Posts tagged ‘tiruppur’

கனவுச் சிறகுகள்

விமானத்திற்கும்

எனக்குமுள்ள தொடர்பு

ஒரு சிலகணங்களில்தான்

நிகழ்ந்திருக்கிறது.

 

என் ஊரிலும்

வயலுண்டு என்றாலும்

இறங்கியதில்லை இதுவரை

எந்த விமானமும்.

 

நினைவு தெரிந்தென்

சின்ன வயதுகளில்

தாழப்பறந்த

ஹெலிகாப்டர்கள் பின்னால்

ஓடியிருக்கிறேன்.

 

சென்னைக்குச் செல்கையில்

மீனம்பாக்கத்தைக் கடக்கும்

அபூர்வ விநாடிகளில்

விழிவிரிய வியந்து

ரசித்திருக்கிறேன்.

  

திருவிழாவை முன்னிட்டு

சென்ற வாரம்தான்

விமானத்தில் ஏற

வாய்ப்பு கிட்டியது.

என்றாலும்

கோயில் கோபுர விமானமெல்லாம்

விமானமா என்ன?

 நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் கவிதைத் தொகுதியிலிருந்து…..

நடுத்தர வர்க்கத்தினருக்கு ரயில் பயணமே கனவு.  குளிர் வசதி செய்யப்பட்ட பெட்டியிலோ, பேருந்திலோ பயணிப்பது பெருங்கனவு.  விமானப் பயணம் கனவின் கனவு.  

 இரண்டு மாதங்களுக்கு முன்பே, நண்பர்களுடன் ஐதராபாத் செல்வதாக பயணத்திட்டம்.  இருவர் திருப்பூரிலிருந்தும், மற்றவர்கள் சென்னையிலிருந்தும் தொடர்வண்டியில் ஐதராபாத்துக்கு வந்து விடுவது என திட்டமிட்டிருந்தோம்.  இடையில் பணியிலும், பதவியிலும் சில ஏற்ற, இறக்கங்கள்.  அதன் காரணம் என் தலைமை அதிகாரி பயணத்தேதியன்று எதிர்பாராததாய் திருப்பூர் வருவதாக தகவல்.

அதனால், திட்டமிட்டபடி என் நண்பர் மட்டும் கோவையிலிருந்து தொடர் வண்டியில் பயணிக்கிறார். நான் ? திருப்பூர் – ஐதராபாத் 20 மணி நேரப்பயணம்.  திருப்பூரில் மாலை 5.30க்கு கிளம்பி மறுநாள் மதியம் 1.30 மணிக்கு சென்றடையும்.

என் பயணத்தேதியன்று  திருப்பூர் வந்த தலைமை அதிகாரியை வரவேற்று மறுநாள் மாலை 5 மணிக்கு வழியனுப்பும் போது, ஐதராபாத் செல்ல விடுமுறையும் வாங்கியாயிற்று.  மற்ற அனைவரும் ஐதராபாத் சென்றடைந்து விட்டார்கள்.  வராததற்கு திரும்பத் திரும்ப செல்லடித்து சொல்லடித்தார்கள் L

என்ன செய்வதென்று தெரியவில்லை.  நண்பர்கள் விமானத்தில் வந்து விடு.  பயணச்சீட்டுக் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளலாம் என ஆலோசினார்கள் (எம்புட்டு பாசக்காரப் பயலுவ! ).  பயணச்சீட்டுக்கு உடனே ஆவண செய்யச் சொன்னார்கள்.  செய்தாயிற்று. மறுநாள் காலை 10.40க்கு விமானப்பயணம்.

 நான் இது வரை கோயம்புத்தூர் விமான நிலைய வாசலில் நிறைய பேரை வழியனுப்பியிருக்கிறேன்.  ஒரே ஒரு முறை மேலிருக்கும் கண்ணாடி அறையிலிருந்து விமானத்தை வேடிக்கை பார்த்திருக்கிறேன்.  மற்றபடி பரங்கிமலை மேலிருந்து கழுகுப்பார்வை.  வானில் பறக்கும் போது தூரப்பார்வை.  இது தான் எனக்கும் விமானத்துக்குமான வரவு செலவுகள்.

ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னமே விமான நிலையம் வந்து, பயணப்பையுடன் நேரடியாக பயணச்சீட்டு கொடுக்குமிடத்திற்கு சென்றேன்.  அம்மணி ஏதோ கேட்க, எனக்கிருக்கும் படபடப்பில் என்ன கேட்கிறாரென்றே புரியவில்லை.  பின்பு திரும்ப கேட்டதில், கையில் எடுத்துச் செல்லும் பையா? எனக்கேட்டது.  ஆமென்றவுடன், பையை, செக்யூரிட்டி செக்க வேண்டுமே என என்னைப் பார்த்தார்கள்.  எனக்கென்ன தெரியும்?  செக்கைத் தெரியுமா?  சிவலிங்கத்தை தெரியுமா?  பே! என விழித்தேன்.  பையை உதவியாளரிடம் கொடுத்து கூர்ந்தாராயும் பகுதிக்கு அனுப்பி வரச்செய்தனர்.  பயணச்சீட்டு கொடுத்து, எதிரறைக்கு போகச் சொன்னார்கள்.

 அந்த அறைக்கு செல்ல யத்தனிக்கும் போது, காவலர் இன்னும் நேரமிருக்கிறது என இருக்கையை காண்பித்தார்.  உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஆண்களும், பெண்களும் தங்கள் உடலெடைக்கு நாலுமடங்கு பயணப்பைகளோடு வந்து வெந்து கொண்டிருந்தனர்.  சிலர் வாடிய முகங்களுடன் வழியனுப்பினர்.  ஒரு பெண் கைப்பையிலிருந்து ஒரு கிலோ குண்டு சாம்பார் பருப்பு பொதியை பெரிய பைக்கு மாற்றினார்.  ஒருவர் நறுமணத் திரவிய உருளை, நுரை உருளை, சவரக்கத்தி எல்லாவற்றையும் வெளியே இருக்கும் நண்பரிடம் கொடுத்தார்.  புதுமணப்பெண் கண்ணீரடக்கி, சாடை காட்டிக் கொண்டிருந்தார்.

dsc02646

விமான ஓடுதளம் செல்லும் வாசல்  இருக்கும் அறைக்குள் சென்றேன்.  இங்கு டெல்லி செல்லும் வட இந்தியர்கள் குடும்பத்துடன் குழுமியிருந்தனர்.  குழந்தைகளனைவரும் கொழு! கொழு!   ஏதாவது ஒரு தீனியை இருந்த அரைமணிநேரமும் அரைத்துக் கொண்டிருந்தனர்.  முப்பரிமாண (3D Vision) தொலைக்காட்சியொன்றும் இருந்தது.  அதனைப்பார்த்த கண்ணாடியர்கள், சந்தேகத்தில் கண்ணாடியைத் துடைத்தும், கழட்டியும் தொலைக்காட்சியையே உற்று பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஓடுதளத்துக்குள் செல்ல எப்போது அனுமதிப்பார்கள் என தெரியவில்லை.  அறையுள்ளிருக்கும் ஒலிபெருக்கியில், ஒலி கர கரவென கேட்கிறது.  அதிலும் அமெரிக்க ஆங்கிலத்தில் அறிவிப்பு.  சுத்தமாகப் பு(தெ)ரியவில்லை.  நான் வைத்திருக்கும் வண்ணத்தில், யார் பயணச்சீட்டு வைத்திருக்கிறார்கள் என பார்த்து வைத்துக் கொண்டேன்.  அவர் எப்போது எழுந்து உள்ளே போவாரோ, அப்போது நாமும் கூட போய் விடலாம் என எண்ணி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்  வேற வழி?

ஒரு வழியாக ஓடுதளத்திற்குள் விட்டார்கள்.  பயணச்சீட்டு சரி செய்யும் பெண் வாழ்த்துச் சொல்ல, என்னவென்று புரியாமல் நான் நிற்க.  நமக்குத்தான் காலும், கையும் வெட வெடங்குதே.  ஒண்ணும் காதுல விழமாட்டேங்குது.  ஒரு வழியாக விமானத்தில் ஏற்கனவே துண்டு போட்டு இடம் பிடித்த சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.  வெள்ளை மேலுடுப்பும், சிகப்பு கீழுடுப்பும் (விமான வண்ணக்கலப்பு) அணிந்த அம்மணிகள் இடை வார் எப்படி மாட்டுவது?  மூச்சுக்கருவி எப்படி  உபயோகிப்பதென்று சாடைமாடையாக விளக்கினார்கள்.

விமானப்பயணம் –  நெடுநாள் கனவு.  கனவுக்கும், எனக்கும் இப்போது தான் சிறகு முளைத்திருக்கிறது.  சிறிது நேரத்தில் பறக்கப் போகிறேன் என்ற நினைவே ஏகாந்தமாய் இருந்தது.

விமானம் மேலெழுந்தவுடன் உள்ளேயே ஒரு அம்மணி பழரசக்கலவைகள், ரொட்டித்துண்டுகள், அடங்கிய வண்டி தள்ளிக் கொண்டு வந்தார்.  ஏதாவது வாங்கலாமா?  காசு கேட்பார்களா? இலவசமா? தெரியவில்லை.  நல்லவேளையாக பக்கஇருக்கை பகவான் எல்லாவற்றையும் தெளிவாக கேட்டார்.  தெரிந்தது.  தண்ணீர் மட்டும் இலவசம்.  விடுவோமா?  தவிக்காட்டியும், ஒரு தண்ணீர் புட்டி வாங்கி வைத்துக் கொண்டேன்.  அதை வரும் போது எடுத்துக் கொண்டு வரவில்லை என்று குறிப்பிட விரும்புகிறேன் 🙂

 கொஞ்ச நேரம் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன்.  தூக்கம் அசத்தியது.  ம்ஹீம்…  இம்புட்டு காசு கொடுத்து தூங்குறதுக்கா வந்தே? என்னையே கேட்டுக் கொண்டேன்.  சக பயணிகள் ஆங்கில புத்தகத்திலும், சிலர் அதீத தூக்கத்திலும் மூழ்கி விட, அண்ணன் ரமேஷ் வைத்யா எழுதிய உயரங்களின் ரசிகன் கவிதைத் தொகுப்பை உயரத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் படம் எடுத்தேன் – வரலாறு மிக முக்கியம் நண்பர்களே! 🙂

சில மணித்துளிகளில் விமான ஓட்டி குரல் கேட்டது.  எப்பவும் விமான இயந்தரம் பழுதடைந்தால், விமானி பேசுவார் என்று திரைப்படங்களிலும், கதைகளிலும் கேள்விப்பட்டது நினைவில் வந்து தொலைந்தது.  நல்லவேளையாக, விமானம் எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என்பதோடு நிறுத்தி விட்டு, இன்னும் சிறிது நேரத்தில் ஐதராபாத் விமான நிலையம் வந்தடையப்போகிறது என்ற தகவலினார்.

கீழிறங்கி வந்து நின்ற பின், ஒரு சிலர் எழுந்து முன் சென்றார்கள்.  என் பக்க இருக்கையாளர் மட்டும் எழவே இல்லை.  சரி! இறங்கு படிகள் பொருத்தி, கதவு திறந்த பின் இறங்குவார் என எண்ணி நானும் அமர்ந்திருந்தேன்.  முன் எழுந்து சென்றவர்களைக் காணவில்லை.  இறங்கியது மாதிரி தெரிந்தது.  நாமும் இறங்கலாமென பக்க இருக்கையாளரை தாண்டி விமானக் கதவுக்கருகே செல்லும் போது, டெல்லி செல்லும் பயணிகள் இறங்க வேண்டாமென ஒரு அறிவிப்பு. 

அடப்பாவி! பக்க இருக்கையாளர் டெல்லி செல்பவர் போல!

 இந்தியாவின் அதி நவீன விமானநிலையத்துக்குள், வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன்.  தாமதமாக வந்து சேர்ந்ததற்காக, அடி பிசிறப்போகிறார்கள் என பயந்து கொண்டே வாயிலுக்கு வந்தேன்.  நண்பர்கள், நீ விமானத்தில் வந்ததால் தான், இத்தகைய விமான நிலையம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என மகிழ்ந்தனர்.  

அங்கிருந்து பயணம் தொடர்ந்தது.


இனியும் தொடரும்……..

சொர்க்கம் ஒரு தீராத்தாகம்

கொட்டும் மழை, தெருவெங்கும் சாக்கடையோடும் மழை நீர். படகு ஏறித்தான் வீட்டிற்குள் போகும் சூழல்.

பிரதான சாலையிலே இறக்கி விட்டுப்போகும் பேருந்து. இன்னும் 10 மைல் நடக்க வேண்டும். கால்கள் வலிக்குமா? சலிப்பு ஏற்படுமா?

தெருக்களெங்கும் புழுதி, நிலத்தடி நீரெல்லாம் இரசாயனம் கலந்திருக்கிறது. போக்குவரத்து நெரிசல். இனிமே இங்கே வரக்கூடாது என்ற எண்ணம் வருமா?

நிழலுக்கு ஒதுங்க நிழலில்லாத கரடுமுரடான பாதை, கொதிக்கும் வெப்பம், தாங்க முடியாத தண்ணீர் தாகம், இனி இந்தப்பக்கம் எட்டியே பார்க்கக்கூடாது என்ற எண்ணம் வருமா?

தண்ணீர் கிடையாது. சாக்கடை வசதி கிடையாது. ரோடு கிடையாது. பத்து பேருந்து மாறித் தான் போக வேண்டும்.

போகவில்லை. இனிமேல் போகப்போவதில்லை என்ற வார்த்தைகள் நம்மிலிருந்து வருமா?

ம்ஹீம்…….வரவே வராது அது நம் சொந்த ஊராக இருந்தால்……

ஊரிலிருந்து வெளியே வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூரிலிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், தன்னுடைய ஊரின் பெயர் நாளிதழ்களிலோ, பேருந்திலோ தென்பட்டால் மனம் மகிழும். யாராவது ஊரைப் பற்றி பேசினால் தன்னையறியாமல் முகம் மலரும். மனதுள்ளே பனி உருகும்.

விருதுநகர் தெப்பக்குளம்

விருதுநகர் தெப்பக்குளம்

பண்டிகைகளுக்கு முந்தைய இரண்டு நாட்கள் திருப்பூரில் மதுரை, திருச்சி பேருந்தில் ஏறி இருக்கை பிடிப்பதென்பது ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கும் சாதனைக்கு சமம். ஏதோ ஒரு தீபாவளிக்கு ஊருக்கு செல்லுவதற்காக மாலை 6 மணிக்கு பேருந்து நிலையம் வந்து, விடிய, விடிய முயற்சித்தும் கூட்ட நெரிசலில் ஏறமுடியவில்லை. காலை 7 மணிக்கு அடுத்து வரும் ஏதோ ஒரு பேருந்தில் ஏறலாம். அது எங்கே போனாலும் சரி. அந்த ஊரிலிறங்கி மதுரை போய்க் கொள்ளலாம் என முடிவெடுத்து, நானும், என் நண்பனும் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்தோம். நடத்துநர் வந்து ஈரோடு போறவங்க மட்டும் இருங்க. மத்தவங்க இறங்குங்க என சொன்னார். உள்ளிருந்த அனைவரும் மதுரைக்கு போகிறவர்கள். நடத்துநரோடும், ஓட்டுநரோடும், நேரக்காப்பாளரோடும் வாக்கு வாதம் செய்து, பேருந்து ஈரோடு போய் அங்கிருந்து மதுரைக்கு போகும் என முடிவெடுத்தார்கள்.

நின்று கொண்டிருந்த ஓரிருவரைத் தவிர அனைவரும் மதுரை செல்பவர்கள். காலை எட்டு மணிக்கு கிளம்பிய பேருந்து நாலே நாலு பேரை ஈரோடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு, பேருந்து நிலையத்திலிருந்த நேரக்குறிப்பில் கையெழுத்திட்டு விட்டு, மூன்று?! முறை டீ குடிப்பதற்கும், ஒரு தடவை உணவிற்கும் நிறுத்தி, மதுரை சென்று சேரும் போது, மாலை 5 மணி. அங்கிருந்து ஊர் செல்வதற்கு ஒரு மணி நேரம்.

திருப்பூரிலிருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் வந்து சேர வேண்டிய மதுரைக்கு ஒரு நாள் பயணித்து வந்தேனென்றால், வந்தார்களென்றால் அதற்கு காரணம் – ஊர், பிறந்த மண்.  எவ்வளவு பெரிய பணமுடையவராயிருந்தாலும், நகர நாகரீகத்திலே ஊறிக் கிடந்தவராயிருந்தாலும், நூறு வேலைக்காரர்களுடன் கூடிய சொகுசு வீடிருந்தாலும், சொந்த ஊரில் இருக்கும் வீடு/குடிசை தான் சொர்க்கம். (உ.ம் – வைரமுத்து, இளையராஜா)

ஊருக்கே இப்படியென்றால், நாட்டை விட்டு இடம் பெயர்ந்தவர்களின் மனநிலை என்னவாயிருக்கும்? சொல்லொண்ணாத்துயரம்.

உணவகங்களில் உணவு பரிமாறுபவர் வந்தவுடன் பெயரைக் கேட்பேன். கொஞ்சம் மலர்ந்தாரென்றால் ஊர். என்னுடன் வரும் நண்பர்கள் ”ஆரம்பிச்சிட்டான்டா” என்று சலித்துக் கொள்வார்கள். பெரும்பாலும், திருப்பூரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் உணவகங்கள் வைத்துள்ளனர்.  வேலை செய்கின்றனர்.

அவர்களிடம் ஊர்ப்பெயரைக் கேட்டவுடன் சொல்வது – மதுரை

மதுரை திருமலை நாயக்கர் மகால்

மதுரை திருமலை நாயக்கர் மகால்

மதுரையா? மதுரையில எங்கே?

திருமங்கலம்.

திருமங்கலமா?

பக்கத்துல.

பக்கத்துல எந்த ஊர்? சிவரகோட்டையா? கள்ளிக்குடியா? டி. கல்லுப்பட்டியா?

கண்கள் விரிய……சுப்புலாபுரம் தெரியுமாண்ணே உங்களுக்கு?

ஆமா! தெரியும்.

சுப்புலாபுரம் வெலக்குலருந்து உள்ள 5 மைல் போனோம்னா நம்ம ஊரு வரும்ணே – கட்ராம்பட்டி.

அப்புடி சொல்லு வெவரத்த. மதுரை எங்கே இருக்கு? கட்ராம்பட்டி எங்கே இருக்கு? சுப்புலாபுரத்துலருந்து அஞ்சு மைல் தூரமிருக்கிற ஊருக்கு, அம்பது கிலோமீட்டர் முன்னாடி இருக்கிற மதுரையச் சொல்றே? என்று பேச்சு வளர்ந்து கொண்டிருக்கும்.

அதற்கப்புறம் எப்போது போனாலும் ஒரு சிநேகச் சிரிப்பு.

மாவு இன்னைக்கு சரியில்லண்ணே! தோசை வேண்டாம். சப்பாத்தி சொல்லவா?

காபி ஆறிப்போய் இருக்கு. வேண்டாம் என்று அன்புடனான கவனிப்பு.

இது போன்றதொரு அளவலாவல் தான் என்னை மறையூரில் காப்பாற்றியது தெரியுமா? மறக்கவே முடியாது.

இந்தப்பழக்கம் நான் இதற்கு முன்னால் ஒரு பின்னலாடை தொழிற்சாலையில் வேலை செய்த போது ஆரம்பித்தது.

தொழிற்சாலையின் உரிமையாளர் – பெரிய அண்ணாச்சி! (என்னை முதன்முதலில் திருப்பூருக்கு அழைத்து வந்து வேலை கொடுத்து கற்றும் கொடுத்தவர்) எங்கே எந்த இடத்திலும், அவரவர்களுடைய பெயரை கேட்டு தெரிந்து கொள்வார். அதோடு மட்டுமில்லாது நினைவிலும் வைத்திருப்பார். திரும்ப அவர்களைப் பார்க்கும் போது, பெயரை சரியாகச் சொல்லி அழைப்பார். சம்பந்தப்பட்டவருக்கே இவரை அடையாளம் தெரியாது.

வங்கியில் ஒருவரது பெயரைச் சொல்லி, கை குலுக்கி எப்படி இருக்கிறீர்கள் என்று நலம் விசாரித்தார். வழக்கம் போல கையைக் கொடுத்து விட்டு அந்த நபர் முழித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் நம் அண்ணாச்சி முன்னால் எங்கு சந்தித்தோம் என்று விளக்குகிறார். முழித்துக் கொண்டிருந் தவருக்கு நினைவுக்கு வந்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்.

ஏனென்றால் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விமானப் பயணத்தில் அண்ணாச்சிக்கு பக்கத்து இருக்கைக்காரர்.

நாளடைவில், பணி நிமித்தமான இதர சந்திப்புகளிலும் இந்த யுக்தியை நான் உபயோகித்தேன். இப்போது கிட்டத்தட்ட ஒரு வியாதியாகவே ஆகிவிட்டது.

ஒரு பின்னலாடை தொழிற்சாலையின் ஆவணத்துறை பொறுப்பாளர் ஒருவரை சந்திக்கும் போது, பேச்சினூடே திருநெல்வேலி வாடை அடித்தது. ஊர் பெயரைக் கேட்டேன். உங்களுக்கு எந்த ஊரென்று என்னைத் திருப்பிக் கேட்டார் (நம்மளை மடக்குறாராம் 😉 ).

திருநெல்வேலி.

அட! சரியாப்போச்சு போங்க! திருநவேலியில எங்கனக்குள்ள?

(ஜ்யாக்ரபி…. ஜ்யாக்ரபி…..) சாந்தி நகர்.

கோர்ட்டுக்கு எதுக்காலயா?

எதுக்கால…… ஆமாமா (நமக்கு காரியம் ஆகணுமே?)

எனக்கு மகராஜநகரு (மகாராஜ நகராம்!) ஹைக்ரவுண்டை தாண்டிப் போனதும், உழவர் சந்தைக்கு பக்கத்துல.

பூப்பூத்திருச்சு. இனி வேலை சுலபம் தான்.

window

வெயில் சன்னல் வழியாக வெளிச்சத்தை அறைக்குள் குவித்துக் கொண்டிருந்த இனிய ஞாயிறு இரவு 10 மணி.

பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் சத்தம் தூக்கம் கலைத்தது. இமை விரிய விரிய சத்தம் என் வீட்டிற்கு வந்து விட்டது. கேபிள்காரரா? போன வாரமே கொடுத்தாச்சே. பேப்பர்காரர்? – நடு இரவு 7 மணிக்கே, கதவைத் தட்டுவாரே.

வீட்டு உரிமையாளர் – ஆமாமா. அந்த ஊர்க்காரர் தான். கதவை பலமா தட்டுங்க.

அரைத்தூக்கத்தோடு கதவைத் திறந்தால் கையில் துண்டுச்சீட்டுடன் ஒருவர்.

சார்! நீங்க தானா? உங்க வீடு தானா? (இதக்கேட்கவா என்னை இப்ப எழுப்பினே?)

ஹி! ஹி! ஆமா. உங்கள எங்கேயோ பார்த்திருக்கேனே?

சார், !@#$%^&*()*&^%$#@!

ஆங். மகராஜ நகர். வாங்க என்ன இவ்வளவு தூரம்?

போன வாரம் விக்ரமசிங்கபுரத்துல ஒரு கல்யாணம். அங்க உங்க பெரியப்பாவப் பார்த்தேன். நீங்க இங்க இருக்கீகனு சொன்னாவ.அட்ரசும் அவாள் தான் கொடுத்தாவ (ஒரு அட்ரஸ் கிடைச்சுதுன்னா? இப்படியா அர்த்தசாமத்துல வந்து எழுப்புவ?).

உங்க பெரியப்பா எப்படி சொந்தம்னா, எங்கம்மைக்கு நேர……….மூத்த……….மவனுக்கு……. அந்த வகயில எனக்கு சின்னத்தாத்தா முறையாகுது.

டீ, காபி ஏதாவது….. (தண்ணி கூட அரைப்பாட்டில் தான் இருக்கு வீட்டுல).

இல்லைல்ல. இப்பந்தாம் அந்த முக்குல குடிச்சிட்டு, அவம்ட்டயே அட்ரஸ் கேட்டு வந்தேன்.

பரவாயில்ல. வாங்க வெளியே போய் டீ சாப்ட்டுட்டு வரலாம்.

ந்நா! வேண்டாம்னு சொன்னாக் கேளுங்க.

வெளியே வந்தால், வெயிலு சுள்ளுனு அடிக்குது.

நீங்க அன்னைக்கு கம்பனிக்கு வரும் போது திருநவேலி தான் உங்களுக்கு சொந்த ஊர்னு சொன்னீங்களே?

அ… ஆ…. ஆ…. ஆங்…. (ஊர்ப்பேர் கேக்கிறதெல்லாம் பெரிய மார்க்கெட்டிங் டிரிக்ஸ்னு பீத்துன….. நல்லா வசமா மாட்டுனியா?)

உங்க பெரியப்பாவோட பூர்வீகம் விருதுநகருல்ல….. (தெரியுதுல்ல…. நோண்டி நோண்டி கேட்காட்டி என்ன?)

ஆமாமா….. படிச்சதெல்லாம் அங்க தான்.

ஒண்ணுமில்ல. எங்க அக்காவோட, அத்தானோட, அக்காவோட, வரிசையாரோட, அத்தபிள்ளையோட (நானும் ஓட…) மகன் சின்னவன் இங்கன தான் டையிங்ல வேல பாக்கான். டையிங் தண்ணி சேரல பாத்துக்கிடுங்க. டையிங் தண்ணிலேயே பொழங்கிறதுனால, கால்ல கொப்பளம், கொப்பளமா பொத்துக்கிட்டு வருதாம். அதாம் வேற வேலை ஏதாவது கிடைக்குமானு உங்களக் கேட்டுட்டு போலாம்னுட்டு…

அடப்பாவி! இதக் கேட்டுட்டு போறதுக்கா, ஊரை விட்டு 5 ½ கிலோமீட்டர் தள்ளி இருக்கிற வீட்டை கண்டுபிடிச்சு, தூங்கிட்டிருக்கவன எழுப்பி, வேகாத வெயில்ல டீக்கடைக்கு நடக்கடிக்கிற. ஆறு நம்பரை அழுத்தி என்னை அழ வச்சிருக்கலாம்ல.

ஒரு வேலை இருக்கு. முதல்ல தங்க எடமும், சாப்பாடும், கையில ஒரு ஆயிரரூவாயும் தான் கொடுப்பாங்க. பின்னாடி, போகப் போக……. டீக்கடை வந்திருச்சு.

டையிங்லருந்து பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு இப்ப அக்காவோட……..அத்தானோட……… சின்னவன் – சின்னவர் சார்  பெரிய பதவியில் சந்தோசமா இருக்கார்.  நல்லா இருக்கட்டும்!

ரெண்டு, மூணு பேரை வேலைக்கு சேர்த்து விட்ட வகையில், அவர்கள் வாங்கிய முன்பணத்தை நான் கட்டிய சோகமும் உண்டு.

%d bloggers like this: