கனியா கனி்களும், கண்ணாடி கனவுகளும்

சற்றுமுன் குழு நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற படைப்பு. பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த சற்றுமுன் குழுவுக்கு நன்றி!!!

ஒரு மணித்துளி கூட கால்கள் ஓய்வெடுக்காமல் நின்று கொண்டே நடுநிசி வரை வேலை செய்யும் சிறு கால்களின் வேதனை தெரியுமா?

துத்தம் கலந்த பசையில் நாள் முழுவதும் வேலை பார்த்து சுருங்கிப்போன விரல்களைப் பார்த்திருக்கிறீர்களா?

காலை முதல் மாலை வரை கைகளில் வெடி மருந்தோடு வேலை செய்கிற பிஞ்சுக்கைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

சாப்பிடும் போது கூட புகையிலை நெடி இரைப்பை வரை வருவதை உணர்ந்திருக்கிறீர்களா?

தன்னுடன் பணிபுரிபவனின் ஏச்சு, பேச்சுக்களையும், சில சமயம் சிற்சில அத்து மீறிய தொடல்களையும் சகித்துக் கொண்டு வேலை செய்யும் சின்னஞ்சிறிய சகோதரியின் மனோநிலை தெரியுமா?

திருப்பூரில், சிவகாசியில், நாகர்கோவிலில் இன்னும் பல ஊர்களின் தினசரிகளில் அடிக்கடி காணப்படும் வார்த்தைகள்

அதிகாரிகள் சோதனை, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

செய்தித்தாள்களின் பக்கம்

தினமும் அதிகாலை எழுந்து சமையலில் அம்மாவுக்கு உதவி, மதிய உணவுக்கான தூக்கு போசியுடன் கிளம்பி, நெரிசலான பேருந்து பயணத்திலிருந்து உதிர்ந்து, வேகவேகமாக ஓடி பனியன் கம்பெனிக்குள் நுழையும் போதே தாமதத்திட்டு வாங்கித்தான் அன்றைய பணி ஆரம்பமாகிறது சின்ன சகோதரிக்கு!

பக்கத்து பக்கத்து மிஷின்களில் தைத்துக் கொண்டிருக்கும் டெய்லர்கள் பேசும் வார்த்தைகளும், சைகைகளும் புரிந்தும் புரியாமலும் இருக்கும்.

லேபர் ஆபிசருக்குப் பயந்து கேசியர் போட்டுட்டு வரச்சொன்ன சுடிதார் வேறு அக்கா அளவிற்கு இருப்பதால் அவ்வப்போது தொந்தரவு கொடுக்கும்.

அப்பா,அம்மா,அக்கா சம்பளம் போதாதுன்னு, அப்பா என்னையும் ஏழாப்பு் பரீச்சை முடிஞ்சதுமே வேலைக்குப்போன்னு சொல்லிட்டார். அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும்னா காசு வேணுமாம்!

பள்ளிகூடம் போனுமின்னா பாவாடை சட்டை போட்டுட்டுப் போலாம்.

மொத வார சம்பளம் வாங்கும்போதே இனிமே சுடிதார் போட்டுட்டு வந்தா வா, இல்லைன்னா வேலைக்கு வரவேண்டாம்னு கேஷியர் சொல்லிட்டார்.

இந்த வாரம் சனிக்கிழமை சம்பளம் வாங்கியாவது, புசுபா தியேட்டர் பக்கத்துல நல்ல சுடிதாரும், நாகலட்சுமி டெய்லர் போட்டிருக்க மாதிரி கம்மலும் அம்மாட்ட சொல்லி வாங்க வேண்டும். இந்த வாரச்செலவுக்கு பத்தாதுன்னு அம்மா புலம்புவா.

பாத்ரூம் போம்போதுவெள்ளிங்கிரிஆகாவழி நாய் வேற சுடிதார் மேலே நூல் இருக்குது பர்வதம்!ன்னு தொடுறான். அம்மாட்ட சொல்லலாமா? வேண்டாமான்னு தெரியலை.

புளியம்பழம் மரத்திலிருந்து உலுக்கும் போது சிறுவர்கள்ஒதப்பழம்என்ற ஒரு வகையை மட்டும் தேடி எடுத்து சாப்பிடுவார்கள்.

ஒதப்பழம் என்பது காயாகவும் இல்லாமல், பழமாகவும் மல் இருக்கும் ஒரு புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

அந்த ஒதப்பழம் போன்றவர்கள் இந்த சிறுமிகள். கனியா கனிகள்.

முகத்துக்கு சிறிதும் ஒப்பாத முகப்பூச்சுடனும், தன்னுடன் வேலை செய்யும் மற்றவர்களைப் பார்த்து, அதைப்போலவே உடை உடுத்தி, செயற்கையான சிரிப்பு சிரித்து, வெட்கம் என்றால் என்னவென்று தெரியாது வெட்கப்பட்டு, தங்களை கனியாக காட்டிக்கொள்ளும் இவர்கள் கனியாக் கன்னிகள்.

child-labour2.jpg

கன்னிகள் போன்றே தங்களை கற்பனை செய்து கொள்வதும், ஆடை அலங்கரித்துக் கொள்வதும், சிங்காரித்துக் கொள்வதுமென கண்ணாடி முன் மட்டுமே இவர்களது கனவுகள்.

நமக்காவது இந்த வேதனைகள் ஓரளவுக்குப் புரியும். ஆனால் சில நூறுகளுக்கு ஆசைப்பட்டு ஈனப்பிழைப்பு நடத்தும் அரசு அதிகாரிகளுக்கும், ஏன் அரசாங்கத்துக்குக் கூட புரியவில்லை.

இப்போது, வெளிநாட்டில் இருந்து ஆயத்த ஆடைகளுக்கான ஒப்பந்தங்கள் அளிக்கும் போதே, சில மட்டும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தொழிற்சாலைகளைத் தேர்ந்தெடுக்கின்றன.

ஆனால் அதே சமயம், பனியன் சார்ந்த தொழில்களில் குழந்தை தொழிலாளர்களே இருக்கிறார்கள்.

இதுவரை எந்த அரசியல் தலைவராவது, அரசாங்கமாவது இதற்கு ஒரு தீவிர நடவடிக்கையோ, முழுமையாக தடுக்க ஒரு கடுமையான தடைச்சட்டமோ இது வரை கொண்டு வரவில்லை.

பெயரளவிற்கு மட்டுமே இவர்களை வைத்து வேலை வாங்கும் தொழிற்சாலை மீது நடவடிக்கை.

குழந்தை தொழிலாளர்களை மீட்ட பின்பு அவர்களின் கல்வி மற்றும் இதர செலவுகளை அரசே ஏற்க வேண்டும் அல்லது அந்த செலவை ஈடுகட்டும் வகையில் அந்தந்த தொழிற்சாலைகளின் மீது அபராதம் போட வேண்டும்.

இந்த மலரா மொட்டுக்களுக்கு எப்போது தான் நல்ல வழி பிறக்குமோ?

4 thoughts on “கனியா கனி்களும், கண்ணாடி கனவுகளும்

  1. கண்டிப்பாக கண்டுக்க, கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் இது. சிறுவர், சிறுமியரே போதிய விழிப்புணர்வின்றி வாரம் 1000 ரூபாய் என்ற மிகப்பெரிய பணம் தங்களது கல்வியை ஈடு செய்து விடும் என்று எண்ணும் கொடுமையை தீர்க்க நிச்ச்யம் வழி செய்ய வேண்டும்.

    நல்ல விழிப்புணர்வு பதிவு

  2. Good article by Mr. Veillan ……

    Inspiring reading the same and he had brought out the child labour aspect v subtly and his flair and style of writing is appreciatable and am sure there enough potential in this young boy..

    Would like to know more of this young guy……..

பின்னூட்டமொன்றை இடுக