முயல் மார்க்

கந்தையா!  டேய்…. கந்தையா! வெளையாடப் போனன்னா ஒரேடியா போக்கழிஞ்சு போயிருவ.

சொல்லும்மா! 

நேரத்துக்கு வந்து தின்னுட்டுப் போனா என்னடா?  பசையில கை வச்சிட்டேன்னா, நீயே தான் எடுத்துப் போட்டு தின்னுக்கணும்.

எனக்கு பசிக்கலம்மா! இங்கன பிள்ளையார் கோவில் கிட்ட வெளாண்டிட்டிருக்கேன்.  அப்பா வர்ற நேரத்துக்கு கூப்பிடு.

வாடா மொதல்ல வீட்டுக்கு.  அங்க போய் ஆடுற நேரத்துக்கு ரெண்டு கட்டு ஒட்டலாம்லடா. 

போம்மா! ஒட்டுனா நீ காசு தரமாட்ட.  ஒட்டி முடிச்சு சனிக்கெழம சம்பளம் வாங்குனதும் வீட்டுச் செலவுக்கு பத்தலம்ப.

இல்ல ஆங்ஞான்!  இப்பம் வந்து ஒட்டு.  இன்னைக்கு கொண்டோய் குடுக்கணும்டா.  இல்லைன்னா, காளியப்பன் வைவான்டா.

இப்புடி அவசர   அவசரமா ஒட்டி காஞ்சும், காயாம கொண்டு போனா, போறதுக்குள்ள வாயப் பொளந்திருது.  அவன் சத்தந்தான் போடுவான்.

சரி! ஓடியா.  நல்ல பிள்ளைல்ல.  வந்து பசை தடவி குடுக்கேன்.  சமத்தா ஒட்டி மட்டும் போடுவியாம்.  போய் கை, கால் கழுவீட்டு வந்து உக்காரு.  சாப்ட்டுட்டு ஒட்டலாம்.

 

ம்மா! ம்மா!

நொய்யு நொய்யுங்காம சீக்கிரம் ஒட்டிப் போடுடா!

நாராயணசாமி டாக்கீஸ்ல புதுப்படம் போட்டிருக்கான்.  நா நாலு கட்டு ஒட்றேன்.  சம்பளம் வாங்கி அம்பதீசா குடுப்பியா?

படத்துக்கு போறது, அப்பாக்கு தெரிஞ்சது கொன்னே போட்ருவாங்க.

நாயித்துக் கெழம சரசத்த வீட்டு நிச்சியத்துக்கு தூத்தூடி போவாங்கள்ள.  முந்தாநா கூட லெட்டர் வந்திச்சே.  அப்ப போய்ட்டு வந்திர்றேன்.

இத  மட்டும் கரெக்டா தெரிஞ்சு வச்சுக்கோ.  களவாணிப்பெய. களவாணிப்பெய. அதென்ன நாலு கட்டு கணக்கு? நாலு கட்டு ஒட்டுனேன்னா, கட்டுக்கு 7 பீசா.  28 பீசா தாண்டா வரும்.

போம்மா! ஒரு கட்டுக்கு 144 தாள்.  அத முழுசும் ஒட்டுனா 7 பீசா தானா?  முத்துராம்பட்டியிலெல்லாம் பத்து பீசாவாம்மா. கூடப்படிக்கிறவங்ங சொன்னாங்ங.

அடிப்பெட்டிக்கா இருக்குண்டா. அதுல சில்லு போடுற வேல இருக்குல்ல.

இல்லம்மா, மேப்பெட்டிக்குத்தான்!

இங்கனக்குள்ள, தந்திமரத் தெரு வரைக்கும் மூட்டய சைக்கிள்ல கொண்டாந்து தாடான்னா, ஒனக்கு வலிக்குது.  இதுல முத்துராம்பட்டி வரைக்கும் எப்புடி நான் ஒத்தயில மூட்டயத் தூக்கீட்டுப் போறது?  என்னால முடியுற வரைக்கும் ஒட்றேன்.  இப்பவே அப்பப்ப ஒருவடியா வருது. 

 

எம்மா நா போய்ட்டு வாறேன்!

பத்தரமா போய்ட்டு வா!  அங்க இங்க பராக்கு பாத்துட்டு நிக்காத.  படம் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்து சேரு.

சரிம்மா!

 

கையில அம்பத்தஞ்சீசா இருந்ததுடா மாரியப்பா!  நாப்பதீசா டிக்கட்டு.  பத்தீசா வாங்கித்திங்க. அஞ்சீசா எதுக்குமிருக்கட்டுன்னு அமுல் டப்பாக்கு அடியிலருந்து எடுத்திட்டுப் போனேன். ஒரு வேளைக்கு நாப்பதீசா டிக்கட்டு கிடைக்கலீன்னா, அம்பத்தஞ்சீசா டிக்கட்டு எடுத்துக்கலானு வச்சிருந்தேன்.

புதுப்படம்னா,பேருக்கு பத்து டிக்கெட்டக் குடுத்துட்டு இல்லைன்னுருவாங்ஙனு கவுண்டர் கதவ  ஒட்டி நின்னுட்டிருந்தேன்டா.

கதவத் தொறந்ததும்… நெரிச்சு தள்ளினாங்ங. யப்பா! கவுண்டருக்குள்ள போறதுக்குள்ள நச்சு சாணி சக்கையெடுத்திட்டாங்ங.  உள்ள போம்போதே ஒருத்தன் என்ன உள்ள வுடாம டவுசர் பையப் பிடிச்சு இழுத்தான்.  நானும் உடாம பிச்சுப் புடுங்கிட்டு உள்ள போய்ட்டு, டிக்கெட் எடுக்க டவுசர் பைக்குள்ளருந்து காச எடுக்குறேன்…..  இருவதீசா தாமரத் துட்டக் காணம்.  எவனோ அடிச்சிட்டான்.

பொறவு…. என்ன பண்ணுன?

பெறவென்ன? நாராயணா பாட்டு வேற போட்டுட்டாங்ங.  நாப்பதீசா தரை டிக்கெட்டுக்கே அஞ்சீசா குறஞ்சது.  வீட்டுக்கு திருப்பி வந்துட்டேன்.  அம்மாட்ட டிக்கெட் கெடைக்கலைனு சொன்னேன்.

காசத் திருப்பித் தரச்சொல்லி கேட்ருப்பாங்கள்ள?

இருபதீசாக்கு பால் அய்ஸ் வாங்கித் தின்னேன்னு சொல்லி, மிச்சக்காசக் குடுத்திட்டேன்.

அப்பம் படம் திருப்ப எப்ப பாக்கப் போற?

எங்கப்பா எங்கியாவது ஊருக்கு போனாத்தான்.  அதுக்குள்ள காசு வேற சேக்கணும்.  நா பள்ளிவாச வழியா காளியப்பன் தீப்பெட்டி ஆபிஸ்க்குப் போயி பசை மாவு வாங்கப் போறேன்.   

 

இதென்ன தீப்டி ஆபீஸ் அண்ணாச்சி? 

என் பசை மாவு டப்பால துத்தம் எடுத்து போட்டுட்டிருந்த கணக்கப்பிள்ள ‘முயலு’  ‘முயலு’ன்னாரு.

rabbit drawing

நூத்தியொண்ணு, ரெண்டு, மூணு, நாலு…

ச்சே! நூத்தி நாப்பத்தி நாலு தீப்பெட்டி ஒட்டுனாத்தான் ஒரு கட்டு முடியும்.  இன்னம் மூணு கட்டு ஒட்டணும்.

 

உரையாடல் : சமூகக் கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை