நெடும் பயணம்

எத்தனையெத்தனை முகங்களை, குணங்களை, மனிதங்களை என் வாழ்க்கைப் பயணத்தில் கடந்து வந்திருக்கிறேன் என ஒரு நாள் எண்ணிப் பார்க்கும் போது, எனக்கே வியப்பாயிருந்தது. இப்போது என்னைச் சுற்றியிருக்கும் மனிதர்கள், கடந்த ஒரு சில ஆண்டுகளில் என்னோடு பரிச்சயமானவர்கள். அப்படியென்றால் அதற்கு முன்? என்ற கேள்வி எழுந்தது. அவர்களெல்லாம் இப்போது எங்கிருப்பார்கள்? எப்படியிருப்பார்கள்? என்ன செய்து கொண்டிருப்பார்கள்? கேள்விகள் துரத்தின. நாம் சந்தித்தாலென்ன? என்ற துணைக்கேள்வியும் எழுந்தது. அனைவரையும் சந்திப்பதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

ஆனாலும், ஏதோவொரு விதத்தில் பதில் தேடும் விதமாக, திருப்பூர் வந்ததிலிருந்து என்னோடு பணிபுரிந்த நண்பர்களை வைத்து ஒரு சந்திப்பு நடத்தினால் என்ன? என்ற எண்ணம் வந்தது. திருப்பூர் வந்ததிலிருந்து இப்போது நான் பணிபுரிவது இரண்டாவது நிறுவனம். இதற்கு முன்னர் பணிபுரிந்தது ஒரு ஆயத்த ஆடை தொழிற்சாலையில். வேறு எந்த ஊரிலும், இடத்திலும் பணிபுரிபவர்கள் ஒரே நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து, ஏன் பணி ஓய்வு வரை கூட ஒன்றாக வேலை செய்யும் வாய்ப்பிருக்கும். ஆனால், திருப்பூரில் இன்று ஒரு இடத்தில் வேலை செய்பவர்கள், மறுநாளோ, மறு வாரமோ, மறு மாதமோ, வருடமோ வேறு நிறுவனத்திற்கு சென்று விடுவார்கள். பெரும்பாலும் தீபாவளி முடிந்ததும் பணியிட மாற்றம் அதிகமிருக்கும். பழைய நண்பர்கள் எப்போதாவது, சாலையில் எதிர்ப்படும் போது ஒரு கையசைத்தல்/தலையாட்டல் அல்லது பார்த்தும் பார்க்காத மாதிரி போதல். அவ்வளவே! ஆம். ரயில் பயண நட்பு போலத் தான்.

உனக்கு வந்திருப்பது விபரீத ஆசை! என உள்மனம் கெக்கலித்துக் கொண்டிருக்கும் போதே, அனைவரையும் ஓரிடத்தில் இணைக்க வேண்டுமென்ற உறுதியும் வந்தது. சிலரோடு இப்போது கைப்பேசித் தொடர்பு மட்டுமேயிருக்கிறது. பலரோடு எனக்கு பணிமாற்றத்தால், தொடர்புச் சங்கிலி முற்றிலுமாய் அறுந்து விட்டிருந்தது. என்னுடன் தொடர்பிலிருந்த நண்பர்களிடம் தகவல் சொல்லி, ஆங்காங்கே அவரவர்கள் தொடர்பில் இருப்பவர்களிடம் சந்திப்பு நடைபெறும் செய்தியைப் பகிரச் சொன்னேன்.   மூன்று நாட்கள் அவகாசத்திற்குள்ளாக என்னுடன் ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் முன்னால் பணிபுரிந்தவர்கள், கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையிலிருக்கும் நண்பர்கள் சிலருக்கு தகவல் சென்று சேர்ந்தது.

எதற்கு? ஏன்? என்ற கேள்விகள் அனைவரிடமிருந்தும் எழுந்தது. அதற்கு, ஒண்ணுமில்ல! எல்லாரும் ஒரே இடத்துல சந்திச்சா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். அதான்! என்ற பதிலையே திரும்பத் திரும்ப சொன்னேன். சாப்பிட்டுட்டு வரட்டுமா? சாப்பாடு வாங்கிக் கொடுப்பீங்களா? என்ற வெள்ளந்தித்தனமான கேள்விகளும் கேட்டனர். சில குறும்புக்கார தம்பிகள், அண்ணன் வெளிநாடு போவதால் எல்லாரையும் பாக்கணும்ங்கிறார் வந்திரு! என்று அவரவர்களுக்கு தோன்றியதை கைப்பேசியில் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். உள்ளூரிலிருப்பவர்கள் மட்டுமன்றி, 200 கிலோ மீட்டர்கள் தூரமுள்ள ஊரிலிருந்து கூட சந்திப்பிற்கு வருகிறேன் என உற்சாகமாய் நண்பர்கள் சொல்ல ஆரம்பித்தனர்.

சந்திப்பு தேதி நெருங்க, நெருங்க அவரைக் கூப்பிடட்டுமா? இவரைக் கூப்பிடட்டுமா? என்று கேட்டு வந்த கைப்பேசி அழைப்புகளால், எனக்கும் ஓரளவுக்கு நண்பர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை வந்தது. இடம் குறித்து முதலில் குழப்பம் இருந்தது. பின் நிறுவனம் இயங்கி வந்த (இப்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது) வளாகத்துக்குள்ளேயே சந்திக்கலாம் என முடிவானது.

சென்ற ஞாயிறு, மணி மாலை ஆறைக் கடந்ததும் குறித்த இடத்தில் கிட்டத்தட்ட ஏழெட்டு நண்பர்கள் குழுமி விட்டனர். மற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறோம் என்ற தகவலுடன் வந்து கொண்டிருந்தனர். மழை வேறு துளிர்த்துக் கொண்டிருந்தது. நாங்கள் வழக்கமாய் தேநீர் அருந்தும் கடைக்கு வெளியே ஒதுங்கினோம். வந்த நண்பர்களில் பெரும்பாலானோர் உள்ளூரிலே இருந்து கொண்டு இத்தனை வருடங்கள் ஒருவரையொருவர் சந்திக்காதவர்கள்.

டேய்!, ஏய்!, தம்பி!, அண்ணா! என்று விளித்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பு பரிமாறிக் கொண்டோம். அந்தத் தருணத்தில் இருந்தால் மட்டுமே அந்த அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடியும். அற்புதக் கணம் அது! திரும்ப அவரவர் குடும்ப உறுப்பினர்கள் நலன் விசாரித்து மகிழ்வாய் பேசிக் கொண்டோம். ஒருவருக்கொருவர் முன்பு முறைத்துத் திரிந்தவர்கள் கூட, தயக்கத்துடன் ஆரம்பித்து பின்னர் இயல்பாக பேசிக் கொண்டனர். முன் கோபிகள், சட்டையைப் பிடித்துக் கொண்டவர்கள், சண்டையிட்டவர்கள், எல்லோரும் இப்போது பக்குவப்பட்டவர்களாய் மாறியிருந்தனர்.

எங்காவது உணவகத்துக்குச் செல்ல முடிவெடுத்து, திரும்ப அங்கு கூடினோம். இப்போது உணவகத்தில் இன்னும் சிலர் சேர்ந்து கொண்டனர். எண்ணிக்கை இருபதுக்கும் மேலானது. உணவகத்தில் ஒரே நீள் மேசையைச் சுற்றியமர்ந்து, ஏற்கனவே, என்னவாக, என்ன வேலை செய்து கொண்டிருந்தேன், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவரவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஏனென்றால், நாங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தாலும், ஒரு சிலருக்கு மட்டும் தான் எல்லோரையும் தெரியும். எல்லோருக்கும் எல்லாரையும் அறிமுகமில்லை. கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறதா?

நிறுவனம் தொடங்கிய ஆண்டான 1990லிருந்து 2010 வரையான இருபது ஆண்டுகளில் அந்நிறுவனத்தில், வெவ்வேறு காலகட்டங்களில் பணிபுரிந்தவர்கள் என்பதால் தான் அறிமுகம். இந்நிறுவனத்தில் நாங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், தொழிலாளியாக பணிபுரிபவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் பழகியதால் இந்த பந்தம் ஏற்பட்டது. அழைத்தவுடன் வந்து அன்பை வெளிக்காட்டினர்.

மாட்டு வண்டி ஓட்டுநரிலிருந்து, உற்பத்தி மேலாளர் வரை தையல்காரர், துணி வெட்டுபவர், துணி தேய்ப்பவர், ஒப்பந்தகாரர், மேற்பார்வையாளர், அலுவலக ஊழியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட நண்பர்களுடன் நிறுவனத்தில் பயிற்சியெடுத்தவர், நிறுவனத்திற்குத் தேவையான கச்சாப் பொருள் வழங்குநரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டது மனதுக்கு நிறைவாயிருந்தது. நிறுவன உரிமையாளர் உட்பட வராத மற்ற நண்பர்களுடன் கைப்பேசி அழைப்பில் அனைவரும் அளவளாவினர். மலரும் நினைவுகள் கேலிப்பேச்சும், சிரிப்புமாய், காற்றில் கலந்தது. உணவுடன் அன்பையும் புசித்ததால் வயிறுடன் மனதும் நிறைந்தது. பின், அடுத்த சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டது. நிறுவன உரிமையாளரும் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்வதாய் உறுதியளித்திருக்கிறார்.

பெரிய பெரிய இடங்களில், கல்வி நிறுவனங்களில் மட்டுமே இப்படியான சந்திப்புகள் நடக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானே இத்தகைய சந்திப்பில் கலந்து கொள்வேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதுவும், திருப்பூரில் இது மாதிரியான சந்திப்பு எங்கும் நடக்கவில்லை. இது பற்றி இப்போது நான் பணிபுரியுமிடத்தில் மகிழ்வோடு சொல்வேன் என அவரவர் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். என்னையும் நினைவு வைத்து அழைத்ததற்கு நன்றி எனக்கூறி, நெகிழ்வோடு கைப்பிடித்து, மகிழ்வோடு நண்பர்களனைவரும் விடைபெற்றனர்.

தொடரும் இந்நெடும் பயணத்தில்,  இன்னும் சில நண்பர்களும் அடுத்த சந்திப்பில் இணையக்கூடும்.  நாமும் பயணிப்போம்.

படைப்பாளி

திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் இல்லையென அரசாங்கமோ, தொழிலதிபர்களோ உரக்கச் சொல்ல முடியாது.  தெரிந்தும், தெரியாமலும் குழந்தைத் தொழிலாளர்களின் பங்களிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

வெளிநாட்டு விற்பனை நிலையங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் தங்களது ஆடைகள் குழந்தைத் தொழிலாளர்களின்றி தயாரித்தவை என இப்போது விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.  பனியன் சார்ந்த உபதொழில்களிலும், உள்நாட்டில் விற்கப்படும் ஆடைத் தயாரிப்புகளிலும், குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

உறுத்தும் உண்மை ஒன்றைச் சொல்லட்டுமா?

உங்கள் உடலோடு ஒட்டி உறவாடும் உள்ளாடைகள் வியர்வை உறிஞ்சுவது போல், குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சித் தயாரானது தான்.

குழந்தைத் தொழிலாளர் அவலங்களை என்னுடைய முந்தைய கனியா கனிகளும், கண்ணாடி கனவுகளும் பதிவில் ஓரளவு பதிவு செய்திருக்கிறேன்.  எழுத்துக்களை விட, படங்கள் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.  அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளம் படைப்பாளி ரவிக்குமார் என்ற குறும்பட இயக்குநரும் ஒருவர்.

திருப்பூரைச் சேர்ந்த, ரவிக்குமார் பனியன்கள் தைப்பதற்குத் தேவையான தையல் நூல் வியாபாரம் செய்து வருகிறார். லீவு, எட்டா(ம்) வகுப்பு, சுழல் என்ற தலைப்புகளில் குறும்படங்களை எடுத்திருக்கிறார்.

இதில் எட்டா(ம்) வகுப்பு என்ற குறும்படம் திரையிடல்களின் போது பாராட்டைப் பெற்றது.

ஐந்தாம் வகுப்போடு பழைய பேப்பர் கடைக்கு வேலைக்கு போய் விட்ட சிறுவன், அவனுடைய 8ம் வகுப்பு படிக்கும் நண்பன், தன்னைப் போலல்லாது,  ஒரு டாக்டராகவோ, பொறியாளனாகவோ ஆக வேண்டும் என்ற கனவுடன் பழைய புத்தகங்கள், செருப்புகள் போன்ற தன்னாலான உதவிகள் செய்தும், பயனளிக்காது பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விடுகிறான் என்பது தான் கரு.

தன்னைப் பற்றியான அறிமுகத்தில்,

“நான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றபோதே விடுமுறைக் காலங்களில் பனியன் கம்பனிகளில் வேலைக்குச் செல்வேன். அதுதானோ என்னவோ பின் நாட்களில் என் குறும்படங்களில் பிரதிபலித்தது.

துபாய் சென்றுவந்த ஒரு நண்பரிடம் இருந்த கேமராவை எடுத்துக் கொண்டு ஏதோ படம் பிடித்தேன். நிறைவாக இல்லை. நண்பன் தே.ராம் ஒரு குறும்படம் இயக்கினான். அவனுடன் சேர்ந்து பணியாற்றினேன். கொஞ்சம் கற்றுக் கொண்டு ‘லீவு’ குறும்படத்தை இயக்கினேன். அதற்குப் பின்னர் ஒரு வருட இடைவெளியில் ‘சுழல்’, ‘எட்டா(ம்) வகுப்பு’ என்னும் குறும்படங்களை இயக்கினேன்.

குறிப்பாக குழந்தைத் தொழிலாளர் பற்றியே நான் குறும்படம் எடுத்ததற்கான காரணம் என் மனதின் சிதைவு என்றே எண்ணுகின்றேன் “

ரவிக்குமாரின் கருவில் உருவான ஒரு அசைபடத்தை நண்பர் கேபிள் சங்கர் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.  கேபிள் சங்கருடனான திருப்பூர் சந்திப்பில் ரவிக்குமாரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இப்போது பின்னல் நகரம் என்ற வலைத்தளத்தில் பதிவுகள் எழுத ஆரம்பித்துள்ளார்.

வளரும் இளம் படைப்பாளி ரவிக்குமாரை வாழ்த்தி வரவேற்போம்.