புதிய தலைமுறை – வீடு

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தினர், ’வீடு’ என்ற தொகுப்பில் இடம் பெறும் தனி நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்காக வீட்டைப் படம்பிடிக்க வந்தனர்.

இயக்குநர். க்ருஷ், தொகுப்பாளர். விஷ்ணு, ஒளிப்பதிவாளர். ஆனந்த் ஆகிய நண்பர்கள் முதல் நாளே சென்னையிலிருந்து, விருதுநகர் வந்து தங்கும் விடுதியில் தங்கி, மறுநாள், காலை வீட்டுக்கு வந்து சிறப்பாக படப்பிடிப்பும், நேர்காணலும் நடத்தி முடித்து, மிக அருமையான காணொலியை ஒலிபரப்பினர்.

01.01.2023ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி, வீடு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான காணொளியின் சுட்டி கீழே…….

https://youtu.be/4epS2WchkBk

அன்பின் சகோதரர். பரிசல் கிருஷ்ணா,

நண்பர்கள். க்ருஷ், விஷ்ணு, ஆனந்த் மற்றும் தணிகைவேல் மற்றும்

பி.டி.ப்ரைம் குழுவினருக்கு நன்றி!

தோற்றுப் பார்!

எப்போதும் வெற்றியை நோக்கித் தான் ஒவ்வொருவருடைய பயணமும் இருக்கும்.  இவனென்ன தோற்றுப் பார் என்கிறானே? என்ற கேள்வி தான் உங்களைப் போல எனக்கும் இருந்தது.  தோல்வி என்னைச் செருப்பால் அடித்தது.  எந்த இடத்தில் தோற்றேன்?  எது என்னைத் தோற்கச் செய்தது என்ற கேள்விகளே அடுத்து வெற்றியை நோக்கி இட்டுச் சென்றது.  இதைச் சொல்பவர், சிறிதும், பெரிதுமாய் கிட்டத்தட்ட இருபத்தாறு விருதுகள் பெற்றிருக்கும் வெயில் படத்தை இயக்கியவரும், அங்காடித் தெரு என்ற தமிழ் வார்த்தையை இப்போது தமிழனுக்கே மீண்டும் நினைவுபடுத்தும் விதமாய், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் இயக்குநருமான வசந்தபாலன் தான்.

இருங்க!  இருங்க!  நான் படத்தைப் பற்றிய விமர்சனம் எழுதவில்லை.  அதனால், மீதியையும் தைரியமாய் படிக்கலாம்.

மேற் சொன்னதைப் போல, அவரைப் பற்றிய அறிமுகங்கள் எப்போதும், வெயிலில் இருந்து தான் தொடங்குகிறது.  ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளினி அவரைப் பற்றிய அறிமுகத்தின் போது, ஆல்பம், வெயில் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் என்று அறிமுகப்படுத்தும் போதே, இடைமறித்து ஒரு சிறு திருத்தம் – ஆல்பம் தோல்விப்படம்.  இதைச் சொல்ல என்றும் நான் கூச்சப்பட்டதில்லை,  அந்த தோல்வியிலிருந்து தான் நான் நிறையக் கற்றுக் கொண்டேன் என்று தலை நிமிர்த்திச் சொன்னார்.

தோல்வியை தலை நிமிர்த்திச் சொல்லவும் ஒரு துணிவு வேண்டும்.  ஆல்பம் தோல்விக்குப் பின் பல தூக்கமில்லா இரவுகளில் தோல்விக் காரணம் தேடியலைந்தேன். வெயில் படத்துக்கான கரு கிட்டியது என்கிறார்.  வெயிலுக்குப் பின் நான் வியாபாரப் படங்கள் எடுக்கும் பொதி மாடாக விரும்பவில்லை.  மயிலிறகாய் இருக்க நினைத்தேன். அதனால் தான் அங்காடித் தெரு வந்தது என்கிறார்.

முரளியுடனும் (நுழைவுச் சீட்டு உபயம்), குறும்பட இயக்குநர் ரவிக்குமாருடனும் அங்காடித் தெருவுக்குப் போயிருந்தேன்.  இயக்குநருடன் படம் பார்க்கும் போது, பல விசயங்களை விவாதிக்க முடிந்தது.  அங்காடித் தெரு என்ற எழுத்தின் வடிவமைப்பில் சில எழுத்துக்கள் உடை தொங்க விடப்படும் கொக்கி (Hanger) போன்ற அமைப்பிலிருக்கிறது எனச் சுட்டினார். ஒரு காட்சியில், இது போன்ற பேரங்காடிகளின் உள்ளே கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருக்குமே? என்று ரவி சந்தேகம் எழுப்ப, இரவு நேரங்களில் காமிராக்கள் செயல்படாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, திரையில் கடையின் கண்காணிப்புக் கேமிரா காட்டப்பட்டது. ஒவ்வொரு காட்சியின் பின்புலத்திலும் நிறைய சேகரிப்புகள், ஆராய்ச்சிகள் இருக்கும் எனப் பேசிக் கொண்டிருந்தோம்.

இனி வசந்தபாலன் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.

முதன்முதலில் ஜீனியர் விகடன் வாசகர் கடிதத்தில், என் பெயர் வந்திருந்தது.  அதை எடுத்துக்கொண்டு சைக்கிளில் விருதுநகர் முழுவதும் சுற்றினேன்.

வெயில் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய வேலைகளின் போது, இரவு பதினோரு மணிக்கு மேல் ரங்கநாதன் தெருவுக்குச் சென்ற போது, சோர்வடைந்த இளைஞர் கூட்டம் கடந்து போனது.  யார் இவர்கள்?  எல்லாமே தெக்கத்தி முகங்களாய் இருக்கிறதே என்று என் தேடல் தொடங்கியது.  நான்கு வருடங்களுக்குப் பின் இன்று ஒரு படமாய் விரிந்து நிற்கிறது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ரங்கநாதன் தெருவின் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன்.  தங்கியிருந்த காலத்தில், கையடக்க காமிராவில் பதிவானது, முந்நூறு மணி நேர ரங்கநாதன் தெரு நடவடிக்கைகள்.

கதாநாயகன் தேர்வுக்கு எடுத்துக் கொண்டது மூன்று மாதகாலமும், முப்பதாயிரம் முகங்களும்.  உண்மையிலேயே ஏழ்மையான, இயலாமை முகத்தில் தெரியும் ஆளைக் கடைசியாய் கைப்பந்து மைதானத்தில் கண்டெடுத்தேன்.  மூன்று மாதங்கள் தனியாக நடிப்புப் பயிற்சியும் கொடுத்தேன்.

கதாநாயகியை ரங்கநாதன் தெருவுக்குள் உண்மையாகவே வியாபாரம் செய்யச் சொல்லி, உயர்ந்த கட்டிடத்தின் மேலே காமிரா வைத்து சில காட்சிகள் எடுத்தேன்.  மூன்று மணி நேரத்தில் கதாநாயகி தெருவில் நின்று விற்பனை செய்த சிறு பொருட்களின் விற்பனைத் தொகை அறுநூறு.

நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெருவில் படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகச்சிரமமான செயல் தான்.  இருந்தும், அங்கு தான் படமெடுக்க வேண்டுமென்ற முனைப்பில், முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

என்னய்யா மனுசன் இவன்?  இந்தப்படத்துக்காக செலவழித்த நான்காண்டுகளில், நான்கு படங்கள் எடுத்திருக்கலாம்.  தன் சம்பளத்தை உயர்த்தியிருக்கலாம்.  வெயில் வெற்றிக்குப் பின் கொஞ்சம் காசு, பணம் சேத்திருக்கலாம்.

அப்படி என்ன தான் நாலு வருசமா படம் எடுத்துக் கிழிச்சார் அந்த ஆளு?  என்று கேள்வி கேட்பவர்கள் அங்காடித் தெரு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

வசந்த பாலன் அண்ணாச்சி, ஏழைகளுக்கு வேலை கொடுக்கிறேன் என்று தயாளகுணம் காட்டி, ரத்தம் உறிஞ்சும் பிராணிகள் நம்ம ஊரிலும் இருக்கிறது. நீங்களும், நானும் இன்னும் ஒரு சிலர் மட்டும் தான் தப்பித்திருக்கிறோம்.  உங்களின் படம் நம்ம ஊர் அண்ணாச்சிகளுக்கும் பொருந்துமென நினைக்கிறேன்.

உங்களின் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள்!