பிரம்மராயரும்.. சீராளனும்…

பிரம்மராயர் கல்வி மற்றும் அனைத்து கலைகளும் கற்பிக்கும் ஒரு உபாத்தியாயர். குடுமியும், வேட்டியுமாக எந்நேரமும் காட்சியளிப்பார். மரத்தடியில் எப்போதும் இருக்கையில் அமர்ந்து மாணாக்கர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். இல்லையேல், தூங்கிக் கொண்டிருப்பார்.

flyingdhoti.jpg

பிரம்மராயர் கனிவும், கண்டிப்புமாகவே இருப்பார், தன் கேள்விகளுக்கு பதில் கூறும் மாணாக்கனுக்கு, உடனே தேனும், தினைமாவும் கலந்த ஒரு உருண்டை கொடுப்பார். பதில் தெரியாவிட்டால் எழுத்தாணியினால் ஒரு சின்ன குத்து கிடைக்கும்.

இடுப்பில் துண்டு மாதிரியான ஒன்று மட்டும் தான் மாணாக்கர்களின் அதிகபட்ச உடை. ஒரு நாள் சீராளன், உபாத்தியாயர் சொல்லுவதைக் கவனிக்காது, மரத்தின் மேல் ஓடி விளையாண்டு கொண்டிருக்கும் அணில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை பிரம்மராயர் பார்த்து விட்டார்.

அதற்கு தண்டனையாக நான் சொல்லும் வரை, மரக்கிளையிலேயே தொங்கிக் கொண்டிரு! என ஏற்றிவிட்டு விட்டார். சீராளன் மரக்கிளையை இரண்டு கைகளால் பிடித்த படி தொங்கிக் கொண்டே இருந்தான். அவன் காலுக்கும், மண் தரைக்கும் பத்து, பதினைந்து விரக்கடை அளவு இடைவெளி தான் இருக்கும். அவன் இறங்காமல் இருப்பதற்காக காலுக்கு கீழே நான்கைந்து எழுத்தாணியை வேறு குத்திவிட்டார்.

தொங்கிக் கொண்டே இருப்பதால் கைகள் வலியெடுக்கிறது. குதிக்கவும் வழி இல்லை. கட்டெறும்பு வேறு உடுப்புக்குள் சென்று வெளியே வந்து கொண்டிருக்கிறது.

அரைநாழிகை கழித்து உபாத்தியாயர், எழுத்தாணிகளை எடுத்து விட்டு அவனை இறக்கி விடுங்கள் என்று மற்ற மாணாக்கர்களிடம் உத்தரவிட்டு போய்விட்டார்.

dhoti.jpg

சீராளன் கீழே இறக்கப்பட்டான். வெகு நேரம் கிளைகளைப் பிடித்திருந்ததால் இரு கைகளும் கீழே இறங்கவும் இல்லை, இறக்கவும் முடியவில்லை. அப்படியே வீட்டுக்கும் வந்து விட்டான். தாய், தந்தை, அக்கம் பக்கத்தவர் அனைவரும் கையை கீழே கொண்டுவர முயற்சிக்கின்றனர். முடியவேயில்லை.

handgall.jpg

மருத்துவர் கூட வந்து ஏதேதோ, தைலம், மூலிகையின் உதவியால் முயற்சித்துப் பார்க்கிறார், முடியவில்லை.

உபாத்தியாயருக்கு விசயம் தெரிந்து சீராளன் வீட்டுக்கு வருகிறார். நிலைமையை பார்த்து விட்டு, இவ்வளவு தானா விசயம் என்று கூறி விட்டு, படாரென்று இடுப்புத் துணியை இழுக்கிறார். அடுத்த விநாடி சீராளனின் கைகள் தன்னையறியாமல் சடாரென்று கீழே இறங்குகிறது.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

அன்றும், இன்றும் நட்பு தான் என் இடுக்கண்ணையும் களைகிறது.

உங்களுக்கு………

18 thoughts on “பிரம்மராயரும்.. சீராளனும்…

  1. அன்பு வெயிலான்,
    எழுத எடுத்துக் கொண்ட விஷயமும்,
    எழுதிய பாங்கும், அதற்கேற்ற புகைப்படங்களும் அருமையாக இருந்தன.
    அந்தக் காலத்திலிலெல்லாம் மாணாக்கர்களுக்குத் தண்டனை அப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்து,
    கல்வி கற்பித்த ஆசானின் கெளரவத்தைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்.
    உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது.
    நிறைய எழுதுங்கள்.
    ஜீவி

பின்னூட்டமொன்றை இடுக