Posts tagged ‘Indane’

வாயு மண்டலம்

காலணிகளை வெளியே கழட்டி வரச் சொல்லி மிரட்டும் கண்ணாடிக் கதவு அறிவிப்பு, வழுவழுவென்று இருந்த கற்கள் பதித்த தரை, கழுத்துயர முன் தடுப்பின் பின் அமர்ந்திருக்கும் பணியாளர்கள்,  அவர்கள் மட்டும் அமர்வதற்கான மெத்தை இருக்கைகள், வருபவர்கள் நின்று, சென்று கொண்டேயிருக்க வேண்டுமென தீர்மானித்து, அளவாய் விடப்பட்டிருக்கும் காலியிடம்.

இது தான் அரசால் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விநியோகிக்கும் முகவர்களின் பெரும்பான்மையான அலுவலகம். எப்போதும், பொறுமை கிலோ என்ன விலை? கனிவு என்றால் என்னவென்று கேட்கும் முகபாவம், கேள்வி கேட்டு முடிக்குமுன் முகத்திலறையும் பதில்கள், இப்படியான தகுதிகள் பார்த்து தேர்ந்தெடுத்த பணியாளர்களே பெரும்பாலுமிருப்பர்.

மக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயுவை ஏன் அரசே விநியோகம் செய்யக் கூடாது?  முகவர்களுக்கு ஏன் கொடுத்து கொள்ளை லாபம் அடிக்க அவர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்?  அல்லது முகவாண்மை அலுவலகப் பணியாளர்களுக்காவது முறையான பயிற்சியும், சரியான சம்பளமும் கிடைக்கப் பெற அரசு ஆவண செய்தால் மக்களுக்கு மிகப் பயனுள்ளதொன்றாய் இருக்கும்.

கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு உருளைகள் கேட்டு விண்ணப்பிக்காததால், என்னுடைய இணைப்பை, உயிரற்ற பட்டியலில் சேர்த்து விட்டார்கள். அதனை உயிரூட்ட, உரிய ஆவணங்களைச் சேகரித்துக் கொடுக்கவே சில நாட்களாயின.  ஆவணங்களைச் சரி பார்த்து, ஒரு வழியாக சரியென தலையசைப்பதற்கு மேலும் ஒன்றிரண்டு நாட்கள்.  வீட்டுக்கு ஆய்வு செய்ய ஒருவர் வருவார், அவரின் அறிக்கை கிடைத்த பின் நாங்கள் சொல்கிறோம் என்ற பதிலோடு வெளியே வந்தேன்.

தொடர்ச்சியாக தொடர்பு கொண்டதில், வீட்டுக்கு ஆய்வு செய்ய வருபவரின் தொடர்பு எண் கிடைத்தது.  அவரை ஒருவாறாக தொடர்ச்சியாக தொடர்ந்ததில், ஆய்வுக்கு வந்தார்.  பார்க்க வேண்டியதைப் பார்த்து பெற வேண்டியதைப் பெற்றுச் சென்ற ஓரிரு நாட்களுக்குப் பின் முகவர் அலுவலகத்தை அழைத்த போது,

உங்க வீட்டுக்கு வந்தார்ல, அவர் இன்ஸ்பெக்சன் பண்ணுன பேப்பர் எதுவும் குடுக்கல. நீங்க அவரையே கூப்பிட்டு கேட்டுக்கோங்க.

என்ற பதிலுக்குப் பின், ஆய்வாளர் (வீட்டுக்கு உருளை கொண்டு வந்து கொடுக்கும் பணியாளரும் இவரே),

நான், எல்லா பேப்பரையும், ஆபீஸ்ல ஒல்லியா ஒரு மேடம் இருப்பாங்க பாருங்க! அவங்க கிட்ட கொடுத்திட்டேன்.  அவங்ககிட்ட கேட்டுப்பாருங்க!

என்று முடித்தார்.

அடுத்த கட்ட முயற்சியில், இது போன்ற விசயங்களைக் கண்காணிக்கும் பணியாளரின் எண் கிடைத்து, கேட்ட போது அலுவலகத்துக்கு வரச்சொன்னார்.

இந்த பேப்பரையெல்லாம் எடுத்துட்டு, சீனிவாசா போங்க! அங்க மேடம் வருவாங்க! 12 டூ 2 மணி வரைக்கும் தான் இருப்பாங்க. கையெழுத்து வாங்கிட்டு வந்திடுங்க. பதிஞ்சிடலாம்.

சீனிவாசா என்பது இன்னொரு பகுதியில் இருக்கும் முகவர் அலுவலகம். அங்கு சென்று, 12 மணியிலிருந்து, 2 மணி வரை காத்திருந்தது தான் மிச்சம். ஒன்றரை மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக, எல்லோரையும் வெளியே தள்ளி கதவை அடைத்து விட்டார்கள்.  பசியுடன் சுமார் 30 பேர் வரை இது போன்ற தாள்களுடன், பகுதி அலுவரின் வருகைக்காக காத்திருக்க, வருவதற்கான அறிகுறியே இல்லை.  கேட்ட போது தெளிவான பதிலுமில்லையாதலால், 2 மணிக்கு மேல் திரும்ப வேண்டியதாயிற்று.

இப்படியாக, படையெடுத்து தோற்றதில், தீச்சுவாலையில்லா அடுப்பு வாங்கி ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில், விண்ணப்பத்தை கிடப்பில் போட்டேன்.  சென்னையில் எரிவாயு முகவர் அலுவலகத்தில் பணிபுரியும், என் உறவினர் ஒருவரிடம், புலம்பிக் கொண்டிருந்த போது, நேராக கோவையிலிருக்கும் முதன்மை அலுவலகத்தை அணுகச் சொன்னார்.

கோவை, முதன்மை அலுவலகத்தின் வரவேற்பறையில், காவலர்கள் என்ன விசயமாய் வந்திருக்கிறீர்கள்?  யாரைச் சந்திக்க வேண்டும்? என்ற விபரங்களைத் தெரிந்து, எத்தனை மணிக்கு நுழைந்தோம் என்பதையும் பதிவு செய்து உள்ளே அனுப்புகிறார்கள்.

அலுவலரின் அறைக்கு அழைத்து சென்று, இருக்கையில் அமர வைத்து காவலர் திரும்பிச் செல்கிறார்.  அலுவலர், எனக்கு முன் இருந்த ஒரு வயதான பெண்மணியிடம், பெயர் மாற்ற விண்ணப்பத்தை எப்படி எழுத வேண்டும் என பொறுமையோடு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பெண்மணியின் அப்பாவித்தனமான கேள்விகளுக்கும், கனிவோடு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

என் முறை வந்த போது, விசயங்களை பொறுமையாகக் கேட்டு விட்டு, திருப்பூரிலேயே இந்தக் காரியத்தை முடித்திருக்கலாமே?  ஏன் இங்கு வரை வந்து அலைகிறீர்கள்? என ஆதங்கப்பட்டார்.  என் இணைப்பு இருக்கும், முகவர் அலுவலத்துக்கு தொலைபேசியில் அழைத்து, இனி மேல் கையொப்பத்துக்காக வாடிக்கையாளர்களை அலைக்கழிக்காதீர்கள். அவர்களுக்கும் வேலை இருக்கும்.  இதற்காக, அலுவலக விடுப்பு, அனுமதி போன்றவைகள் எடுத்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். முறையான ஆவணங்களை வாங்கிக் கொண்டு, எரிவாயு உருளைகளைக் கொடுங்கள். பின்பு, அதிகாரியிடம் கையொப்பம் வாங்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இது, அவரது பணியென்ற போதிலும், அலுவலகத்தின் வாயிலிலிருக்கும் காவலர்கள் முதல் அலுவலர் வரை சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது என்ற மன ஓட்டம் மேல் மட்டத்திலிருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும். போகும் போது இவரின் பெயரை அவசியம் தெரிந்து கொண்டு, பாராட்டி ஒரு பதிவாவது எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

சமையல் எரிவாயு இணைப்பைப் புதுப்பிக்க ஆணையிட்டு ஒப்பமிட்டார். அதிக பட்சமாய் பத்து மணித்துளிகளாயிற்று.  மிகுந்த மகிழ்வோடும், நன்றியோடும் விடைபெற்றேன்.  வாசலையடைந்தும், பெயர் கேட்க மறந்ததை நினைத்து, ஆவணங்களைப் பையில் திணித்த போது, கையொப்பத்தின் கீழே, அலுவலக முகவரியுடன் கூடிய முத்திரையில் பெயரும் இருந்தது.

வள்ளுவன்!

Advertisements
%d bloggers like this: