சிவகிரி ஜமீன்தார்

சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு வாரிசு யார்?  சுவிஸ் வங்கியில் இருக்கும் ஜமீனின் பணம், நகைகள் எவ்வளவு?  என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் அவரைக் குறித்த நாட்டுப்புறப் பாடல் ஒன்று.

சிவகிரி ஜமீன்தார் இறந்தபோது தோன்றிய பாடல்கள் இரண்டு கீழே தரப்படுகின்றன. அவற்றுள் முதல் பாடல் சிவகிரி ஜமீன்தார் சதியால் கொல்லப்பட்டார் என்று மறைமுகமாகக் கூறுகிறது. அவர் இறந்த இடம் குற்றாலம். சிறிய ஜமீன்தாரை சின்னசாமி என்று அழைப்பதுண்டு. அவர் வடக்கேயிருந்து வருகிறார் என்று அவரைப் பார்க்க மக்கள் கூடியிருக்கிறார்களாம்.

இரண்டாவது பாடலில் ஜமீன்தார் கலியாண மகால் கட்ட உத்தரவிட்டு, அது கட்டி முடிந்து விட்டதாகவும் ஆனால், அம்மகாலில் அவர் உட்காரவில்லையென்றும் அதற்கு முன்னரே கைலாச குழிக்குப் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சிவகிரி ஜமீன்தார்-1

பாக்குப் பொடி நறுக்கி
பல்விளக்கித் தீத்தம் பண்ணி
காப்பித் தண்ணி சாப்பிட்டிட்டு
கச்சேரிய செய்த தெப்ப?
கச்சேரி வாசலிலே
லட்சம் ஜனம் கூடியிருக்க
கருத்த துரை இல்லாம
களையும் பொருந்தலையே
கிறிச்சு மிதியடியாம்
கீ கண்ணுப் பாருவையாம்
வடகா பிரகரைக்கு
வாரதெப்போ நம்ம துரை
சோணப் பாறை மொந்தலிலே
சூரியனும் உதிக்கு முன்னே
மண்டி போட்டுச் சுட்டாராம்
மன்னம் பொன்னு சின்னசாமி
காக்கா இறகு போல
கல்லணைத் தண்ணி போல
மறிச்சாராம் மறிபடாது
மகராஜன் ஆத்துத் தண்ணி
ஆடழுக,மாடழுக
அஞ்சாறு லட்சம் ஜனமழுக
சிவகிரி ஜனங்களெல்லாம்
தெருத் தெருவா நின்னழுக

சிவகிரி ஜமீன்தார்-2

பிறந்தது சிவகிரி
வளர்ந்தது ஆத்துப்பட்டி
மாண்டது குத்தாலம்
மகாராஜா நம்ம துரை
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லியப்பூ சேடங் கட்டி
அடிக்காக நம்ம துரை
ஆத்து மணல் தூள் பறக்க
வடக்க இருந்தல்லவோ
வாராக சின்னசாமி
பதினெட்டு பட்டி ஜனம்
பாக்க வந்து காத்திருக்கு
பட்டணங்கள் போகலாமா
பந்தயங்கள் கூறலாமா
இந்தக் கலியுகத்தில்
இஷ்டர்களை நம்பலாமா
சிவகிரி மகாராசா
செல்வத் துரை பாண்டியன்
நீசநிதியாலே மோசம் வரலாச்சே
மானழுக, மயிலழுக
மாடப்புறா கூட அழுக
சிவகிரி ஜனங்களெல்லாம்
தெருத் தெருவா நின்னழுக
கல்யாண மால்
கட்டச் சொல்லி உத்தரவு
ஒரு நாள் ஒரு பொழுது
மகாராசா உக்காந்து பாக்கலியே
காத்திய மடத்தோரம்
கைலாசகுழி வெட்டிருக்கு
வெட்டி நாளாகுது
வெரசா வரும் மோட்டார்காரே.

வட்டார வழக்கு:

காத்திய மடம்-கார்த்திகை நாள் விழா நடைபெறும் மடம் ;

மொந்தல்-மூலை ; அழுக-அழ

சேகரித்தவர் :
S.M.கார்க்கி

இடம் : சிவகாசி

குறிப்பு : காலாவதியான வலைத்தளத்திலிருந்து இப்பொக்கிஷத்தை மீட்டெடுத்து சேமிப்புக்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். யாருக்கேனும் ஆட்சேபணை இருந்து, பின்னூட்டத்தில் சொன்னால் எடுத்து விடுகிறேன்.

மாஞ்சோலை

நெல்லை மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் பசுமையும், குளுமையும் நிறைந்த சுற்றுலா ஸ்தலம் அது. திருப்பூரிலிருக்கும் நண்பர்கள், நீலகிரி தவிர்த்து ஒரு மாறுதலான இடத்துக்குப் போக வேண்டுமென சொன்னபோது மாஞ்சோலையைப் பரிந்துரைத்தேன். உடன் ஒப்புக் கொண்டு உணவு, உறைவிட முன்பதிவு செய்யும் பொறுப்பும் எனக்கே வந்தது.

ஏற்கனவே, தூத்துக்குடியைச் சேர்ந்த நண்பர் ராகவன் அவ்விடத்துக்கு சென்று வந்ததாய் சொன்னது நினைவுக்கு வர, அவரை அழைத்து விசாரித்ததில், மணிமுத்தாறில் இருக்கும் குமார் என்ற நண்பரின் தொடர்பெண்ணைக் கொடுத்தார். குமாரைத் தொடர்பு கொண்டபோது, வரும் விருந்தினர்களுக்கு தேவைப்படும் அறை முன்பதிவு, உணவு போன்றவைகளை மிகச்சிறந்த முறையில் இதுவரை செய்து கொடுத்திருக்கிறேன், உங்களுக்கும் அப்படியே சிறப்பாய் செய்து தருகிறேன் என்று சொல்லி, செலவுகளுக்கு ரூ.4000 அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அவருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் தம் நண்பரின் கணக்கில் கட்டுமாறும் கேட்டுக் கொண்டார். அதன் படியே ரூ.4000 கட்டியாயிற்று.

கிளம்புவதற்கு முதல் நாள் அவரைத் தொடர்பு கொண்டு வருகையைத் தெரிவித்த போது, வருமாறும் ஏற்பாடுகள் அனைத்தும் செய்தாயிற்று என்றும் உறுதியளித்தார். திருப்பூரிலிருந்து இரவு 10 மணியளவில் இன்னோவா வண்டியில் ஐவர் கிளம்பினோம். இடைநிறுத்தி, வாங்கி வந்திருந்த உணவு உண்டு, தொடர் பயணமாய் காலை 7 மணியளவில், கல்லிடைக்குறிச்சி வந்து காலை உணவுகளைக் கட்டிக் கொண்டோம். அடுத்து மணிமுத்தாறு ஆயுதப்படை வளாகம். குமாரைத் தொடர்பு கொண்டு, வந்த தகவல் சொல்லிக் கா…..த்….திருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து வந்த அவர், எங்களை மணிமுத்தாறு அணைக்கட்டின் முகப்பில் இருக்கும் வனச்சோதனைச் சாவடிக்கு அழைத்து வந்து, அருவிக்குச் செல்ல அனுமதி வாங்கிக் கொடுத்தார். அருவியில் ஆனந்தமாய் குளித்து விட்டு காலை உணவை முடித்து திரும்பவும் கீழிறங்கி சோதனைச் சாவடிக்கே வந்து சேர்ந்தோம்.

குமார், முத்து என்ற நபரை தன் உறவினர் என அறிமுகம் செய்து வைத்து, இவர் உங்கள் கூடவே வந்து, தங்கி வேண்டிய உதவிகளை செய்வார் என்றும், தனக்கு வேறு முக்கிய வேலை இருப்பதாகவும், சொல்லிக் கிளம்பி விட்டார். அங்கிருந்து, மாஞ்சோலை சோதனைச் சாவடி கடந்து, கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் தொலைவுள்ள நாலு முக்கு என்ற இடத்தை வந்தடைந்தோம். சாலைகள் ரொம்பவும் பழுதடைந்திருந்ததால் ஊர்ந்து தான் வரமுடிந்தது. நாலுமுக்கில் ராஜ் கடை என்ற ஒரே ஒரு உணவகம் மட்டுமே உண்டு. அங்கு முன் பணம் கொடுத்து உணவு ஏற்பாடு செய்திருப்பதாக குமார் சொல்லியிருந்தார். அதை விட்டால் விரதம் இருக்க வேண்டியது தான்.

நாலுமுக்கு ராஜ் கடை

சரி! ரூமைக் காமிங்க.  தூங்காமல் வண்டில வந்திருக்கோம்.  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிடப் போகலாம்.

என முத்துவிடம் சொன்ன போது,

அந்தப் பெய எங்கே ரூம் போட்டிருக்கான்னு தெரியல. இரிங்க! போனடிச்சு கேக்கலாம்!

என்று சாவகாசமாய்ச் சொன்னார். எந்த அலைபேசியும் உயிரோடு இல்லை. அங்கிருந்த ஒரேயொரு பொதுத் தொலைபேசி மட்டுமே தொடர்புக்கு ஒரே வழி. அதன் மூலம் குமாரைத் தொடர்பு கொண்ட போது,

எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சுண்ணே! நீங்க கவலைப்படாதீங்க! சாப்பாட்டுக்கு ஒரு பயட்ட பணத்தைக் கொடுத்து விட்டேன். அவங்கொடுக்கல போல? நீங்க உங்க கூட வந்தாரே, அந்ந ஆள்ட்ட கொடுங்க!

என்று சொன்னார். அறை பற்றி முத்துவிடம் கேட்ட போது,

இங்கேருந்து இன்னுங்கொஞ்ச தொலவட்டுல குதிரை வெட்டினு ஒரு எடம் இருக்குண்ணே! அங்கன தான் ஒங்களுக்கு ரூம் போட்டிருக்கானாம்!

என்று சொன்னார். உணவுக்கு, முன் பணம் கொடுத்து தயார் செய்து வைக்கச் சொல்லி விட்டு, குதிரை வெட்டிக்கு கிளம்பினோம்.

குதிரைவெட்டி காண்கோபுரம்

வண்டி ஓட்டும் நண்பர், இன்னும் போகணுமா? என்று மிரண்டார். இன்னா, கொஞ்ச தொலவு தான். ஏறுங்க! போலாம் என்று முத்து ஆறுதல் சொன்னார். முன்னிலும் மோசமான சாலைகள். இல்லையில்லை…. சாலைகளே இல்லை. வெறும் பாதைகள் தான். ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் பயணித்து குதிரை வெட்டி வந்தடைந்தோம். அந்த இடத்தில் வனத்துறை விடுதி மட்டுமே இருந்தது. விடுதியின் பணியாளரிடம் விசாரித்ததில் அப்படி முன்பதிவு எதுவும் செய்யப்படவில்லை. அறைகளும் காலி இல்லை என்று சொல்லி விட்டார். சாம, தான முறைகளில் (சாமம்-இன்சொல் கூறல், தானம்-விரும்பிக் கொடுத்தல்) முயற்சித்துப் பார்த்தும் முடியவில்லை. பேத, தண்டத்தை (பேதம்-மிரட்டுதல், தண்டம்-தண்டித்தல்) முயற்சிக்க முடியவில்லை. அங்கிருந்து குமாரைத் தொடர்பு கொண்ட போது, அவருடைய அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

குதிரைவெட்டி காண் கோபுரத்திலிருந்து காணும் காட்சி

கோபத்தோடு கூடிய பசியோடு ராஜ் கடைக்கு திரும்ப வந்து, மதிய உணவை முடித்தோம். எங்களுக்கு வேண்டிய எல்லா?!? உதவிகளையும் செய்வதற்காக எங்களோடு வந்த முத்துவிடம் பேதத்தை பிரயோகித்தோம்.

எனக்கு எதுவும் தெரியாது சார்! (அண்ணன் இப்போ சார்! ஆயிடுச்சு) இவங்களோட போ! சாப்பாடு வாங்கிக் கொடுப்பாங்க. கையில செலவுக்கு காசு கொடுப்பாங்கனு சொல்லி அந்தப் பெய வண்டில ஏத்தி அனுப்பிச்சாம் சார்!

என்று அழாத குறையாய்ச் சொன்னார்.

குதிரைவெட்டி காண் கோபுரத்திலிருந்து தெரியும் மலைத்தொடர்

மணிமுத்தாறு நோக்கி திரும்ப பயணிக்க ஆரம்பித்தோம். நண்பர்கள் கூடவே பயணித்த முத்துவை காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தனர். ஒட்டு மொத்த ஏற்பாடுகளின் காராணகர்த்தாவான எனக்கு கிடைக்க வேண்டியது, முத்துவுக்கு கிடைக்கிறது என எனக்குப் புரிந்தது. மிகவும் தர்மசங்கடமான நிலையில் வண்டியில் அமர்ந்திருந்தேன். யாரோடும் பேசவில்லை. முதல்நாள் இரவு கிளம்பி, மறு நாள் மாலை வரை வண்டியிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்திருக்கிறோம். மனதும், உடலும் மிகவும் பலவீனமாய் இருந்தது. நண்பர்களை கூட்டி வந்து, இப்படி ஆகி விட்டதே என்ற பெரும் மன உளைச்சலிலும், வருத்தத்திலும் இருந்தேன். யாருடனும் பேசவில்லை. என் நிலைமையைப் பார்த்து, நண்பர்கள் எனக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர். திரும்பவும் திருப்பூருக்கே செல்லும் மனநிலையில் அனைவரும் இருந்தனர்.  எனக்குச் சம்மதமில்லை.

மாஞ்சோலை தேயிலைப் பண்ணை

காக்காச்சி என்ற இடத்தை அடைந்ததும் அனைவரும் சமநிலை அடைந்தனர்.  பின் மனம் மாற்றி, ஒரு வழியாய் அவர்களை குற்றாலத்துக்குத் திருப்பினேன். குற்றாலத்தில் இதமான தட்பவெப்ப நிலையும், அருவிகளில் சுமாரான தண்ணீரும் விழுந்து கொண்டிருந்தது மனதுக்கு சிறு ஆறுதலாய் இருந்தது. நண்பர்களை மட்டும், அருவிக்கு சென்று வருமாறு கூறிவிட்டு அறைக்குள்ளேயே இருந்தேன். எத்தனையோ இடங்களுக்கு சென்றிருந்தும், இப்படியொரு மோசமான அனுபவம் நிகழ்ந்ததில்லை. குமாரை அறிமுகம் செய்த தூத்துக்குடி ராகவனை அழைத்து நடந்தவைகளைச் சொன்னேன். அவரும், என் வருத்தத்தைப் பகிரவும், ஆறுதல் சொல்லவும் முடிந்ததே தவிர, வேறொன்றும் செய்ய முடியவில்லை.

காக்காச்சி என்ற இடத்திலிருக்கும் அழகிய புல்வெளி

மறுநாள் மதியம் கிளம்பி திருப்பூர் வந்தடைந்தோம். மிகப்பெரிய மழைக்கான அறிகுறி திருப்பூரின் எல்லைக்குள் நுழையும் போதே தெரிந்தது. நனைந்து கொண்டே அனைவரும் வீடடைந்தோம். நீண்ட வருடங்களுக்குப் பின் திருப்பூர் கண்ட மழை….. பெருமழை…. மிகப்பெரு மழை மனநிலைக்கு உகந்ததாய் இருந்தது.

படங்களுக்கு நன்றி – Mohan Photography, Krishps & Anand Photoworkshop