அந்தா இந்தானு அம்பதாச்சு
ம்…. எல்லாமே நீட்டாருக்குடா

அம்புட்டையும் விட

அவம்வீட்ட நெனச்சா

எந்நெனப்புக்கு வர்றதென்னமோ

அந்த அழுக்குச் சீப்பு மட்டுந்தான்!