இடைவெளி

கடும் போக்குவரத்து நெருக்கடிக்கிடையே, இருசக்கர வாகனத்தில் சென்று இறங்கியவுடன், எதிர்ப்பட்ட சென்னை நண்பன், உனக்கு பத்திரிக்கை அனுப்பல… நீ வரமாட்டேனு சொன்னானே? என்று கேட்டான். முதல் வரவேற்பே மிக அருமையாக இருக்கிறதே என்று நினைத்தபடி, யார் சொன்னா? ஒண்ணு கூரியர்லயும், இன்னொண்ணு தபால்லயும் வந்ததே என்றபடி, என்னுடைய நெருங்கிய நண்பனின் திருமண விழா நிகழ்விடத்தின் உள்ளே நுழைந்தேன்.

உண்மையில், இந்தத் திருமணத்திற்கான அழைப்பிதழ் ஏதும் வரவில்லை. எனக்கு சில சமயம் இப்படி கிறுக்குத்தனமாய் நடந்து கொள்ளத் தோணும். ஆதலால், இதொன்றும் புதிதல்ல.  நண்பர்கள் தொடர்புடைய எந்த விழாவுக்கும், அழைப்பு இல்லாவிடினும், எவ்வித மனக்குரோதமும் இல்லாமல் கலந்து கொள்வதுண்டு. இத்தனைக்கும் நான் உணவுப் பிரியனுமல்ல.

interstice

அடிக்கடி வாடகைக் கார் எடுக்கும் வகையில் பழக்கமான, ஓட்டுநரின் மகளின் திருமணம், திருப்பூருக்கு அருகிலிருக்கும் ஒரு மலைக்கோவிலில் நடந்தது. எனக்கு அழைப்பில்லை. உடனிருந்த நண்பர்கள் உற்சாகமாக கிளம்பும் போது, என்னையும் கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். அங்கு, சென்றதும் ஓட்டுநர் நண்பர் (மணமகளின் தகப்பனார்), வேகமாக என்னருகில் வந்து, கையைப் பிடித்துக் கொண்டு, மன்னிச்சிக்குங்க.  உங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க மறந்துட்டேன் என்று சொன்னபடி உள்ளே அழைத்துச் சென்றார்.  அவருடைய குற்றவுணர்ச்சி கலந்த சொற்களுக்கு என்ன ஆறுதல் அளிப்பது? என்றே தெரியாமல் நின்றிருந்தேன். நண்பர்கள், பத்திரிக்கை கொடுத்த எங்களுக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இல்லடா, நீ தான் இன்னைக்கு விஐபி என கிளம்பும் வரை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

என் நெருங்கிய நண்பனின், தம்பிக்கு சென்னையில் திருமணம்.  கோயமுத்தூரில் வரவேற்பு.  எனக்கு அழைப்பிதழும் கொடுக்கவில்லை. அழைக்கவுமில்லை. திருமணத்துக்கு முந்தைய நாள் கூட, என்னுடன் பணிபுரியும் அவனுடைய மச்சினரின் கைப்பேசி எண் கொடுடா என்று கேட்டு அழைத்தான்.  அவருக்கு பத்திரிக்கை அனுப்ப மறந்திருச்சுடா, கூப்பிட்டாவது சொல்லணும், நம்பர் கொடுடா! எனக் கேட்டு வாங்கினான். அப்போதும், என்னிடம் திருமண வரவேற்புக்கு வரச்சொல்லி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

சரி! நான் அதையெல்லாம் மனதில் வைக்காமல், வரவேற்புக்குச் சென்றேன்.  வாசலில் நின்றிருந்தவர், நண்பனைக் கூப்பிட்டு என்னை கை நீட்டிக் காண்பித்தார்.  வாடா!  வாடா! என்று சொல்லி வந்தவனிடம், ஏண்டா?  எனக்கு பத்திரிக்கை கொடுத்தியாடா? எனக்கேட்டதும், மண்டபத்தின் கடைசி அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டு, அவன் அம்மாவை அனுப்பி வைத்தான். அம்மா வந்து, உனக்கு எதுக்கு குண்டு அழைப்பு?  இது ஒந்தம்பி கல்யாணந்தானே? என்றபடி, பந்தி நடக்குமிடத்திற்கு கூட்டி வந்து, சமாதானப்படுத்தினார்கள்.  அதற்குள், அம்மாவின் உடன்பிறந்த சகோதரிகள், அவர்களின் குழந்தைகள் அனைவரும் அங்கே குழுமி விட்டார்கள்.  அனைவரும், ஆளாளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லச், சொல்ல நெக்குருகிப் போனேன். எனக்கே, ஏன் தான் அவனிடம் கேட்டோம் என்றாகி விட்டது.

Solace

உறவு முறிந்த ஒருவரின், உறவினன் ஒருவன், வீட்டிற்கு வந்திருந்தான். நலம் விசாரிப்பு முடிந்ததும், உங்களால் தான், நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். சென்ற மாதம் வீடு ஒன்றும் வாங்கியிருக்கிறேன். எல்லாத்துக்கும், நீங்க தான் காரணம் என்று பேசிக் கொண்டேயிருந்தான். என்னவிதமான எதிர்வினை புரிவது? என்று தெரியாமல், உன் திறமையினால் தான் இந்த முன்னேற்றம் என்று கூறி, விதவிதமான முகபாவத்துடன் நெளிந்து கொண்டிருந்தேன். உங்களுக்கு தான் முதல் பத்திரிக்கை கொடுக்க வேண்டுமென வந்தேன் என்று அழைப்பிதழை நீட்டினான். மிக்க மகிழ்ச்சி. ஆனால், நான் வந்தால், உனக்குத் தேவையில்லாத பிரச்சனை வரும் என்றேன். அதற்கு அவன், எனக்கு யாரும் முக்கியமில்ல. நீங்க தான் முக்கியம் என்று என்னை சமாதானப்படுத்தினாலும், மன்னிச்சுக்க. உன் கல்யாணத்துக்கு நான் வரமுடியாது என அப்போதே கூறி விட்டேன். திருமணம் முடிந்த, பின்னொரு நாளில் அவன் வீட்டிற்குச் சென்று பார்த்து வந்தேன்.

இப்படி, அழைப்பு விடுத்தும் செல்லாமல் நிராகரித்ததும் உண்டு.

அதை விடுங்க. இப்போ நான் வந்திருக்கும் திருமண விசயத்திற்கு வருவோம். மணமுடிக்க இருக்கும் நண்பனுக்கு நான், மிக நெருக்கம் தான். நிறைய விசயங்களை நேரங்காலமில்லாமல் நேரிலும், போனிலும் பகிர்ந்திருக்கிறோம். ஒத்த அலைவரிசை தான் இருவருக்கும். சிறிது காலத்திற்கு முன், சிறு கருத்து வேறுபாடு. நண்பர்களுக்குள் நடந்த ஒரு பிரச்சனையில், எனக்கு முற்றிலும் தொடர்பே கிடையாது எனினும், என் பெயரும் தேவையில்லாமல், சிக்கி, சின்னாபின்னமாகி விட்டது. உண்மை என்னவென்று விளக்கிச் சொல்ல முடியாத நிலையில் நானும் இருந்ததால், அந்த பிரச்சனையிலிருந்து முற்றிலும் விலகியே இருந்தேன்.

அதனாலோ, என்னவோ என்னுடைய சாதாரண நடவடிக்கைகள் அனைத்தும், அசாதாரணமாக்கப்பட்டு பிரச்சனையோடு தொடர்புபடுத்தப்பட்டு பிரச்சனையை ஏற்படுத்தியவர்களுக்கு சாதகமாக்கப்பட்டது.

confusion

அப்போதும், அமைதி காத்தேன். என்னுடைய அமைதி சரியா? தவறா? எனத்தெரியாமலே. அசாத்திய அமைதியால் அனைத்து பழியும் என் மீதே சுமத்தப்பட்டது. நான் ஏதும் மறுத்து பேசவில்லையாதலால், தவறு என் மேல் தான் என அவர்களாகவே முடிவு செய்து விட்டனர்.

சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதியாய் நான் இருந்ததால், எந்த விளக்கமும் என்னால் கொடுக்க முடியவில்லை. ரொம்பவே குழப்பமா இருக்குல்ல? நான் செய்த தவறென்ன என்று எனக்கும் தெரியல. பயங்கர குழப்பம் தான் எனக்கும்.

இந்தச் சூழலில் நண்பருக்குத் திருமணம். குடும்ப நண்பராதலால், நண்பரின் தந்தை கைப்பேசியில் அழைத்து, என்னை திருமணத்துக்கு வருமாறு கூறினார். அதுவும் சம்பிரதாயமாகவே பட்டது. அழைப்பிதழுமில்லை. நண்பரிடமிருந்து எந்த அழைப்புமில்லை.

இப்போது, அந்த திருமணத்திற்காக, முதல் நாளே ஊரிலிருந்து, இரு சக்கர வாகனத்தில், போக்குவரத்து நெருக்கடிக்கிடையே சிவகாசி வந்தடைந்தேன். சிறிது நேரம் மண்டபத்தின் வாசலிலே தயங்கியபடியே நின்று கொண்டிருந்தேன். நண்பனின் தாய், தந்தை அனைவரும் வரவேற்றனர். கிட்டத்தட்ட நெருப்பின் மீது நிற்பது போன்ற ஒரு உணர்வுடன் சிரிப்பது போன்று முகத்தை வைத்துக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன்.

interstice 3

வெளியே சென்று வந்தால், மனம் இலகுவாகலாம் என்று, என் கல்லூரி நண்பர்கள் இருந்த முஸ்லீம் நடுத்தெருவுக்கு சென்றேன். இந்த தெருவைச் சேர்ந்த நான்கு நண்பர்களுடன் தான் கல்லூரியில் தினமும் மதிய உணவு. நண்பர்கள் யாருமில்லை.

திரும்பிய பின், மானாமதுரையிலிருந்து வந்திருந்த ஒரு நண்பர் என்னுடன் பேச ஆரம்பித்ததும், கொஞ்சம் சகஜமானேன். பேசிக் கொண்டிருந்தும், உள்ளே ஒரு அசூயை உணர்வே இருந்தது. வந்திருந்தவர்களுக்கு, அறை ஒதுக்கப்பட்டது, நண்பரும் தன்னுடனே தங்கிக் கொள்ளுமாறு சொன்னதால், உடமைகளை அறையில் வைத்து விட்டு, வரவேற்பு நடக்குமிடத்தில் ஒரு இருக்கையில் ஓரமாக அமர்ந்திருந்தேன். அவ்வப்போது மானாமதுரை நண்பர் வந்து பேசிக் கொண்டிருந்தார்.

அங்கேயும் அமர மனமின்றி, எழுந்து அறைக்கருகே வந்து நின்று கொண்டிருந்தேன். பிரச்சனையைப் பற்றி அறிந்தவர்கள், இவன் ஏண்டா இங்கே வந்தான்? என்பது மாதிரி என்னைக் கடந்து சென்றனர். ஹூம்! தோளில் கை போட்டபடி ஊர் சுற்றியவர்கள். இன்று அறியாத மனிதனைக் கடப்பது போல சென்றது, எனக்கு விநோதமாயிருந்தது.

3ok

மானாமதுரை நண்பர் வந்து, மண்டபத்துக்கு சாப்பிட அழைத்தார். செல்ல மனமில்லை. மறுத்து, அவரையும் சேர்த்து, உணவகத்துக்கு கூட்டிச் சென்று இரவுணவு முடித்து அறைக்கு வந்தேன்.

இரவு வெகு நேரம் தூக்கமின்றி பலவித யோசனைகளுடன் கழிந்தது. ஒரு புறம் ஏன் வந்தேன்? என்ற கேள்வி துரத்தியபடி இருந்தது. அனைத்துமறிந்த, புரிந்த நண்பன் திருமணம். வாழ்வில் ஒரு முறை நிகழும் விசயம். அவன் தான் புரியாமல், இப்படி நடந்து கொண்டானென்றால், நாமும் ஏன்? என்ற பதிலும் இருந்தது.

காலையில், அறையில் இருந்தவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எனக்கு இரு வேறு யோசனையாகவே இருந்தது. அனைவரும் குளித்துக் கிளம்பியதும், நானும் குளித்து விட்டு, திருமணத்தில் தூரத்தில் நின்று விட்டு, உடனே அறைக்கு வந்து இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து மனம் வலிக்க திரும்பினேன். அன்று முழுவதுமே சாப்பிடவேயில்லை.

என்ன தான் இதையெல்லாம் எதிர்பார்த்து வந்திருந்தாலும், இதே போன்றதொரு நிலையை நான் சந்தித்ததில்லை. அப்படி இருந்தால், தவிர்த்து விடுவேன். இது என் அறிவுக்கும், மனதுக்குமான ஒரு போராட்டம். மனம் வென்றது. சென்றேன். இத்தகையதொரு சூழலில் நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி சமாளிக்க வேண்டும்? எவ்வளவு பொறுமை வேண்டுமென்பது எனக்கே எனக்காய் தெரிந்தது. மனிதர்களின் பலமுகங்களை, நிஜமுகங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், வலி மிகுந்ததாய் இருந்தது. அனைத்தையும் தாங்கும் மனத்திடம் இருக்க வேண்டுமென புரிந்தது.

fbbad

திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளின் நிழற்படங்களை முகநூலில் தேடித் தேடிப் பார்த்தேன். சில நாட்கள் கழித்து, ஒரு இரவில் என் அலைபேசி, நண்பனின் பெயர் படத்துடன் ஒளிர்ந்தது. மகிழ்ச்சியுடன் அழைப்பை எடுத்து தட்டுத் தடுமாறி பேசலானேன். சில மாதங்களாய் என்னுடன் பேசாமல் இருந்தவன், நடந்த பிரச்சனைகள் எதைப் பற்றியும் பேசாது, என் கல்யாணத்துக்கு வந்திட்டு ஏன் என்னைப் பார்க்காம போனே? என்று கேட்டான். என்னிடம் பதிலில்லை. தேக்கி வைத்த வருத்தங்களுடன், நீயேண்டா என்னைக் கூப்பிடல? பத்திரிக்கையே அனுப்பலியேடா? என்றேன். நான் அனுப்பினேன் என்றான். அதொண்ணும் பிரச்சனையில்லை விடுடா என பேச்சை திசை திருப்பினேன். மணவாழ்க்கைக்குப் பின்னான விசயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் மனைவி அழைத்ததும், நான் இன்னும், அதே உன்னோட பழைய நண்பன் தாண்டா! எப்ப வேணும்னாலும் கூப்பிடு. பேசலாம் என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தான்.

அன்றிரவு ஏதும் சாப்பிடாமல், படுக்கைக்குச் சென்றேன். பசிக்கவேயில்லை.

10 thoughts on “இடைவெளி

  1. இந்த blog உலகில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்க. மறுபடி ஒரு முறை அதை நினைத்து பெருமை பட வச்சிருக்கீங்க வெயிலான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s