முதல் செங்கல் எடுக்கிறேன்!

Brick

தமிழ் வலைப்பதிவுகளின் நெடுநாள் வாசகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள்!

நல்ல நல்ல வலைப்பதிவுகளைப் படித்து, ஈர்க்கப்பட்டு ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன்.

வலைப்பதிவுகளின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறதோ என்பது என் எண்ணம்.

இவன் யார் நம்மைச் சொல்வதற்கு என நினைக்க வேண்டாம். நினைத்தாலும் மகிழ்ச்சி. நினைக்காமல் இருந்தால் சந்தோசம்.

சமீபத்திய புதிய வலைப்பதிவுகள் ஏதோ ஒரு கட்சி, மதம் சார்ந்ததாக நிறைய வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில பின்னூட்டங்கள் (வலைப்பதிவர்கள் பெயரிலோ, பெயர் மறைக்கப்பட்டோ) ஒருவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்தோ, கேவலமாக விமர்சனம் செய்தோ வருகிறது.

ஒருவருடைய எண்ணமோ, எழுத்தோ, செயலோ அடுத்தவர் மனம் புண்படும்படியாக இருக்கக்கூடாது.

சில மாதங்கள் முன் வரை வலைப்பதிவுகள் ஒரு சுகமான ராகமாக இசைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் இப்போதோ ஒரு தேநீர் கடையில் நடக்கும் ஒரு அரசியல் சண்டை போன்று, அல்லது எதிர்க்கட்சிக்கு பிடிக்காத ஒரு தீர்மானத்தை ஆளுங்கட்சி கொண்டு வரும் நாளைய சட்டசபை போல் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது.

அதுபோல் ஒரு விஷயமும் இல்லாத பதிவுகள் (நம் வழக்கில் சொல்ல வேண்டுமென்றால்மொக்கைப் பதிவுகள்“) நிறைய வருகிறது. அதே சமயம் நானும் சிறந்த பதிவுகள் போடும் அளவுக்கு அறிவாளியும், திறமையானவனும் அல்ல!

ஒரு சில ஒலிப்பதிவுகளும் வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில நன்றாகவும் உள்ளது. நாம் தான் தினமும் எஃப் எம்மிலும், தொலைக்காட்சியிலும், அலுவலகங்களிலும் பேசிக் கொண்டே தான் இருக்கிறோமே, வலைப்பதிவுகளைப் படித்தலுக்காக மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்பதே என் அவா.

ஒரு முறை பேராசிரியர். பெரியார் தாசன் தலைமை தாங்கும் ஒரு கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அவருக்கு முன்னால் கூட்டத்தில் பேசிய கவிஞர்கள் எல்லாம் அங்கு மேடையில் இருந்த ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி அடுத்தவருடைய கவிதையை பாராட்டி பேசி முடித்தார்கள். அனைவரும் பேராசிரியருக்கு மிகவும் பழக்கமான, அவரை விடவும் மிகவும் வயதில் குறைந்தவர்களாகவே இருந்தனர்.

இறுதியாக பேரா.பெரியார் தாசன் பேசும் போது,

என்னடா! என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க! இவன் அவன் முதுகைச் சொறியுரான், அவன் இவன் முதுகைச் சொறியுரான், ஆகா, சுகமா இருக்கு, இன்னும் கொஞ்சம் சொறின்ற மாதிரி அவன் முதுகைக் காட்டுறான்.

நீங்க இது வரைக்கும் எழுதுன குப்பைக் கவிதை எல்லாம் இங்கு வந்திருக்கும் யாருக்காவது உபயோகமாக இருந்ததா? ஏதாவது சமூக மாற்றத்தைக் கொண்டு வந்ததா? புரட்சியைக் கொண்டு வந்ததா? அப்படி நீங்கள் சமூகத்திற்காக கவிதை எழுதும் போது தான் இத்தகைய பாராட்டுக்களை நீங்கள் ஏற்க வேண்டும் என தன் தலைமையுரையில் சொன்னார்.

அவர் சொன்னது போன்ற நிகழ்வுகள் நிறைய நடந்து கொண்டிருக்கிறது நம் வலைப்பதிவர்களிடத்தில்.

அதே நேரத்தில் வலைப்பதிவர்கள் சந்திப்பு, பட்டறை போன்றவைகள் நாம் நல்ல இலக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை விதைகளைத் தூவிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய வீணான பதிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நல்ல பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டமிட்டு ஆதரவு கொடுங்கள் என்று முதல் செங்கல் எடுத்து வைத்துள்ளேன்.

என் மனதுக்குப் பட்டது போல் பலருக்கும் தோன்றியிருக்கலாம்!

ஆனால் இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து!

என்னுடைய கருத்துக்களை சிலர் ஆதரிக்கலாம், சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை.

நான் உங்களை கண்டிக்கும் மனப்பாங்கில் சொல்லவில்லை. ஒரு நண்பனின் தோளில் கை போட்டு தோழமையுடன் பேசுவது போல் என் கருத்தை சொல்லியிருக்கின்றேன்.

இனி வலைப்பக்கங்களுக்குள் நுழையும் போது ஒரு தென்றல் வீசும் நந்தவனத்திற்குள் நுழைந்த உணர்வு மட்டுமே ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையில்.

17 thoughts on “முதல் செங்கல் எடுக்கிறேன்!

  1. :((
    ரொம்ப கடினம் தல…, உங்க ஆசை நியாயமானதாக இருந்தாலும்.. இதுமாதிரியான செயல்கள் நான் இணையத்துக்குள் வருவதற்கு முன்பே வந்து விட்டது. பெரிசுகள் ஆரம்பித்து வைத்ததை சில சிறுசுகள் தொடர்கிறார்கள்.
    நம்மளவில் நாம் இதே கொள்கையோடே இயங்குவோம்.

  2. முதல் செங்கல் எடுத்து வைத்திருக்கும் நண்பரே,உங்கள் வருகை நல்வரவாகுக.
    சொல்கிறதெல்லாம் சரி தான்,இது எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை.
    எழுதுபவர்கள் நினைத்தால் மட்டுமே முடியும்.

  3. //வலைப்பதிவுகளின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறதோ என்பது என் எண்ணம்.//

    சந்தைக்கு சென்றால் சத்தமாகத்தான் இருக்கும் மீனும் கிடைக்கும், ஆட்டுக்கறியும் கிடைக்கும், காய்கறியும் இருக்கும். சைவர்கள் காய்கறிக்கடைக்குச் செல்வார்கள்.

    முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்

  4. உங்கள் எண்ணம் நியாயமானதே. ஆனால் இதற்கு எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை. பார்க்கலாம். முதல் செங்கல் நல்லாதான் இருக்கு.

  5. எல்லாவிதமான பதிவுகளுக்கும் ஒரு target audience இருக்கிறார்கள். அது #*^*@* (அரசியல் / ஜாதி / தனிப்பட்ட தாக்குதல்) இடப்படும் பதிவுக்கும் பொருந்தும். தனிமனித ஒழுக்கம் – கட்டுப்பாடு மட்டுமே இதற்கு தீர்வு என்பது என் கருத்து..

    ////இத்தகைய வீணான பதிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நல்ல பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டமிட்டு ஆதரவு கொடுங்கள்////

    கண்டிப்பாக… பதிவுக்கு மொக்கையா 50 கமெண்ட் வர்றதுக்கு (போடுரத்துக்கு) பதிலா.. உருப்படியா 5 கமெண்ட் வந்தாலே (போட்டாலே) போதும்…

  6. இணையம் என்பது யாருக்கும் சொந்தமான சொத்து அல்ல. இது திறந்த வெளி மைதானம். யார் வேண்டுமானாலும் இங்கு வந்து விளையாடலாம். தமிழ்மணம் போன்ற வலைப்பூ திரட்டிகள் பல ஆண்டுகளாக செயல் படுகின்றன. இதை இதுநாள்வரை இதனை வளர்த்து வருபவர்கள் என் போன்ற பல்லாயிர வலைஞர்கள். நாங்கள் பேணி வளர்த்து வைத்திருக்கும் இந்த அபூர்வ குழந்தையிடம் விளையாட உங்களையும் அழைக்கிறோம். அதற்காக எடுத்த எடுப்பிலெயே குழந்தை மீது குறை சொல்ல ஆரம்பித்து இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது. இணையம் என்பதின் மாற்றுப் பொருள் ஜனநாயகம், கருத்து சுதந்திரம், கருத்து பரிமாற்றம், அறிவுக் கலஞ்சியம் என இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.
    கோவி. கண்ணன் : //சந்தைக்கு சென்றால் சத்தமாகத்தான் இருக்கும் மீனும் கிடைக்கும், ஆட்டுக்கறியும் கிடைக்கும், காய்கறியும் இருக்கும். சைவர்கள் காய்கறிக்கடைக்குச் செல்வார்கள்.// மிக்கச்சரி.
    முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  7. தங்கள் கருத்துக்கு நன்றி திரு.மாசிலா அவர்களே!

    >>

    விளையாடும் மைதானத்தில் விஷப்பூச்சிகள் வேண்டாமே?

    நாம் விளையாடும் அபூர்வ குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது.

    நான் எடுத்த எடுப்பிலேயே குறை சொல்ல வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம் இல்லை. என்னுடைய கருத்தை மட்டும் சொன்னேன்.

    இதில் உங்களுக்கு முரண்பாடுகளும் இருக்கலாம். தவறில்லை.

  8. நல்ல நோக்கத்துக்கு வாழ்த்துக்கள். உங்களுக்குப் பிடித்தவற்றையும் அடுத்தவர்களுக்குப் பயனுள்ளதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

  9. ////// உங்களுக்குப் பிடித்தவற்றையும் அடுத்தவர்களுக்குப் பயனுள்ளதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் ////////

    நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்! ரவி!

    அதற்காகத் தான் இந்த வலைப்பக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.

    ஆனால் உங்களைப்போல தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வல்லுநன் இல்லை.

    என்னைச் சுற்றியுள்ள விஷயங்களைப்பற்றி எழுதுகிறேன்.

  10. உங்கள் தனிப்பட்ட கருத்துக்கு மகிழ்ச்சி…
    அதாவது எல்லோருக்கும் மைக் கிடைப்பதில்லை தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளியே சொல்ல. இது போன்ற ஊடகங்கள்தான் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளியே சொல்ல உதவுகிறது.
    அதனால் இதற்கு அணைகட்ட முடியாது. ஆகவே அணைகட்ட முயலாமல் நல்லவற்றை மட்டுமே படித்து ரசிப்போம்.

  11. இப்படிப்பட்ட ஆதங்கம் எனக்கும் ஒரு காலத்தில் இருந்தது.

    ஆனால் அது நம் கையில் இல்லை என்பதால் அடங்கிப் போக வேண்டிய சூழல்.

    நீங்கள் நினைப்பது போன்ற ஒரு சூழல் நிச்சயம் வரும்… ஆனால் எப்போது என்றுதான் தெரியவில்லை…

    உங்களைப் போலவே நானும் ஆவலுடன், பொறுமையாக காத்திருக்கிறேன்…

    முதலில் இத்தகைய பதிவுகளை ஆதரிக்காமல் இருப்பதென முடிவு செய்வோம்….

  12. இன்று[09/07/07]தான் இப்பதிவைப் படித்தேன்.
    “ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகின்றது….”

பின்னூட்டமொன்றை இடுக