திரைக்கு முன்னால்….

பரிசல்காரன் என்னையும் சினிமா கேள்விகளுக்கு பதிலளிக்க அழைத்தார்.  நாகார்ஜீனில் ஆரம்பித்து ஐகாரஸ் பிரகாசரால் வேகமெடுத்து, பரிசல்காரன் மூலம் என்னை வந்தடைந்திருக்கிறது இந்த ஓட்டம்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

அப்பா சிவாஜி ரசிகர்.  சிவாஜி படம் வெளியான முதல் நாள் அல்லது வாரத்தில் பார்த்து விடுவார்.  எப்போதாவது என்னையும் கூட்டிப் போவார்.

விருதுநகர் நாராயணசாமி தியேட்டர்ல பார்த்த ‘திரிசூலம்’ படம் தான் நினைவிலிருக்கிறது.  அதெப்படி ஒரே நேரத்தில் மூன்று சிவாஜி என்று ஆச்சரியம்.  யாரிடம் கேட்டாலும், அவர்களுக்கும் தெரியவில்லை.

கூட்ட நெரிசலில் ‘நட்சத்திரம்’ என்ற படத்திற்கு (எல்லா நடிகர்களும் நடித்த படம்) போய் இடைவேளையில் சட்டையை கழட்டி வியர்வைபிழிந்த நினைவிருக்கிறது.  பள்ளியில் பாட சம்பந்தமான படத்துக்கு கூட்டிப் போகிறார்கள் என்று பொய் சொல்லி ‘பைரவி’ படத்துக்கு பள்ளி நண்பர்களுடன் போக போட்ட திட்டம் அப்பாவுக்கு தெரிந்ததால் இரண்டு அடிஸ்கேல்கள் உடையும் வரை அடி.

அப்புறம் நினைவு தெரிந்து பார்த்த படம் ‘ அலைகள் ஓய்வதில்லை ‘.

முதுகில் வலியை உணர்ந்தேன்.

ஏண்டா? ‘அந்த’ படத்துக்கு போனே? என்று அடி விழுந்தது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ராமன் தேடிய சீதை – பசுபதி தவிர்த்த பல காட்சிகள் இயக்குநர் பீம்சிங் படம் மாதிரியே இருந்தது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தமிழ் எம்.ஏ – நல்ல படத்துக்கு ஜீவாவின் ஒட்டு தாடி உறுத்தலாக இருந்தது.

இயக்குநர் ராம்-க்கு என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

‘தவமாய் தவமிருந்து’ – என் அப்பாவிற்காக இன்னும் நிறைய படித்து, இதை விட வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்திருக்கலாமோ என்ற மனத்தாக்கம் ஏற்பட்டது.

அதில் வரும் ஒரு சில வசனங்கள் கூட என் வாழ்க்கையோடு ஒத்துப் போனது – அப்பா, மகன்களை மிதிவண்டியில் ஏற்றி ஓட்டியவாறு சென்று கொண்டிருக்கும் போது மகன் இப்படி சொல்லுவார்.

“அப்பா, விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்ல சேர்றதுக்கு அப்ளிகேசன் போடலான்னு இருக்கேன்பா ”

அப்பா சரினும் சொல்ல முடியாம வேண்டானும் சொல்ல முடியாம ஒரு ஆத்தாமையில மிதிவண்டிய மிதித்துக் கொண்டிருப்பார்.

5 . உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமாஅரசியல் சம்பவம்?

எதுவுமில்லை.

5 . உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமாதொழில்நுட்ப சம்பவம்?

DTS ஒலி அறிமுகம் – இந்த முறையில் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்தும், முதலில் பார்த்த தமிழ் படம் ‘ இந்தியன் ‘ புது அனுபவம்.  பிறகு மின்சாரக் கனவு படத்தை DTS ஒலி முறை சேர்க்கைக்கு பின் திரும்பவும் பார்த்தேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ம்….. நிறைய.

7.தமிழ்ச்சினிமா இசை?

ராசா……ராசா……..இளையராசா

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்தி படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இல்லை.  தொலைக்காட்சியில் மலையாள திரைப்படங்கள் பார்ப்பதுண்டு.   நம் பதிவு நண்பர்கள் (மதி கந்தசாமி, எஸ்.ரா., அய்யனார், மோகன்தாஸ், நாட்குறிப்புகள் கார்த்திக் இன்னும் பலர்) எழுதும் உலக சினிமா விமர்சனங்களின் மூலம் உலக மொழி சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகமாயிருக்கிறது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை  மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பில்லை.  சினிமா உலகுடன் தொடர்புடைய பதிவர்கள் சிலரை தெரியும்.  பலர் தன்னை வெளிக்காட்ட வேண்டாம் என்று நினைப்பதால் பெயர் வேண்டாம்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர் காலத்தில் நிறைய திறமையும், தகுதியும் வாய்ந்த கலைஞர்களின் களமாக தமிழ்ச்சினிமா இருக்க வேண்டும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு அவ்வளவாக பாதிப்பிருக்காது.  நிறைய புத்தகங்கள் வாசிக்க முடியும்.

“புத்தகத்துக்குள்ள இவம் போய்ட்டான்னா சோறு, தண்ணியே தேவையில்லை ” என்று எனக்கு எப்போதுமே வசவு விழும்.

தமிழர்கள் சாலை மறியல், கடையடைப்பு, போராட்டம் நடத்துவார்கள், பின்பு வீட்டுக்கு போய் அவரவர் வேலைகளை பார்ப்பார்கள்.  இப்போ மின்வெட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

தமிழர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் மேம்படும்.

36 thoughts on “திரைக்கு முன்னால்….

  1. தொடர யாரையுமே கூப்பிடலையா வெயிலான்?

    //இப்போ மின்வெட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.//

    நிதர்சனமான உண்மை!

  2. // சூப்பர்… அந்த “தவமாய் தவமிருந்து” மேட்டர்… ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு //

    நன்றி மகேஷ்!

    இந்த நினைவுகளை மலரச்செய்தது பரிசல்காரன் தான். அவர் என்னை பதில் சொல்ல அழைத்ததன் பயன்.

    நன்றி பரிசல்!

  3. :-)))….

    பதில்கள் நல்லா இருக்கு…

    // தமிழர்கள் சாலை மறியல், கடையடைப்பு, போராட்டம் நடத்துவார்கள், பின்பு வீட்டுக்கு போய் அவரவர் வேலைகளை பார்ப்பார்கள். இப்போ மின்வெட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம் //

    இது நச்ச் கமெண்ட்…

    // தவமாய் தவமிருந்து’ – என் அப்பாவிற்காக இன்னும் நிறைய படித்து, இதை விட வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்திருக்கலாமோ என்ற மனத்தாக்கம் ஏற்பட்டது. //

    எனக்கும்…அப்பா அப்ப ஒழுங்காப்படின்னு சொன்னப்ப புரியல…ஆனா இப்ப உறுத்துது…:-(((..

  4. 4 வது பதில் அருமை.. இப்பத்தான் அதப்பத்தி ஒரு பதிவு போட்டு நிமிர்ந்தா உங்க பதில்..

    நல்லா எழுதியிருக்கீங்க.. அந்த பூட்ஸ் கால் மணல் அருமை..

    நர்சிம்

  5. //“புத்தகத்துக்குள்ள இவம் போய்ட்டான்னா சோறு, தண்ணியே தேவையில்லை ” என்று எனக்கு எப்போதுமே வசவு விழும்.//

    இனம் இனத்தோடதான் சேரும்ங்கிறது இதுதானா?

  6. // இனம் இனத்தோடதான் சேரும்ங்கிறது இதுதானா? //

    அண்ணாச்சி!

    எல்லா புத்தகங்களையும் நீங்க நெனவு வச்சு சொல்றதுலருந்தே நீங்களும் நம்ம இனம் தான்றது எனக்கு தெரிஞ்சு போச்சு.

  7. //தமிழ் எம்.ஏ – நல்ல படத்துக்கு ஜீவாவின் ஒட்டு தாடி உறுத்தலாக இருந்தது.//

    உண்மை தான். படம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை, ட்ரைலர் பார்த்தேன்.

    //தவமாய் தவமிருந்து’ //

    எனக்கு மிகவும் படங்களில் ஒன்று. அதில் கடைசியில் சேரன் அவர் அம்மா அப்பாவை கொடைக்கானல் கூட்டி போவதாக காட்டி இருப்பார், எனக்கு என் பெற்றோரை சிங்கை அழைத்து வந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    //தமிழர்கள் சாலை மறியல், கடையடைப்பு, போராட்டம் நடத்துவார்கள், பின்பு வீட்டுக்கு போய் அவரவர் வேலைகளை பார்ப்பார்கள். இப்போ மின்வெட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்//

    :-)))))))

    நன்றாக எழுதி இருக்கிறீர்கள் வெயிலான்

  8. // சேரன் அவர் அம்மா அப்பாவை கொடைக்கானல் கூட்டி போவதாக காட்டி இருப்பார் //

    சேரன் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் என நினைக்கிறேன்.

    // என் பெற்றோரை சிங்கை அழைத்து வந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. //

    என் பெற்றோரை ஒரு தடவையாவது விமானப் பயணத்தில் எங்காவது கூட்டி செல்ல வேண்டுமென்பது என் கனவு.

    பார்ப்போம்……….

    நன்றி கிரி!!!!!

  9. // தவமாய் தவமிருந்து’ – என் அப்பாவிற்காக இன்னும் நிறைய படித்து, இதை விட வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்திருக்கலாமோ என்ற மனத்தாக்கம் ஏற்பட்டது//.
    உண்மை
    நல்லா எழுதியிருக்கீங்க ,எல்லா பதில்களும் நன்றாக இருக்கிறதுங்க

  10. // மவராசா… இப்பவாவது நேரம் கெடைச்சுதே எழுத… //

    அண்ணா! என்னண்ணா? பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?

    நம்ம நண்பர்கள் எதையாவது சொல்லி நம்மளை எழுத இழுத்துடறாங்கண்ணா!

  11. //“புத்தகத்துக்குள்ள இவம் போய்ட்டான்னா சோறு, தண்ணியே தேவையில்லை ” என்று எனக்கு எப்போதுமே வசவு விழும்.//

    அண்ணே.. பள்ளியோடம் படிக்கும் போதும் இப்டி தானா? :))

  12. பள்ளியோடத்துல படிக்கும் போது அப்படி படிச்சிருந்தேன்னா, அய்யேயெஸ் முடிச்சு கலெக்டர் ஆயிருப்போம்ல பொடியன்ண்ணே!

சஞ்சய் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி